புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
போராட்டங்களிலும் வன்முறைகளிலும் மாணவர்கள் ஈடுபடுவதற்கு விழுமியக் கல்விக் குறைபாடு காரணமா?

போராட்டங்களிலும் வன்முறைகளிலும் மாணவர்கள் ஈடுபடுவதற்கு விழுமியக் கல்விக் குறைபாடு காரணமா?

சமூகத்திலே விழுமியம் அற்றதன் (Values) காரண மாகவே தற்கொலை, களவு, கற்பழிப்பு, பொய், மோசடி, வன்செயல் இடம்பெறுகின்றது.

“விழுமியங்கள் என்பது தனிநபர், சமூகம், வாழ்க்கை என்பவற்றை போசிக்கின்ற, வளப்படுத்துகின்ற, அர்த்தமுள்ளதாக்குகின்ற மனித குலப் பண்புகள்” என்பது ஓர் அறிஞரின் கருத்து. இவ்விளக்கப்படி இப்பண்புகள் பாடசாலையில் இருந்து கட்டியெழுப்பப்பட வேண்டும். கல்வி என்னும் எண்ணக்கரு காலத்துக்குக்காலம் விருத்தியடைந்து வருவது. இது புதுக்கேள்விகள், புதுத் தேவைகள், புதிய சந்தர்ப் பங்களுக்கேற்ப மாற்றமடைந்து வருகின்றது. தன்னைப் பற்றிய விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளத் தேவையான அறிவை வழங்கும் செயன்முறையே கல்வி என்பது கிரேக்க மொழியியலாளர் சோக்கிரட்டீஸின் கருத்து. அதாவது தனது வல்லமை, ஆற்றல் குறைபாடுகள், தான் செய்வது சரியா? பிழையா? என அறிவதாகக் கல்வி அமைய வேண்டும். இதன்படி அறிவியல் கல்வியுடன் விழுமியங்களும் அவர்களை நல்லமுறையில் செயலாற்றப் பழக்குவதே கல்வியினால் கிடைக்கும் நன்மை என்பது கிரேக்க மெய்யியலாளரான பிளேட்டோவின் கருத்து. இதன்படி விழுமியக் கல்வியை பிரயோகம் செய்வதை பயனுடையதாக்குவதையே பிளேட்டோ குறிப்பிடுகின்றார்.

எனவே விழுமியங்களைக் கோட்பாட்டு வடிவத்திலும் செயற்பாட்டு வடிவத்திலும் நிறைவேற்ற வேண்டிய பாத்திரம் பாடசாலையே என உணரலாம்.

கற்கும் ஒருவரிடம் சரியான மனப்பான்மையை உருவாக்கும் கல்விச் செயற்பாடுகள் எல்லாம் விழுமியக் கல்வி என்பதால் மனித நேயம், பெரியோரை மதித்தல், சமூக நல்லுறவுத்திறன், உணர்ச்சிக்கட்டுப்பாடு, நேர்மை, நன்மனப்பான்மை, பணிவு, பக்தி, ஒழுக்கம், சமய அனுஷ்டானம், மகிழ்ச்சி, சாந்தம், உண்மை, நடுநிலைமை, நேர்மை என்பன அடங்கும். இத்தகைய விழுமியக்கல்வி ஒருவனுக்குச் சிறந்த ஆளுமையை அளிக்கின்றது. விழுமியம் சிந்தனையில் உள்வாங்கிச் செயல்மூலம் வெளிப்படுத்தும் தன்மயமாக்குதலைப் பெற்றுக் கொடுக்கிறது. சமூக நடத்தை எப்படி இருக்க வேண்டுமென்பதை அது வரையறை செய்கிறது.

ஒரு மாணவனை சரியான வழியில் நெறிப்படுத்துவதில் பாடசாலையின் பங்கு தட்டிக்கழிக்க முடியாதது. விழுமியக் கல்வியைப் பாடசாலையே அளிக்க வேண்டியது அவசியம். மாணவர் சன்மார்க்க நெறிகளை அறிந்து அதன்படி ஒழுகப் பாடசாலைகள் பங்களிப்புச் செய்ய வேண்டும். பண்டைய குரு - சிஷ்ய முறைக்கல்வியில் ஒழுக்கம், குருபக்தி இருந்தது. இன்று நிலைமை மாறியதால், மாணவர்கள் சிலர் பகிரங்கமாகப் புகைத்தல், மதுபாவனை, சண்டை, வன்முறை, சினிமா விருப்பு, போலிக்கெளரவம், தீய நடத்தை, பகிடிவதை போன்றவற்றில் ஈடுபடுவதைக் காண்கிறோம். இதனால் இன்றைய பாடசாலை மாணவர் மத்தியில் சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம், நாட்டின் முன்னேற்றம், அர்ப்பணிப்பு பிறர் உரிமைகளை மதித்தல் போன்ற சிறந்த விழுமியங்களை ஏற்படுத்தல் வேண்டும். சமய நெறிகள் கைக்கொள்ளப்படும் இடங்களில் துன்பம் இல்லை. குழப்பம், அனர்த்தம் இல்லை.

