புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
ஹாசிம் உமர் எனும் இராஜhங்கம்

ஹாசிம் உமர் எனும் இராஜhங்கம்

கலைஞர் கலைச்செல்வன்

“ஐநூறு நூல்களின் முதற் பிரதிகளை வாங்கிய உலகிலேயே ஒருவர் -முதல்வர்” இது எவ்வளவு பெரிய சாதனை? எத்தகைய சிறப்பு?

இந்தச் சாதனையை நிகழ்த்தி இருப்பவர் நம்மவர் - புரவலர் ஹாசிம் உமர் அவர்கள். “தாழ்வுற்றுக் கிடக்கின்ற கலை இலக்கியச் சமூகம் பாழ்பட்டுப் போகக் கூடாது” என்கின்ற நினைப்பும் - முனைப்பும்தான் இவரது இந்தச் சாதனை.

உதவியும் ஊக்குவிப்பும் தந்து, உணர்வுகளுக்கு ஊக்கம் கொடுத்து உயர்த்திய ஒரு மனித நேயனின் சங்கீதமும் - சங்க நாதமும்தான் இந்த உலக சாதனை!

ஹாசிம் உமர் அவர்களின் இதயத்தில் இழையோடும் கலை இலக்கிய பந்தம் சொந்தம்தான் இந்தப் புரட்சிகர சாதனை.

மனிதாபிமானம் வற்றிப்போன நூற்றாண்டில் வாழும் “பெரிய” மனிதர்களுக்கு இந்த சாதனை கூட ஒரு சலவைக்கல்தான். ஆனால் வரலாற்றைப் பொறுத்தவரை அது ஒரு வைரம் என்பது அடுத்த தலைமுறைக்குப் புரியும்.

வாடிய பயிராய் வாடிக்கொண்டே வளர்கலைக்குப் புது இரத்தம் பாய்ச்சும் சிருஷ்டிகர்த்தாக்களை நாடித் தேடிச் சென்று, வாஞ்சை மொழிகிறவர் - அன்பினை வாரிப் பொழிகிறவர் கோடிக்கொருவர்தான்.

அந்த அருங்குணமும் -அறக்குணமும் நம்மவர் ஹாசிம் உமரிடத்தில் எல்லா வேதங்களையும், பேதங்களையும் கடந்து அமையப் பெற்றுள்ளதால் “இரண்டு கோடிக்கு ஒருவர்” என்ற புதுச்சாதனையால், புரவலர் இன்று புதுச் சரித்திரம் படைக்கிறார்.

மணக்கும் இந்த மானுட வெற்றிக்கு மகிழம்பூ சொற்களால் மாலை சூடுவதில் மகிழ்ச்சி மனத்திற்குள் மணி அடிக்கிறது.

நூல் வெளியீடுகளா? இலக்கிய விழாக்களா? எழுத்தாளர்களுக்குப் பாராட்டா? நாடக மேடையேற்றமா? நடன அரங்கேற்றமா? நம்மூர்க் கலைஞர்களின் கலை முயற்சிகளா? சங்கீதப் பெருவிழாவா? சேவா வனிதையர் திருவிழாவா? தேசியப் பெருவிழாவா? பட்டிமன்றமா? பத்திரிகையாளர்களுக்குக் கெளரவமா? எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் புரவலர் இல்லாத நிகழ்ச்சி இல்லை என்றாகிவிட்டது.

எல்லா நிகழ்வுகளிலும் கலந்து கொள்கிறார். எல்லா வகையிலும் உதவுகிறார். எது சேவை, எது தேவை என்றுணர்ந்து ஏணியாக இருக்கிறார். எல்லோர் உள்ளங்களிலும் உற்சாக ஊர்வலம் நடத்துகிறார்.

அள்ள அள்ள வற்றாத அலை கடல் உள்ளம்.

அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அரசாங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்ய வேண்டியதை ஹாசிம் உமர் எனும் இராஜாங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றது.

அல்-ஹாஜ் ஹாசிம் உமர் அவர்களின் ஈகை நிறுத்துப் பார்க்க முடியாதது. நெஞ்சில் நிறுத்திப் பார்க்க வேண்டியது.

அவரது வெற்றியில் இருந்தும் - நெற்றியில் இருந்தும் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. அவற்றில் ஒன்றிரண்டு இது.

திறமைகளை இனங்கண்டு கொள்வது,

நலிந்து போகாமல் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது

தம் “கை” யைத் தாரளமாக நீட்டுவது

இது நம்மூர்ப் புரவலரின் தனி மனித ஆளுமை அல்ல, தலைமை கொள்ளும் ஆளுமை. அந்த ஆளுமைக்கு என் ஆற்றல்கள் தலை வணங்குகிறது.

பட்ட மரங்களுக்காக ஒப்பாரி வைக்காமல், பசுந்தளிர்களுக்காகத் தாலாட்டுப் பாடும் பாரி வள்ளல்களை வரவேற்போம்! வாழ்த்துவோம்.

அந்தரங்கத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது இன்று

அது..............

உமறுப் புலவரின் எழுதுகோல் இலக்கியப் புரவலருக்காக இன்னுமொரு சீறாவை எழுத மை நிரப்பிக் கொண்டிருக்கிறது. புலவர் உமரின் எழுத்தாணிக்கும் ஒரு கடமை உண்டல்லவா?

எல்லாம் வல்ல இறைவனுக்கு என் நன்றிகள்.

(நன்றி... புரவலர் சில பதிவுகள்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.