புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
களுவாஞ்சிக்குடி கலாசார விழாவும் ''எழுவான்'' சஞ்சிகை வெளியீடும்

பிரதேச மண் வாசனையை வெளிப்படுத்திய:

களுவாஞ்சிக்குடி கலாசார விழாவும் ''எழுவான்'' சஞ்சிகை வெளியீடும்

ஜீகளுவாஞ்சிகுடி பிரதேச கலாசார விழா மண்முனை தென் எருவில் பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் பாரம்பரிய கலைகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தென்னை ஓலைகளால் விழா முகவாயில் அமைக்கப்பட்டு பலரதும் பாராட்டைப் பெற்றது.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் தனதுரையில்; கலை, கலாசார பாரம்பரியங்களை பரிமாறுவதில் பாடசாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே பாடசாலைகள் கலை கலாசார செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார். மாவட்ட கலாசார இணைப்பாளர் மலர்ச் செல்வன் தனதுரையின் போது, எமது பாரம்பரிய கலை, கலாசாரங்களை முன்கொணர்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

இது கல்விக்கு நிச்சயமாக தடையாக இருக்கமாட்டாது. எமது பாரம்பரிய கலைகள் மூலம் எமது மாணவர்கள் ஆற்றல் உள்ளவர்களாகவும் ஆளுமை உள்ளவர்களாகவும் வெளிப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார். இது போன்ற கலாசார விழாக்கள் எமது இருப்புக்கும் நம்பிக்கைக்கும் உரமூட்டுவதாக அமைகின்றது. கலந்து கொண்ட அனைத்து அதிதிகளும் இத்தகைய கலாசார விழாக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசியதுடன், கலை நிகழ்வுகளையும் பாராட்டினார்.

இங்கு வெளியிட்ட ‘எழுவான் சஞ்சிகை’ வரலாற்று ஆவணமாக பேணிப்பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிசமாகும்.

தமிழ்த் தாய் வாழ்த்து பிரதேச கலாசாரக் கீதம் என்பன பண்பாட்டுக் கோலங்களுடன் இசைக்கப்பட்டு ஆரம்பமே அமர்க்களமாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைந்திருந்தது.

பெரிய கல்லாறு மெதடிஸ்த மிசன் பெண்கள் பாடசாலைக் குழுவினரின் கண்ணன் விளையாட்டு நடனம் அனைவரையும் கவர்ந்ததுடன் தேற்றாத்தீவு மகா வித்தியாலய மாணவிகளின் நாட்டிய நாடகம் அகம்பாவம் அழியும் என்ற கருத்தை முன்வைத்து ரசிகர்களின் மனதில் இடம்பெற்றது.

பிரதேசத்தைச் சேர்ந்த காளி பரசுராமன், சரவணன் செல்லையா, வைரமுத்து நல்லரெத்தினம், விநாசித்தம்பி கருணையம்மா, சண்முகம் பேரின்ப நாயகம் ஆகியோரின் சமூகம், சமயம், இசைத்துறைக்கான சேவைக்காக கெளரவிக்கப்பட்டனர்.

எருவில் கலாமன்றத்தின் அண்ணாவியார் கலாபூசணம் இராசமாணிக்கத்தால் வடிவமைக்கப்பட்ட “வாலி வதம்” கூத்து அரங்கேற்றம் விழாவிற்கு முத்தாய்ப்பாய் அமைந்தது. கூத்தின் தாற்பரியத்தை தத்துரூபமாக தரிசிக்கும் அரிய வாய்ப்பை இரசிகர்களுக்கு கொடுத்தது வாலிவதம்.

தேற்றாத்தீவு கலாமன்றத்தின் நாடகம் பெற்றோரை விழிப்பூட்டும் வகையில் நேர்த்தியாக அமைந்திருந்தது.

