புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

 
இஸ்ரேல் வந்துபோன ஒபாமா

இஸ்ரேல் வந்துபோன ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த வாரம் இஸ்ரேல் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மூன்றுநாள் இஸ்ரேலில் தங்கியிருந்தார். இடையில் மேற்குக் கரைக்கு சென்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸையும் சந்தித்தார். மூன்று நாள் கழித்து எல்லோருக்கும் ‘டாட்டா காட்டி விட்டு வெளியேறினார். ஒபாமாவின் சுற்றுப்பயணத்தை சுருக்கமாக இப்படி சொல்லி முடித்துவிடலாம்.

உலகில் எப்போதுமே பிரச்சினையாக இருக்கும் இஸ்ரேலிற்கான ஒபாமாவின் விஜயம் இப்படி உப்பு சப்பு இல்லாமல் முடிவது எப்போதோ எதிர்பார்த்ததுதான். ஆனால் அர்த்தமற்றுப்போயிருக்கும் மத் திய கிழக்கு அமைதி பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்காவது ஒபாமா இஸ்ரேலு க்கு அழுத்தம் கொடுப்பாரென அமெ ரிக்காவுக்கு ஆமா போடும் சர்வதேச ஊடகங்கள் எதிர்பார்த்தன.

ஒபாமா இஸ்ரேல் அமைதிப் பேச்சு வார்த்தை தொடர்பில் பட்டும் படாமல் சொல்லிவிட்டு வந்துவிட்டார். இஸ்ரேல் என்ற நாடு மத்திய கிழக்கில் செய்யும் எதேச்சையான செயல்கள் எல்லாவற்றுக்கும் அமெரிக்காவின் நிழல்பட்டிருக்கும்.

இஸ்ரேல் என்ற நாடு தொடர்ந்து உறு தியாக இருப்பதற்கு தேவையான அனை த்து நிதி உதவிகளையும் அமெரிக்கா வழ ங்குவதோடு சர்வதேச விமர்சனங்களில் இருந்து பாதுகாத்தும் வருகிறது. ஆனால் இஸ்ரேல் - பலஸ்தீன அமைதிப் பேச்சு வார்த்தை குறித்து அமெரிக்கா ஒரு தீர்வை சொல்வதோடு இஸ்ரேல் அதற்கு எதிராக செயற்படுகிறது. இதற்காக அமெரிக்கா இஸ்ரேலுக்கு கண்டனமும் வெளியிடுகிறது. இது என்ன நாடகம் என்றுதான் புரியவில்லை.

1993 ஒஸ்லோ உடன்படிக்கைக்கு பின்னர் பலஸ்தீன நிர்வாகம் தோன்றியது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இத்தோடு பிரச்சினை தீரவில்லை. மேற்குக்கரை, காசாவைக் கொண்ட பலஸ்தீன நிர்வாகம் இறையாண்மை கொண்ட ஒரு தனிநாடுமில்லை. சுயாட்சி கொண்ட ஒரு பகுதியுமில்லை; அப்படி என்றால் அது என்ன வென்று கேட்டு விடாதீர்கள். அதனை சொல்வதற்கென்றே தனியாக கலாநிதிப்பட்டம் முடிக்க வேண்டும்.

ஆனால் அந்த பலஸ்தீன நிர்வாகம், பலஸ்தீன எழுச்சி போராட்டத்தை அடக்கி தனது திட்டத்தை முன்னெடுக்க இஸ்ரேலுக்கு உதவி இருக்கிறது. மஹ்மூத் அப்பாஸை தலைமையாகக் கொண்ட பலஸ்தீன நிர்வாகத்திற்கு பலஸ்தீன மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முடியவில்லை. பொருளாதார தேவையை பூர்த்தி செய்யவும் முடியவில்லை. நினைத்த நேரத்தில் மேற்குக்கரைக்குள் நுழைந்து ஜனாதிபதியை கூட கைது செய்ய இஸ்ரேல் இராணுவத்திற்கு முடியும் என்பதோடு நினைத்த நேரத்தில் பலஸ்தீன மக்களின் வரிப்பணத்தைக் கூட இஸ்ரேல் முடக்கிவிட முடியும். அதனைத் தட்டிக் கேட்க எந்த சட்ட ஒழுங்கும் இல்லை. உண்மையில் இதனை எந்த நிர்வாக கட்டமைப்பு என்று சொல்ல எந்த கொம்பனாலும் முடியாது.

