புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
நவபாரத சிற்பி நேரு

நவபாரத சிற்பி நேரு

உயிர்தப்பிய நேரு

இளைஞர் நேரு கேம்பிரிட்ஜில் பட்டம் வாங்கிய நேரம் அப்போது உல்லாசப்பயணமாக நோர்வேக்குச் சென்றார், குளிக்க வேண்டும் போலிருந்தது, ஒரு ஆங்கிலேய நண்பரை துணைக்கு அழைத்துக்கொண்டு ஒரு ஓடையை நோக்கிச் சென்றார்.

ஓடையில் இறங்கினார். நோர்வே ஒரு குளிர் மிகுந்த நாடு, எனவே ஓடை நீரின் ஓரப்பகுதி பனிக்கட்டியாக உறைந்து போய் இருந்தது. ஓடையில் இறங்கிய நேருவின் கால்கள் வழுக்கிவிடப்பட்டன, அவர் சரசரவென்று வழுக்கிக்கொண்டு ஓடையின் நடுப்பகுதிக்கு போய்விட்டார், நீரின் ஓட்டம் விரைவாக இருந்தது, குளிரில் நேருவின் உடல் வேறு மரத்துப்போய்விட்டது.

இன்னும் கொஞ்சம் தொலைவில் நீர் வீழ்ச்சிவேறு ஒன்று இருந்தது. அதில் விழுந்திருந்தால் அவ்வளவுதான். உடன் சென்றிருந்த அந்த ஆங்கிலேய நண்பர் நேருவின் காலை எப்படியோ பிடித்துக்கொண்டு விட்டார். பரபரவென்று காலைப்பிடித்து கரைக்கு இழுத்துவிட்டார், இல்லை என்றால் நம் நேருவை என்றோ இழந்திருப்போம்.

இது சிறைச்சாலை வீடல்ல.......

ஒரு தடவை நேரு கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு சிறைச்சாலையில் கொடுக்கப்பட்ட உணவு மிகவும் மோசமாக இருந்தது. வாயில் வைக்க முடியவில்லை. ஆனால் சிறையில் நல்ல உணவை எதிர்பார்க்க முடியுமா? அதைத்தானே தின்று தொலைக்க வேண்டும்.

சில நாட்கள் கழித்து அவரது தந்தை மோதிலால் நேருவும் கைது செய்யப்பட்டு அதே சிறைக்கு கொண்டுவரப்பட்டார். தந்தையும் மகனும் ஒரே சிறையில்....!

மோதிலால் நேருவுக்கும் சிறைச்சாலை உணவு பிடிக்கவில்லை. சிறை அதிகாரி வீட்டு உணவு கொண்டுவர அனுமதி அளித்திருந்தார். எனவே மோதிலால் தனக்கும் தன் நண்பர்களுக்கும் சேர்த்து வீட்டிலிருந்து உணவு கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தார், தினமும் வீட்டிலிருந்து வந்த உணவை அவர் நண்பர்களுடன் உண்டார். நேருவுக்கு இது பிடிக்கவில்லை, சிறைச்சாலையில் அதன் விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும், தவிர அதை ஒரு வீடாக நினைத்து நடக்கக்கூடாது, நமக்காக நம் வசதிக்காக அதை மாற்றிக்கொள்ள நினைக்கக் கூடாது என்ற கொள்கை உடையவர், ஆனால் இது பற்றி தன் தந்தையிடம் எப்படிச் சொல்வது என்று குழம்பினார் நேரு. மெதுவாக தன் தந்தையிடம் பழகி வந்த கைதி நண்பரிடம் இதைப்பற்றி கண்டனக் குரல் எழுப்பினார், “இது உணவு சாலையல்ல, சிறைச்சாலை இங்கு இப்படித்தான் இருக்கும்” என்றார்.

தந்தைக்கு செய்தி தெரிந்தது, பெருமிதத்துடன் சிரித்தார் அவர். அறிவுச்சுடர் பிரகாசிக்கும் தன் மகனைப்பற்றி பெருமிதம் இருக்காதா அவருக்கு.

