புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
நடுக்கடலில் தோன்றிய அதிசயப் பெண்

நடுக்கடலில் தோன்றிய அதிசயப் பெண்

ஷாரியரும், ஷாஜமானும் தங்கள் குதிரைகளை மனம்போன போக்கில் செலுத்திக் கொண்டு சென்றனர். பல நாட்கள் பல்வேறு நகரங்களைக் கடந்து, சென்ற பிறகு அவர்கள் இருவரும் ஒரு கடற்கரையை அடைந்தனர்.

அவர்களுக்கு மிகவும் களைப்பாகவும், சோர்வாகவும் இருந்ததால் கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு சோலையில் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக அமர்ந்தனர்.

இருவரும் படுத்து கண் அயர்வதற்கு முயற்சியெடுத்த போது கடலில் ஏதோ ஒருவிதமான விசித்திரமான இரைச்சல் எழுவதைக் கண்ட அவர்கள் இருவரும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தனர். கடலை நோக்கிப் பார்வையைச் செலுத்தினர்.

நடுக்கடலில் நீரெல்லாம் ஒன்றாகத் திரண்டு ஒரு கம்பத்தைப் போல் ஆகாயத்தை நோக்கி உயர்ந்தது. பிறகு அந்த நீர்க் கம்பம் கரையை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வந்தது.

ஷாரியமும், ஷாஜமானும் பீதியடைந்தவர்களாக அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது பரபரப்புடன் ஏறி மறைந்து கொண்டனர்.

கரையை நெருங்கியதும் கடலிலிருந்து வந்த நீர்க்கம்பம் ஒரு பயங்கரமான பூதமாக உருவெடுத்தது. அந்த பூதத்தின் தலையில் ஒரு பெரிய பெட்டி இருந்தது.

மரத்தடியை நெருங்கியதும் அந்த பூதம் தலை மேல் இருந்த பெரிய பெட்டியை கீழே இறக்கி வைத்தது. பிறகு அந்த பூதம் அந்தப் பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்து மற்றொரு பெட்டியை எடுத்து கீழே வைத்தது.

பூதம் அந்த இரண்டாவது பெட்டியை திறந்தபோது அந்தப் பெட்டிக்குள் இருந்து அழகான இளம் பெண் ஒருத்தி வெளியே வந்தாள்.

பூதமும், இளம் பெண்ணும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர். பிறகு பூதம் தரையில் படுத்து நல்ல உறக்கத்தில் ஆழந்துவிட்டது.

உறங்காமல் விழித்துக் கொண்டிருந்த அந்த இளம் பெண் தற்செயலாக மரத்தின் மீது பார்வையைச் செலுத்தினாள். மரத்தின் மீது இரண்டு மனிதர்கள் உட்கார்ந்து இருப்பதைக் கண்டதும் அவள் முகம் ஆச்சரியத்தால் மலர்ந்தது.

மரத்தின் மீது இருந்த ஷாரியரையும், ஷாஜமானையும் கீழே இறங்கி வருமாறு அந்த இளம் பெண் ஜாடை செய்தாள்.

பூதத்தைப் பார்க்கும் போது தங்களுக்கு அச்சமாக இருப்பதாகவும், கீழே இறங்கி வர தாங்கள் விரும்பவில்லை என்றும் ஷாரியார் ஜாடையாக தெரிவித்தான்.

பூதம் அவ்வளவு சீக்கிரம் விழித்து எழுந்திருக்காது என்றும், பூதத்தால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் தன்னால் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும், ஆகவே தைரியமாக கீழே இறங்கி வரலாம் என்றும் கை ஜாடை மூலம் அந்த இளம் பெண் தெரிவித்தாள்.

ஷாரியரும், ஷாஜமானும் மரத்தை விட்டு மெதுவாக கீழே இறங்கினார்கள். அந்த இளம்பெண் அவர்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாள். பிறகு தனது இடுப்பில் இருந்த கைப்பையை உருவி அந்தப் பையிலிருந்த ஒரு வளையத்தை எடுத்தாள். அந்த வளையத்தில் தொண்ணூற்றெட்டு மோதிரங்கள் கோர்க்கப்பட்டிருந்தன.

