புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
கலையுலகைவிட அரிமாசங்க சேவை ஆத்ம திருப்தியளிக்கிறது

கலையுலகைவிட அரிமாசங்க சேவை ஆத்ம திருப்தியளிக்கிறது

மனம் திறக்கிறார் கலைஞர் கந்தையா

நாற்பது ஆண்டுகளாக கலையுலகில் கால்பதித்து அதுவே தாய் வீடென்று கருதி கலையார்வத்திற்கு தீனிபோட்டு உரமாக்கி அடர்ந்து படர்ந்த விருட்சமாகி வளர்ந் தவர். இவர் வளரும் கலைஞர்களுக்கு நிழல்தரும் சேவகனாக இன்று சமூகத்தில் அடையாளம் காணப்படுபவர்தான் எஸ். கந்தையா. ஒரு காலத் தில் ‘லண்டன் கந்தையா’ வானொலிப் புகழ்பெற்றது போல் இன்று ‘எஸ்லோன் கந்தையா’ என்றால் இவரின் முகம்தான் நிழலாடும். “தமிழ் கலைஞர்களின் பரிணாம வளர்ச்சிக்குரிய அங்கீகாரத்தை கலாசாரத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் சரியான முறையில் அனுசரிக்காததால் மனம் தளர்ந்து போனேன் அதை ஈடுசெய்ய அரிமா சபையை அரவணைத்துள்ளேன்” என்று கூறும் கந்தையாவின் வாழ்க்கைப் பாதையைத் திரும்பி பார்க்கின்றேன்.

கலைஞர், தொழிலதிபர், அரிமா சங்கத்தலைவராக இன்று அடையாளம் காணும் தங்களின் பிறந்தகத்தைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

கலைஞர், தொழிலதிபர், சங்கத் தலைவர் என்று சொல்வதிலும் பார்க்க நான் ஒரு தொழி லாளியின் பிள்ளையென்று சொல்வதில் பெருமை யடைகிறேன். மலையகத்தின் கேந்திர நிலையமாக விளங்கும் ஹட்டன் மாநகரை அண்டியுள்ள டிக்கோயா வனராஜா தோட்டத்தில் 1953ஆம் ஆண்டு பிறந்தேன். தந்தை சின்னத்தம்பி, அம்மா ஆதி. என் பெற்றோரின் முதல் இரண்டு பிரசவங்கள் உயிர் பிழைக்கவில்லையாம். அடுத்து பிறந்தவர்கள் ஏழுபேர். நான் இரண்டாவது பிள்ளை.

ஆரம்ப வித்யாரம்பம் தோட்ட இரவு பாடசாலையில்தான். மணலில் அகரம் போட வைத்தவர் செல்லையா மாஸ்டர். கால்களுக்கு காலணி இன்றி, நல்ல சீருடையின்றி கால்நடையாகவே ஐந்து ஆறு மைல் நடந்து கல்வி கற்றகாலம் அது. ஐந்தாம் வகுப்பிற்கு மேல் ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில் கற்றேன். கல்வியை முழுமையாக முடிக்கவில்லை. காரணம் என் தந்தையார் நோய்வாய்ப்பட்டு மரணித்தார். குடும்ப பொறுப்பை சுமக்க வேண்டியவனானேன்.

மலையிலிருந்து மடுவை நோக்கி இறங்கினேன். தலைநகர் வந்து வத்தளையில் பி.வி.ஸி. பைப் தயாரிக்கும் நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். சிப்பந்தியாக இணைந்து கடுமையாக உழைத்தேன். தொழில் நுட்பத்தையும், சந்தைப்படுத்தல் முறை விநியோக அணுகுமுறைகள் அனைத்தையும் அனுபவரீதியாகப் பெற்றுக் கொண்டேன். காலப்போக்கில் சொந்தமாக சிறிய கைத்தொழில் நிறுவனத்தை நிறுவி உற்பத்தி செய்து சந்தைப்படுத் தினேன். படிப்படியாக தொழில் விருத்தியடைந்தது. இன்று தலைநகரில் மொத்த வியாபார ஸ்தலத்தில் என் சந்தைப் பொருட்களும் உச்ச நிலையில் இருக்கின்றது.