காந்தி - நேரு வாக்குவாதம்

நேரு வெள்ளை மனம் கொண்டவர், மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லி விடுவார், ஆனால் அவருக்கு சட்டென்று கோபம் வந்துவிடும். இருந்தாலும் அந்த கோபம் பயங்கரமானதல்ல! இதைப்பற்றி காந்தியடிகளுக்கு நன்றாகத் தெரியும்.

ஒரு நாள் நேரு காந்தியடிகளிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் இருவருக்கும் பலத்த வாக்குவாதம் நடந்தது. உணர்ச்சிவசப்பட்டு ஆத்திரத்துடன் பேசினார் நேரு. சிரித்துக் கொண்டே அமைதியாக பதிலளித்துக் கொண்டிருந்தார் காந்தியடிகள். அவ்வளவு ஆத்திரமாக பேசும் நேருவுக்கு எப்படி அமைதியாக பதிலளித்துக் கொண்டிருக்கிறார் காந்தியடிகள். இது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒருவர் கேட்டார், “நேரு அப்படி ஆத்திரமாகப்பேசியும், நீங்கள் சிரித்துக்கொண்டே இருந்தீர்களே! எப்படிப் பொறுத்துக் கொண்டிருந்தீர்கள்?” என்று,

“உங்களுக்கு நேருவைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது என்றுதான் நினைக்கிறேன். அவர் வாயிலிருந்து சத்தியத்திற்கு புறம்பான சொல் ஏதும் வராது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். மனதில் என்ன படுகிறதோ அதை மறைத்துக் கூறமாட்டார் நேரு...! அப்படியே சொல்லிவிடுவார்! ஜவஹர் என்றால் மாணிக்கம் என்று பொருள், அவர் மனிதருள் மாணிக்கம்! இதில் சந்தேகமே வேண்டாம்” என்றார் காந்தி.

நேருவிடம் அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்காவிட்டால் அவரை தம் வாரிசாக அறிவித்திருப்பாரா காந்திஜி?

மனக்கட்டுப்பாடு வேண்டும்

1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷன் வந்த சமயம் அது. லக்னோவில் காங்கிரஸ் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. குதிரைமீது வந்து கொண்டிருப்பதை ஆயுதம் தாங்கிய பொலிஸார் எந்த காரணமும் இல்லாமல் கூட்டத்தினரை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தனர். அந்தக் கலவரத்தில் குதிரைகளின் கால்களில் மிதிபட்டு அடிப்பட்டனர் பலர்.

அங்கே நேரு இருந்தார், இந்தக்கலவரத்தைக் கண்ட அவருக்கு அளவுக்குமீறி கோபம் வந்துவிட்டது. கைகள் பரபரத்தன அடக்கிக்கொண்டார். இந்த சம்பவத்தைப்பற்றி அவர் பின்னால் சொன்னார். “மிதமிஞ்சி எங்களை அடித்த பொலிஸார் மீது எனக்கு ஆத்திரம் வந்தது, பொலிஸாரை திருப்பி அடித்துவிடலாமா என்று கூட நினைத்தேன், குதிரை மீதிருந்த பொலிஸ் அதிகாரியை கீழே தள்ளி அந்தக் குதிரை மீது நான் அமர அதிக நேரமாகாது, ஆனாலும் மனக்கட்டுப்பாடு வேண்டும் என்று தான் அந்த நினைவை விட்டுவிட்டு உறுதியை மேற்கொண்டேன்” என்றார்.

மக்களை அடிக்காதே.....?

ஒரு தடவை சென்னைக்கு நேரு வந்திருந்தார். அவரைப் பார்க்க மக்கள் கூட்டத்திற்குக் குறைவில்லை. விழிகளால் பருக அவர்கள் ஆவலுடன் கூடியிருந்தார்கள்.

நேரு காரில் அமர்ந்து மெல்லச்சென்று கொண்டிருந்தார். கார் ஓரமாகவே சென்று கொண்டிருந்தது. ஆங்கில சார்ஜன்ட் ஒருவன் குதிரையில் அமர்ந்து மக்களை சவுக்கால் அடித்து விலக்கிக்கொண்டிருந்தான்.