அந்த வளையத்தையும், மோதிரங்களையும் அந்த பெண் ஷாரியரிடமும், ஷாஜமானிடமும் காண்பித்தாள். “இது என்ன?” என்று ஷாரியர் கேட்டான். அந்தப் பெண் கீழ்க்கண்டவாறு பதிலளித்தாள்.

“மூளை இல்லாத இந்த பூதம் என்னை தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த பூதத்திடம் வந்து சேர்ந்த பிறகு இந்த பூதம் அறியாமல் தொண்ணூற்றெட்டு ஆடவர்களை நான் சந்தித்து உறவாடியிருக்கிறேன். இந்த மோதிரங்கள் அவர்களை நான் சந்தித்ததற்கு அடையாளச் சின்னங்கள். நீங்கள் இருவரும் உங்கள் இருவருடைய மோதிரங்களைக் கொடுத்துவிட்டால் சரியாக நூறு பேரை சந்தித்த திருப்தி எனக்கு ஏற்படும்”

ஷாரியரும், ஷாஜமானும் தங்களுடைய மோதிரங்களை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டார்களள். பிறகு ஷாரியர் அந்த இளம் பெண்ணை நோக்கி, “இவ்வளவு பயங்கரமான ஒரு பூதம் பலமான கட்டுக் காவலில் உன்னை வைத்திருக்கும் போது நீ தொண்ணூற்றெட்டு ஆடவர்களை எவ்வாறு சந்தித்தாய்?” என்று கேட்டான்.

“பல்லாண்டுகளுக்கு முன்னர் எனக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த அன்று இரவே இந்த பூதம் என்னைத் தூக்கிக் கொண்டு வந்து கடலுக்கடியில் மறைத்து வைத்துவிட்டது. என்றாவது ஒரு நாள் வெளியுலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பூதத்துக்கு ஏற்படும். அப்போது பூதம் என்னை நீரிலிருந்து வெளியே கொண்டு வந்து விட்டுவிடும். கொஞ்ச நேரத்தை நாங்கள் பூமியில் கழிப்போம். அந்த மாதிரி சந்திர்ப்பங்களில் தான் நான் ஆடவர்களைச் சந்திப்பது வழக்கம். இந்த முட்டாள் பூதத்திற்கு பெண்களின் சாகசங்களும், வல்லமையும் கொஞ்சம் கூட தெரியாது. இவ்வளவு பயங்கரமான கட்டுக்காவல் இருந்தாலும் என்னைப் போன்ற பெண்கள் நினைத்ததை சாதித்து முடிப்பார்கள் என்ற உண்மை இந்த பூதத்திற்கு கொஞ்சமும் தெரியாது” என்று அந்த இளம் பெண் கூறினாள்.

அந்த இளம் பெண்ணின் பேச்சு, ஷாரியர், ஷாஜமான் ஆகிய இரு சகோதரர்களின் மனத்திலே புதிய ஞானத்தையும், தெளிவையும் ஏற்படுத்தியது.

“உலகத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் நாணயம் அற்றவர்களாகவும், நம்பிக்கைக்கு உகந்தவர்களாக இல்லாமலும்தான் இருப்பார்கள் போல் இருக்கிறது. நம்பிக்கைத் துரோகிகளான பெண் வர்க்கத்தையே கூண்டோடு அழிக்க வேண்டும். கேவலம் ஒரு பெண்ணுக்கு அஞ்சி நாட்டை விட்டு ஓடிவிடுவது எந்த வகையிலும் ஆண்மை ஆகாது. ஆகவே உடனடியாக நாட்டுக்குத் திரும்பி என் மனைவியை மட்டுமல்ல, உலகத்தில் இருக்கும் பெண்கள் அனைவரையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து நிர்மூலமாக்குவேன்” என்று ஷாரியர் மனத்திற்குள் சங்கல்பம் செய்து கொண்டான். தம்பி ஷாஜமானிடமும் தனது கருத்தை உணர்த்தினான்.

