புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
வரலாற்று நாயகனின் கதை 04

வரலாற்று நாயகனின் கதை 04

இந்த அரசாங்கத்தை தீங்கிழைக்கக் கூடிய பின்னணியில், மறைந்திருக்கும் சதிகார ஏகாதிபத்தியவாத, முதலாளித்துவவாத சக்திகள் குறித்து நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஆகவே, இத்தகைய தடைகளை முறியடித்து எமது முற்போக்கு செயற்பாடுகளுக்கு இந்நாட்டின் இளைஞர் வர்க்கம் உயிர்த்தியாகம் செய்தும், உறுதுணை புரியத் தயாராக இருக்கிறது என்பதை நான் இளைஞன் என்ற முறையில் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

இந்த பாராளுமன்றத்தின் புதிய அங்கத்தவர் என்ற முறையில், இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிவதற்கு வாய்ப்பளித்த கெளரவ சபாநாயகர் அவர்களுக்கும், கெளரவ பிரதம மந்திரி அவர்களுக்கும், அரசாங்க கட்சியினருக்கும் நான் நன்றியை தெரிவித்து, மேன்மைதங்கிய மகாதேசாதிபதி நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையை முன்மொழிகிறேன்.

மேன்மைத்தங்கிய மகாதேசாதிபதி அவர்களே, பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து, நீங்கள் நிகழ்த்திய உரை குறித்து, பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் உங்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். நீங்கள் தெரிவித்த இந்த கருத்துக்கள் குறித்து நாம் எமது அவதானத்தை காண்பிப்போம் என்பதையும் நாம் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்”

சட்டக்கல்லூரி மாணவன் மஹிந்த

மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவரது அண்ணன் தம்பிமார் தங்கைகளுக்கும், அவர்களைவிட சில வருடங்கள் வயதில் கூடிய மூத்த அக்கா ஜெயந்தி, இரண்டாவது அம்மாவாக இருந்து, அவர்கள் அனைவரையும் கண்டிப்பான முறையில் பராமரித்து வந்தார். மூத்த அண்ணா சமல், பொலிஸ் சேவையில் இருந்ததனால், அவர் தம்பி, தங்கையர்களை பராமரிக்க முடியாது, வெளியிடங்களில் சேவை செய்து வந்தார்.

டீ.ஏ.ராஜபக்ஷ

இந்த காலகட்டத்தில் அவர்களின் அப்பாவின் நெருங்கிய நண்பரான பேராசிரியர் ஹேப்பாசிங்க, மஹிந்தவை சந்தித்து, மஹிந்த, நீங்களும் உங்களுடைய பெரியப்பாவின் பிள்ளைகளான லக்ஷ்மன் அண்ணா, ஜோர்ஜ் அண்ணாவைப் போன்று சட்டத்துறையில் கல்வி பயின்று ஒரு சட்டத்தரணியாக வேண்டும் என்று யோசனையைத் தெரிவித்தார். அந்த யோசனையை ஏற்றுக்கொண்ட மஹிந்த, பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, இலங்கை சட்டக்கல்லூரியில் மாணவனாக சேர்ந்து கொண்டார்.

ஜூரிஸ்ப்ரூடன்ஸ் என்ற சட்டநீதி சாஸ்திர பாடம் கடினமாக இருந்த காரணத்தினால், அதுபற்றி கூடுதலான விளக்கத்தை பெறுவதற்காக அன்று, சட்டத்தரணியாக இருந்த லங்கா சமசமாஜ கட்சியின், அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவின், நாராஹென்பிட்டி பார்க் வீதியிலுள்ள வீட்டிற்கு சென்று, இந்த பாடம் பற்றி விளக்கங்களை பெற்றும் வந்திருக்கிறார்.