நேருவுக்கு இது பிடிக்கவில்லை. மக்களை மிருகம்போல் எண்ணும் அவளை அவ்விதம் செய்யக்கூடாது என்று கண்டித்தார். ஆனால் அதை அதிகாரி பொருட்படுத்தவில்லை. அவன் தன் மிருகத்தனத்தை வெளிப்படுத்தவே செய்தான், நேருவை முறைத்துப் பார்த்தான்.

நேரு மறுபடியும் கண்டித்தார், அவன் கேட்கவில்லை. மறுபடியும் அடிக்க சவுக்கை ஓங்கினான். அவ்வளவு தான் காரிலிருந்து நேரு எட்டிப்பாய்ந்து கையிலிருந்த சவுக்கை பிடுங்கித் தன் கையில் வைத்துக்கொண்டார்.

அது ஆங்கிலேய அதிகாரிக்குப் பெரிய அவமானம் தான்! இல்லையா?இந்தியர் மீது கைவைக்க ஒரு ஆங்கிலேயனுக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்திய மக்கள் மீது நேரு கொண்டிருந்த பற்றுக்கு இப்படி பல உதாரணங்கள் உண்டு.

இரண்டரை ரூபாய் இல்லாமல் தவித்த நேரு

1937ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடக்கும் சமயம், இரவு - பகல் என்று பாராமல் அயராமல் பிரச்சாரம் செய்தார் நேரு. திரு காட்ஜுவின் தொகுதியில் தன் அரசியல் நண்பர்களுடன் பிரயாணம் செய்த கொண்டிருந்தார். வழியில் கார் நின்றுவிட்டது, கூட்டம் நடக்கும் இடம் ஒரு மைல் தொலைவில் இருந்தது. காரை சரி செய்து பிறகு போவதென்றால் நன்றாக இருக்குமா? காரிலிருந்து இறங்கிவிட்டு ஓட்டமும், நடையுமாக நண்பர்களுடன் கூட்டத்திற்குச் சென்றார்.

நேருவும் லால்பகதூர் சாஸ்திரியும் மூர்iதா பாத்தில் ஒரு கூட்டத்திற்குச் சென்றனர், கூட்டம் நடந்துகொண்டிருந்தது, கூட்டத்தில் சிலரிடையே குழப்பம் நேர்ந்தது, அடிதடி கலாட்டாவாகிவிட்டது. இதெல்லாம் நேருவுக்குப் பிடிக்கவில்லை. மேடையைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினார்.

இந்தக் குழப்பத்தில் நேருவை சிற்றுண்டி சாப்பிட சொல்லக் கூட பயந்தனர். நேருஜி, லால்பகதூர் சாஸ்திரி, திருமதி பூர்ணிமா பானர்ஜி மூவரும் ஒரு டீக்கடைக்குள் நுழைந்தனர். அங்கு கிடைத்த ரொட்டியைத் தின்றனர். கடைக்காரருக்கு இரண்டரை ரூபாய் தர வேண்டியிருந்தது.

நேரு தமது சட்டைப்பையை தூழாவிப்பார்த்தார், கால் ரூபாய் கிடந்தது! மீதி இரண்டேகால் ரூபாய்? லால்பகதூர் தம் சட்டை¨ப்பையைப் பார்த்தார், அதிலும் கால்ரூபாய் கிடந்தது, இன்னும் இரண்டு ரூபாய் வேண்டுமே! திருமதி பூர்ணிமா பானர்ஜியிடம் தம்மிடமிருந்த சில்லறைகளையெல்லாம் பொறுக்கிப்போட்டு இரண்டு ரூபாய் சேர்த்துக் கொடுத்தார். இப்போது இரண்டரை ரூபாய் கிடைத்துவிட்டதா?

ஆனந்த பவனில் இளவரசர்போல் பவனி வந்து கொண்டிருந்த நேருவின் அன்றைய நிலைமை இது! ஏன் இப்படி? இந்தியத்தாயின் கண்ணீரைத் துடைக்க நேரு எவ்வளவோ துன்பப்பட வேண்டியிருந்தது.

கலகக்காரர்களிடம் கர்ஜித்த நேரு

காந்தியடிகள் நேருவிடம் நல்ல நம்பிக்கை வைத்திருந்தார். அதுபோலவே நேருவும் அவரிடம் நல்ல பக்தி கொண்டிருந்தார்.

இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்ட பின், பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட சமயம் காந்தியடிகள் கல்கத்தாவில் அமைதியை நாட்டிவிட்டு டில்லிக்கு வந்தார், மேற்கு பாஞ்சாலத்தில் அகதிகளின் தொல்லைத் தீர்க்கவும் பாகிஸ்தான் வகுப்பு வெறி இங்கும் பாதிக்காமலிருப்பதற்காகவும் வந்திருந்தார்.

ஆனால் அவரை விட வகுப்பு வெறிமுந்திக் கொண்டுவிட்டது, இதன் பெருக்கத்தை ஒழிக்க உண்ணாவிரதத்தை மேற்கொண்டார், இந்திய அரசினரிடமிருந்த நிதியில் பாகிஸ்தானுக்கு பங்கு கிடைக்கும்படி செய்தல் முறை என்னும் காந்தியடிகளின் கருத்தை ஆலோசனை செய்ய மத்திய மந்திரி சபை பிர்லா மாளிகையின் புல்வெளியில் கூடியிருந்தது.

அப்போது மேற்கு பாஞ்சாலத்திலிருந்து சீக்கிய அகதிகள் பலர் பிர்லா மாளிகையின் முன்கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

“பழிக்குப்பழி வாங்க வேண்டும், ரத்தத்திற்கு ரத்தம் சிந்த வேண்டும், காந்தி சாகட்டும்” என்றனர்.

காந்திஜியிடம் பேசிவிட்டு பிர்லா மாளிகையைவிட்டு புறப்பட்ட நேருவின் காதில் இந்த முறைகேடான அவச்சொற்கள் விழுந்தன.

நேரு ஆத்திரமடைந்தார், அவ்வறு கூச்சலிட்டவர்களை நோக்கி நடந்தார், அங்கேயே நின்றுகொண்டு, “காந்தி சாகட்டும் என்று கூச்சலிடத் துணிந்தவர் யார்? அதே சொல்லைத் திருப்பிச் சொல்லத் துணிவுள்ளவன் முதலில் என்னைச் சாகடிக்கட்டும்” என்று உரத்த குரலில் சொன்னார்.

கூச்சலிட்ட கலகக்காரர்கள் கலைந்து போனார்கள்.

நேரு செய்த சபதம்

1936ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு ஏறியிருந்த விமானம் பெட்ரோல் இல்லாததால் மர்ம கோவா விமான நிலையத்தில் இறங்கியது. நேரு வந்திருக்கிறார் என்ற செய்தி பரவி விட்டது. உடனே ஒரு பெரிய கூட்டம் அங்கே கூடிவிட்டது.

பெண் ஒருத்தி நேருவுக்கு மாலை போட்டு அவர் கையில் ஒரு காகிதத்தைக் கொடுத்தார், அது என்ன காகிதம் என்று தெரிந்துகொள்வதற்குள் போர்த்துகீசிய அதிகாரி ஒருவர் அந்த காகிதத்தை படிக்கக்கூடாது என்று நேருவைத் தடுத்தார், அந்த காகிதத்தைப்பற்றி அந்த அதிகாரிக்கு என்னவோ சந்தேகம்.

“எனக்கு எழுதப்படிக்க தெரியும், நன்றாகப் படிப்பேன், எனக்குத்தரப்பட்ட இந்த காகிதம் என் சொத்து, இதை என்னவேண்டுமானாலும் செய்வேன், அதற்கு எனக்கு உரிமை உண்டு” என்று சூடாக பதிலளித்தார் நேரு.

அந்த போர்த்துகீசிய அதிகாரியின் பலவந்தத்தை அவர் வெறுத்தார்.

பிறகு அவர், “கோவா போர்த்துகீசியரின் ஆதிக்கத்திலிருந்து நீங்கி, அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட பிறகுதான் நான் மீண்டும் இங்கு வருவேன்” என்று சபதம் செய்தார்.

அந்த சபதம் 27 ஆண்டுகளுக்குப்பின் 1963ஆம் ஆண்டு மே மாதம் நிறைவேறிவிட்டது.

(தொடரும்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.