புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
 கைதகள்

8

“ஆஹா! ஒரு ஆரணிப் புடவை வந்திருக்கு; பாருங்கள்! இருபத்திநாலு ரூபாய் தானாம்! என்னமாயிருக்கிறது என்கிaர்கள்!” என்றாள் ராஜம்.

“சொரேர் என்று இருக்கிறது!”

“ஆமாம்! உங்களுக்கு வேடிக்கைதான் எப்போதும்! எங்கப்பா வாங்கிக் கொடுத்தாரே சில்க் ரவிக்கை, அதற்கு இது பொருத்தமாயிருக்கும்!”

நாங்கள் ஜவுளிக் கடைக்குப் போனவுடன், புடவைகளை எடுத்துக் கொடுக்கும் செட்டியார் ஒரு மந்தகாசம் செய்தார். “நீங்கள் நேற்று பார்த்தீர்களே அம்மா, ஆரணிச் சேலை, அது செலவாகி விட்டது... அதைவிடத் தரமான ரகங்கள் இருக்கின்றன. பாருங்கள்!” என்றார். பிறகு எங்கள் பதிலை எதிர்பார்க்காமலேயே, புடவைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வீசினார்.

மாந்துளிர் நிறத்தில் ஒரு புடவையின் மேல் ராஜத்தின் பார்வை விழுந்தது. “பிரபாத் பாட்டர்ன்! உங்களுக்கு ரொம்ப எடுப்பான புடவை. நாற்பத்தி ஐந்துதான்” என்று செட்டி யார் பிரித்து வீசினார்.

இந்தச் சந்தர்ப்பத்தில், ஒரு பீரோவில் ராஜம் சொன்ன ஆரணிப் புடவையைப் பார்த்து, ‘ராஜம்! ராஜம்! அதோ இருக்கிறதே, நீ நேற்றுப் பார்த்ததாகச் சொன்ன புடவை”

“அது மட்ட ரகம், அம்மா! அதெல்லாம் நீங்கள் உடுத்தலாமா?” என்றார் செட்டியார்.

“அது எனக்கு இப்போது பிடிக்கவில்லை!” என்றாள் ராஜம் என்னிடம்.

“அதை வாங்க வேண்டுமென்றுதானே என்னை அழைத்து வந்தாய்?”

“அது சரி, மஞ்சளிலே கறுப்புக் கட்டம் இவ்வளவு நெருக்கமாக இருப்பதை அப்போ கவனிக்கவில்லை.”

“என்ன நீ பேத்தறே! இந்த இருபத்திநாலு ரூபாய்ப் புடவை உங்கப்பா வாங்கிக் கொடுத்த சில்க்குக்குப் பொருத்த மாயிருக்கிறது என்றாயே!”

“ராஜம் ஒரு பெருமூச்சு விட்டு, “நான் சொல்கிறபடி இந்த 45/= ரூபாய்ப் புடவையை இப்போது வாங்குங்கள், இதற்குப் பொருத்தமாக ஒரு ரவிக்கை அப்பாவிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறேன்” என்றாள்.

9

ரயில் நின்றதும் சளசளவென்று பேசிக் கொண்டிருந்த ஆசாமி இறங்கிப் போனான். ரயில் உடனே கிளம்பிற்று. அந்தக் கம்பார்ட்மெண்டில் இப்போது எதிரும் புதிருமாக இரண்டே பேர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். ஒருவர் பேப்பர் வாசித்துக் கொண்டிருந்தார்; மற்றவர் அவரைப் பேச்சுக்கு இழுத்தார்:

“பார்த்தீர்களா, ஸார்? எனக்கு இத்தனை நாழியாக அந்த ஆசாமி மீது என்ன கோபம் பொங்கிக் கொண்டு வந்தது! என்ன பேச்சு! ஓய்ச்சல் ஒழிவு இல்லாத பேச்சு! இவர்களையெல்லாம் கட்டி வைத்து உதைக்க வேண்டும், ஸார்!”

பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஆசாமி பதிலே சொல்லவில்லை. மற்றவர் மீண்டும்சொன்னார்.

“இப்படித்தான் பாருங்கள், ஒரு சமயம் ஓர் ஆசாமி என்னிடம் பேசினான். சற்றுத் தூங்கலாம் என்று பார்த்தால், அவன் விடமாட்டான் போலிருந்தது. நான் கொட்டாவி விட்டேன்; கண்ணை மூடிக் கொண்டேன். முகத்தைச் சுளித்தேன். அவன் நிறுத்தவில்லை! சண்டையைப் பற்றிப் பேசினான்; வெய்யிலைப் பற்றிச் சொன்னான்; அவன் சம்சாரத்தை வர்ணித்தான்; கடைசியில் நாய்க்குட்டியின் அழகைப் பற்றி ஆரம்பித்தபோது என் கோபம் கட்டுக்கடங்காமல் போயிற்று. எழுந்தேன்; விட்டேன் ஓர் அறை, வந்தது வரட்டும் என்று!

“அதற்காகப் போலீஸ் கோர்ட்டில் 15ரூபாய் அபராதம் செலுத்தினேன். கேளுங்கள், ஸார்! நம்மை மீறி இப்படி நாம் செய்து நஷ்டமும் அடைய வேண்டி இருக்கிறது.”