சட்டக்கல்லூரியில் சேர்வதற்கு ஆங்கில மொழி அறிவு இருப்பது அவசியம் என்ற நிலைப்பாடு, அன்றைய காலகட்டத்தில் இருந்தது. இதனால், ஆங்கில மொழியில் தேர்ச்சியற்ற சிங்கள தமிழ் மாணவர்களுக்கு, இலங்கை சட்டக்கல்லூரியின் பிரவேச பரீட்சைக்கு தோற்றுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அத்துடன், சட்டகல்லூரியின் பரீட்சைகளிலும் சிங்கள, தமிழ் மொழிகளில் எழுதுவதற்கும் இடமளிக்கப்படவில்லை.

இந்த நடைமுறை ஆங்கில மொழி தேர்ச்சியற்ற தமிழ், சிங்கள மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் என்பதை உணர்ந்து கொண்ட இளம் பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷ, ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை சட்டக்கல்லூரியில் சிங்களத்திலும், தமிழிலும் பரீட்சைகளை எழுத மாணவ, மாணவிகளுக்கு உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தை நடத்தி, அதற்கு நீதியரசர் ஜெயா பத்திரன, நீதியமைச்சர் பீலீக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா ஆகியவர்களை சந்தித்து, இந்த முயற்சிக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஷவின் இந்த முயற்சிகளை அடுத்து, 1975ஆம் ஆண்டில், இலங்கை சட்டக்கல்லூரியின் பரீட்சைகளுக்கு சிங்களம் அல்லது தமிழ் மொழியில் தோற்ற முடியும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஓரிரு வருடங்களுக்கு முன் மணமுடித்து தனது கணவருடன் நுகேகொட பங்கிரிவத்த ஒழுங்கையில் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்த, ஜெயந்தி அக்காவின் வீடு மஹிந்தவுக்கும், அவரது இளைய சகோதரர்களுக்கும் ஒரு வசிப்பிடமாக மாறியதுடன், அக்கா தயாரிக்கும் சுவையான உணவை மூன்று வேளையிலும் வயிறாற சாப்பிடும் பாக்கியமும் கிடைத்தது.

அப்போது, மஹிந்த பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததனால், அவரது சம்பள நாளை தம்பி, தங்கையர் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். சம்பளம் கிடைத்தவுடன், வீட்டிற்கு வந்து சகோதர சகோதரிகளை பம்பலப்பிட்டியிலுள்ள மெஜஸ்டிக் திரைப்பட மாளிகைக்கு அழைத்துச் சென்று, ஒரு படத்தை பார்த்த பின்னர், அதற்கு எதிரிலுள்ள மெஜஸ்டிக் ஹோட்டலுக்கும் அழைத்துச் சென்று, சூடான முட்டை அப்ப விருந்து ஒன்றையும் கொடுத்து, மஹிந்த தன்னுடைய தம்பி, தங்கையரை மகிழ்விப்பார். இவ்விதம் தந்தையின் மரணத்திற்கு பின்னரும், இந்த குடும்பத்திலுள்ள அனைத்து பிள்ளைகளும் அம்மாவினதும், பெரிய அக்கா ஜெயந்தியினதும் பராமரிப்பின் கீழ் ஒற்றுமையாக இருந்து வந்தார்கள்.

சட்டக்கல்லூரி மாணவனாக இருக்கும் போதும், மஹிந்த ரகசியமாக வெளிநாட்டு தூதரகங்களில் நடத்தப்படும் விருந்துபசாரங்களிலும் கலந்துகொள்ள தவறுவதும் இல்லை. 1971ஆம் ஆண்டில், மஹிந்தவின் இளைய சகோதரர் கோத்தபாய இராணுவத்தில் சேர்ந்து, ஒரு இளம் அதிகாரியாக இருந்தார். இப்படியான சந்தர்ப்பங்களில் இடையிடையே மஹிந்த, கோத்தாபாயவின் இராணுவ முகாமுக்கு தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலரை அழைத்துச் சென்று, அங்கு உணவருந்தி மகிழ்ச்சியடைந்த சம்பவங்களும் இடம்பெறுவதுண்டு.

