புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

KAVITHAIMANJAREY

வார்த்தைகளற்ற கவிதை!

என்னை மெளனங்கள்
சிறையிட்டுக்
கொள்வதை
நான் வெறுத்ததே
இல்லை.......

மெளனம் உடைக்கும்
சப்தங்களை
மெளனமாய்
உணர்ந்து பார்க்கையில்
மெல்லிய கவிதையொன்று
மேகமாய்
உலாப் போகிறது.....

காற்றின்
தீண்டலில்
கதவு திறக்கும்
பூக்களிற்கு
மெளனம் தான்
தேசிய பாஷை
வாசங்களின் வாசனை......

உயிரின் துடிப்பை
உணர வைக்கும்
இந்த மெளனங்களுக்கு
வேறு என்ன
பெயர் சொல்லலாம்?

சொல்லலாம்
வார்த்தைகளற்ற
கவிதை!

-அஷ்ரபா அலிறிஷாப்
அக்குறணை

உனைக் கைப்பிடிக்க...

மனதைக் கொன்றேன்
உனக்காக
மன சாட்சி கொன்றேன்
உனக்காக
உணர்வைக் கொன்றேன்
உனக்காக
உண்மையை கொன்றேன்
உனக்காக
பிணம் தின்னும் கழுகாக
நீ அலைய
மனம் வெந்து நொந்தேன்
உனக்காக
பணம் என்ற உன்னை
கைப்பிடிக்க
மனம் விற்று குணம்
கொன்று எனை இழந்து
நின்றேன் பிணமாக.....

-க.பவன்

காதல்

கண்ணீர்த்துளிகளை மையாக்கி
கனவு எனும் தூரிகையாலே
சிறகில்லா பறவைகள் இரண்டு
சேர்ந்து வரையும் சித்திரமே காதல்

இணையில்லா பாசத்தாலே
இடிகளையெல்லாம் தாங்கி
துணையதன் மகிழ்ச்சிக்காக
சுமைதாங்கியாவதுவே காதல்

தன்னை எண்ணாது
தன்னவர் இன்பமுற
தன்னை மறந்து வாழும்
தயாள சித்தமே காதல்

தீயில் விரல்வைத்தால் - வலி
தெரியாத புதுமையது காதல்
பாயில் விழுந்தாலும் ஓடிவந்து
பாசம் பரிவுகொள்ளும் காதல்

துன்பக் கொடியில் பூத்து
துயரங்களை அடைகாத்து
இன்பங்களை சேர்த்துவைத்து - எதுவும்
இல்லாமல் போவதுவே காதல்

பூக்களால் கம்பளம் விரித்து - தன்
காதலை நடக்கவிட்டு
முட்கள் பரப்பிய வழியில்
முறுவலுடன் நடப்பதுவே காதல்

-கலபொட அமலதாஸ்

இன்பத்தமிழில் இஸ்லாம்

வையத் துயிலெழுப்பு வைகறையில் கண்மலர்ந்து
துய்யோன் துதிபாடத் தூக்கமற - மெய்யகத்துச்
செய்ய செயற்கரிய செய்தொழிலும் சீர்பெருக
உய்ய உதவுமறை இஸ்லாம்

வல்லான் துணையும் வான்மறையும் வள்ளலருள்
நல்ல நிறை வாழவும் நயந்தூற - உள்ளளவும்
இல்லற மும்சிறக்க இகபரமும் ஈய்ந்தூற
எல்லாம் நிறைந்த மறை இஸ்லாம்

வள்ளலருள் மொழியால் வளம்பெருகி வையகமே
உள்ளளவும் அய்யம் அருகிடவே - எள்ளளவும்
கள்ளம் கபடமற கற்பனைகள் மறைந்தாங்கே
தெள்ளத் தெளிவருளும் இஸ்லாம்

எட்டுத் திசையும் இறையருளின் புகழ்பாட
திட்டமுடன் நல்லாட்சி சீர்பெறவே - நட்டமிலா
இட்டவரும் இடாதவரும் இதயம் கனிந்துருக
கொட்டியருளும் மறை இஸ்லாம்

ஆதிமுதல் நாதர் ஆதமுட னேவாள்
சோதிவளர் மதியாம் தூதர்நபி - மேதினியில்
நீதிநிறை அறமும் நித்தியமாம் நெடுவாழ்வும்
ஓதி உயர்ந்த மறை இஸ்லாம்

சுத்தம் சுகம் காண நித்தம் துதிபாட
சித்தம் செயல் வலிமை சீருறவே - உத்தமமாய்
தத்தம் தலைநிமிர்ந்து தார்மீகம் தழைத்தோங்க
புத்தம் புதுமறையாம் இஸ்லாம்

-ஏ. சீ. எம். இப்றாஹீம்
கிண்ணியா - 04.

இதுவரை எங்கிருந்தாய்...?

இதுவரை எங்கிருந்தோம்
இதயம் உன்னை கேட்கிறது
பெண்ணே எங்கே
மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி
நுழைந்து கொண்டாய்
அன்பு தோழியே உன்னை
விட்டு பிரிய மறுக்கிறது இதயம்

-செ. சுதாதரன்

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாi' புரியவில்லை.

-கலா

மணமகள்

வரதட்சணையுடன் வந்தால்
சந்தோஷமாய் வாழ்வாள்
இல்லையெனில்
சந்தோஷமாய் சாவாள்
இதனைக் கண்டு
தட்டிக்கேட்டு துணிந்து எழ
அவள் கண்ணகியுமல்ல;
நாட்டியம் ஆடி வாழ
அவள் மாதவியுமல்ல
கல்லால் ஆனாலும் கணவன்
புல்லால் ஆனாலும் புருஷன்
எனும்
தாரகை மந்திரம் ஓதும்
சாதாரண பசளிப் பெண்
அவளின் வாழ்வே வரண்டமண்
நன்றாக வாழ்ந்தால் செம்மண்
இல்லையெனில், கைம்மண்
அவள் உருவாகிறாள்
கருவறையில்
அமர்கிறாள் மணவறையில்
நிம்மதியடைகிறாள்
கல்லறையில்
பெண் ஒரு முல்லை
அவளுக்கு கொடுமையும்
தொல்லையும் ஏராளம்!
ஏராளம்!

பெண்கள் வாழ்வில்
நினைத்ததை
சாதித்தார்கள் அன்று
இன்றும் நினைத்ததை
சாதிக்கிறார்கள் சாவில்!
கரு மேகங்கள் பொழிகிறது
தண்ணீரை அல்ல
ஏழை மங்கையின் கண்ணீர்
என்பதை நீ ஏன்?
சிந்திக்க மறுத்ததேனோ!

- சஹானா, அக்கரைப்பற்று

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.