பலஸ்தீன நிர்வாகம் என்பது ஒரு பொய்க்கதை என்பது புரிய ஆரம்பித்து விட்டது. அதற்கான கொந்தளிப்புகள் எப்போதோ வெளிப்பட்டு தொடர்கிறது. இதன் விளைவுதான் பலஸ்தீன நிர்வாகம் ஐ.நா.சபை சென்று தம் இறையாண்மையை நிரூபிக்க குட்டிக்கரணம் போடுகிறது.

இப்போது அமெரிக்கா புதிய கதை சொல்கிறது. அதுதான் இருதேச தீர்வுத் திட்டம். அதாவது 1967ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த பஸ்தீன எல்லையான மேற்குக்கரை, கிழக்கு ஜெரூசலம் மற்றும் காசாவைக் கொண்ட பலஸ்தீன தேசத்தை இஸ்ரேலின் இணக்கப்பாட்டுடன் தோற்று விப்பது என அமெரிக்கா சொல்கிறது.

இதுவும் பிரச்சினையை இன்னொரு கட் டத்திற்கு கொண்டு செல்லும் தீர்வுத்திட்ட மாகத்தான் தோன்றுகிறது. இதிலே பலஸ்தீன தேசம் என்று சொல்லப்படும் மேற்குக்கரை, கிழக்கு ஜெரூசலம் எங்கும் இஸ்ரேல் யூதக்குடியிருப்புகளை அமைத்து குவித்து வருகிறது. புதிது புதிதாக குடி யிருப்பு திட்டங்களை அறிவித்து அவசர அவசரமாக கட்டுமான பணிகளையும் மேற் கொண்டுவருகிறது.

மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் பகுதிகளில் கிட்டத்தட்ட ஐந்தரை இலட் சத்துக்கு அதிகமான சட்டவிரோத யூதக் குடியிருப்பாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதிலே கிழக்கு ஜெரூசலத்தில் மாத்திரம் மூன்று லட்சத்துக்கு அதிகமானோர் வாழ் ந்து வருகின்றனர்.

போதாக்குறைக்கு இப்போது ‘ஈ-1’ என்ற பகுதியில் மேலும் பல யூதக் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேல் அட் டவணை போட்டிருக்கிறது. இந்த குடியி ருப்புகளால் மேற்குக்கரைக்கும் கிழக்கு ஜெரூசலத்துக்குமான தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்படும். இவ்வாறு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியிருப்புகளை அமைக்கும் போதும் உலக நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஒப்புக்கு ஒரு கண்டன அறிக்கையை வெளியிடும். மற்றபடி எதுவும் நடக்காது.

இந்த சூழலில் இன்னும் கொஞ்ச காலத்தில் இரு நாட்டு தீர்வுத் திட்டமும் பொய்யாகிவிடும். சாதாரணமாக காணிகளை வாங்கி ஒரு தேசத்தை உருவாக்க முடியும் என்று உலகுக்கு வெளிக்காட்டிய இஸ்ரேலுக்கு குடியிருப்புகளை அமைத்து பலஸ்தீனம் என்ற தேசத்தையும் அழிக்க முடியும் என்பது எம்மாத்திரம்.