தேர்தல் கூட்டத்தில் இளைஞன் மஹிந்த உரையாற்றுகிறார் ஸ்ரீ.ல.சு.க இன் சிரேஷ்ட தலைவர் பதியுதீன் மஹ்மூத் அமர்ந்திருக்கிறார்.

இவர்கள், முதலில் கொழும்பு கோட்டை aகல் படமாளிகைக்கு அருகிலுள்ள சிபீஷ் சிற்றூண்டிச்சாலைக்கு சென்று, சிற்றூண்டிகளினால் வயிற்றை நிரப்பிக் கொண்டு, பல்வேறு விடயங்களை பற்றி கதைத்து பொழுதை போக்கி விட்டு, இறுதியில் சமுத்திரா ஹோட்டலுக்கு சென்று இராப்போசனத்தை எடுப்பார்கள். அதற்கான கட்டணத்தை ஒருவரினால் தனித்து கட்டுவதற்கு போதியளவு பணமில்லாது இருக்கும் நேரங்களில், எல்லோரும் பங்கு போட்டு இராப் போசனத்திற்கான பில்லுக்கு பணம் கட்டுவார்கள்.

இவ்விதம் ஒருநாள் இரவில் வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, நுகேகொடையில் அனுலா மகளிர் வித்தியாலயத்திற்கு முன்னால் அவர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகியது. இதனால் காயமடைந்த ஒரு நண்பரை, எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சையும் கொடுத்திருக்கிறார்கள்.

இளைஞர்களுக்கே பொருத்தமான பல்வேறு கேளிக்கைகளில் நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட்டு வந்த மஹிந்த இறுதியில், 1974ஆம் ஆண்டில் சட்டத்தரணியாக பட்டம் பெற்று வெளியேறினார். மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கைக்கு, 1977ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் ஒரு தற்காலிக தடையாக அமைந்தது. மஹிந்த, அந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

தேர்தல் தோல்வியால் சற்று மனமுடைந்து போயிருந்தாலும், மஹிந்த அதைப்பற்றி அவ்வளவு தூரம் கவலைப்படாமல் தொடர்ந்தும் தனது மக்கள் சேவையை மகேசன் சேவையாக நினைத்து செயற்பட்டார். சட்டத்தரணியான பின்னர், மஹிந்தவுக்கு, மனித உரிமைகள் சட்டத்தின் மீது அதிக ஆர்வமும், விருப்பமும் இருந்தது. இதனால், அவர் மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை தமது அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொறுப்பேற்று, அதனால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக நீதிமன்றத்தில் வழக்காடி அம்மக்களின் துயரத்தை துடைத்தும் இருக்கிறார்கள்.

1983ஆம் ஆண்டில், மஹிந்தவின் தாயாரின் உறவுக்கார பெண்ணான பிரபல பாடகி கோகிலாதேவி, ஒரு நாள் காலையில் மஹிந்தவின் வீட்டிற்கு வந்து தாயார் திருமதி. ராஜபக்ஷவுடன் ரகசியமாக பேசிக் கொண்டிருந்தபோது, நீதிமன்றத்திற்கு செல்வதற்காக தன்னுடைய கறுப்பு அங்கியுடன் அங்கு தாயாரிடம் விடைபெற வந்த மஹிந்த, தங்கள் உறவுக்கார பெண்ணான கோகிலாதேவியைப் பார்த்து, என்ன அன்ரி எப்படி சுகமாக இருக்கிaர்களா? என்ன விடயம் என்று கேட்டிருக்கிறார்.

மஹிந்தவின் முதலாவது வெளிநாட்டுப் பயணம்

அதற்கு தன்னுடைய குரலை சரிப்படுத்திக் கொண்ட கோகிலாதேவி, மகன் எவ்வளவு காலத்திற்கு தான் நீங்கள் தனிக்கட்டையாக இருக்க முடியும். ஒரு நல்ல பெண் இருக்கிறார். நீங்கள் அவளை மணமுடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு மஹிந்த கிண்டல் செய்யும் குரலில் அன்ரி அவள் அழகாக இருப்பாளா என்று கேட்டாராம். என்ன மகன், அந்தப் பெண்ணின் அழகைப் பற்றி நான் எப்படி சொல்வது, அவள் இலங்கையின் அழகுராணியாக சமீபத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அழகான பெண் என்று பதில் கொடுத்திருக்கிறார்.