சிலப்பதிகாரம் தரும் சொற்சுவை

(கடந்த வாரத் தொடர்)

ஆய்ச்சியர் குரவையில் கண்ணனை வழிபடும் இடையர் மகளிரின் ஆடலும் பாடலும் உள்ளன. குன்றக் குரவையில் மலைப்பகுதியில் வாழும் மக்களின் ஆடல், பாடல்கள் உள்ளன. இவை நான்கும் தவிர, இருபத்தொன்பதாவது காதையில் (படலத்தில்) பல வகை நாட்டுப் பாடல்களைச் சுருக்கமாகத் தந்துள்ளார். பெண்கள் கூடியிருந்து விளையாடும் அம்மானைப் பாடல் பந்தடித்துப் பாடும் கந்துக வரி, ஊசலாடிப் பாடும் ஊசல் வரி, நெல் குற்றும்போது பாடும் வள்ளைப்பாட்டு என்பவற்றை அங்கே அமைத்துள்ளார்.

இவை நேரே மக்களின் ஆடல் பாடல்களை வடித்து மெருகேற்றித் தந்த இடங்கள், இவை தவிர, மக்களின் பாடல்களை (நாட்டுப் பாடல்களை) நமக்குத் தராமல் அவற்றைப் பற்றிச் சுட்டிக் கூறும் இடங்களும் சிலப்பதிகாரத்தில் உள்ளன. உழவர்களின் தொழிலோடு இயைந்த பாடல்களாகிய விதை விதைக்கும் பாட்டு, களைகட்டல் பாட்டு, அறுவடைப் பாட்டு ஆகியவற்றைப் பற்றி இளங்கோ குறிப்பிட்டிருக்கிறார். சேர மன்னன் வடநாட்டு வெற்றிக்கு பின் திரும்பி வரும் போது சேர நாட்டு மக்கள் வருகையைக் கொண்டாடுவதாகக் கூறும் போது நான்கு வகை நிலங்களில் வாழும் தொழிலாளிகளின் பாட்டுகளையும் பற்றி நான்கு வகைக்குறிப்புக்கள் தந்துள்ளார்.

மலையில் வாழும் குறத்தியர் தினைப் புனத்தைக் காவல் செய்து கொண்டே யாழ். இசைத்துப் பாடினார்களாம். அந்தப் பாட்டில் வடநாட்டில் சேரன் செய்த போரில் வீரச் செயல் புரிந்த யானைகளைப் புகழ்ந்தார்களாம். காட்டு நிலத்தில் உழவர்கள் பாடிய பாட்டில், தம் எருதுகளைப் பார்த்து, “பகையரசர்களின் கோட்டைகளை நம் அரசன் அழித்தான். அந்த வெற்றி வேந்தனின் பிறந்த நாள் நாளை வருகிறது. எருதுகளே! நாளை உங்களுக்கு விடுமுறை; நுகத்தடி உங்கள் கழுத்தில் இல்லாமல் நாளை நீங்கள் மகிழலாம்” என்று பாடினார்களாம். ஆன்பொருநை என்ற ஆற்றங்கரையில் பசுக்களை மேய்த்த ஆயர்கள் குழல் இசைத்துப் பாடிய பாட்டில், ‘பசுக்களே! இமய மலையிலிருந்து வெற்றியோடு திரும்புகிறான் நம் அரசன்.

அவன் அங்கிருந்து பல புதிய மாடுகளைக் கொண்டு வருகிறான். அவற்றின் உறவு உங்களுக்குக் கிடைக்கப் போகிறது. நாளை மேயப்போகும் போது நீங்கள் அவற்றின் துணையோடு போகலாம்” என்று பாடினார்களாம். கடற்கரையில் மீனவப் பெண்கள் பாடிய பாட்டில், “தோழியரே! நம் அரசனுடைய படையெடுப்புக்கு அறிகுறியான வஞ்சிப் பூவைப் பாடுவோம்! அவனுக்கு வெற்றி தந்த போர்க்கு அறிகுறியான தும்பைப் பூவையும் பாடுவோம், அவனுடைய சேரர்குலத்துக்கு உரிய பனம் பூவையும் பாடுவோம்; வாருங்கள்” என்றார்களாம்.

இவை எல்லாம் இளங்கோவின் கலை உள்ளம் மக்களின் ஆடல் பாடல்களைப் போற்றி மதித்த மதிப்பை விளக்குவன ஆகும்.