வர்த்தகத் துறையிலீடுபட்ட நீங்கள் எப்படி கலையுலகில் பிரவேசித்தீர்கள்?

பாடசாலை நாட்களில் கலைவிழா, நாடகங்களில் என்னை நடிக்கத் தூண்டியவர் முத்துசிவஞானம் மாஸ்டர். அதில் ஒட்டிக்கொண்ட கலையார்வம் தலைநகர் வந்ததும் முளையிட ஆரம்பித்தது. வத்தளையில் குடியிருந்தபோது அன்று ‘தவச’ கம்பனியில் வேலை செய்த முத்துக்குமார் எனக்கு அறிமுகமானார். இவர் வத்தளை பொதுப்பணி மன்றத்தின் செயலாளராக இருந்தார். இளைஞர்களை ஒன்றிணைத்து கலை விழா. நாடகம், இசைவிழாவென்று நடத்திக் கொண்டிருந்தார். என் கலையார்வத்தையும் புரிந்து கொண்ட இவர் கலைஞர் ஜே.பி. றொபர்ட்டை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவர்களின் நட்பே எனக்கு கலையுலகில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. கலையுலக வாழ்விற்கு ஒளியேற்றி வைத்த இவ் இருவரையும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஜீவன்கள் என்றே கூறுவேன்.

1974ஆம் ஆண்டு வத்தளை பொதுப்பணி மன்றத்தால் தயாரித்தளிக்கப்பட்ட ‘சொல்லாத கதை’ கொழும்பு மாநகரில் அரங்கேற்றப்பட்டதன் மூலம் ரசிகர்கள் வட்டத்தில் எனக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்தது. பல தமிழ் கலைஞர்களுக்கு மேடையளித்த பெருமை கவின்கலை மன்றத்திற்குரியது. அதன் தலைவர் ஜே.பீ. றொபர்ட் என்னை கவின்கலை மன்றத்தின் நிரந்தர உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

கவின் கலை மன்றத்தினூடாக காலங்கள் அழுவதில்லை - மாத்தளை கார்த்திகேசுவால் எழுதப்பட்ட இந்நாடகம் சுமார் பன்னிரண்டு முறை மேடையேறியது. ஒரு சக்கரம் சுழல்கிறது. தோட்டத்து ராஜாக்கள், காவியமாலை, மற்றும் ஒரு மனைவி விதவையாக வேண்டும், ஏமாற்றாதே, நியாயம், இதயத்தாகம் போன்ற மேடை நாடகங்கள் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றதோடு ‘குணசித்திரநடிகன்’ என்ற தனி அடையாளத்தையும் பெற்றுக்கொடுத்தது.

வெள்ளி நிலா கலாலயத்திற்காக ஒன்று எங்கள் ஜாதியே (15முறை மேடையேறியது) இருட்டிலே தேடாதீங்க, கவ்வாத்து கத்தி, கெரி ஓன் டிரக்டர், வேலைக்காரி, சிலோன் யுனைட்டெட் ஸ்டேஜ் நெறிப்படுத்துதலில் செல்வராஜின் இதற்கு தானே ஆசைப் பட்டாய், சலனம், சலங்கையின் நாதம், வரம், கவியும் கண்ணீரும், ஒரு கொலை வலை, நீர் கொழும்பு முத்துலிங்கம் எழுதிய மெளனத்திரை (ஆறு விருதுகளை வென்ற நாடகம்) ‘இப்போதெல்லாம் சகஜஞ்ச’ என்ற நாடகத்திலும் நடித்துள்ளேன்.

மேடை நாடகங்களை தொடர்ந்து தொலைக் காட்சியில் ஏதாவது...