அந்த பதிலைக் கேட்டு புன்முறுவல் பூத்த வண்ணம் வாசலை நோக்கி நடந்துகொண்டிருந்த மஹிந்த திடீரென நின்று, கோகிலா அன்ரியை திரும்பிப் பார்த்து அவள் எங்கு இருக்கிறாள் என்று சொல்லுங்கள் எனக் கேட்டிருக்கிறார். அதற்கு, பதிலளித்த கோகிலாதேவி தெஹிவளையில் என்று கூறி, அவள் நன்றாக டெனிஸ் விளையாடுவாள் என்றும் சொல்லியிருக்கிறார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினி ஆகியவற்றிற்கு அருகில் உள்ள, தும்முல்லை சந்தியில் இருக்கும் டெனிஸ் விளையாட்டு திடலில் அவள் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் டெனிஸ் விளையாடுவாள் என்றும் கோகிலாதேவி கூறிய போது, மஹிந்த சிரித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறினாராம்.

மறுநாள் மாலை, ஒரு மோட்டார் வண்டியில் இரண்டு இளைஞர்கள் அந்த டெனிஸ் விளையாட்டு மைதானத்தை சுற்றி வந்திருக்கிறார்கள். அவர்களில ஒருவர், மஹிந்த மற்றவரும் ஒரு சட்டத்தரணி தான். அவர் வேறு யாருமல்ல முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தான். மஹிந்தவுக்கு அந்த அழகிய பெண்ணின் பெயர் ஷிரந்தி என்பது மட்டும்தான் தெரிந்திருந்தது. அங்கு பல அழகிய இளம் பெண்கள் டெனிஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் யார் ஷிரந்தி என்று அவர்களால் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.

அப்போது, மஹிந்தவுக்கு அன்ரி கோகிலா, அவள் ஒரு அழகுராணி என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. இதனால், உயர்ந்த, நல்ல சிவப்பாக, நீளமான கூந்தலை உடைய அந்த அழகிய ஷிரந்தியை அடையாளம் காண்பது மஹிந்தவுக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. தன்னை இந்த இரண்டு இளைஞர்கள் அவதானிக்கிறார்கள் என்பதையே தெரிந்து கொள்ளாத நிலையில் ஷிரந்தி ஆட்டத்தில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தாள்.

இவ்விருவரும் தங்களுக்கிடையில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இந்த நிசப்தத்தை கலைத்த மஹிந்த இவளுக்கு அருகில் சென்று பார்ப்பது நல்லது என்று சொல்லிவிட்டு, நேரத்தை வீணாக்காமல் ஷிரந்தியின் தந்தையின் தொலைபேசி இலக்கத்தை எப்படியோ தேடிப் பிடித்து விட்டார். ஷிரந்தியின் தந்தை இலங்கை கடற்படையில் கொமடோர் பதவியில் உயர் அதிகாரியாக இருந்தார்.

மஹிந்த, ஷிரந்தியின் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தான் நாளை அவர்கள் வீட்டிற்கு வருவதாக அறிவித்திருக்கிறார். மறுநாள் மாலை தனது நண்பன் சரத் என். சில்வாவுடனும், தாயாருடனும், கோகிலா அன்ரியுடனும் தெஹிவளையிலுள்ள ஷிரந்தியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.

