புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
இரண்டு முதல்வர்கள் செய்த உதவி

இரண்டு முதல்வர்கள் செய்த உதவி

பாலசந்தரைப் பொறுத்த அளவில், எங்கள் நாடகங்களை டைரக்டர் செய்த அனுபவம், அவர் மறந்து விட நினைக்கும் அனுபவங்களில் ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அவருடைய அணுகுமுறைக்கும், என்னுடைய அணுகுமுறைக்கும் நேர் எதிர். அவருடைய கட்டுப்பாட்டுக்கும், எங்கள் குழுவினுடைய கட்டுப்பாட்டின்மைக்கும் சம்பந்தமே இல்லை.

பாலசந்தர் ஒரு ‘பர்ஃபெக்ஷனிஸ்ட்’, முழுத் திருப்தி அடையாமல் ஒரு அடி நகர மாட்டார். டைரக்ட் செய்யும் பொழுது, ஒரு இராணுவ தளபதிதான். உத்தரவை யாரும் மீறக் கூடாது. எடுத்துக் கொண்ட காரியத்தில் அவருக்கு ஒரு வெறியே ஏற்பட்டு விடும். ‘பின்னாளில் அவர் புரிந்த திரையுலக சாதனைகளுக்கு, அவருடைய கற்பனை வளத்துடன் இவையெல்லாமும் சேர்ந்து உதவின.’

கே.பாலசந்தர்

எனக்கோ - ஒரே அவசரம் தான். ‘இது முடிந்தது - அடுத்த விஷயத்துக்குப் போவோம்’ என்ற நினைப்பு எடுத்த எடுப்பிலேயே எனக்கு வந்து விடும். நான் பல துறைகளில் தலையிட்டதற்கு இந்த என்னுடைய சுபாவம் கூட காரணமாக இருக்கலாம். ஒரு காட்சியை திரும்பத் திரும்ப ஒத்திகை பார்த்தால் ஒழிய, பால சந்தருக்கு திருப்தி ஏற்படாது. எனக்கோ ஒரு விஷயத்தை இரண்டாவது முறை செய்யும் போதே அலுப்பு வந்துவிடும். அடுத்த விஷயத்துக்குப் போகலாம் என்று தோன்றிவிடும். நான் நுனிப்புல் மேய்பவன்.

இதைத்தவிர, பாலசந்தரைப் பொறுத்த அளவில் மேடையில் அவர் ஒரு குறி போட்டால், அந்த இடத்தில் தான் சம்பந்தப்பட்ட பாத்திரம் நின்றாக வேண்டும். எங்கள் குழுவிலோ எல்லோருக்கும் மேடையில் இஷ்டப்படி அலைகிற சுபாவம். இதனால் எல்லாம் பாலசந்தருக்கு எங்கள் குழுவின் நாடகங்களை டைரக்டர் செய்வதில் பல அதிருப்திகள் தோன்றிக் கொண்டே இருந்தன. போதாக் குறைக்கு வேறு ஒரு விஷயமும் சேர்ந்தது.

எனக்கு மனதில் ஒரு ஜோக் அல்லது ஒரு வசனத்திற்கு பதிலடி போன்ற இன்னொரு வசனம் (ரிபார்ட்டி) தோன்றிவிட்டால், அதை சொல்லியே தீர வேண்டும். என்ன காட்சி, அதில் என்ன கட்டம் என்பதெல்லாம் எனக்கு அனாவசியம். பாலசந்தருக்கோ சீரியஸ் காட்சிகளிலோ அல்லது திருப்பமான கட்டங்களிலோ ஜோக் அடிப்பதும், ரிபார்ட்டியில் ஈடுபடுவதும் பிடிக்காது. அதனால் காட்சியின் முக்கியத்துவம் குறையும் என்பது அவர் கருத்து. இதனால் என்னுடைய வசனங்கள் பலவற்றை அவர் தடுத்து விடுவார். நான் ஒத்திகைகளில் சரி, சரி என்று மண்டையை ஆட்டிவிட்டு, மக்கள் எதிரில் நாடகம் நடக்கும் பொழுது, நான் நினைத்ததையெல்லாம் பேசி விடுவேன். எங்கள் குழுவிலுள்ள மற்றவர்களிடமும் பாலசந்தர் அடித்த வசனங்களை சேர்த்துக்கொள்ளச் சொல்லி விடுவேன். நல்ல கரகோஷம் கிடைக்கும். பெரிய சிரிப்பொலி எழும்பும். ஆனால் பாலசந்தர் நினைத்த மாதிரியே காட்சி ‘தொப்’ பென்று கீழே விழும். எனக்கு அதுபற்றி என்ன கவலை? ஜோக் அடித்த திருப்தி போதுமே?

