புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
ஆன்மிக அடிப்படையில் இன முரண்பாட்டை தீர்க்க முடியும்

ஆன்மிக அடிப்படையில் இன முரண்பாட்டை தீர்க்க முடியும்

சந்திப்பு : லோரன்ஸ் செல்வநாயகம்

சிங்களவர் என்றால் அவர் நமக்கு விரோதி பெளத்த மதம் எமக்கு எதிரானது என்ற உணர்வை வடக்கு மக்கள் மனதில் புலிகள் ஆழமாகப் பதிய வைத்தமையே இன முரண்பாட்டுக்குக் காரணமாகியது.

“முள்ளை முள்ளாலேயே எடுக்க வேண்டும்” என்பதற்கிணங்க இந்து மத கலாசாரத்துடன் இரண்டறக் கலந்த பெளத்த மதத்தை வசப்படுத்திக் கொண்டு அதன் தர்மங்களை வாழ்க்கையில் கடைப்பிடித்தால் மீண்டும் தமிழ்- சிங்கள மக்களிடையே நல்லுறவு ஏற்பட்டு முரண்பாடுகள் விலகும் என்பதே எமது நம்பிக்கை என உறுதியாகக் கூறும் தமிழ் பெளத்த சங்கத்தின் தலைவர் அருள் நேசரட்ணம் அதற்கான உபாயங்களையும் தெளிவுபடுத்துகிறார்.

சகோதரர்களாக ஒற்றுமையாகவும் அந்நியோன்யமாகவும் வாழ்ந்த தமிழ் - சிங்கள மக்களுக்கிடையில் தற்போது நிலவும் இடைவெளியைச் சரி செய்தால் நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

இதற்குப் பல வழிகள் இருந்த போதும் நெருங்கிய கலாசார உறவுகளைக் கொண்ட இரு சமயங்களுக்கூடாக இன நல்லுறவை ஏற்படுத்துவது சுலபமாகும். மத ரீதியான தொடர்புகள் இனரீதியான உறவுகளுக்குப் பக்க பலமாக அமையும்.

பெளத்தம் எமக்கு அன்னியமானதல்ல கெளதம புத்தர் ஒரு இந்து, அவரது போதனைகள் “உன்னை நீ அறிந்துகொள்” உனக்குள் பயணம் செய் என்பதையே வலியுறுத்துகின்றன.

நான் ஒரு இந்து என்பதால் மதம் மாற்றும் முயற்சியொன்றை ஒரு போதும் நான் மேற்கொள்வதில்லை. அதற்கு மாறாக பெளத்த மத தியானங்களில் தமிழ் மக்களை ஈடுபடச் செய்வதில் முனைப்புடன் செயற்படுகிறேன்.

எனக்கு எந்த வித அரசியல் சார்போ, அமைப்புகளின் சார்போ கிடையாது. நமது பெரியவர்களை எடுத்த எடுப்பில் நாம் மாற்ற முடியாது. ஏனென்றால் அவர்கள் மனதில் வைராக்கியம் இருக்கலாம். அதனை சிறுவர்கள் மூலம் இல்லாதொழிக்க முடியுமென்பது எனது நம்பிக்கை.

தமிழ் பெளத்த சங்கத்தினூடாக அறநெறிப் பாடசாலைகளை ஏற்படுத்தி பெளத்த மத தியானங்களைப் பயிற்றுவிப்பதே இந்த செயற்பாட்டில் எமது முதலாவது படி. பெளத்தம் என்பதன் பொருள் “தூய்மை” என்பதாகும்.

பெளத்த மதத்தின் சகல போதனைகளும் பாலி மொழியிலேயே உள்ளன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பெளத்தம் என்றாலே அது சிங்களம். சிங்களவருக்குரியது என தமிழ் மக்கள் நினைத்துக் கொண்டிரக்கின்றனர்.

பாலியிலுள்ள இந்த பதங்களை நம் சிறார்களுக்கு நாம் தமிழில் கற்றுக் கொடுத்தால் சிறுவர்கள் மத்தியில் ஏற்படும் மாற்றம் நிச்சயம் பெரியோர்கள் மனதையும் மாற்றலாம்.

புத்தர் என்பவர் ஒரு சிங்களவர், பெளத்தம் என்பது சிங்களம் என எண்ணியே எம் மவர்கள் ஒரு தவறான மனப்பாங்கை வைத்துக் கொண்டுள்ளனர். பெளத்தம் நம்மோடு சம்பந்தமில்லாத மதம் என்பதே அவர்களது எண்ணம். அதை மாற்றுவதே எமது நோக்கம்.

வேறு எந்த மிஷனரிகளோ உட்புகுந்து அவர்கள் போதிக்கத் தொடங்கியவுடன் அதனை எம் மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் இரண்டறக் கலந்த கலாசாரத் தொன்மை கொண்ட பெளத்த மதத்தை விரோதமாகப் பார்ப்பது எவ்வாறு நியாயமாகும் அவர்களுக்குள் உள்வாங்கப்பட்ட தவறான பிரசாரமே இதற்குக் காரணம்.

