புத் 65 இல. 13

நந்தன வருடம் பங்குனி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா பிறை 18

SUNDAY MARCH 31 2013

 

 
ெஜ.பி.பொறுமை இழந்தார்!

ஜ.பி.பொறுமை இழந்தார்!

“ஃப்ரம் தி ஸப்ளைம் டு தி ரிடிகுலஸ்’ (From the sublime to the ridiculous) என்று சொல்வார்கள். அதாவது ‘புனிதத்திலிருந்து தமாஷிற்கு’ ஒரு மாற்றம் ஏற்பட்டால் எப்படி? அதைக் குறிக்கும் சொற் றொடர் அது.

நான் இப்போது செய்யப்போகும் காரியம் அதுதான். ஆச்சார்ய கிருபளானி பற்றி எழுதி, சென்ற அத்தியாயத்தை முடித்திருந்தேன். அடுத்து இப்போது வருவது ஒரு நகைச்சுவை நடிகர் சம்பந்தப்பட்ட விஷயம். எம்.ஜி. ஆருக்கு என் மீது கோபத்தை உண்டாக்கிய ஒரு விஷயம்.

அந்த நடிகர் பழம்பெரும் நகைச்சுவை நடிகரான திரு. டி. எஸ். துரைராஜ். நான் சினிமாவில் நடிக்கும் போது, இவர் சினிமாவை விட்டே விலகி இருந்தார். ஆனால் திடீரென்று ஒரு படத்தில் தங்கவேலு, துரைராஜ், நான் - மூவரும் நடித்தோம். யார் செய்த புண்ணியமோ படம் முடியவில்லை. ரிலீஸ¤ம் ஆகவில்லை. அந்தப் படப்பிடிப்பின் போதுதான், துரைராஜ் அவர்களை நான் முதன் முறையாகச் சந்தித்தேன்.ரொம்பவும் சுவாராஸ்யமாக உரையாடலில் ஈடுபடக் கூடியவர் அவர். பழைய அனுபவங்களையெல்லாம் கதை கதையாகச் சொல்வார். அவர் சீரியஸாகத்தான் பேசுகிறாரா அல்லது ரீல் விடுகிறாரா என்ற சந்தேகமே அவர் பேசும் போது எனக்கு வந்து விடும்.

ஒரு நாள் படப்பிடிப்பின் போது, ‘சுடுகாட்டுக்கு இரவில் போவது, பூஜை நடத்துவது, மண்டை ஓடு, எலுமிச்சம் பழம், மந்திர சக்தி,...’ என்றெல் லாம் பல விஷயங்களைப் பேசி, தனக்கு அதிலெல்லாம் நேரடி அனுபவம் உண்டு என்றும் அவர் சொன்னார். அதற்கு மேல் என்னால் பொறுக்க முடியவில்லை. ‘ஸார், காதுலே பூ வெக்கறதுக்கும் ஒரு லிமிட் வேணும். நீங்க எல்லா லிமிட்டையும் தாண்டி போaங்க’ என்று நான் சொல்ல, தங்க வேலு அவர்கள், ‘துரைராஜ் அண்ணன் பேசறதைக் கேட்டுக்கணும். ஆனா, நம்பிடக் கூடாது’ என்று கூறினார்.