மின்னும் நட்சத்திரங்கள், “ஆசை ஆசை”, புதுக்குடும்பம், திரு. கே. கோவிந்த ராஜ் அவர்களால் எழுதி திரு.பி. விக்னேஸ்வரன் நெறிப்படுத்திய ‘மலையோரம்’ வீசும் காற்று’, “காணிக்கை” கெசட்டில் வெளிவந்துள்ளது. மீண்டும் மீண்டும் கோமாளிகள், பாட்டாளியின் தோழன், காலத்துயர், “வண்ணப்பூக்கள்” தொடரிலும் நடித்துள்ளேன்.

“சரி நீங்கள் சினிமாவில் ஏதாவது...

நான் இரண்டு படங்களில் நடித்துள்ளேன். அதிலொன்று மாத்தளை கார்த்திகேசு அவர்களால் எழுதி திரு. ஜே.பி. றொபர்ட் அவர்களால் நெறிப்படுத்திய “அவள் ஒரு ஜீவனதி”.

இன்றைய கலையுலக வாழ்வில் உங்களின் பங்களிப்பு எந்த வகையில் அமைந்திருக்கின்றது?

இன்று நாடகமேடையேற்றங்கள் முழுமையாக மந்தகதியை அடைந்துள்ளது. தேசிய நாடக விழாவில் நாடகங்களை அரங்கேற்ற ஆவளோடு பல கலைஞர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் கலைஞர்களுக்குரிய பரிமாணங்களை கலை, கலாசாரம் சம்பந்தப்பட்டோர் அளிப்பதில்லை. கலைஞர்களுக்குரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. இதனால் ஏழு, எட்டு என்று அரங்கேறிய போட்டிக்கான நாடகங்கள் இன்று இரண்டு அல்லது ஒன்றாக கீழிறங்கி விட்டது. இந்த அவல நிலை நீக்கப்பட வேண்டும். இதனை சீர்செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக பல்கலை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் போன்றோரின் கவனங்கள் உள்வாங்கப்பட்டு நடைமுறையிலுள்ள விதிமுறைகளை விஸ்தரிப்பதன் மூலமே என் போன்ற கலைஞர்ளின் பங்களிப்பும், வளரும் கலைஞர்களின் பங்களிப்பும் தமிழ் நாடகத்திற்கு புத்துயிரளிக்கும் என்று நம்புகின்றேன்.

இன்றைய பொழுதில் உங்களின் சேவையைப்பற்றி கூறுங்கள்?

அடிமட்டத்திலிருந்து வந்த என்னால் சமுதாயத்திற்கு எந்தளவு உதவ முடியும் என்று சிந்தித்தேன். அதன் விளைவு லயன்ஸ் கிளப் அங்கத்தவராக இணைந்தேன். இளமையில் எனக்கு பூரணமாகக் கிடைக்காத கல்வி வறுமைக் கோட்டிலிருக்கும் சிறார்களுக்கு கிடைக்க வேண்டுமென்ற ஆதங்கத்தில் கல்வி கருத்தரங்குகள், மருத்துவ முகாம் பாதசாரிகளுக்கான விழிப்புணர்வு, தலைமைத்துவ பயிற்சியென்று பன்முகத் திட்டங்களை லயன்ஸ்கிளப் மூலம் செய்து வருகின்றேன்.

இதுவரை பிற்பட்ட 15 பாடசாலைகளில் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சைக்கான பயிற்சி மீட்டல் வகுப்புக்களை நடாத்தி நல்ல பெறுபேறுகளை பெற வாய்ப்பளித் துள்ளோம். அதேபோன்று சாதாரணத்தர / உயர்தர பரீட்சைக்கான மீட்டல் பயிற்சி வகுப்புகளை நடாத்தி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்தோம்.

மருத்துவ முகாம் மூலம் ஏழை எளியவர்களின் பிணிகளுக்கான நிவாரணம் பெற்றுக் கொடுத்து வருகிறோம். கண் சிகிச்சை, நீரிழிவு நோய்க்கான பிரதான சிகிச்சைகள் இன, மத, பேதமின்றி நடாத்தி வருகிறோம். சிகிச்சைப் பெற்ற பின் அகமகிழ்ந்து இன்முகத்தோடு அவர்கள் வீடு திரும்புவதைப் பார்த்து ஆத்ம திருப்தியடைகின்றேன்.

