புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

இலங்கை, இந்திய மீனவர்களின் நட்பு பாலமாக கச்சதீவு இருக்கிறது

இலங்கை, இந்திய மீனவர்களின் நட்பு பாலமாக கச்சதீவு இருக்கிறது

லங்கை, இந்திய தமிழ் கத்தோலிக்க மக்கள் கச்சதீவில் உள்ள கடற்றொழிலாளர்களின் இஷ்ட தெய்வமான பரிசுத்த அந்தோனியார் தேவாலயத்தின் பூஜை வழிபாட்டில் ஒற்றுமையாக கலந்து கொள்ளவுள்ளார்கள்.

கச்சதீவு இப்போது சட்டபூர்வமாக இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான பிரதேசமாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் 1974ம் ஆண்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இவ் ஒப்பந்தத்தின் கீழ் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமான பிரதேசமாக இந்தியா தாரைவார்த்து கொடுத்த போதிலும் இந்த தீவுக்கு இலங்கையரும், இந்தியர்களும் கடவுச்சீட்டுகளின்றி இருநாட்டு சுங்க அதிகாரிகளின் கெடுபிடிகளின்றி போய் திரும்புவதற்கு பூரண உரிமை வழங்கப்பட்டுள்ளது.

கச்சதீவில் குடிநீர் இல்லாத காரணத்தினால் அங்கு எவரும் 24 மணித்தியாலயத்திற்கு கூடுதலாக தங்கியிருப்பதில்லை. கச்சதீவில் உள்ள ஒரே ஒரு கட்டிடம் புனித அந்தோனியாரின் தேவாலயமாகும். இன்று இந்தியாவில் இருந்து சாதாரண பாய்மர படகுகள் மூலமும், மோட்டார் படகுகள் மூலமும் பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்க பக்தர்கள் அங்கு போய்ச் சேர்ந்ததாகவும், அதுபோல் யாழ்குடா நாட்டில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் கச்சதீவு அந்தோனியார் தேவாலய பூஜையில் கலந்து கொள்வதற்கு சென்றிருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.

கச்சதீவின் பூர்வீக வரலாற்றை பார்க்குமிடத்து அத்தீவுக்கு வந்து சொற்ப நேரம் ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் கடல் பிரயாணத்தை மேற்கொள்ளும் இலங்கை, இந்திய மீனவர்கள், தங்கள் இஷ்ட தெய்வமான பரிசுத்த அந்தோனியாரின் தேவாலயமொன்றை கட்டவேண்டுமென்று முடிவெடுத்து தங்கள் பணத்தை கொண்டு 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த கோவிலை கட்டியதாக அறிவிக்கப்படுகிறது. கச்சதீவில் நடைபெறும் மூன்று நாள் விழாவில் இலங்கை, இந்திய கத்தோலிக்க மறைமாவட்டங்களைச் சேர்ந்த குருமார் பலிபூஜைகளை அங்கு நடத்த கலந்து கொள்ளும் மக்களுக்கு தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக் கொடுப்பார்கள்.

கச்சதீவின் வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கும் போது, கிறிஸ்துவுக்குப் பின் 1605ம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்களுக்கு அளிக்கப்பட்ட நிலப்பரப்பில் குத்துக்கால்தீவு, குருசடித்தீவு, இராமசாமிதீவு, மண்ணாளித்தீவு, கச்சதீவு, நெடுந்தீவு, பள்ளித்தீவு ஆகிய தீவுகளும் அவற்றுடன் 69 கடற்கரை கிராமங்களும் சேதுபதி அரசருக்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.

தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி 1622 முதல் 1635 வரையில் இப்பிரதேசத்தில் அரசாட்சியை நடத்தினார். தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட பிறகு 1803ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தார் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசாக முத்துராமலிங்க சேதுபதி மன்னாரில் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையில் 1795ல் மரணமானார்.

இதையடுத்து அவரது மூத்த சகோதரியான ராணி மங்களேஸ்வரி நாச்சியாரை கிழக்கு இந்திய கம்பனி ஜெமீன்தாரணி ஆக்கியது.