இந்தியாவில் இந்து- பெளத்தத்திற்கிடையில் நெருங்கிய உறவு உள்ளது. பெரும் பாலான தமிழ் பெளத்த மதத் துறவிகள் அங்கு உள்ளனர். அண்மையில் இலங்கைக்கும் ஒருவர் வந்து சென்றார்.

புலிகள் தமிழ் மக்களுக்கு குறிப்பாக வடக்கு மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தையே உருவாக்கினர். இந்து மக்கள் பெளத்த மத்தை ஏற்றுக் கொண்டு விடக்கூடாது என்பதில் கருத்தாய் செயற்பட்டனர். சிங்களவர் தவறானவர்கள், அவர்களின் மதம் தவறானது, அவர்களின் நடை உடை பாவனை பிழையானது என்பதையே தமிழ் மக்கள் மனதில் பதியவைத்தனர். தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இரு மதத்தினருக்குமிடையிலான உறவு தடையாகி விடக்கூடாது. என்பதில் மிகக் கவனமாக இருந்தனர். மக்களைப் பகடைக் காய்களாகவே வைத்திருந்தனர்.

இந்து - சிங்கள மக்களுக்கிடையில் முரண்பாடு தொடர வேண்டுமானால் தமிழர்கள் சிங்களவர்களையும் பெளத்த மதத்தையும் விரோதமாகவே பார்க்க வேண்டும் என புலிகள் நினைத்தனர். அதற்கேற்பவே செயற்பட்டனர். இந்த நிலை மாற்றமடைய வேண்டும்.

நாம் யாழ்ப்பாணத்தில் தமிழ் பெளத்த சங்கத்தை 2010ம் ஆண்டில் உருவாக்கினோம். எனக்கு பெளத்த மத போதனைகள் தியானங்களில் இருந்த ஈடுபாட்டை அடிப்படையாகக் கொண்டு 2012ல் இதற்கான பாடசாலையொன்றை தொடக்கி நடத்தி வருகின்றேன்.

எமது இந்தப் பயிற்சிப் பாடசாலையில் 52 மாணவர்கள் கற்கின்றனர் சுமார் 300 குடும்பங்கள் எமது சங்கத்தில் இணைந்துள்ளமை எமது நோக்கத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.

பிள்ளைகளுக்கு நாம் வெள்ளைச் சீரூடையை இலவசமாக வழங்குகின்றோம். அகில இலங்கை பெளத்த காங்கிரஸ், யாழ்பாணம் நாகவிஹாரை பேன்றவற்றின் உதவியுடன் எம்மால் செயற்பட முடிகிறது.

குறிப்பாக கனடா போன்ற நாடுகளிலிருந்து வரும் நம்மவர்கள் தமது பிள்ளைகளை மேற்கத்தைய கலாசாரச் சீரழிவிலிருந்து விடுவிப்பதற்காக எமது தியான பயிற்சிகளுக்கு விரும்பத்துடன் பிள்ளைகளை அனுப்புகின்றனர். எமது இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்காலத்தில் உதவுவதாகவும் கூறிச் செல்கின்றனர்.

புலிகள் அழிக்கப்பட்டாலும் அபிவிருத்திகள் நடைபெற்றாலும் வேறு எத்தகைய முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் வடக்கு மக்கள் மனங்களில் வேரூன்றிப் போன குரோதம் இன்னும் முற்றாக மறையவில்லை. இந்த நிலையை மாற்ற சிறுவர்களிலிருந்தே நாம் தொடங்க வேண்டும். பெரியவர்களின் தப்பான அபிப்பிராயத்தை சிறுவர்கள் மாற்ற முடியும் என்பதாலேயே நாம் சிறுவர்களுக்குப் பயிற்றுவிக்கிறோம்.

நாம் பெரியோர்களுக்கு நேரடியாக இதனை உணர்த்தப் போனால் நாம் யாருக்கோ அடிவருடிகளாக இருப்பதாகக் கதை கட்டி விடுவர்.

“மனதுக்கு நீ அடிமையாகாமல் மனதை நீ கட்டுப்படுத்து” என்பதே தியானங்களிலிருந்து நாம் பெற்றுக் கொள்ளும் பயன். அது வெற்றியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

நான் சுமார் பத்து வருடம் ஆய்வுகளை மேற்கொண்டே செயலில் இறங்கியுள்ளேன் வெளிநாடுகளில் எனக்குப் பெரும் அனுபவங்கள் கிடைத்தன.

பெளத்த, இந்து மதத் துறவிகளுடன் கலந்துரையாடி பலவற்றைக் கற்றுக் கொண்டுள்ளேன்.

எனக்கு நல்லதெனப் பட்டதை சீரழிந்து வரும் சமுதாய மேம்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

இதனை வடக்கில் மட்டுப்படுத்தாமல் நாடு முழுவதற்கும் விஸ்தரிப்பதே இலக்காகும். இதற்கு ஊடகங்கள் மற்றும் நல் மனம் படைத்தோரின் பங்களிப்பு இன்றியமையாதது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.