மஹிந்த மாப்பிள்ளை மிடுக்குடன் அழகான சேட்டும், காற்சட்டையும் அணிந்து அங்கு சென்றிருந்தார். ஷிரந்தியும் அழகான சேலை அணிந்து கொண்டு வந்து மஹிந்தவின் அருகில் வந்து வணக்கம் தெரிவித்திருக்கிறார். பெண்களுடன் சரளமாக பேசிப்பழகும் மஹிந்த, ஷிரந்தியைக் கண்டவுடன் வெட்கப்பட்டு, சற்று அமைதியாக இருந்து இருக்கிறார்.

அப்போது, ஷிரந்தி தான் பாடசாலை மாணவியாக இருந்த போது, இலங்கை அழகுராணிப் போட்டியில் கலந்து கொண்டு, மிஸ் ஸ்ரீ லங்காவாக தெரிவு செய்யப்பட்டு பின்னர், வெளிநாடு சென்று, மிஸ் யுனிவர்ஸ் போட்டியிலும் கலந்து கொண்டதாக கூறியிருக்கிறார். மஹிந்த தன்னுடைய அரசியல் வாழ்க்கையும், குடும்பத்தை பற்றிய விபரங்களும் ஷிரந்திக்கு எடுத்துரைத்திருக்கிறார். அப்போது, மஹிந்தவுக்கு ஒரு உண்மை வெளிப்பட்டது. 1970 - 1977 ஆம் ஆண்டின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம், தன்னை இலங்கை கடற்படை தளபதியாக நியமிப்பது பற்றி பரிசீலனை செய்து கொண்டிருந்த உண்மையை ஷிரந்தியின் தந்தை மஹிந்தவிடம் கூறியிருக்கிறார்.

அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த மஹிந்த, உங்களுக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாள் என்ற விடயம் அப்போது தெரிந்திருந்தால், நான் நிச்சயம் என்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, உங்களை கடற்படை தளபதியாக்குவதற்கு முயற்சி செய்திருப்பேன் என்று கூறியிருக்கிறார். சிற்றுண்டிகளை அருந்திய பின்னர், மஹிந்தவின் குடும்பத்தினர் அங்கிருந்து மகிழ்ச்சியோடு வெளியேறினார்கள்.

வீட்டிற்கு திரும்பியபோது, தங்கைமார் தங்கள் அண்ணி எப்படி இருப்பார் என்ற விபரங்களை அண்ணன் மஹிந்தவுடன் நூற்றுக்கு மேற்பட்ட கேள்விகளை எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்திருக்கிறார்கள். அதையடுத்து, ஒவ்வொரு நாள் மாலையிலும் மஹிந்த ஷிரந்தியின் வீட்டிற்கு சென்று, ஷிரந்தியை சந்திக்க ஆரம்பித்தார். அப்போது, ஷிரந்தி ஒரு அழகான பொம்மையைப் போன்று காட்சியளித்ததாக அவருடைய நெருங்கிய நண்பர்கள் கூறுவார்கள்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்து, அரசியலில் வெற்றி தோல்விகளை சந்தித்து, பின்னர் சட்டத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த மஹிந்தவுக்கு, ஷிரந்தி ஒரு பொருத்தமான மனைவி என்று குடும்பத்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தபோது, வெட்கத்துடன் இப்படியான பெண்ணுக்காகத்தான் இவ்வளவு காலம் காத்திருந்தேன் என்று மஹிந்த கூறியிருக்கிறார். ஷிரந்தியின் வீட்டில் இடம்பெற்ற குடும்பத்தவர்களுக்கிடையிலான திருமணப்பதிவு நிகழ்வில் சரத் என்.சில்வா போன்ற மஹிந்தவின் ஓரிரு நெருக்கமான நண்பர்கள் மாத்திரமே கலந்துகொண்டார்கள்.

அதையடுத்து, மஹிந்தவின் தங்கை பிரீத்தி, ஷிரந்தியுடன் சென்று, மணப்பெண்ணுக்குரிய சேலையை தெரிவு செய்யும் பொறுப்பான பணியை ஏற்றுக் கொண்டார். மஹிந்தவின் மிகவும் நெருங்கிய நண்பரான அனுர பண்டாரநாயக்கா, இவர்களின் திருமணத்தின்போது மாப்பிள்ளைத் தோழனாக இருந்தார்.