நமது நாட்டின் கல்வி அமைப்பில் போதிய அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. எழுத்தறிவு 92 சதவீதம், பாடசாலைக் கல்வி 98 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும் பண்புசார் விருத்தி எதிர்பார்த்தளவு விருத்தியடையவில்லை என கல்வி அமைச்சின் ஆய்வு ஒன்று கூறுகின்றது. நமது நாட்டின் கல்வி முறையானது பரீட்சை முறையை இலக்காகக் கொண்டுள்ளதால் சமநிலையற்ற கல்வியும் பரீட்சைகளில் தேர்ச்சியைக் கருத்திற்கொள்ளாத அறிவை மட்டும் அளவிடுவதால் திறமைசாலிகள் மீது மாத்திரம் கவனம் செலுத்தப்படுகின்றது. அநேகர் கவனிக்கப்படுவதில்லை. இதனால் போட்டித் தன்மைகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஒழுக்கச் சீர்கேடுகளும் உண்டாகிறது.

இந்நிலைமை பாடசாலைகளில் விழுமியக்கல்விக் குறைவை வெளிக்காட்டுகின்றது. 1974 இல் யுனெஸ்கோ ஆய்வும், பண்பாட்டுக் கல்வி விருத்தியின்மையைச் சுட்டிக்காட்டி பண்பு நல மனப்பாங்கு கட்டியெழுப்பப்பட வேண்டியதை வலியுறுத்துகின்றது.

ஒரு பிள்ளை பூரண மனிதனாக வளர 1. அறிவு வளர்ச்சி, 2. உடல் வளர்ச்சி, 3. உணவு வளர்ச்சி, 4.அன்பு வளர்ச்சி, 5. ஆன்மீக வளர்ச்சி இடம்பெற வேண்டும். இவை விழுமியங்களுடன் தொடர்புடையன. இந்த 5 வளர்ச்சியும் ஏற்படும்போது ஆளுமைமிக்க பூரண மனிதன் உருவாகிறான். சோக்கிரட்டீஸ் விழுமியங்களை ஒழுக்கத்துடன் இணைத்து அதுவே அறிவு என்கிறார். (Virtue is knowledge) மனித விழுமியங் களுடன் உள்ளடங்கும் சமூக மரபு பற்றி ஐசாக் நியூட்டன் வெளியிட்ட கருத்துக்களை இங்கே குறிப்பிடுவது சாலப் பொருத்தமானது.

சமூக மரபு என்பது நாகரீக ஏணி, எனது முன்னோரைக் காட்டிலும் நான் அதிக தொலைவு காண முடிந்தமைக்கு அவர்களின் தோள்மீது நின்று

நான் பார்த்ததே காரணம் என்கிறார்.

தோள் என்பது சமூக மரபும் விழுமியம் இணைந்தது எனலாம். விழுமியக்கல்வி பாடசாலைச் சமூகத்தில் ஆசிரிய மாணவர் உறவை வலுப்படுத்தும். சிறந்த நற்பிரஜையாக மாணவர் உருவாக வழி செய்யும்.

தற்காலக் கல்வி முறையில் விழுமியக்கல்விச் செயற்பாடுகள் குறைந்ததனால் தான் இன்று மாணவர் போராட்டங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. பல்கலைக்கழகங்களில் ராக்கிங் என்ற போர்வையில் மாணவர் வதைப்படுத்தப்படுகின்றனர். கல்விச் செயற்பாடுகள் தற்போது விற்பனைப் பொருட்களாய் மாறிவிட்டன. ரியூசன் வகுப்புக்களின் அபரிமிதமான வளர்ச்சி பாடசாலையை மாணவர்களிடமிருந்து அந்நியப்படுத்த வழிவகுத்துள்ளது. இதனால் பாடசாலையில் பெறவேண்டிய விழுமியக் கல்வி கிடைப்பதில்லை.

மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலும் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் வன்முறைகளில் ஈடுபடுவதும் ஆர்ப்பாட்டங்கள், மாணவர் போராட்டங்கள் அடிக்கடி நடத்துவதும் பாடசாலைக் காலங்களில் முறையான விழுமியக்கல்வி கிடைக்கப் பெறாமையே என்று கூறினால் மிகையொன்றுமில்லை.

தற்காலக் கல்வி முறை கற்றலில் ஆசிரியரின் தேவையை இல்லாமல் செய்துள்ளது. தற்போதைய ஆசிரியர்கள் பரிவர்த்தனை முகவர்களாக (Changing Agent) மாத்திரம் செயல்படுகின்றனர். ஆசிரியர் தெய்வமாக மதிக்கப்பட்டு குருபக்தியுடன் கல்வி கற்ற காலம் இன்று இல்லை.

எனவே இன்றைய கல்வி முறையில் விழுமியக் கல்வியில் கல்விச் சமூகம் கவனமெடுப்பதே காலத்தின் தேவையாகவுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.