புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
பத்திரகிரிக்கு முடி சூட்டுதல்

பத்திரகிரிக்கு முடி சூட்டுதல்

(சென்றவார தொடர்...)

நல்ல நாளில் பத்திரகிரிக்கு முடிசூட்டி, ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து விட்டு, பிறகு, சில நாட்களில் சந்திரவர்ணன் காலமானான்.

அதன் பின்னர், அவனுடைய பிராமண மனைவியான கல்யாணியின் வயிற்றில் பிறந்த மகன் வல்லரிஷி துறவியாகப் போய்விட்டான். அரசனான பத்திரகிரி முந்நூற்று அறுபது பெண்களை மணம் புரிந்துகொண்டான். ஆட்சியையும் சிறப்பாக நடத்தினான்.

சாந்தயோகி என்னும் முனிவர், தம்முடைய தவ வலிமையால் பல அரிய சித்திகளைப் பெற்றவர். தேவேந்திரனுடைய பூஞ்சோலையிலிருந்து ஒரு மாதுளம் பழத்தைக் கொண்டுவந்திருந்தார். அதை அரசன் பத்திரகிரியிடம் கொடுத்து, “இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் என்றும் பதினாறு வயதாக வாழலாம். உனக்காகவே இதைக் கொண்டு வந்தேன். இதைச் சாப்பிட்டு நீ நீண்ட ஆயுளோடு வாழ்வாயாக” என்று வாழ்த்தி விட்டுச் சென்றார்

அந்தப் பழத்தைப் பெற்றுக்கொண்ட பத்திரகிரி அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். எவருக்கும் கிடைத்தற்கு அரிய அந்தப் பழத்தைக் கொண்டு போய், தன்னுடைய முந்நூற்று அறுபது மனைவியரில் தான் மிகவும் நேசிக்கக் கூடிய முதல் மனைவியான மோகனாங்கியிடம் கொடுத்து, “முனிவர் ஒருவர் எனக்கு அளித்த இந்தப் பழத்தைச் சாப்பிட்டால், என்றும் பதினாறு வயதாக வாழலாம். ஆகையால், நீ இப்பொழுதே இதைச் சாப்பிடு” என்றான்.

மோகனாங்கி அதைப் பெற்றுக் கொண்டு, “இந்த தெய்வீகப் பழத்தை நல்ல நாளில் சாப்பிடுகிறேனே” என்றாள். பத்திரகிரியும் அவளுடைய அறிவைப் பாராட்டி அவள் விருப்பம் போல் சாப்பிடச் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

ராணியின் நடத்தையில் சந்தேகம்

அடுத்த நாள், அரசன் பத்திரகிரி அரண்மனை உப்ப¨கையில் உலாவிக்கொண்டிருந்தான். அப்பொழுது கூலிக்காரி ஒருத்தி தெருவில் போய்க்கொண்டிருந்தாள். அவருளுடைய தலையில் இருந்த கூடையில் அழகான மாதுளம் பழம் இருந்தது. அதைக் கண்ட அரசன் காவலர்களை ஏவி, கூலிக்காரியைக் கூட்டிக் கொண்டுவரச் சொன்னான்.

கூலிக்காரி அரசன் எதிரே வந்து நடுங்கியபடி நின்றாள். அவளிடம் “நீ யார்? அந்த மாதுளம் பழம் உனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்டான் அரசன்.

“நான் ஒரு தாசியின் பணிப்பெண். மன்னனின் குதிரைக்காரன் என்னிடம் உள்ள ஆசையால், இந்தப் பழத்தை என்னிடம் கொடுத்தான். நான் நவகோடி நாராயணன் செட்டியின் மருமகனிடம் ஆசை கொண்டிருப்பவள். ஆகையால், அவருக்குக் கொடுப்பதற்காக இந்தப் பழத்தைக் கொண்டு போகிறேன்” என்று தெரிவித்தாள்.

உடனே குதிரைக்காரனைக் கூட்டி வரச் சொன்னான் அரசன். அவன் நடுங்கிக்கொண்டே வந்தான். அங்கே கூலிக்காரி நிற்பதைக் கண்டு பயந்து நடுநடுங்கினான். “இந்தப் பழம் எப்படிக் கிடைத்தது? இதை நீ இவளிடம் கொடுத்தது உண்மையா?” என வினவினான்.

குதிரைக்காரன் பயந்து வெலவெலத்து, “என்னிடம் உள்ள ஆசையால், பெரிய ராணி கொடுத்தார்கள். நான் இவளிடம் கொண்டுள்ள ஆசையால், இவளிடம் அதைக் கொடுத்தேன்” என்றான்.

