புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் சாதகத் தன்மையை ஏற்படுத்துமா?

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் சாதகத் தன்மையை ஏற்படுத்துமா?

தேயிலை ஏற்றுமதி வரியில் செய்யப்பட்டுள்ள மாற்றம்

இலங்கையின் பொருளாதாரத்துறையில் முக்கிய பங்காற்றி வரும் தேயிலைத்துறை, கடந்தாண்டு பல சவால்களை எதிர்நோக்கியிருந்தது. தொடர் வரட்சியால் தேயிலைச் செடிகள் கருகியமை, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய அமைதியற்ற சூழ்நிலையின் காரணமாக தேயிலை ஏற்றுமதியில் சரிவு, உற்பத்தி செலவுகளில் சடுதியான அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பெரிதும் பாதிப்படைந்திருந்ததுடன், இத்துறையுடன் தொடர்புடைய தொழிலாளர்களும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பல அசெளகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் கடந்த இரு மாதங்களாக இலங்கைத் தேயிலைக்கு சிறந்த கேள்வி நிலவியிருந்த நிலையில், மொத்த தேயிலை கிலோ கிராம் ஒன்று சராசரியாக 450, 470 ரூபா வரை விற்பனையாகியிருந்தது. இந்நிலையில், இவ்வருடத்தின் ஆரம்பத்தில் முதல் காலாண்டு பகுதியில் தொடர்ச்சியாக இலங்கையின் தேயிலைக்கு சிறந்த கேள்வியும், சிறந்த விலையும் காணப்படுமென தேயிலை முகவர் நிறுவனங்கள் அறிக்கைகளை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தேயிலைத்துறையுடன் தொடர்புடைய தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் நிறைவடையவுள்ள நிலையில், இவ்வருட முற்பகுதியில் இவ்வாறான அறிக்கைகள் வெளியாகியிருந்தமை அவர்களுக்கு சாதகமான ஒரு சமிக்ஞையை வழங்கும் வகையில் அமைந்திருந்தது.

ஆயினும், கடந்த ஜனவரி 23ஆம் திகதி எவரும் எதிர்பாராத விதத்தில் ஏற்றுமதி செய்யப்படும் சகல வகையான தேயிலைகளுக்கும் அமுலாகும் வகையில் ஏற்றுமதி வரி (செஸ்) அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரசு அறிவித்திருந்தது.

அதாவது மொத்த தேயிலை ஏற்றுமதியை பொறுத்தமட்டில், இது வரை காலமும் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவும், மேலதிக 3 ரூபா 50 சதமும் வரியாக அறவிடப்பட்டு வந்தன. ஆயினும் ஜனவரி 23ஆம் திகதி வெளியான இந்த புதிய அறிவித்தலின் அடிப்படையில், தேயிலை ஏல விற்பனையின் போது, ஒரு கிலோ தேயிலையின் மீது கோரப்படும் விலையின் 5 வீதத்தை செஸ் வரியாக அறவிட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. உதாரணமாக, மொத்த தேயிலை கிலோ கிராம் ஒன்றின் விலை 450 ரூபாவாக ஏலத்தில் விற்பனையானால், அதில் 5 வீத பெறுமதியான 22 ரூபா 50 சதத்தை செஸ் வரியாக செலுத்த வேண்டும். இதனடிப்படையில் ஏற்றுமதி செய்யப்படும் மொத்த தேயிலை ஒரு கிலோகிராமின் மீது மொத்த வரியாக 26 ரூபா அறவிடப்பட வேண்டும். ஏற்கனவே இந்த தொகை 13 ரூபா 50 சதமாக இருந்தது.

இந்த இரட்டிப்பு மடங்கு வரி அதிகரிப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.

வெளிநாடுகளில் உள்ள தேயிலை கொள்வனவாளர்களுக்கு தேயிலை வரி கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படின் அது குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஆயினும் இந்த உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைந்த செஸ் வரி அதிகரிப்பின் மூலம் இலங்கையின் தேயிலை ஏற்றுமதித்துறை மற்றும் உற்பத்தித் துறை போன்றன பாரிய பின்னடைவுகளை எதிர்நோக்குவது குறித்து அமைதி முறையிலான போராட்டங்களை தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம், இலங்கை தேயிலை விற்பனையாளர் சங்கம் மற்றும் சிறு தேயிலை கைத்தொழிலாளர் சங்கம் போன்றன முன்னெடுத்திருந்தன. இது குறித்த பல ஊடக அறிவித்தல்கள் வெளியாகி யிருந்ததுடன், ஜனாதிபதி மட்டத்திற்கும் அறிவிக்கப்பட்டி ருந்தது. இது குறித்து பெருந்தோட்டத்துறை அமைச்சு முழுமையான விபரங்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை யெனவும், இது திறைசேரியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சுயாதீனமான தீர்மானம் எனவும், பெருந்தோட்டத்துறை வட்டாரங்களிலிருந்து அறிக்கைகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையை நன்கு புரிந்து கொண்ட இலங்கை பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்த வரி அதிகரிப்பின் மூலம் தேயிலை பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பின்னடைவுகள் குறித்து தெளிவுபடுத்தியிருந்தார்.

இதனை நன்கு ஆராய்ந்த ஜனாதிபதி தலைமையிலான குழுவினர், இந்த வர்த்தமானி அறிவித்தலில் மாற்றத்தை ஏற்படுத்த தமது இணக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தேயிலை ஏற்றுமதி செஸ் வரியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 5 வீத அதிகரிப்பானது, தற்போது 2.5 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை தேயிலைத்துறை சார்ந்த அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளதுடன், ஜனாதிபதி மற்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோரின் இந்த தீர்மானத்துக்கும் தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர்.

இலங்கை தேயிலைத்துறையின் வளர்ச்சிக்கு அரசு மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சு தமது பங்களிப்பை வழங்கும் வகையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளமையானது, இந்த துறையின் உறுதியான செயற்பாட்டுக்கு தொடர்ந்தும் ஊக்கமளிப்பதாக அமைந்திருக்கும் என பெருந்தோட்டத்துறை சார்ந்த ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த வரி குறைப்பு கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது ஒரு சாதகமான அம்சமாக பார்க்கப்படும் என தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.