புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
அத்துமீறும் இந்திய ரோலர்களால் இலங்கை கடல் வளம் கொள்ளை

அத்துமீறும் இந்திய ரோலர்களால் இலங்கை கடல் வளம் கொள்ளை

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் நாளாந்தம் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே இருகின்றன. தடைசெய்யப்பட்ட ரோலர்களைப் பயன்படுத்தி இந்திய மீனவர்களால் நடத்தப்படுகின்ற இந்த மீன்பிடியால் இலங்கையின் கடல்வளம் அழிக்கப்பட்டு வருவதாகப் பல்வேறு தரப்புகளால் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டே வருகின்றன.

அத்துமீறிய இந்திய மீன்பிடியைக் கண்டித்து பல மட்டங்களில் ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. எனினும், இந்த ஆர்ப்பாட்டங்களோ, எதிர்ப்புகளோ உரிய தரப்பினரின் கவனத்தை பெரிதாக ஈர்க்கவில்லை. இந்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு என்ற அமைப்பின் ஸ்தாபகர் சகாதேவன் மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து கரையோரமாக முல்லைத்தீவு வரை 590 கிலோ மீற்றர் கண்டன நடை பயணப் பேரணியொன்றை நடத்தியிருந்தார். இவரின் இந்த கண்டனப் பேரணியைத் தொடர்ந்து இந்திய மீனவர் விடயம் குறித்து உரிய தரப்பினரின் கவனம் திரும்பியுள்ளது.

நாளாந்தம் சராசரியாக சுமார் 3000 இந்திய ரோலர் படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதாகக் குறிப்பிடும் சகாதேவன், இதனால் வருடாந்தம் 21 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான வளங்கள் இழக்கப்படுவதாகக் கூறுகின்றார். வாரமஞ்சரி ஆசிரியர் பீடத்துக்கு வந்திருந்த அவருடன் கலந்துரையாடியபோது பகிர்ந்துகொண்ட விடயங்கள் வருமாறு.

கே. : உங்கள் கண்டன நடைபயணப் பேரணி பற்றிக் கூறுங்கள்?

ப. : கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து இந்த கண்டன நடைபயணப் பேரணியை நான் ஆரம்பித்தேன். மன்னாரிலிருந்து புறப்பட்டு பூநகரி ஊடாக யாழ்ப்பாணம், குருநகர், தீவுப் பகுதிகள், மாதகல், கீரிமலை, பலாலி, மயிலிட்டி உயர் பாதுகாப்பு வலயம் ஊடாக வடமராட்சி, தென்மராட்சி, கிளிநொச்சி ஊடாக முல்லைத்தீவை சென்றடைந்தோம். எனது இந்தப் பேரணியில் 21,000 மீனவ மக்களைச் சந்திக்கக் கூடியதாகவிருந்தது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியால் ஏற்படும் ஆபத்து குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. நான் சென்ற அனைத்துக் கிராமங்களிலும் மக்கள் அமோக ஆதரவு வழங்கியிருந்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் சோகக்கதை, கண்ணீர் சிந்தும் மக்களின் புலம்பலாகவே உள்ளது. கடலுக்குச் சென்று மீன் இல்லையென்று திரும்புகின்றனர். எனினும், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியால் மீன் வளம் அழிக்கப்பட்டது என்பது அவர்களுக்கு இப்பொழுதுதான் புரிய ஆரம்பித்துள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியைக் கண்டித்து யாழ்ப்பாணம் குருநகரில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை நான் நடத்தியிருந்தேன். எனினும், இவ்விடயத்துக்கு தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக மீனவ நண்பர்கள் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் வழங்கிய உறுதிமொழிக்கமைய அப்போராட்டத்தை கைவிட்டேன். இருந்தும் உரிய தீர்வு கிடைக்காததால் கண்டனப் பேரணியை நடத்தி யிருந்தேன்.

கே. : இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியால் எவ்வாறான இழப்புகள் ஏற்படுகின்றன?

ப. : அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் வரும் இந்திய மீனவர்கள் ரோலர் படகுகளைப் பயன்படுத்தியே மீன்பிடிக்கின்றனர். ‘பொட்டம் ரோலிங்’ என்பது கடலின் அடிமட்டம் வரை வலையை செலுத்தி மீன்கள், கடல் பாறைகள் அனைத்தையும் இழுத்துச் செல்வதாகும். குறிப்பிட்ட ஒரு இடத்துக்குச் சென்ற பின்னர் வலையை இழுத்தெடுப்பர். அப்படி இழுக்கும் போது பெறுமதியான, தமக்குத் தேவையான மீன்களை மட்டும் எடுத்துக்கொண்டு, ஏனையவற்றை கடலில் வீசிவிட்டுச் செல்வர்.