பத்திரகிரி உடனே ராணி மோகனாங்கியிடம் சென்று “உன்னிடம் நான் கொடுத்த மாதுளம்பழம் எங்கே? அதைக் கொண்டு வா” என்றான்.

மோகனாங்கி சற்று தயங்கினாள். அரசன் அவசரப்பட்டு, அந்தப் பழத்தைக் கொண்டு வருமாறு கட்டாயப்படுத்தினான். அவள் அதைக் கொண்டுவரவில்லை.

“அந்தப் பழத்தைக் குதிரைக்காரனிடம் கொடுத்தேன்” என்றாள் மோகனாங்கி.

பத்திரகிரியின் துறவு

அவள் சொன்னதைக் கேட்டதும் அரசன் பத்திரகிரி திகைத்து நின்றுவிட்டான். அறநூல்களை எல்லாம் கற்றறிந்தவன். ஆகையால், நிதானமாக யோசிக்கலானான்.

தன்னுடைய ஆசை சிதறி, அவமானம் அடைந்த பிறகும் இல்வாழ்க்கையில் இனி ஈடுபடக் கூடாது என்ற முடிவுக்கு வந்தான்.

விக்கிரமாதித்தனுக்கு முடிசூட்டுதல்

உடனே, சகோதரர்கள் இருவரையும் அழைத்து, விக்கிரமாதித்தனுக்கு முடிசூட்டி, பட்டியை அமைச்சனாக இருக்கச் செய்து, அவன் துறவியாகி காட்டுக்குச் சென்று விட்டான்.

விக்கிரமாதித்தன் பட்டத்துக்கு வந்தான். உலகினர் அனைவரும் தன்னைப் போற்றி புகழ்ந்து கொண்டாடும்படி பெருமையோடு ஆட்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

உடனே, அமைச்சன் பட்டியை அழைத்து, இந்தச் சிறிய கன்னியாபுரி நாட்டை மட்டும் ஆட்சி செய்வதனால் நமக்கு புகழோ, பெருமையோ உண்டாகாது. நமது புகழ் என்றும் - எப்பொழுதும் நிலைத்து இருக்கத்தக்க முறையில் புதிய நகரம் ஒன்றை நிர்மாணித்து நாம் ஆட்சி செய்ய வேண்டும். ஆகையினால், புது நகரத்தை அமைக்க தகுந்த இடமாகப் பார்த்து ஏற்பாடுகளைச் செய்வாயாக என்று கட்டளையிட்டான்.

விக்கிரமாதித்தனின் கட்டளைப்படி அமைச்சன் பட்டி தகுந்த இடத்தைக் கண்டுபிடிப்பதற்காகப் புறப்பட்டான்.

சில நாட்களுக்குப் பிறகு, குணவதி ஆற்றை அடுத்த வனசகிரி மலைச்சாரலில் ஒரு மேட்டுப் பாங்கான இடத்திலிருந்த ஒரு நகரத்தை அடைந்தான். அங்கே மனிதர்கள் நடமாட்டத்துக்குப் பதிலாகப் பூதக் கூட்டங்களே காணப்பட்டன. அங்கே ஒரு காளி கோயிலும் அதை ஒட்டி ஒரு குளமும் இருந்தன.

அமைச்சன் பட்டி அந்த குளத்தில் குளித்துக் காளி கோயிலை வலம் வந்து வணங்கினான். அப்பொழுது அவனுடைய பார்வை ஒரு குத்துக்கல்லின் மீது சென்றது. அதில் எழுதப்பட்டிருந்த சாசனம் பட்டியைக் கவர்ந்தது. அதன் அருகில் சென்றான்.

“குளக்கரையில் கட்டப்பட்டுள்ள ஏழு உறிகளையும் ஒரே வெட்டில் வெட்டி, அப்படியே குளத்தின் மையத்தில் உள்ள வேலின் முனையில் தலைகீழாகப் பாய்பவர்களுக்குக் காளி தேவி நேரில் தோன்றி, ஏராளமான செல்வங்களை வழங்குவதோடு, ஐம்பத்து ஆறு நாடுகளின் அரசாட்சிப் பொறுப்பையும் அளிப்பாள்” என குறிக்கப்பட்டு இருந்தது.

அமைச்சன் பட்டி, அதைப் படித்ததும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். அந்தச் சாசனப்படி செய்து விட்டால், ஐம்பத்து ஆறு நாடுகளின் ஆளுகையும் கிடைக்குமே என பூரிப்படைந்தான்.