2012-2013 ஆம் ஆண்டிற்கான கொட்டாஞ்சேனை வட்டார லயன்ஸ் கிளப் தலைவராக நியமனம் பெற்றபின் சுயநலம் கருதாது என்னாலியன்ற அளவு பொதுசேவைகளைச் செய்து வருகின்றேன். என் சேவையின் மூலம் லயன்ஸ் கிளப்பின் அதி உயர் விருதான ணி.நி.பி. விருதையும் சுவீகரித்துள்ளேன்.

ஏற்கனவே மத்தியஸ்தர் குழுவில் ஒருவனாக இருந்து ஆயிரக் கணக்கான பிணக்குகளை சமுகமாக சமாதான முறையில் தீர்த்து தம்பதிகளை இணைந்து வைத்ததில் பெரும் அனுபவங்களைக் கண்டுள்ளேன். சில சம்பவங்களை நினைத்தால் சினிமாவிற்குக் கிடைத்த நல்ல கதையின் கருபோல் இருக்கும்.

தங்களின் இல்லறம் பற்றி...

என் மனைவி சந்திரா என் வாழ்க்கை வெற்றிப் படிக்கு உறுதுணையானவள். இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் பிள்ளையும். மூத்தமகன் லண்டனில் குடியமந்துள்ளார். மகள் மருத்துவத் துறையில் வைத்தியராகியுள்ளார். இளைய மகன் என் வர்த்தக நிறுவனத்தில் துணையாகவுள்ளார். அன்பான மனைவி, குழந்தைகளின் குறைவில்லா கல்வி, தடையில்லா கொடை நிறைவான வாழ்வைத் தருகிறது.

கலையுலக அனுபவம் 30 வருடத்திற்கு மேலாக இருக்கும் உங்களுக்கு ஏதாவது கெளரவ விருதுகள் கிடைத்ததுண்டா?

20.12.1998ல் சர்வதேச இந்துமத குருபீடம் நடத்திய பாராட்டு விழாவில் கலைபணிக்காக “நாடக கலைமணி”

1999ம் ஆண்டு சிலோன் யுனைட்டட் ஆர்ட்ஸ்டேஜ் வெள்ளிவிழா விருது வழங்கும் வைபவத்தில் நடிப்புத் தென்றல் 1999ம் ஆண்டு அகில இன நல்லுறவு ஒன்றியம் நடத்திய விழாவில் நடிப்புச் சுடர்

கொழும்பு விவேகானந்தாமேடு மேட்டுதெரு அருள் மிகு ஸ்ரீ ராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தான மணிகண்ட சேவா பீடாதிபதி டாக்டர் சாம்பசிவமணி குருக்கள் ஏற்பாட்டில் கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்தில் தென் இந்திய திரைப்பட பாடகர் டி.எல். மகாராஜன் அவர்களுக்கு நடத்திய பாராட்டுவிழாவில் “நடிப்புச் செம்மல்” என்ற பட்டத்தையும் 06.11.2000ம் ஆண்டு முத்தமிழ் இன்ப விழாவில் சசாங்கன் சர்மா அவர்களால் கலாப மாணி என்றபட்டத்தையும் 2002.11.09ஆண்டு என்னுடைய 25வது வெள்ளி விழாவைபவத்தின் “நடிகதென்றல்” அஃ தோடு என்னுடைய சமூக சேவை பணிக்காக காலம் சென்ற செளமிய மூர்த்தி தொண்டமான் எனக்கு அகில இலங்கை சமாதான நீதவானாகவும். என்னுடை கலைச்சேவை பொதுபணிசேவையை, உணர்ந்து எனக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை இலங்கை ஜப்பான் கராட்டி ஒன்றியத்தால் வழங்கப்பட்டது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.