பாலசந்தர் புத்தி சொன்னார். எச்சரித்தார். கோபித்துக்கொண்டார். எதுவும் பலிக்கவில்லை. எங்கள் நாடகங்களை டைரக்ட் செய்வதை நிறுத்தி விட்டார். ‘உங்கள் நாடகங்களை இனிமேல் நான் டைரக்ட் செய்ய மாட்டேன்’ என்று சொல்லாமல், நாசூக்காக ‘எனக்கு என்னுடைய நாடகங்களின் வேலையே அதிகமாக இருக்கிறது’ என்று கூறிவிட்டார்.

ஒருவர், ஒரு பொறுப்பை உதறினால், எனக்கு ஒரு வேலை கிட்டும் என்பது என் ராசி. கூத்தபிரான் எங்கள் குழுவுக்கு நாடகம் எழுத மறுத்தார் - நான் நாடகம் எழுதத் தொடங்கினேன். பால சந்தர் எங்கள் நாடகங்களை டைரக்ட் செய்ய மறுத்தார் - நான் டைரக்ட் செய்யத் தொடங்கி விட்டேன்! (என்னுடைய சினிமா உலக ஆரம்பம் கூட இப்படித் தான் அமைந்தது)

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலம்

நான் எழுதியது சுமார் 24 நாடகங்கள். அவற்றில் 18 நாடகங்களை நானே டைரக்டும் செய்தேன். டைரக்ட் செய்தேன் என்றால் - பாலசந்தர் மாதிரி அல்ல. பாலசந்தரின் டைரக்ஷன் ஆயில் பெயிண்டிங் என்றால், என்னுடைய டைரக்ஷன் லைன் டிராயிங். அவருடையது ஓவியம் என்றால், என்னுடையது கார்ட்டூன். அவர் முழுமையை எதிர்பார்ப்பார் - நான் ‘சார’த்துடன் திருப்தி அடைந்துவிடுவேன்.

ஒவ்வொரு காட்சியான அரங்க அமைப்பு (செட்டிங்), ஒளி அமைப்பு, பின்னணி இசை, மேடையில் ஒவ்வொரு நிமிடமும் நடிகர்கள் நிற்க வேண்டிய இடங்கள்.... போன்ற பலவற்றிலும் பாலசந்தரின் கவனம் செல்லும். நடிப்புடன் திருப்தி அடைந்து விடமாட்டார். ஆனால் என்னுடைய கவனம், பாத்திரத்திற்கேற்ற நடிப்பு, பேச்சு, வசன உச்சரிப்பு ஆகியவற்றில் தான் செல்லும். ஒரு பாத்திரத்தின் குணாதிசயம் கெட்டு விடக் கூடாது. ஒரு வசனத்தைச் சொல்லும் விதத்தில் அதற்குரிய ரியாக்ஷன் தியேட்டரில் ஏற்பட வேண்டும். இவ்வளவு தான் என் கவனம்.

இப்படி இருந்தும் கூட, எங்களுடைய நாடகங்கள் சக்கை போடு போட்டன. சில நாடகங்கள் வசூலில் சாதனைகள் புரிந்தன. நாடக தியேட்டர் மக்களால் நிரம்பாத நாளே கிடையாது. ஒரு தோல்வி நாடகம் கிடையாது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன என்று நான் நினைக்கிறேன். ஒன்று - மற்ற எல்லா நாடகங்களிலிருந்தும் எங்கள் நாடகங்கள் வித்தியாசமாக அமைந்தன. இரண்டு - எங்கள் குழுவில் ஒவ்வொருவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்தனர்.