உடனே மிக விரைவாகக் கன்னியாபுரியை நோக்கிச் சென்றான். தான் கண்ட சாசன விவரத்தை விக்கிரமாதித்தனிடம் கூறினான். அதைக் காண வேண்டும் என்ற ஆவல் அவனுக்கும் உண்டாயிற்று. உடனே இருவரும் காளிகோயிலுக்குச் சென்றனர்.

பட்டியும் விக்கிரமாதித்தனும் குளத்தில் குளித்து, காளி தேவியை வணங்கினார்கள். பிறகு, சாசனத்தில் குறிப்பிட்டிருப்பதைக் கண்டு என்ன செய்யலாம் என யோசித்தனர்.

காளிதேவி வரம் அருளுதல்

அருகிலிருந்த ஆலமரத்தில் ஏறி, அங்கே கட்டப்பட்டிருந்த ஏழு உறிகளையும் ஒரே வெட்டில் வெட்டி விட்டுக் குளத்தில் இருந்த வேலின்மீது தலைகீழாகப் பாய்ந்தான் விக்கிரமாதித்தன். வேலின் முனையை அவன் நெருங்கியபோது, காளிதேவி தோன்றி, அவனைத் தாங்கிக் கைகளில் ஏந்தியவாறு கோயிலுக்குள் சென்றாள்.

“காளிதேவியே, என் சகோதரனுக்கு அருள்பாலித்து, எங்கள் கோரிக்கையை ஈடேற்றிக் கொடுக்க வேண்டும்” என்று காளியை வணங்கி பட்டி வேண்டிக் கொண்டான்.

விக்கிரமாதித்தனின் வீரத்தைக் கண்டு காளிதேவி பாராட்டி, “நீங்கள் சென்று, உங்களுடைய கருவூலத்தைத் திறந்து பார்ப்பீர்களானால், ஏராளமான செல்வம் அங்கே இருக்கக் காண்பீர்கள். அதைக் கொண்டு, இந்த நகரத்தைப் புதுப்பித்து, ‘உஜ்ஜயினி மாகாளிபுரம்’ என்று பெயரிட்டு, இங்கு இருந்தவாறே ஐம்பத்து ஆறு நாடுகளையும் ஆட்சி செய்வீர்கள்” என்று அருளி மறைந்தாள்.

புதிய நகரத்தை உருவாக்குதல்

அதன் பின்னர், விக்கிரமாதித்தனும் பட்டியும் கன்னியாபுரிக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே கருவூலத்தில் காளிதேவி அருளியபடி, அளவற்ற செல்வம் குவிந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். உடனே நகரத்தைப் புதுப்பிக்கும் அலுவலை மேற்கொண்டனர்.

“உஜ்ஜயினி மாகாளிபுரம்” தோற்றுவிக்கப் பட்டவுடன், தன்னுடைய தலைநகரை அங்கே மாற்றிக்கொண்டு, ஆட்சி புரியத்தொடங்கினான் விக்கிரமாதித்தன்.

காளிதேவியின் அருள் வாக்குப்படியே, ஐம்பத்து ஆறு நாட்டு அரசர்களும் விக்கிரமாதித்தனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டினார்கள்.

நடன மங்கையர்

இவ்வாறு இருக்கும்போது, இந்திர சபையில் ஒரு நாள், தேவ மாதர்களான ஊர்வசிக்கும் அரம்பைக்கும் நடனப் போட்டி ஒன்று நிகழ்ந்தது. இருவரில் யார் வெற்றி பெற்றார் என்று தீர்ப்புக் கூற, இந்திர சபையில் ஒருவராலும் இயலவில்லை.

அப்பொழுது நாரதர் இந்திரனிடம், “தேவேந்திரா, இவர்களில் யார் திறமைசாலி என்று தீர்ப்புக்கூற, பூலோகத்திலுள்ள மன்னம் விக்கிரமாதித்தன் ஒருவனாலே இயலும். ஆகையால், அவனை அழைத்து வரச் செய்து, அவன் முன்னிலையில் அவர்களை நடனம் ஆடச் செய்து, அவன் கருத்தைக் கேட்க வேண்டும்” என்றார்.

இந்திரன், உடனே தன்னுடைய இரதத்தை அனுப்பி, விக்கிரமாதித்தனை அழைத்து வரும்படி கூறினான்.

இந்திரலோகத்தில் விக்கிரமாதித்தன்

அதைக் கேட்டதும் விக்கிரமாதித்தன் காளிகோயிலுக்குச் சென்று வணங்கினான். காளிதேவி விபூதியும் எலுமிச்சம் பழமும் அவனுக்கு வழங்கி, வாழ்த்தி அருள் பாலித்தாள்.