இந்தமாதிரி ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது, தனக்கு அரசியல்வாதிகளையெல்லாம் தெரியும் என்கிற வகையில் துரைராஜ் பேசினார். எம்.ஜி.ஆருக்கு என் மீது கோபம் வருவதற்கு இந்தப் பேச்சுதான் ஆரம்பம் என்று சொல்லலாம். ஏனென்றால், இதன் பிறகு வெகுநாள் கழித்து, நான் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். கர்நாடக இந்திரா காங்கிரஸ் எம். எல். ஏ. க்களும், நடிகர் துரைராஜும் எம்.ஜி.ஆரைச் சந்தித்துப் பேசியதாகவும், அதில் ஏதோ முக்கியத்துவம் இருப்பதாகவும் ஒரு தகவல் கிடைத்தது. விசாரித்ததில் சந்தேகத்தைக் கிளப்பக் கூடிய மேலும் ஒரு விவரமும் கிடைத்தது. இந்திரா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், நடிகர் துரைராஜும் எம்.ஜி.ஆரைச் சந்தித்துப் பேசியதாகவும், அதில் ஏதோ முக்கியத்துவம் இருப்பதாகவும் ஒரு தகவல் கிடைத்தது. விசாரித்ததில் சந்தேகத்தைக் கிளப்புக் கூடிய மேலும் ஒரு விவரமும் கிடைத்தது. இந்திரா காந்தியின் நம்பிக்கையைப் பெற்ற ஜோதிடர் சுந்தரம் என்பவர். துரைராஜின் சம்பந்தி என்பதே அந்த விவரம். கொஞ்சம் சுவாரஸ்யம் தட்டவே, துரைராஜுடன் ஒருவர் மூலமாகத் தொடர்பு கொண்டு, என்ன நடந்தது என்று விசாரித்தேன்.

துரைராஜிடம் டெலிஃபோனில் நானும் பேசினேன். ‘தம்பி... எதுக்கு எம்.ஜி.ஆரைப் பார்க்கப் போவோம்? பாலிடிக்ஸ்தான். அவர் காங்கிரஸ்லே சேரப் போறாரு. நான் தான் எல்லாத்தையும் முடிச்சு வெக்கறேன். நம்ப சம்பந்தி வழியா இந்திரா அம்மா சொல்லி அனுப்பினாங்க. அதனாலே தான் இந்த ஏற்பாடெல்லாம் நடக்குது. கர்நாடக எம்.எல்.ஏ. குண்டுராவ், அப்புறம் ‘கான்’ அப்படின்னு ஒருத்தர் எல்லாரும் போய் எம்.ஜி.ஆர். கிட்டே பேசியிருக்கோம்’ என்றெல்லாம் அவர் கூறினார்.

பேட்டி கொடுக்கவும் தயார் என்று அவர் சொல்லவே, ஒரு நிருபரை அனுப்பி அவரைப் பேட்டி கண்டோம். இந்திரா காங்கிரஸைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுடன் எம்.ஜி.ஆர் பேசியது இணைப்பு பற்றிய பேச்சு...என்றெல்லாம் விவரமாக துரைராஜ் பேட்டியிலேயே கூறிவிட்டார்.

அந்த இதழ் ‘துக்ளக்’ வெளியானவுடன் எம்.ஜி.ஆருக்குக் கோபம் வந்தது. அ.தி.மு.க. வின் அதிகாரப்பூர்வமான ஏடு என்று அறிவிக்கப்பட்டிருந்த தென்னகம் பத்திரிகையில், எம்.ஜி.ஆரின் மறுப்பு சுடச்சுட வெளியாகியது. எனக்கு ஒரு பயம் வந்தது. ‘துரைராஜ் அவர்கள் சுடுகாட்டுக் கதைகளைக் கூறிய மாதிரி, இதிலும் நமது காதில் பூ சுற்றி விட்டாரோ’ என்ற அச்சம் என்னைப் பற்றிக்கெண்டது. அப்போது கர்நாடக எம்.எல்.ஏ.வாக இருந்த குண்டுராவுக்கு டெலிஃபோன் செய்தேன். அவரோ துரைராஜ் கூறியதையெல்லாம் அப்படியே உறுதிப்படுத்தினார். மேலும். ‘கருணாநிதி மீது விசாரணைக் கமிஷன் வைத்தால், காங்கிரஸ¤டன் என் கட்சியை இணைக்க நான் தயார்’ என்று எம்.ஜி.ஆர். கூறியதாக குண்டுராவ் அடித்துக் கூற, பெங்களூர் சென்று அவரையும் பேட்டி கண்டேன். குண்டுராவ், துரைராஜ் ஆகியோருடன் எம்.ஜி. ஆரை சந்தித்திருந்த கான் என்ற கர்நாடக மேல்சபை உறுப்பினரும் உடனிருந்தார். துரைராஜிடமும் மீண்டும் பேசினேன். எம்.ஜி.ஆரின் கோபத்தினால் கொஞ்சம் ஆடிப் போயிருந்த அவர், தன்னை விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் நான் விடுவதாக இல்லை. அவரும் பேட்டி விவரங்கள் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்தினார்.