இப்படி வெற்றிகரமான நாடகங்களை நாங்கள் தயாரிப்பதற்கு பெரும் துணையாக இருந்தவர்கள், சபா நிர்வாகிகள். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸிலும், பிறகு இப்பொழுது கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸிலும் பொறுப்பேற்ற ராஜகோபால் மற்றும் எம்.ஆர்.கே.நாரத கான சபாவின் கிருஷ்ணசாமி, பாரத் ஃபைன் ஆர்ட்ஸின் பாலு, கலாநிகேதனின் பாலு, கிருஷ்ண கான சபையின் யக்ஞராமன்... போன்ற பல சபா நிர்வாகிகள் எங்களுக்கு அளித்த ஊக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. எங்களுடைய வெற்றிகளை தங்களுடைய வெற்றிகளாக இவர்களைப் போன்றவர்கள் கருதினார்கள். இவர்களிலிருந்து தொடங்கி பிற்காலத்தில் ப்ரியா மூர்த்தி வரை பல சபா நிர்வாகிகளும், எங்களை வளர்த்து விட்டார்கள். பொதுவாகவே நாடகக் கலைக்கும், சங்கீதம், நாட்டியம் போன்ற கலைகளுக்கும் இவர்கள் ஆற்றியிருக்கும் தொண்டு மகத்தானது.

எங்கள் வெற்றிக்குப் பத்திரிகைகள் ஒரு காரணமாக இருக்கவில்லை. பெரிய பத்திரிகைகள் பெரும்பாலும் எங்களைப் புறக்கணித்தன. நாங்களும் பதிலுக்குப் பதில் அவற்றைப் புறக்கணித்து பழி வாங்கினோம் - அதாவது பத்திரிகையாளர்களை நாடகங்களுக்கு அழைப்பதையே விட்டுவிட்டோம். ஆனால் ஆரம்பத்திலிருந்தே ஒரு சில பத்திரிகையாளர்கள் எங்கள் வளர்ச்சியில் பெரும் ஆர்வம் காட்டினார்கள். ஒன்று - பகீரதன். இரண்டாவது - கே.எம்.ரங்கசாமி. மூன்றாவது - சஞ்சாரி. இவர்கள் எங்களை கடுமையாக விமர்சனம் செய்ததும் உண்டு. ஆனால், பாராட்ட வேண்டிய நேரத்தில் எங்களைப் பாராட்ட இவர்கள் தவறியதில்லை. பெரும் பத்திரிகைகள் எங்களைப் பற்றி கவலையே படாத நேரத்தில், இவர்கள் எங்களுக்கு அளித்த முக்கியத்துவம், சாதாரணமானது அல்ல.

இவர்களையெல்லாம் விட, எங்கள் நாடகங்கள் மிகப் பிரபலம் அடைவதற்கு உதவியவர்கள் முதல்வர்கள் பக்தவத்சலமும், கருணாநிதியும் தான். ‘சம்பவாமி யுகே யுகே’ நாடகத்திற்கு அனுமதி மறுத்து, பக்தவத்சலத்தின் அரசு எங்களுக்குப் பேருதவி செய்தது. அது மாதிரி பப்ளிஸிட்டி அதுவரை எங்களுக்குக் கிட்டியதில்லை. ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ நாடகத்திற்கு பதில் நாடகம் ‘நானே அறிவாளி’ என்ற பெயரில் எழுதி, எங்களுக்கு விளம்பரம் கொடுத்தது கருணாநிதி. அவருடைய கட்சியினரோ எங்கள் நாடகம் நடக்கும் கொட்டகைகளில் பலவிதமான ரகளைகள் செய்து, எங்கள் பாப்புலாரிட்டியை மேலும் கூட்டினர். ‘இவ்வளவு எதிர்ப்பு வருகிறது என்றால், அப்படி இந்த நாடகத்தில் என்ன இருக்கிறது?’ என்று பார்க்கும் ஆவலை மக்களிடையே தூண்டிய இவர்கள், எங்களுக்குச் செய்த விளம்பரப் பணி, பணம் கொடுத்தால் கூட கிடைக்காது.

இப்படி கோலாகலமாக எங்கள் நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் போது கூட, கருணாநிதி, எம்.ஜி.ஆர், போன்ற பலர் எங்கள் நாடக நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்தார்கள். திரு அண்ணாத்துரை அவர்கள் ஒரு எழுத்தாளனுக்கு ‘துணிவு, தெளிவு, கனிவு’ வேண்டும் என்றும், அவை எங்கள் நாடகத்தில் இருப்பதாகவும் அவர் பேசினார். அப்பொழுது இந்த அளவுக்கு வேறு எந்த நாடகமும் அவரிடமிருந்து பாராட்டுப் பெற்றதாகத் தெரியவில்லை. கருணாநிதியும், எங்கள் நாடகங்கள் சிலவற்றுக்குத் தலைமை வகித்தபோது, அவற்றைப் பெரிதும் பாராட்டினார். எம்.ஆர்.ராதா, எங்கள் நாடகத்திற்கு தலைமை வகித்துப் பேசும் போது, எங்களுடைய துணிவை பெரிதும் பாராட்டி விட்டு, ‘நான் போட வேண்டிய நாடகத்தை நீங்கள் போடுகிaர்கள். ஆனால் நான் இன்னும் கொஞ்சம் பச்சையாகப் பேசுவேன். நீங்கள் நாசூக்காகப் பேசி விடுகிaர்கள். இப்படிப் பேசினால் அரசியல்வாதிகளுக்கு உரைக்காது’ என்றும் சொன்னார்.

