புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

தாய் ெமய்?

தாய் ெமய்?

நீண்ட காலமாக நான் தேடியலைந்த உலகப் புகழ் பெற்ற மெக்ஷிம் கோர்கியின் “தாய்மை” என்ற ரஷ்ய நாவலை எதிர்பாராத விதமாக மகனுக்கு பாடசாலைப் புத்தங்களை வாங்கச் சென்ற புத்தகக் கடையில் கண்டதும் வாங்கிவிட்டேன். புத்தகத்தின் விலை சற்று அதிகமாக இருந்ததால் வாங்கச் சென்ற ஒரு ஜாக்கெட் துணியைக் கைவிட வேண்டியதாயிற்று.

துணியை நாளையோ மறுநாளோ அல்லது அடுத்த மாதமோ வாங்கிக் கொள்ளலாம். புத்தகக் கடைக்கு வந்து ஐந்தே ஐந்து புத்தங்களில் எஞ்சியிருப்பது இது ஒன்றுதான் என்று கடைக்காரர் சொன்னார். பல வருடங்களாகத் தேடியலைந்த இந்த நாவலை இன்று தவறவிட்டுவிட்டால் இனி மேல் எனக்கு இது கிடைக்காமலும் போகலாம். எனவே எதுவும் யோசிக்காமல் விலை அதிகமென்றும் பாராமல் வாங்கி விட்டேன்.

எப்படியும் இதை ஒரே மூச்சில் படித்து விட வேண்டுமென என் மனம் பரபரத்தது. மத்திய பஸ் நிலையத்தில் என் வீட்டுப் பாதையில் செல்லும் பஸ் இல்லாததால் ஒரு ஓரமாக நின்று புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். பதினாறாவது பக்கத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போது... “அந்தா பஸ் வருகுது” என்ற என் மகனின் குரல் கேட்டு தலை நிமிர்ந்து பார்த்தேன்.

முந்திப் - பிந்தி வர வேண்டிய இரண்டு பஸ்கள் இப்போ மரபுப்படி ஒரேயடியாக ஒரே நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து தரிப்பில் நின்றன. முந்திச் செல்லும் பஸ் என்று சொல்லப்பட்ட பஸ்ஸில் ஏறி ஒரு சீட்டின் சன்னலோரத்தை பிடித்துக் கொண்டேன். மகன் இன்னொரு சீட்டின் சன்னலோரத்தைப் பிடித்துக் கொண்டான்.

மகனையும் பொருட்களையும் ஒரு முறை சரிபார்த்துக் கொண்ட நான் மீண்டும் நாவலில் மூழ்கினேன்.

“இந்த இடத்தில் யாராவது இருக்கிறாங்களா...? என்ற குரல் கேட்டு தலை நிமிர்ந்தேன். என்னை விட ஒரு பத்து வயது அதிகமாக இருக்கும் ஒரு பெண். என் மகனை விட சற்றே வயது குறைந்த அவள் மகனுடன் நின்று கொண்டிருந்தாள். நான் “இல்லை” என்று தலையாட்டியதும் அப்பெண் அங்கு அமர்ந்து கொண்டாள். அது இருவர் அமரக் கூடிய சீட். அந்தப் பெண்ணின் மகன் எனக்கும் அவன் தாய்க்கும் இடையில் அமர்ந்து கொண்டான். “அம்மா... நான் ஒரு டுரோயிங் கொப்பி வாங்கிக் கொண்டு வரவா...?” அந்தச் சிறுவன், அவன் தாயைக் கேட்டது என் காதில் இலேசாக விழுந்தது. “இப்ப வேணாம்.... பஸ் போகப் போவுது...” என்றாள் அவன் தாய்.

“அது போக இன்னும் பதினைஞ்சு நிமிஷம் இருக்குது” என்றார். எனக்கு முன்னால் டிக்கட் எழுதிக் கொண்டிருந்த கண்டக்டர்.

“ம்... சரி... போய் கவனமாக வாங்கிக் கொண்டு வாங்கோ!” என்றவாறு அந்தப் பெண் அவள் மகனிடம் பணம் கொடுத்ததும் அந்தச் சிறுவன் பஸ்ஸிலிருந்து இறங்கிச் சென்றான். சிறுவன் சென்ற சில நிமிடங்களில் பிரதான பாதையில் பரபரப்பும் கலவரமும் காணப்பட்டன. பஸ்ஸில் இருந்தவர்கள் எழுந்து அப்படியும் இப்படியுமாக எட்டிப் பார்த்தனர்.