கச்சதீவு இராமநாதபுரம் ஜெமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணியார் தனது பிரகடனத்தில் குறிப்பிட்டிருந்தார். இராமநாதபுரத்துக்கு வடகிழக்கே 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது. ஜெமீன் முறை ஒழிக்கப்படுவதற்கு முன்னர் இராமநாதபுரம் அரசர் இத்தீவை தனிநபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார்.

கச்சதீவின் பரப்பளவு 285.20ஏக்கராகும். இதனால் இத்தீவை இராமநாதபுரத்துக்கு அருகே உள்ள தீவு என்றும் அழைப்பார்கள். கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த போது 1972ம் ஆண்டில் இலங்கை கடற்படையினர் ஒரு தடவை ஊடகவியலாளர்களை கச்சதீவுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் பரிசுத்த அந்தோனியார் தேவாலயத்தின் விழாவில் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர்.

அப்போது கச்சதீவு இருதேசங்களின் பண்டமாற்று நிலையமாக விளங்கியது. 1972ம் ஆண்டில் இலங்கையில் ஒரு இறாத்தல் செத்தல் மிளகாய் 45ரூபாவுக்கு விற்கப்பட்டது. இது அன்று ஒரு சாதாரண அரச ஊழியர் பெற்ற சம்பளத்தில் 15சதவீதமாகும். அதிலிருந்து இந்த விலை எவ்வளவு உயர்ந்திருந்தது என்பதை நாம் சிந்தித்து பார்க்கலாம்.

அக்காலப்பகுதியில் பதவியில் இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் அரசாங்கம் அன்று செத்தல் மிளகாயை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை தடுத்திருந்தது. அதனால்தான் அந்தளவுக்கு விலை உயர்ந்திருந்தது. செத்தல் மிளகாய்க்கு பதிலாக அரசாங்கம் மிலகை சமையலுக்கு பயன்படுத்த வேண்டுமென்று பிரசாரம் செய்து வந்த காலம் அது.

கச்சதீவில் இந்தியாவின் செத்தல் மிளகாய் ஒரு இறாத்தல் 4 இலங்கை ரூபாவுக்கு விற்கப்பட்டது. அதனால், அங்கு சென்றிருந்த இலங்கை ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவரும் 10 முதல் 15இறாத்தல் செத்தல் மிளகாயை வாங்கிக் கொண்டு கொழும்பு திரும்பினார்கள். கச்சதீவுக்கு போகும் போது சவர்க்கார கட்டிகள், தேங்காய் எண்ணெய் போத்தல்கள் ஆகியவற்றை தங்களுடன் எடுத்துச் சென்று அங்கு விற்பனை செய்வார்கள்.

இவ்விதம் அன்றைய காலகட்டத்தில் கச்சதீவு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பண்டமாற்று வர்த்தக நிலையமாக விளங்கியது. எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத யுத்தம் ஆரம்பிக்கும் வரை கச்சத்தீவுக்கு இந்திய மீனவர்கள் எவ்வித கெடுபிடியுமின்றி வந்து போனார்கள். யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்ததை தொடர்ந்து இந்திய மீனவர்களின் கச்சத்தீவு பகுதிக்கான நடமாட்டம் இலங்கை கடற்படையினால் ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டது. இந்திய மீனவர்களைப் போன்று எல்.ரி.ரி.ஈ. ஊடுருவி விடுவார்கள் என்ற காரணத்தினால் தான் இந்நிலை ஏற்பட்டது.

இன்று நாட்டில் பூரண சமாதானம் ஏற்பட்டிருப்பதனால் கச்சத்தீவு ஒரு அமைதி பிரதேசமாக அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் பூஜிக்கும் பரிசுத்த அந்தோனியார் கச்சதீவை அடுத்துள்ள கடல் பிரதேசத்தில் பூரண சமாதானத்தை நிலை நாட்டுவதற்கு அருள்புரிந்து வருகிறார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.