எம்.ஜி.ஆர்.நாடகத்தின் ஒவ்வொரு காட்சி, ஒவ்வொரு பாத்திரம் எல்லாவற்றையும் நினைவு வைத்துக்கொண்டு மிக அழகாக மேடையிலேயே விமர்சனம் செய்வார். பிற்காலத்தில் ‘கோப்பு’ என்ற வார்த்தையை அமுலுக்குக் கொண்டுவந்த எம்.ஜி.ஆருக்கு அப்போதே கூட, எல்லாவற்றுக்கும் தமிழில் ஒரு சொல்லை, தான் கண்டுபிடித்ததாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. எங்கள் நாடகம் ஒன்றில், ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தின் கிராமஃபோன் ரெக்கார்ட் வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் எம்.ஜி.ஆர்... யார் செய்த பாவமோ - புதிய சொல்லைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் அன்று எம்.ஜி.ஆருக்கு அதிகமாகவே தோன்றி விட்டது! ரெக்கார்டை வெளியிட்டவர், அதை ரெக்கார்ட் என்று சொல்லாமல், ‘தஸ்தாவேஜு.... இந்த முகமது பின் துக்ளக் தஸ்தாவேஜு....’ என்றே பேசித் தீர்த்து விட்டார். ரெக்கார்ட் என்ற வார்த்தைக்கு அவர் கண்டு பிடித்த தமிழ்ச் சொல் அது.

எம்.ஜி.ஆர் பேசிய பிறகு மற்றவர்கள் என்ன செய்வது? அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல சினிமா அதிபர் ஏ.எல்.எஸ்.உட்பட, வேறு பலரும் கூட, மிகவும் சிரமப்பட்டு ‘துக்ளக் தஸ்தாவேஜு, துக்ளக் தஸ்தாவேஜு’ என்றே பேசினார்கள்.

என்னால் இதைத் தாங்க முடியவில்லை. நான் பேச எழுந்தேன்.

“எம்.ஜி.ஆர்.ரிலீஸ் செய்தது தஸ்தாவேஜு என்று அவர் சொல்லிவிட்டார். அதற்காக நீங்கள் யாராவது கடைக்குப் போய் ‘முகமது பின் துக்ளக் தஸ்தாவேஜு ஒண்ணு கொடு’ என்று கேட்டால், அந்தக் கடைக்காரர் முழிப்பார். இது தஸ்தாவேஜு இல்லை - அது டாக்குமென்ட். இது ரெக்கார்ட். கடைக்குப் போய் ‘முகமது பின் துக்ளக் ரெக்கார்ட் வேண்டும்’ என்று கேளுங்கள், தஸ்தாவேஜு வேண்டும் என்று கேட்காதீர்கள்” என்றெல்லாம் பேசி விட்டேன். பெரிய மனிதருக்கு பதில் சொன்னால் கேட்க வேண்டுமா? நாடகக் கொட்டகையில் ஒரே சிரிப்பு.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அப்படி சிரித்தவர்களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆரும் சிரித்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு, ‘உங்களை வைத்துக் கொண்டு உருப்படியாக எந்த விஷயத்தையும் பேசக் கூடாது. அதை நாசம் பண்ணி விடுவீர்கள்’ என்று சிரித்துக் கொண்டே எம்.ஜி.ஆர்.சொன்னார்.

இப்படி எங்கள் நாடகங்கள் ‘அமோகமாக’ நடந்து கொண்டிருந்த போதே, நான் ஒய்.ஜி.பி. அவர்களுடைய நாடகங்களிலும் அவ்வப்போது நடித்து வந்தேன். ஒருவர் கழண்டு கொள்வதால் எனக்கு வந்த வாய்ப்புகளில் ஒன்று சினிமா வாய்ப்பு என்று சொன்னேன். அது ஒய்.ஜி.பி.யின் நாடகத்தில் தான் வந்தது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.