அங்கே இருந்து வந்து பஸ்ஸில் ஏறிய ஒரு வாலிபனிடம் “என்ன சங்கதி...?” என்று ஒருவர் விசாரித்தார். அதற்கு அந்த வாலிபன் “யாரோ ஒரு சின்ன ஸ்கூல் பொடியன் வேனுக்கு முட்டுப்பட்டுட்டானாம்... !” என்றான்.

உடனே நான் என் மகனைப் பார்த்தேன். அவன் முன்னர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சன்னலால் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தான். மன ஆறுதலடைந்த நான் மீண்டும் தாய்மையின் மகத்துவத்தை விளக்கும் அந்த அற்புத நாவலில் மூழ்கினேன்.

என்னருகே அமர்ந்திருந்த அந்தப் பெண் திடுதிப்பென எழுந்து பஸ்ஸை விட்டிறங்கி விபத்து நடந்த இடத்துக்கு ஓடினாள். அவளின் பரபரப்பினால் கலவரப்பட்ட நான் என் இருக்கையை யாரும் ஆக்கிரமித்து விடாதவாறு புத்தகத்தை மூடி அதன் மேல் வைத்து மகனிடம் “இறங்க வேண்டாம்” என்று எச்சரித்து விட்டு அவளைப் பின் தொடர்ந்தேன்.

எனக்கு முன்னால் ஓடிச் சென்ற அப் பெண் விபத்தில் சிக்கி அடையாளம் தெரியாமல் இரத்தத்தில் மூழ்கியிருந்த அந்தப் பள்ளிச் சிறுவனை கட்டியணைத்துக் கதறிக் கொண்டிருந்தாள். நான் திக்பிரமை பிடித்து நின்றேன். சனமும் பெருமளவில் கூடி நின்றது.

“என் மகனின் வயதிலும் குறைந்த அந்தப் பிள்ளைக்கா... இந்தக் கதி...” என நினைத்து என் மனம் கலங்கியது.

அதே நேரம்... என்ன அதிசயம்...! அதோ அந்தச் சிறுவன் ஆம்... அவளே தான்.... கையில் டுரோயிங் கொப்பியுடன் பஸ்ஸில் ஏற முயல்கிறான். நான் ஓடிச் சென்று அவனைத் தடுத்து”

“அங்கே நீ தான்” எக்சிடென்ட் பட்டிருக்கிறாய் என்று உன் அம்மா இன்னொரு பொடியனை கட்டிக் கொண்டு அழுவுறா... போய் உன் அம்மாவைக் கூட்டிவா...!” சிறுவனை அனுப்பி விட்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டேன்.

சில நிமிடங்களில் அந்தச் சிறுவன் தன் தாயுடன் பஸ்ஸில் ஏறி முன்போல் இருவரும் என்னருகில் அமர்ந்தனர்.

இப்போதும் அப்பெண்ணின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஆனால் சற்று முன் அவள் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரல்ல இது. நீர் கலந்து பாலாக தரம் குறைந்ததாகவே என் கண்களுக்குத் தென்பட்டது.

மோதுண்ட அந்தச் சிறுவனைக் கட்டிக்கொண்டு அவள் அரற்றிய போது, அவள் முந்தானையிலும் ஜாக்கெட்டிலும் இரத்தம் தோய்ந்திருந்தது. முந்தானையைப் பிரட்டி அந்த இரத்தக் கறைகளை அவள் மறைத்தாள். பின் தன் கைப்பையைத் திறந்து அதனுள்ளிருந்த கைக்குட்டையை எடுத்துத் தன் கரங்களில் உள்ள அந்த இரத்தக்கறையை மிகவும் அருவருப்புடன் துடைத்த பின், அந்தக் கைக்குட்டையை சன்னலுக்கு வெளியில் வீசி எறிந்தாள். இது என் சிந்தனைத் தடாகத்தில் எறிந்த கல்லாக என் மனதில் சிந்தனை அலைகளைத் தோற்றுவித்து விட்டது.

“தாய்ப் பாசம்” என்பது இதுதானா..? அது இவ்வளவு தானா..?”

இதில் இவ்வளவு சுயநலம் கலந்து விட்டிருக்கிறதா... உலகை ஆட்டிக் கொண்டிருக்கும் இந்த மகத்தான தாய்ப்பாசம் தன் வயிற்றில் ஜனித்த உயிர்களுக்கு மட்டுந்தானா?

ஏன் இந்தத் தாய் பாசம் ஏனைய மனித உயிர்களுக்காக முழுமையாக ஏங்க மறுக்கிறது!