இதனால் மீன் உற்பத்திக்குத் தேவையான கடல் பாறைகள், கடல் தாவரங்கள் எல்லாம் இழுத்துச் செல்லப்பட்டு அழிக்கப்பட்டுவிடும். இதனால் உள்ளூர் மீனவர்களுக்கு எதிர்காலத்தில் மீன்பிடிப்பதற்கான கடல்வளம் இல்லாமல் போய்விடும். இதனைத் தடுக்காவிட்டால், எதிர்கால சந்ததிக்கு இலங்கையில் மீன்வளம் இல்லாமல் போய்விடும். இந்திய மீனவர்கள் தமது கடல் எல்லைக்குள் அனைத்து வளத்தையும் அழித்துவிட்டு தற்பொழுது இலங்கை கடற்பரப்புக்குள் நுழைகின்றனர்.

முல்லைத்தீவில் யுத்த காலத்தில் கூட இறால் காலத்தில் 10 இலட்சம் ரூபா வருமானம் பெற்ற மீனவர் ஒருவர் இம்முறை 5,000 ரூபா மாத்திரமே வருமானமாகப் பெறுகின்றார். இதற்கு இந்திய ரோலர் படகுகளே காரணம். மாதகல் போன்ற கிராமங்களில் பல மீனவர்கள் கடன்கள் காரணமாக தமது தொலைபேசிகளை கூட அணைத்து வைத்துள்ளனர். இது பரிதாபமான நிலை.

அண்மையில் மன்னாரில் 4 இந்திய ரோலர் படகுகள் 18,000 கிலோகிராம் இறால்களுடன் பிடிக்கப்பட்டன. ஒவ்வொரு படகிலும் சராசரியாக 4,500 கிலோகிராம் இறால்கள், ஒரு கிலோ இறால் 500 ரூபாப்படி பார்த்தால் 9,000,000 ரூபா பெறுமதியானவை இவ்வாறு நாளாந்தம் 3000 ரோலர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைகின்றன. அவற்றால் ஏற்படும் இழப்புகளின் பெறுமதி கோடிக்கணக்கானவை.

கே. : இந்திய மீனவர்கள் மாத்திரமா இந்த ரோலர் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்?

ப. : அப்படிக் கூறமுடியாது. குறிப்பாக வட பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் சில பகுதிகளில் இந்திய மீனவர்களைக் காரணம் காட்டி உள்ளூர் மீனவர்கள் சிலரும் ரோலர் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இதற்கு உள்ளூர் அரசியல்வாதிகளும் பக்கபலமாக உள்ளனர். மன்னார் பேசாலை பகுதியில் இடம்பெறும் ரோலர் மீன்பிடிக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறும் தமிழ் அரசியல்வாதியொருவரின் பின்னணி இருப்பது பெரும் கவலையான விடயமாகவுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியைத் தடுக்கும் விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் கூட ஒன்றிணைந்து இதுவரை குரல் கொடுக்காமல் இருப்பது மீனவ மக்கள் மத்தியில் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கே. : உங்கள் கண்டனப் பேரணியின் பின்னர் அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் சாதகமான பதில் கிடைத்துள்ளதா?

ப. : நிச்சயமாக வடமராட்சிப் பகுதியில் இடம்பெறும் ரோலர் மீன்பிடியைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வட பிராந்திய கடற்றொழில் பிரதிப் பணிப்பாளர் கடற்படையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது மட்டுமன்றி எமது போராட்டத்தின் பின்னர் யாழ். குடாநாட்டுக்கு வந்திருந்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண, வடபகுதியில் அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் தென்பகுதி மீனவர்கள் தமது இடங்களுக்குச் செல்லவேண்டும் எனக் கூறியிருந்தார். இந்திய மீனவர் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் ஊடாக இப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கவிருப்பதாகவும் அமைச்சர் கூறியிருந்தார். அமைச்சரின் இவ்வாறான கருத்துக்கள் எமது போராட்டத்துக்குக் கிடைத்த ஆரம்ப வெற்றிகளாகவே நாம் பார்க்கின்றோம்.

இந்திய ரோலர் மீன்பிடி குறித்து பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அத்துடன், கூடிய விரைவில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளோம்.

கே. : இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியைக் கண்டித்து ஏன் இந்திய சமூகத்தினர் ஒட்டுமொத்தமாக எதிர்ப்புக் குரலை இதுவரை எழுப்பவில்லை?

