புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
கச்சதீவில் இன்று திருவிழா

கச்சதீவில் இன்று திருவிழா

அந்தோனியார் சந்நிதியில் இந்திய - இலங்கை மீனவர்கள் சங்கமம்

கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (24.02) மிக சிறப்பான முறையில் நடைபெறுகிறது.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த திருவிழாவில் யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை திருப்பலி ஒப்புக்கொடுக்கிறார்.

கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமான கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்தில் தினம்தோறும் நடைபெறும் பூஜைகளை நெடுந்தீவு பங்குத்தந்தை வண. பிதா அமல்ராஜ் நடத்தினார்.

திருநாள் திருப்பலி பூஜைகள் (24.02) யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் தலைமையில் நடைபெறும். இதில் இந்தியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மதகுருமாரும் இணைந்துகொள்வர்.

கச்சதீவு புனித அந்தோனியார் உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து பெருமளவான மக்கள் கடந்த 20, 21 ஆம் திகதிகளிலேயே ஆலயம் நோக்கி செல்லத் தொடங்கிவிட்டனர்.

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட அழகிய சிறு தீவு தான் கச்சதீவு. கடலேறி தொழில் புரியும் மீனவர் தம் காவலனாக கச்சதீவில் அமர்ந்து அருளாட்சிபுரியும் அந்தோனியார் இலங்கை கடற்றொழிலாளர்களால் மட்டுமின்றி இந்திய மீனவர்களாலும் பயபக்தியுடன் வணங்கப்படுகிறார்.

மணல் மேடுகளும், சிறு காடுகளும் உள்ள இந்த கச்சதீவு புனித அந்தோனியாரின் இருப்பால் சிறப்புப் பெறுகிறது.

‘கச்சதீவு அந்தோனியாரின் திருவிழாவில் கலந்துகொள்வதற்கு செல்லும் யாத்திரிகர்களுக்கான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது’ என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

‘இந்த முறை நடைபெறும் திருவிழாவில் சுமார் 10,000 இற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் கலந்துகொள்வர்’ என நம்பிக்கை தெரிவித்த யாழ். அரசாங்க அதிபர், ‘கச்சதீவு அந்தோனியாரை தரிசிப்பதற்காக கடல் மார்க்கமாகவே பயணிக்க வேண்டிய தேவை உள்ளதால் கடல் வழிப் போக்குவரத்துக்கான வசதிகள் மற்றும் பாதுகாபபு ஏற்பாடுகள் என்பனவும் செய்யப்பட்டுள்ளன’ என்றும் கூறினார்.

மேலும் உற்சவ காலத்தில் கச்சதீவில் தற்காலிகமாக தங்கவுள்ள இலங்கை, இந்திய யாத்திரிகர்களின் நலன்கருதி அங்கு மலசலகூடம், குடிநீர் வசதி, சுகாதார வசதி என்பனவும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்த யாழ். மாவட்ட அரச அதிபர், உற்சவ காலத்தில் பெருமளவான மக்கள் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இங்கு வருகை தரவிருப்பதால் சுங்கத் திணைக்களத்தின் சேவைகளும், பொலிஸ் மற்றும் இலங்கை வங்கியின் சேவைகளும் இங்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

‘அவசர தேவைகளை கருத்தில் கொண்டு அம்புலன்ஸ் படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என அவர் சொன்னார்.

இதேவேளை கச்சதீவு அந்தோனியார் கோவிலுக்கு செல்லவுள்ள யாத்திரிகர்களுக்காக யாழ். தீவகத்திலுள்ள குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு ஆகிய இரு இறங்குதுறைகளில் இருந்தும் படகு சேவைகள் நடத்தப்படுகிறது.

கடந்த 21 ஆம் திகதியிலிருந்தே மக்கள் கச்ச தீவுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். குறிகட்டுவானிலிருந்து செல்லும் பயணிகளிடம் 250 ரூபாவும் நெடுந்தீலிருந்து செல்லும் பயணிகளிடம் 200 ரூபாவும் கட்டணமாக அறவிடப்படுகிறது.

இது இவ்வாறிருக்க இந்தியாவிலும் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கான யாத்திரை ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

வழக்கம் போல இந்த முறையும் ஆயிரக் கணக்கான யாத்திரிகர்கள் இந்தியாவிலிருந்து கச்சதீவுக்கு அந்தோனியாரை தரிசிக்க வருகின்றனர்.

இவர்கள் தமது பயணத்தை 23 ஆம் திகதியே தொடங்கிவிட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடல் சென்று வலைவிரித்து தொழில் புரியும் தம்மை கஷ்டங்களில் இருந்து காக்கும் கடவுளாக கச்சைதீவு அந்தோனியாரை தமிழக மீனவர்கள் பார்க்கின்றனர்.