“மண்ணின் பொறுமையைவிட, வான வெளியைவிட, கடலைவிட, காற்றை விட அளவிட முடியாதது இந்தத் தாய்ப் பாசம் ஒன்றுதான்” என இதிகாசங்கள் வர்ணிக்கின்றன. அப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாசத்தில் இத்தனை ஓர வஞ்சனை ஊடுருவி மறைந்து உறைந்து விட்டிருக்கிறதா...?

இது கால வரையும் இதுக்கு ஒப்புவமை இல்லை என்றல்லவா நான் எண்ணி இறுமாந்திருந்தேன்.

“தாய்ப் பாசம்” என்பது தன் பிள்ளையை மட்டுமே பாதுகாக்கக் கூடியதா? விரும்பக்கூடியதா? அப்படியில்லையென்றால் தன் மகன்தான் மோதுண்டான் என்று கட்டியணைத்து அரற்றிய இந்தத் தாய்... அது தன் மகன் இல்லை என்று தெரிந்ததும், திருட்டுப்போன பொருள் கிடைத்து விட்டதைப் போல் நிம்மதியுடன் என்னருகில் அமர்ந்திருப்பாளா...?

“ஒரு பாடசாலை மாணவன் மோதுண்டான்” என்ற அந்த வாலிபன் சொன்ன போது நான் என் மகன் இருக்கிறானா?” எனப் பார்த்து விட்டு புத்தகம் படிப்பதில் நானும் மூழ்கினேன். என் தலை மெல்ல மெல்ல கிறங்க ஆரம்பித்தது வீட்டிற்கு வந்து மாலையாகியும் என் தலைப்பாரம் தணியவில்லை. சற்று சாய்ந்துக்கொள்ளலாம் எனக் கட்டிலில் அமர்ந்தபோது என் மகன் என்னிடம் ஓடி வந்து.

அம்மா கறுப்பு நிறக் கோழி, மஞ்சக் கோழியோ குஞ்ச சேர்க்காம கொத்தி வெரட்டுது” என்று சொன்னதும் நான் புறக்கடைப் பக்கம் சென்று பார்த்தேன்.

இரு கோழிகளும் ஏக காலத்தில் அடைகாக்க வைத்து பொரித்த குஞ்சுகள். ஒரு கோழியின் குஞ்சை மற்றக் கோழி கொத்தி விரட்டுகிறதே... தன் குஞ்சு இல்லை என்று எப்படி இது கண்டு பிடித்தது! இந்தக் கண்டு பிடிப்பு சுயநலச் சத்திக்குதான் “தாய்ப்பாசம்” என்று பெயரா...?

தான் அடைகாத்து பொரித்த குஞ்சு... தான் இட்ட முட்டையில் இருந்து வரவில்லை என்பதற்காக குயில் குஞ்சை காகம் கொத்தி விரட்டுகிறதே இதுவா மகத்தான தாய்ப் பாசம்...? தான் ஈனாத கன்றுக்கு பாலூட்டாமலும் முட்டியும் உதைத்தும் விரட்டுகிறதே பசு. இது தான் தாய்ப் பாசத்தின் மகத்துவமா? மன்னன் சாலமனிடம் “பிள்ளையை வெட்டி பாதி கொடு!” என்றாளே ஒருத்தி. இதுவா அந்த வானத்தை விட விசாலமான தாய்ப் பாசம்...? “மன்னா... அந்தக் குழந்தையை வெட்டாதே!” என்று மன்னன் சாலமனிடம் பதறினாளே... இன்னொருத்தி அதுவா தாய்ப் பாசம்...

அப்படியானால் இந்தத் “தாய்ப் பாசம்” என்பது சுய நலத்தின் விளிம்பில் இடப்பட்ட அத்திவாரமா...? எழுத்தில் வடிவம் கொடுக்கப்பட்டுள்ள அளவுக்கு தாய்ப்பாசத்தின் கனம் இல்லையா...? அது ஓர வஞ்சனை என்ற முலாம் பூச்சு இடப்பட்டதா...?

எனக்கு எதுவுமே புரிய மாட்டேன் என்கிறதே...

அதோ... ஆவலுடன் வாங்கிய அந்த உலகப் புதழ் பெற்ற நாவலான “தாய்மை” என்னால் மேற்கொண்டு படிக்க முடியாமல், பல வாரங்களாக அலுமாரியின் மேல் தூசு படிந்து கிடக்கிறது.

(யாவும் சிந்தனைக்கு)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.