புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரபூர்வமான பதில்கள்

nஜனீவா மனித உரிமை பேரவை

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரபூர்வமான பதில்கள்

ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் கலந்துகொள்ளச் செல்லவிருக்கும் மனித உரிமைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர் அடுத்தவாரம் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை அங்கு சந்தித்து நாட்டின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்கவிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் 22வது கூட்டத்தொடர் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, இலங்கைக் குழுவினரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்ததையடுத்தே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது என்றும், இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென மேற்கொள்ளப் படும் நிவாரண செயற்பாடுகள் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும்.

மீள்குடியமர்த்தல், நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இலங்கைத் தூதுக்குழுவினர், நவநீதம் பிள்ளைக்கு விளக்கமாக எடுத்துரைக்கவுள்ளனர்.

இதுபற்றி தகவல் தெரிவித்த அமைச்சின் உயரதிகாரி ஒருவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை இந்தத் தூதுக்குழுவுக்குத் தலைவராக நியமித்துள்ளார் என்றும், அதனையடுத்து தூதுக்குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை இங்கிருந்து ஜெனீவா புறப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சின் இரண்டு அதிகாரிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் 6 சிரேஷ்ட அதிகாரிகளும் உடன் செல்வார்கள். சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் 4 பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல்களும், ஒரு சிரேஷ்ட அரச சட்டத்தரணியும் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், முதலில் ஒரு பெரிய தூதுக்குழுவை ஜெனீவாவுக்கு அனுப்ப அரசாங்கம் முடிவெடுத்திருந்த போதிலும், அங்கு பல நாடுகளின் 80 அமைச்சர்கள் உரைநிகழ்த்தவிருப்பதனால் அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது என்று வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள், தெரிவித்தன. ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க கொழும்பு வந்து சில நாட்கள் தங்கியிருந்து ஜெனீவா கூட்டத்தொடர் பற்றி ஆலோசனை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ள மஹிந்த சமரசிங்க, கடந்த ஆண்டுக்குப் பின்னர் இலங்கை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும், மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டத்தையும் எந்தளவுக்கு இப்போது நடைமுறைப்ப டுத்தியிருக்கிறது என்பதையும் விளக்கிக் கூறவுள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் விளக்கிக் கூறுவார்.

இந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 4.20க்கு ஆரம்பமாகும். இங்கு இலங்கை தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரபூர்வமான பதில்களை எடுத்துரைக்கும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.