இப்படிக் கூறி சட்டையில் கைவிட்டு, சீசாவின் கார்க் போன்ற இரண்டு சிறு பொருட்களை எடுத்தார். “இதைப் பாருங்கள், இம்மாதிரி சந்தர்ப்பங்களில் நீங்கள் இதைக் காதில் சொருகிக் கொண்டால், ஒரு சப்தம் கேட்காது; நிம்மதி யாகத் தூங்கலாம். ஜோடி அரை ரூபாய். நான் இதற்கு ஏஜெண்ட்...”

அந்த ஆசாமி பதில் சொல்லாமலே ஒரு துண்டுக்காகிதத்தை எடுத்தார். அதில் ஏதோ எழுதி வியாபாரியிடம் கொடுத்தார். “நான் செவிடு. ஊமையும் கூட மன்னிக்கவும்” என்றுதான் அதில் எழுதியிருந்தது!

“அடுத்த ஸ்டேஷனில் ஏறிய புது மனிதர் ஒருவர். பேப்பரும் கையுமாக உட்கார்ந்திருந்த மனிதரைப் பார்த்ததும், “என்னடா சாம்பு?” என்று கேட்டார். உடனே மற்றவர் ஒரு சிரிப்புச் சிரித்து விட்டு, “செளக்கியத்துக்கென்னடா? உன் பெண்டாட்டிக்கு உடம்பு இப்போ எப்படி இருக்கு?” என்று கணீரென்ற குரலில் கேட்டார்.

வியாபாரி அதைக் கேட்டுக் கொண்டே அவசரமாக இறங்கி வேறு வண்டியில் போய் ஏறிக் கொண்டார்.

10

இளைஞன் கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தான். ராவ்பகதூர் ராஜாராமய்யர் தம் அறைக்குள் அவனை அன்புடன் அழைத்து, “வா, அப்பா!” என்றார் கனிந்த குரலில்.

இளைஞன் புன்னகையுடன் உட்கார்ந்து கொண்டு, “உங்களுடன் பேசலாமென்று வந்தேன்”என்றான்.

“ஏதாவது முக்கியமான விஷயமா?”

“ஆமாம்; கொஞ்ச நாளைக்கு முன்பு நீங்கள் உங்கள் பெண்ணின் விருப்பப்படிதான் அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்கப் போவதாக என்னிடம் சொன்னீர்கள் அல்லவா?”

“அதற்கென்ன இப்போது?”

“உங்கள் பெண் சகுந்தலாவை நான் கேட்டுப் பார்த்து விட்டேன். என்னை நிராகரித்து விட்டாள்.”

ராவ்பகதூர் திடுக்கிட்டு, “என்ன! வாஸ்தவமாகவா?” என்றார்.

“ஆமாம், வாஸ்தவமாக, உண்மையாக, சத்தியமாக அவள் ‘முடியாது’ என்று சொல்லி விட்டாள்!”

“உம்... அப்படிச் சொன்னாளா அவள்!... அப்பா, அதற்காக நீ வருத்தப்படாதே! பெண்களுக்கே ஸ்திர புத்தி கிடையாதென்று பெரியவர்கள் அறியாமலா சொன்னார்கள்?”

“நான் அதைத் துளிகூட லட்சியம் செய்யவில்லை ஸார்!”

“அப்படியென்றால் என்னை இப்போது என்ன விஷயமாகப் பார்க்க வந்திருக்கிறாய்?” என்றார் ராவ்பகதூர்.

சற்று நேரம் மெளனமாகவே இளைஞன் அவரை உற்று நோக்கினான். பிறகு, “ஸார்! இந்த வீட்டுக்கு உங்களுடைய பெண்ணை உத்தேசித்தே இன்று வரை மூன்று மாதங்களாக வந்திருக்கிறேன். அப்போது ஒவ்வொரு முறையும் குறைந்தது ஒரு மணி அவகாசமாவது உங்கள் வெட்டிப் பேச்சைக் கேட்டுக் கொண்டு உட்கார்த்திருந்தேன். நீங்கள் பெரிய வீடு கட்டிய கதை, உத்யோகம் பார்த்த அமுல், பாம்பை அடித்த விருந்தாந்தம், கறிகாய்கள் மலிவாக வாங்கிய பெருமை, திருடனைக் கண்டுபிடித்த பிரதாபம் ஆகிய பல விஷயங்களைப் பொறுமையுடன், என் எரிச்சலைச் சகித்து கொண்டு கேட்டிருக்கிறேன்.”

இளைஞன் இப்போது எழுந்து சென்று அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டு திரும்பி வந்தான்.

“என்ன? இதெல்லாம் என்னத்திற்கு?” என்று கேட்டார் ராவ்பகதூர்.

“என்னத்திற்கா? உங்கள் பெண் இப்போது என்னை மணக்க மறுத்து விட்டாள். பதிலுக்குப் பதில் பழிவாங்கப் போகிறேன். உங்களைப் போல் எனக்குப் பல கதைகள் சொல்லத் தெரியும். அந்தக் கதைகளையெல்லாம் இப்போது உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன். நீங்கள் வாயைத் திறக்காமல் கேட்டாக வேண்டும்; நான் சொல்லித்தான் தீருவேன், உம்!” என்றான்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.