மஹிந்தவின் திருமண வைபவத்தில் முன்னாள் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவும், அன்றைய பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன், பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதம செயலாளர் சாம் விஜேயசிங்க போன்ற முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டார்கள். மஹிந்தவுடன் கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் டாக்டர் ரஞ்சித் அத்தபத்து கூட, திருமணத்திற்கு வந்து புதுமண தம்பதியரை வாழ்த்தினார். கொழும்பு மாநகரத்திற்கு அருகிலுள்ள மெளன்ட்லெவினியா ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

மறுதினம் புதுமணத்தம்பதிகள் மஹிந்தவின் சொந்தக் கிராமமான மெதமுலனவிற்கு சென்றார்கள்.

அன்று புதுமண தம்பதிகளுக்கு மக்கள் மகத்தான வரவேற்பு அளித்தனர். தங்கள் இளம் தலைவருக்கு கிடைத்திருக்கும் மணப்பெண் இலங்கை அழகி என்று கேள்விப்பட்ட கிராமத்து மக்கள், மணமகனைப் பார்ப்பதைவிட மணப்பெண்ணை பார்ப்பதற்கே அதிக ஆர்வம் காட்டினார்கள். இவ்விதம், அந்த கிராமத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் திருமண விழா பல நாட்களாக கொண்டாடப்பட்டது.

மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ தம்பதிகளுக்கு அந்த மகிழ்ச்சியை மேலும் மெருகூட்டுவதற்காக, இவர்களுக்கு கொழும்பிலுள்ள டேடன்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில், 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதியன்று, பபோதினி சகுந்தலா என்ற மகள் பிறந்தாள்.

தனக்கு மகள் பிறந்துவிட்டாள் என்ற செய்தியைக் கேட்ட மஹிந்த ராஜபக்ஷ, மகிழ்ச்சியோடு ஆஸ்பத்திரிக்கு சென்று முதல் பிள்ளையை கட்டியணைத்து முத்தமிட்டார்.

அப்போது மஹிந்தவின் தங்கை காந்தினியும், ஷிரந்தியுடன் ஆஸ்பத்திரியில் இருந்தார். தனது மகள் சுகதேகியாக வளர்ந்து கொண்டிருந்தபோது, மஹிந்த மகளுக்காக இந்தியாவிலிருந்து அழகிய சட்டைகளையும், பொம்மைகளையும் கொண்டுவந்து சேர்த்தார்.

பிள்ளைக்கு 5 மாதங்களானபோது, ஒரு நாள் திடீரென்று பிள்ளை நோய்வாய்ப்பட்டிருக்கிறது. ஷிரந்தியின் பெற்றோரின் தெஹிவளை வீட்டிலிருந்து பிள்ளையை எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

இந்த செய்தியை ஷிரந்தியிடம் இருந்து கேட்ட மஹிந்த, மாத்தறையிலிருந்து பல கிலோமீற்றர் தூரத்தை ஒரு நொடிப் பொழுதில் கடந்து, ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார்.

குட்டிப்பாப்பா சகுந்தலாவைப் பார்த்த தந்தை மஹிந்த, அழுது கொண்டே பிள்ளையை இந்தியாவிற்கு எடுத்துச் சென்று சிகிச்சையளிப்போம் என்று யோசனையை தெரிவித்திருக்கிறார்.

அதையடுத்து, சகுந்தலா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அன்றிரவு முதல் சுமார் ஒரு வாரகாலமாக மஹிந்தவும், ஷிரந்தியும் இரவும் பகலும் கண்விழித்த நிலையில் பிள்ளைக்காக பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர். ஆயினும், துரதிஷ்டவசமாக 1984ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதியன்று, பபோதினி சகுந்தலா என்ற அந்த குட்டிப்பாப்பா தந்தையின் அரவணைப்பில் தனது இறுதி மூச்சைவிட்டது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.