இம்மாதிரி இந்திரா காங்கிரஸ் தூதுவருடன் பேரம் பேசியது மிகவும் ரகசியமாக இருக்கும் என்று எதிர்பார்த்த எம்.ஜி.ஆர். இந்த விஷயத்திற்கு இப்படி கிடைத்து விட்ட விளம்பரத்தை நினைத்து, என் மீது கொண்ட கோபம் கொஞ்ச நஞ்மல்ல. ஆனால் ஒன்று. இம்மாதிரி நான் தோற்றுவித்த சங்கடங்கள் அவரை அந்த நேரத்தில் பாதித்தனவே தவிர, அதை மனதில் வைத்துக் கொண்டு அவர் அலையவில்லை. சில நாட்களில் இந்த நிகழ்ச்சியை மறந்தார். நட்பு தொடர்ந்தது.

ஆச்சார்ய கிருபளானி போன்ற பழுத்த தேசியவாதிகளில் இருந்து, துரைராஜ் போன்ற அரசியலுக்கு சம்பந்தமில்லாத கலைஞர்கள் வரை பலதரப்பட்டவர்களிடமும் சகஜமாகப் பழகும் வாய்ப்பு எல்லா பத்திரிகையாளர்களுக்கும் கிட்டுவதில்லை. பல துறைகளில் சம்பந்தப் பட்டிருந்ததால், அரசியல், பத்திரிகை, சினிமா, நாடகம், கிரிக்கெட் துறைகளைச் சார்ந்தவர்கள், மற்றும் தொழிற்சங்கவாதிகள், வக்கீல்கள், ஆன்மீகவாதிகள் என் பல்வேறு துறையினர் என்னிடம் மனம் விட்டுப் பேசும் அளவுக்கு தொடர்புகள் எனக்கு இருந்தன. வெவ்வேறு நிலைகளில் இருப்பவர்கள், வெவ்வேறு சமயங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு இதனால் எனக்குக் கிட்டியது. திட்டமிட்டிருந்தால் கூட இம்மாதிரி வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்காது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் எனக்குச் செய்த உதவிகளில் இதுவும் ஒன்று.

நகைச்சுவை நடிகரிடமிருந்து இன்னொரு தேசியத் தலைவரிடம் போவோம். ஃப்ரம் தி ரிடிகுலஸ் டு தி ஸப்ளைம்!’

எமர்ஜென்ஸி வருவதற்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பாக திரு. ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் சென்னை வந்திருந்தார். வருவதற்கு முன்பாகவும் சரி, வந்த பிறகும் சரி, தி.மு.க. அரசுக்கு அவர் நற்சான்றிதழ்களை வழங்கிக் கொண்டிருந்தார். பீஹாரில் ஊழல் எதிர்ப்பைத் தொடங்கி, அதை மாபெரும் இயக்கமாக உருவெடுக்கச் செய்து, பிரதமர் இந்திரா காந்திக்கு பெரும் சோதனையாக ஜெ.பி. புறப்பட்டிருந்த நேரம் அது. ‘இப்படி ஊழலை எதிர்ப்பவர் தமிழகத்தில் தி.மு.க ஊழலை மட்டும் கணடு கொள்ளாமல் விடுவது என்ன நியாயம்? இதனால் இவருடைய இயக்கத்திற்கு மரியாதை குறைந்து விடாதா? தமிழகத்தில் மக்கள் என்ன நினைப்பார்கள்?’ என்ற கேள்விகளும், அதனால் ஏற்பட்ட மனவருத்தமும் காமராஜுக்கு இருந்தது. தி.மு.க.வின் ஊழலை எதிர்க்கவும், கண்டித்துப் பேசுவும், ஜெ.பி. தயாராக இல்லை என்பதால், அவர் சென்னைக்கு வந்த பொழுது, காமராஜ் அவரைச் சந்திக்கவில்லை. இத்தனைக்கும், ஜெ.பி.க்கு காமராஜ் நெருங்கிய நண்பர். ஜெ.பி. மீது காமராஜ் வைத்திருந்த பற்று அசாத்தியமானது என்பதை விளக்குகிற நிகழ்ச்சி ஒன்றை பிறகு பார்ப்போம்.