பிறகு இருவரும் தத்தம் குதிரைகள் மீது ஏறி சொந்த நாட்டை நோக்கி விரைந்தனர்.


அழகுத் தேரில் ஆடி ஆடி வாராயோ

அம்பிகையே மாசிமகம் என்றாலே
அளவிலா ஆனந்தமே! நின்
அருளை எண்ணிடவே
அமுதமாய் தித்திக்குதே! அம்பிகையே நீ
அழகுத் தேரில் ஆடி ஆடி வாராயோ!

அகிலத்து நாயகியே !
அன்னை பராசக்தியே!
அன்பு கொண்ட நின்
அன்பர்களை, இரட்சிக்கவே நீ
அழகுத்தேரில் ஆடி, ஆடியே வாராயோ!

அபிராமியே! நின் அற்புத செயல்கள்
அறிந்தே, ஆயிரம் ஆயிரம்
அடியார்கள் ஓடியே, நின்
அடிகளை பணிந்தே வணங்கிட நீ
அழகுத் தேரில் ஆடி, ஆடியே வாராயோ!

அன்புடன் வைத்த
அந்த ‘நேர்த்திகள்’ யாவையும் நிறைவேற்றிட
அச்சம் கொண்டே, அவாவுடன், நின்னை
அணுகும் அடியார்களை, ஏற்றிடவே - நீ
அழகுத் தேரில் ஆடி, ஆடியே வாராயோ!

அன்றாடம் அயராது உழைப்போர்
அயர்ந்திடாது, உழைத்திடவே
அருள் வேண்டி, தம்மை அர்ப்பணிக்கும்
அடியார்களை, கடாட்சித்தருளவே, நீ
அழகுத் தேரில் ஆடி, ஆடியே வாராயோ!

அல்லல் படும் அகதிகளை,
அநாதைகளை, ஆதரவற்றோர்களை
அமைதியாய் காத்து
அடைக்கலம் அளித்திடவே - நீ
அழகுத் தேரில் ஆடி, ஆடியே வாராயோ!

அதிஷ்டங்கள் யாவும் கிட்டிட,
அம்சமான வாழ்வு அமைந்திட,
அவனியில் ஆரோக்கியமாய் வாழ்ந்திட
அனுக்கிரகம் புரிந்திடவே - நீ
அழகுத் தேரில் ஆடி ஆடியே வாராயோ!

அழகுத் தீவில், சாந்தி, சமாதானம் நிலைத்திட,
அனைவரும் இன, மத, பேதமின்றி ஒற்றுமையாய்
அயல் நாட்டையும் நேசித்தே வளத்துடன் வாழ,
அன்னை பராசக்தியே - நீ
அழகுத் தேரில் ஆடி, ஆடியே வாராயோ!


நவோதய மக்கள் முன்னணியும், தமிழ்க் கலைஞர் அபிவிருத்தி நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்த ஐம்பெரும் விழா ஹோட்டல் பிரைட்டன் ரெஸ்ட்டில் நடைபெற்றது. பேராசிரியர் சபா. ஜெயராசா மங்கல விளக்கேற்றுவதையும், தாய் நாடக ஒளி அமைப்பாளர் எஸ். ஏ. அழகேசன், கலாபூஷணம் விருது பெற்ற ஹெலன் குமாரி ஆகியோர்க்கு நவோதய மக்கள் முன்னணியின் தலைவர் எஸ்.கே. கிருஷ்ணா, சமூக சேவகி கெளசல்யாதேவி கோவிந்தபிள்ளை, சமூகச் சுடர், எம். எஸ். தாஜ்மஹான் ஆகியோர் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தனர், நலிவுற்ற மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களை முன்னெடுத்து வரும் தேசபந்து கிருஷ்ணாவுக்கு கலைஞர் கலைச்செல்வன், கொழுந்து அந்தனி ஜீவா ஆகியோர் ஞாபகார்த்த விருது வழங்கி கெளரவிப்பதையும் படங்களில் காணலாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.