கடல் வெளியில் தம்மை காத்து இரட்சிக்கும் தேவனைக் காண 150 இற்கும் மேற்பட்ட படகுகளில்

இராமேஸ்வரத்திலிருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று 24 ஆம் திகதி கச்சதீவுக்கு வருகின்றனர்.

கச்சதீவுக்கு வரும் இந்தியர்கள் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிபந்தனை முன்னர் இருந்தாலும் இம்முறை அவ்வாறான சான்றிதழ் எதுவும் பெறவேண்டிய தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவிழா காலத்தின் பாதுகாப்பு கருதி இந்திய கடற்படை, குற்றத் தடுப்பு பொலிஸார், தமிழக கரையோர காவல்படை உள்ளிட்ட தரப்பினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக -புதிய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், கடல்வழி போக்குவரத்து கண்காணிப்புக்காக தமிழகம் கரையோர பிரதேசங்களான ஏர்வாடி, கீழ்கரை, மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி, இராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஹோவர்கிராப்ட்’ என்ற கப்பலும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மேலதிகமாக விமான மூலமான கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கச்சதீவு அந்தோனியார் திருவிழா என்பது இலங்கை, இந்திய மீனவர் சமூகங்கள் சந்தித்து உறவாடி மகிழும் ஒரு தினமாகவும் இருநாட்டு மக்களின் உறவுக்கு வலுச்சேர்க்கும் நிகழ்வாகவும் உள்ளது.

இரு நாட்டு மீனவர் சமூகத்தினதும் கடல் பரப்பில் தம்மை காத்து நிற்கும் தேவனை வழிபட்டு அருளாசி பெறும் அதேவேளை தமது உறவினை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த திருவிழா தொன்றுதொட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.

கச்சதீவு என்பது இலங்கை திருநாட்டின் யாழ்ப்பாண குடாநாட்டுக்கு அருகில் உள்ள ஒரு சிறிய தீவாகும்.

மணற்பாங்கான மேடுகளும், சிறுபற்றைக் காடுகளும் பனை மரங்களும் மட்டுமே உள்ள இந்தத் தீவிலுள்ள அந்தோனியார் ஆலயம் மிகவும் புதுமைவாய்ந்ததாகும்.

1.15 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள (285 ஏக்கர்) இந்தத் தீவு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லைப் பகுதிக்கு அண்மையில் உள்ளது.

குடியிருப்புகள் எதுவும் அந்த சிறிய தீவான இது முன்னொரு காலத்தில் கள்ளக் கடத்தல் செயற்பாடுகளின் கேந்திர நிலையமாக இருந்தது. 1974 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் ஆளுகையின் கீழ் இது இருந்தது. எனினும் 1974 மற்றும் 1976 ஆண்டுகளில் இலங்கை - இந்தியாவுக்கிடையியே செய்துகொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானதாகியது.

இந்தத் தீவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (முற்பகுதியில்) இந்தியாவின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த சீனிக்குப்பின் படையாச்சி என்பவரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்திய – இலங்கை மீனவர்கள் சங்கமித்து தமது உறவை வளர்த்துக்கொள்ளும் களமாக இருக்கும் கச்சதீவு அந்தோனியார் திருவிழா 1983 களில் நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக சில பத்து ஆண்டுகள் நடைபெறாது இருந்தது.

எனினும் 2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் இங்கு திருவிழாக்கள் நடைபெறத் தொடங்கின.

கடந்த ஆண்டு (2012) இலங்கை கடற்படையினரின் பூரண ஒத்துழைப்பு, ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்ற கச்சதீவு அந்தோனியாரின் திருவிழாவில் பெருந்தொகையான இலங்கை, இந்திய மீனவர்கள் கலந்துகொண்டனர்.

இது இரு நாட்டு மீனவர்களும் தமக்குள்ள பிரச்சினைகளை பரிமாறிக்கொள்வதற்கான களமாகவும் அமைந்திருந்தது.

குறிப்பாக இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதால் வட பகுதி மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறுத்து இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்களுக்கு நேரில் விளக்கமளித்தனர்.

இவ்வாறு இரு நாட்டு மீனவர்கள் தம் உறவினை பரிமாறிக் கொள்ளவும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும் களமாக இருக்கும் கச்சதீவு அந்தோனியாரின் சந்நிதியில் இன்று மீண்டும் இரு நாட்டு மீனவர்களும் கூடுகின்றனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.