காமராஜுக்கு நெருக்கமுடையவர்களில் நானும் ஒருவன் என்பதால், ஜெ.பி. க்கு வேண்டியவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டார்கள். காமராஜும், ஜெ.பி யும் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை அவர்கள் தெரிவித்தார்கள். இந்த நண்பர்களில் முக்கியமானவர்கள் திரு. ஷோபா காந்த், திரு. சாந்திலால் ஜெயின் ஆகியோர்.

ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் திரு. ஷோபா காந்த் ஒருவர். பீஹாரிலிருந்து சென்னைக்கு வந்து வர்த்தகம் செய்து கொண்டிருப்பவர். பெரிய தேசபக்தர். சம்பாதித்ததை விட நல்ல காரியங்களுக்குச் செலவழித்தது தான் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சமூக சேவகர். தேசநலன் பற்றிய சிந்தனை தான் இவருடைய உயிர் மூச்சு, வர்த்தகம் இவருடைய பொழுதுபோக்கு அவ்வளவு தான். இவர், ஜெ.பி. இயக்கத்தில் நானும் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை ஏற்கனவே எடுத்திருந்தார். சென்னை வரும் பொழுது, ஜெ.பி.யை நான் சந்தித்து, தமிழகத்தில் அந்த இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்பதும் இவருடைய விருப்பம்.

நான் காமராஜிடம் பேசிப் பார்த்தேன். தி.மு.க.வின் ஊழலை ஜெ.பி. எதிர்க்க முனையப் போவதில்லை என்ற நிலையில், அவரை தான் சந்திப்பதில் அர்த்தமில்லை என்று காமராஜ் கூறிவிட்டார்.

இதை இப்படியே பட்டவர்த்தனமாக ஜெ.பியிடம் தெரிவிக்க என் மனம் விரும்பவில்லை. அன்று இரவு ஜெயப்பிரகாஷ் நாராயணைச் சந்தித்து, சுமார் ஒரு மணி நேரம் பேசிப் பார்த்தேன். தி.மு.க.வின் ஊழலைப் பற்றிப் பேச அவர் மறுத்தார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் வலுவாக இல்லை. நான் அவரை மிகவும் எதிர்த்துப் பேச வேண்டி யதாகியது.

தமிழகத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை என்று வாதிட்டேன். காமராஜ் அவரைச் சந்திக்க முடியாத அளவுக்கு, அவர் தமிழகத்தில் தன் நிலையை வகுப்பது யாருக்கும் நல்லதல்ல என்று எடுத்துச் சொன்னேன்.

அவருடைய இயக்கத்தின் தமிழகப் பிரதிநிதியாக இருந்து, என் விருப்பப்படி செயல்படுமாறு கூறினார். இதைக்கூட அவர் கோபத்தில் சொன்ன மாதிரி தான் எனக்குத் தெரிந்தது. ‘நீயும் வா. செயல்படு. நான் அனுமதிக்கிறேன்’ என்ற வகையில் அவர் பேசவில்லை. ‘நீயாக என்ன வேண்டுமானாலும் செய்து கொள். என்னைவிட்டுத் தொலை’ என்கிற மாதிரி தான் இருந்தது அவர் அளித்த வாய்ப்பு.