ப. : இந்திய மீனவர் பிரச்சினைக்கு மீனவர்கள் எதிர்ப்புகளைத் தெரிவிக்கவில்லையென்று கூற முடியாது. அவ்வப்போது மீனவ சமாஜங்கள் தமது எதிர்ப்புகளை வெளியிட்ட வண்ணமே இருந்தன. எனினும், ஒவவொரு மீனவ சமாஜத்தின் பின்னாலும் சில அரசியல் பின்னணியொன்று இருப்பதால், அவர்கள் ஒன்றிணைவதில் சில பின்னடைவுகள் உள்ளன. இந்த சமாஜங்களால் நடத்தப்பட்ட போராட்டங்கள் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் போராட்டமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.

எனினும் எமது இந்தப் பேரணியின் பின்னர் அனைத்து மீனவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணப்பாடு தோன்றியுள்ளது. திருகோணமலை, மட்டக்களப்புக்கு வருமாறு மீனவர்கள் எம்மை அழைக்கின்றனர். அதேநேரம், எமது கண்டனப் பேரணிக்கு சிலாபத்திலுள்ள தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கியது. சிலாபத்திலிருந்து நடைபயணத்தை ஆரம்பிக்குமாறு அவர்கள் எமக்கு அழைப்பு விடுத்தனர். அடுத்த கட்டமாக அனைத்துப் பகுதி மீன்வர்களையும் உள்ளடக்கியதாக போராட்டங்களை முன்னெடுக்கவும் நாம் திட்டமிட்டுள்ளோம்.

இவ்விடயத்தில் தென்னிலங்கை அரசியல் வாதிகளையோ அல்லது அரசாங்கத்தையோ குறை கூறுவதில் எதுவித பயனும் இல்லை. உள்ளூர் அரசியல் வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து முதல் குரல் கொடுக்க வேண்டும்.

கே. : உங்கள் அமைப்பைப் பற்றிக் கூறுங்கள்?

ப. : எங்கள் அமைப்பு போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு. 2009 ஆம் ஆண்டு இதனை நாம் ஆரம்பித்தோம். இறுதிக்கட்டத்தில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலிருந்த மக்கள் விடுவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான இழப்பீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென நாம் குரல் கொடுத்திருந்தோம். இதற்கு ஆதரவாக 2010 ஆம் ஆண்டு மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் வரை நடைபயணமொன்றையும் நாம் நடத்தியிருந்தோம். குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தோம்.

இந்திய வீட்டுத் திட்டத்தின் போது வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கு மக்களிடமே பணத்தைக் கையளிகக் எடுக்கப்பட்ட தீர்மானமானது எமது நடவடிக்கைக்குக் கிடைத்ததொரு வெற்றியாக நாம் பார்க்கின்றோம். 2012 ஆம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை நாம் பெற்றுக்கொடுத்தோம். 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி எமது அமைப்பை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகப் பதிவுசெய்துள்ளோம். அதன் பின்னரே இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியைக் கண்டித்து குருநகரில் நான் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்தேன்.

கே. : உங்கள் அடுத்தகட்ட செயற்பாடுகள் பற்றிக் கூறுங்கள்

ப. : இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி விடயம் குறித்து உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தி அதனைத் தடுக்கவுள்ளோம். கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்துகொள்ளவரும் இந்திய மீனவ சமூகத்தினரிடமும் இவ்விடயம் குறித்து கலந்துரையாட நாம் திட்டமிட்டுள்ளோம்.

நாம் நடத்திய கண்டனப் பேரணி இந்திய ஊடகங்களிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வந்து மீன்பிடிப்பதற்கு அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற விடயத்தை நாம் இந்திய ஊடகங்களுக்கும் தெளிவாகக் கூறியுள்ளோம். அப்படி அனுமதிப்பதானது இலங்கையின் கடல் வளத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவே அமைந்துவிடும்.

அதேநேரம் சர்வதேச பார்வையில் இலங்கையின் மீன்பிடி தொடர்பாக காணப்படும் அவப்பெயரும் நீக்கப்பட வேண்டும். தடைசெய்யப்பட்ட மீன்பிடித் தொழிலை இலங்கை மேற்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கடல்வளம் தொடர்பான பிரிவு அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபடுவது இந்திய மீனவர்களே. அவர்களின் இந்தச் செயற்பாட்டினால் இலங்கையின் மீன்பிடிக்கே பாதிப்பு ஏற்படும். எனவே இந்திய ரோலர் மீன்பிடியைத் தடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு இலங்கைக்கு உள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.