பின்னர், இந்திரனின் இரதத்தில் ஏறிக்கொண்டு விக்கிரமாதித்தன் இந்திரலோகம் சென்றான். இந்திரன், அவனை வரவேற்று உபசரித்து, வரவழைத்த காரணத்தைக் கூறினான்.

மறுநாள் காலையில், விக்கிரமாதித்தன் இந்திரனின் பூந்தோட்டத்துக்குச் சென்று, மலர்களைக் கொய்து, இரண்டு பூச்செண்டுகள் கட்டி, அதில் இரண்டு தேள்களையும் உள்ளே மறைத்து வைத்தான். இரண்டு செண்டுகளையும் தன் கைகளில் வைத்துக் கொண்டான்.

இந்திர சபையில், அனைவரும் கூடி இருந்தனர். ஊர்வசியும் அரம்பையும் நடனம் ஆடத் தொடங்கினர். அப்பொழுது, இருவரிடமும் தான் கட்டி வைத்திருந்த மலர்ச்செண்டுகளை ஆளுக்கு ஒன்றாக கொடுத்தான் விக்கிரமாதித்தன். அதைக் கையில் பிடித்துக் கொண்டு, அவர்களை நாட்டியம் ஆடும்படி கூறினான்.

இருவரும் மிக அற்புதமான நடனம் ஆடினர். அரம்பை தன்கையிலிருந்த மலர்ச் செண்டை முரட்டுத்தனமாக அழுத்திப் பிடித்ததால், அதிலிருந்த தேள் அவளைக் கொட்டிவிட்டது. அதனால் அதை அவள் தூர எறிந்துவிட்டாள்.

ஊர்வசியோ, மென்மையாக மலர்ச்செண்டைப் பிடித்துக் கொண்டு ஆடியதால், அவளுடைய நடனம் சிறப்பாக இருந்தது. இருவருடைய நடனத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த விக்கிரமாதித்தன், “ஊர்வசியின் நடனமே குற்றமற்றது, சிறப்புடையது” என சபையில் அறிவித்தான்.

“அதை எவ்வாறு தீர்மானித்தாய்?” என்று கேட்டான் இந்திரன்.

நடன மாதர் இருவரையும் அழைத்து தான் கொடுத்த மலர்ச் செண்டுகளைத் திருப்பித் தருமாறு கேட்டான் விக்கிரமாதித்தன். அரம்பை மலர்ச் செண்டை தூர எறிந்துவிட்டதால், அவளால் கொடுக்க இயலவில்லை. ஊர்வசி மலர்ச்செண்டை விக்கிரமாதித்தனிடம் கொடுத்தாள். சபையோருக்கு ஒன்றும் புரியவில்லை.

விக்கிரமாதித்தன் மலர்ச் செண்டைப் பிரித்தான் அதில் மறைந்திருந்த தேள் வெளியேறியது. “தேவேந்திரா! மலர்ச் செண்டுகள் இரண்டு தயாரித்து, இரண்டு தேள்களை அதில் மறைத்து வைத்து, ஆளுக்கு ஒன்று கொடுத்தேன்”

“அரம்பை, செண்டை இறுகப் பிடித்து ஆடியதால் அவளைத் தேள் கொட்டிவிட்டது. தாளம் தவறி ஆடினாள். அதனால், தூர எறிந்துவிட்டாள் அரம்பை.”

“ஊர்வசி செண்டை மென்மையாகப் பற்றி, தாளம் தவறாமல் ஆடினாள். அவளைத் தேள் கொட்டவில்லை. இதுவே நான் செய்த சோதனை” என்றான் விக்கிரமாதித்தன்.

சபையோரும், இந்திரனும் விக்கிரமாதித்தனின் அறிவாற்றலை வியந்து, பாராட்டினார்கள்.

இந்திரன் அளித்த தங்கச் சிம்மாசனம்

இந்திரன், விக்கிரமாதித்தனுக்குத் தங்கச் சிம்மாசனம் ஒன்றைப் பரிசாக அளித்து, ஆயிரம் ஆண்டுகள் அரசு புரியும் வரமும் கொடுத்து, இரதத்தில் ஏற்றி அவனை உஜ்ஜயினி மாகாளி புரத்துக்கு அனுப்பி வைத்தான்.

விக்கிரமாதித்தன் அங்கே வந்தவுடன், காளி கோயிலுக்குப் போய் வணங்கிய பின்னர் அரண் மனைக்குச் சென்றான்.

பட்டியிடம் நடந்த நிகழ்ச்சிகளை விவரமாகக் கூறினான் விக்கிரமாதித்தன்.

(தொடரும்...)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.