இந்த சூழலில்தான் பராக் ஒபாமா 2009ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதல் முறையாக கடந்த மார்ச் 20ஆம் திகதி இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒபாமா டெல் அவிவை வந்திறங்கியதும் இஸ்ரேலின் நட்பு நாடாக இருப்பது மிகப் பெரிய கெளரவம் என பெருமையாக சொல்லிவிட்டே தனது பயணத்தை ஆரம்பித்தார்.

ஒபாமா இஸ்ரேல் சென்றதும் முதல் கட்ட வேலையாக இஸ்ரேலை பாதுகாக்க நிறுவப்பட்டிருக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறையை பார்வையிட்டார். அடுத்தது ஜனாதிபதி ஷிமொன் பரிஸ் மற்றும் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். அதிலும் சிரியாவில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டு யுத்தத்தால் இஸ்ரேலுக்கான பாதிப்பு மற்றும் ஈரான் அணு செயற்பாட்டால் இஸ்ரேல் எதிர்கொள்ளும் ஆபத்து பற்றியே அதிக கவனம் செலுத்தப்பட்டது. பின்னர் மேற்குக்கரை சென்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் பிரதமர் சலம் பையத்தை சந்தித்தார்.

ஆனால் இந்த எந்த சந்திப்புகளின் போதும் இஸ்ரேலின் சட்ட விரோத குடியிருப்புகள் தொடர்பில் எந்த கண்டனமும் வெளியிட்டதாக தெரியவில்லை. அதேபோன்று 2010 ஆம் ஆண்டு தடைப்பட்ட பலஸ்தீன, இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க அழுத்தம் கொடுத்தாகவும் தெரியவில்லை.

உண்மையில் இந்த அமைதிப் பேச்சு வார்த்தை தடைப்பட்டதும் இஸ்ரேலின் கட்டுப்பாடில்லாத சட்டவிரோத குடியே ற்றங்களால் ஆகும். எனவே அமைதிப் பேச்சுவார்த்தை பற்றிபேசுவதென்றால் சட்டவிரோத குடியேற்றங்கள் பற்றியும் ஆழமாக பேசவேண்டி ஏற்படும். இத னாலோ என்னவோ ஒபாமா இது பற்றி ஒன்றும் சொல்லாமலேயே இருந்துவிட்டார்.

ஆனால் ஒபாமா போகும்போது இஸ்ரே லுக்கு நல்ல ஆலோசனை ஒன்றையும் வழங்கிவிட்டே வெளியேறினார். இஸ்ரேலை பொறுத்தவரை பிராந்திய நாடுகளில் எதனுடனும் உருப்படியான உறவு இல்லை. அதிலும் பிராந்திய சக்தியாக இருக்கும் துருக்கியை 2010ஆம் ஆண்டு பகைத்துக் கொண்டது.

அதாவது இஸ்ரேலால் முடங்கியிருக்கும் காசாவுக்கு உதவிப் பொருட்களுடன் சென்ற துருக்கி கப்பலுக்கு இஸ்ரேல் படை 2010ஆம் ஆண்டில் கண்மண் தெரியாமல் தாக்கி 9 பேரின் உயிரை பலிகொண்டது. இதற்கு இஸ்ரேல் மன்னிப்புக் கூட கேட்கவில்லை.

இதனால் இஸ்ரேல் - துருக்கி உறவு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சீர்குலைந்திருந்தது. இதனை சரிசெய்ய துருக்கியிடம் மன்னிப்பு கேட்கும்படி ஒபாமா ஆலோசனை வழங்கிவிட்டே போனார். அதாவது இஸ்ரேலை இன்னும் பலப்படுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்.

எனவே ஒபாமாவின் இஸ்ரேல் விஜயம் பலஸ்தீனத்திற்கோ அல்லது மத்திய கிழ க்கு அமைதி முயற்சிக்கோ எந்த பிரயோஜ னமும் அற்றது. வேண்டுமென்றால் அவரது விஜயம் பிரச்சினையை இன்னும் குழப்பி இருக்கிறது என்று சொல்லலாம்.

vமீ;. gpசிnஹீsமீ;

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.