இந்த என் எண்ணத்தை அவரிடமே நான் கூறிவிட்டு, தி.மு.க.வையும் அவர் எதிர்க்க வேண்டிய அவசியத்தையும் மேலும் வலியுறுத்தத் தொடங்கிய போது, ஜெ.பி. பொறுமை இழந்தார். கோபத்துடன் எழுந்து நின்று என்னைப் பார்த்து, “ஒரே ஒரு விஷயத்திற்கு உன்னிடம் அனுமதி கேட்கிறேன். கருணை கூர்ந்து, எனக்கு நீ அனுமதி கொடுக்க வேண்டும். நான் போய் சாப்பிடலாமா?” என்று உரக்கக் கேட்டார்.

இதற்கு மேல் பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த நான், “உங்களுக்கு எரிச்சலூட்ட வேண்டும் என்பது என் நோக்கமல்ல. உங்கள் அனுபவத்திலும், அறிவிலும் நூறில் ஒரு பங்கு கூட எனக்குக் கிடையாது. ஆனால், தமிழகத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நிச்சயமாக நம்புகிறேன்.

அதனால் தமிழகம் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போய்விடுமே என்பதுதான் என் கவலை. தவறாகப் பேசியிருந்தால் மன்னியுங்கள்” என்று கூறிவிட்டு, விடைபெற்றேன்.

அந்தக் கட்டுரையை முடிக்கும் போது, இந்தக் கருத்தை நான் தெரிவித்தேன்.

...தமிழக மக்களின் மனநிலையை அவர் புரிந்து கொள்ளவில்லை. இந்திரா காங்கிரஸ், அ.தி.மு.க போன்ற சக்திகள் இனி பலம் பெறும்.

‘ஜெ.பியை தமிழகம் புரிந்து கொள்ளவில்லை. தமிழகத்தை ஜெ.பி புரிந்து கொள்ளவில்லை.’ என்ற நிலை நீடித்தால், சில காலம் கழித்து, நாம் அனைவருமே தவறு செய்து விட்டோம் என்பதைத் தான் எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டியிருக்கும் தி.மு.க.வினர் உட்பட...

நான் சொன்னது தான் பிறகு நடந்தது என்ற திருப்தி எனக்கில்லை. என்னுடைய எச்சரிக்கையை ஏற்க முடியாத அளவுக்கு ஒரு தடை அப்போது ஜெ.பிக்.கு இருந்தது. இந்திரா காந்தியின் அரசியலை எதிர்த்துக் கொண்டிருந்த அவர், அதற்கு இடையூறு செய்கிற மாதிரியான, வேறு எதிர்ப்புகளை ஆங்காங்கே உருவாக்கிக் கொள்ள விரும்பவில்லை. அதனால் தன்னுடைய முக்கிய லட்சியம் அடிபட்டுப் போகும் என்று அவர் நினைத்தார். அந்த நினைப்பு தவறு என்ற என்னுடைய அன்றைய கருத்து, இன்றும் மாறவில்லை.

ஆனால் என்னை விட எல்லா விதங்களிலும் மேம்பட்ட ஒரு பத்திரிகையாளர் ஒரு பத்திரிகை அதிபர் ஜெ.பியின் அணுகுமுறையை முழுமையாக ஏற்றார். தமிழகத்தில் தி.மு.க.வை எதிர்ப்பதில்லை என்ற ஜெ.பி.யின் முடிவிற்கு அந்தப் பத்திரிகை அதிபர் கூட ஒரு காரணம் என்றே சொல்லி விடலாம். அவர் தான் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிபர் திரு. ராம்நாத் கோயங்கா. மிகப் பெரிய மனிதர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.