இளங்கோவடிகளுக்கு முற்பட்ட புலவர்கள் கையாளாத புதிய செய்யுள் வகைகளை அவர் கையாண்டு, பல்வேறு உணர்ச்சிகளைப் புலப்படுத்தும் கருவிகளாக்கியுள்ளார். அகவலும் வெண்பாவுமே மிகுந்திருந்தன பழைய இலக்கியத்தில், கலிப்பாவும், பரிபாட்டும் சிறுபாண்மை ஓசை நயம் உள்ளனவாக இருந்தன. பிற்காலத்தில் தாழிசை துறை விருத்தம் என்ற பெயர்கள் உடைய செய்யுள் இனங்கள் வளர்ந்தன. இடைக்காலத்தில் வளர்ந்த அந்தச் செய்யுள் இனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுப்பவை போல் சிலப்பதிகாரத்தில் புதிய பலவகைச் செய்யுள் வடிவங்களைக் காண்கிறோம். கடற்கரையில் பாடும் இசைப் பாடல்களைக் கொண்ட கானல் வரியிலும் ஆய்ச்சியர் குரவை முதலியவற்றிலும் இளங்கோ அந்தந்தப் பகுதியில் வழங்கிய நாட்டுப் பாடல்களாக அவற்றை அமைத்துள்ளார். அக்காலத்து நாட்டுப் பாடலிலிருந்தே அவர் அந்தப் புதிய செய்யுள் வடிவங்களை வடித்துத் தந்தார் என்பதில் ஐயம் இல்லை. இவ்வகையில் தமிழிலக்கியத்திற்கு அவர் செய்துள்ள தொண்டு ஒப்பற்றதாகும்.

நம்பிக்கை

அதற்குத் தெரியாது
அவன் வந்து பாசமாய் உணவு
பின்னால், தூண்டில் இருப்பது
அதற்கு தெரியாமல் போயிற்று

நேசமாய் கண்களை கட்டிக்கொண்டு
}அவன் விரல்களை நக்கி விட்டது
“ம்மா..... க்கூம்” என்று
நன்றி முனகல் சொன்னது

அவனது கால்களை மேலே நகரவிடாமல்
தன் முன்கால் இரண்டை அரண் செய்தது
நெற்றியில் இருந்து முதுகு வால் வரை
அவன் தடவி விட்டபோது
இன்னும் நன்றியாய் இறுக்கிப் பிடித்தது
பின்னால் தூண்டில் இருப்பது
அப்போது அதற்குத் தெரியாதிருந்தது

பேச்சு நரம்புகள் அதன் நாக்கில்
ஊர்ந்திருந்தால்-
நன்றி மொழிகளை நிறையவே
உதிர்த்திருக்கும்.

அவன் இன்னும் அதற்கு உணவு போட்டான்
அதற்கு அந்த பெரிய கண்கள் கலங்கின
தினமும் அது சந்திக்கின்ற பாசம்
மொழியற்ற முனகலை அது எழுப்பிக் கொண்டது.

புதிதாய் அவனருகில் இரண்டு பேர் வந்தார்கள்.
அவர்களும் ஏதோ கதைத்துக் கொண்டார்கள்.
அது ஆர்வமாய் அவன் முகத்தையே பார்த்திருந்தது
வந்த இரண்டு பேர்-
அதன் அருகே அண்மியதும்
இது அவன் நின்ற தைரியத்தில்
இன்னும் நெருங்கி-
அவன் காலருகில் அண்டியது

அவன் பளபளத்த கூரான கத்தியை
அதன் கழுத்தில் வைத்தபோதும்-
தன்னை அசையாமல்
அவர்கள் இறுக்கிப் பிடித்த போதும்-
அவன் நிற்கின்றான் என்று-
மறுகாமல் நின்றது
அவன் கத்தியை ஓங்கினான்
மீண்டும் “க்கூம்” சொல்லி-
இறந்த போதும்
இதற்கு அவனை இன்னும் தெரியாதிருந்தது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.