புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

nஜனீவாவில் நடைபெறும் நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான தர்ம யுத்தத்தில் இலங்கைக்கே வெற்றி

nஜனீவாவில் நடைபெறும் நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான தர்ம யுத்தத்தில் இலங்கைக்கே வெற்றி

ந்நாட்டு மக்கள் அனைவருக்கும் சாதி, மத, இன, குல, பிரதேச பேதமின்றி சரிசமமான முறையில் நல்லாட்சியை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் எண்ணத்துடன் எல்.ரி.ரி.ஈயை ஆதரிக்கும் சில அமைப்புகளும் அரசாங்கத்தின் மீது வஞ்சம் தீர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்ட சில அரச சார்பற்ற அமைப்புகளும் உள்நாட்டிலுள்ள தேசப்பற்றற்ற சுயநல நோக்கத்துடன் செயற்படும் துஷ்டர் கோஷ்டியும் இன்று எங்கள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் தீவிரமாக அரசாங்கத்திற்கு எதிரான நாசவேலைகளை மேற்கொண்டு வருகின்றன.

வருடம் பூராவும் இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன என்ற அசமந்தப் போக்கில் நாட்களை கழித்து வந்த தேசத்துரோக சக்திகள் மார்ச் மாதம் நெருங்கும் போது கும்பகர்ணன் நீண்ட நாட்கள் உறங்கிய பின்னர் திடீரென்று விழித்தது போன்று அரசாங்கத்தின் மீதான பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி, அரசாங்கத்தை சர்வதேச ரீதியில் பலவீனப்படுத்தி வெளிநாட்டவர்கள் முன்னிலையில் தோல்வியை தழுவச் செய்யும் எண்ணத்துடன் இன்று செயற்பட்டு வருகின்றன.

மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல் போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, எங்கள் நாட்டை அந்த சர்வதேச அரங்கில் அவமானப்படுத்துவதே மேற்கத்திய நாடுகளின் இராஜதந்திரிகளின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியன்று இலங்கையில் முடிவடைந்த எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளின் யுத்தத்தை பின்னணியில் வைத்துக் கொண்டே எங்கள் நாட்டுக்கு எதிராக இந்த போலிப் பிரசாரங்கள் இப்போது இலங்கையிலும், வெளிநாடுகளிலும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தினால் உயிரோடு பிடிக்கப்பட்ட பின்னர் மிலேச்சத்தனமாக இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டான் என்பதை சித்தரிக்கும் போலியாக வடிவமைக்கப்பட்ட வீடியோ காட்சிகள் பிரிட்டனின் சனல் 4 என்ற தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்டதுடன் இலங்கைக்கு எதிரான துர்பிரசாரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்தன.

சனல் 4 தொலைக்காட்சி சேவை எப்போதும் எல்.ரி.ரி.ஈயின் டொலர் நோட்டுகளுக்கு அடிபணிந்து, அவ்வியக்கத்தின் அடிவருடிகளாக கொடுக்கப்படும் பொறுப்புகளை நிறைவேற்றும் பணியை சிறப்பாக செய்து வருகின்றது. அதனால் தான் சனல் 4 தொலைக்காட்சி சேவையில் ஜோடிக்கப்பட்ட போலியான காட்சிகள் நவீன தொழில்நுட்ப யுக்திகளைக் கையாண்டு, உண்மையான காட் சிகளைப் போன்று காண்பிக்கப்படு கின்றன. சனல் 4 தொலைக்காட்சி சேவையின் பின்னணியை தெரியாதவர்கள் இந்த தொலைக்காட்சி நிலையம் உண்மையை வெளிப்படுத்துகின்றது என்று நம்புவதற்கும் வாய்ப்புண்டு. சனல் 4 தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்துடன் மிக நெருக்கமான தொடர்புடைய ஒரு யாழ்ப்பாணத்து தமிழ்ப் பெண் ஷிராணி சபாரட்ணம் என்பது எவருக்கும் தெரியாதிருக்கும்.

எல்.ரி.ரி.ஈ. இயக்கம் இன்று இராணுவ ரீதியில் இலங்கை இராணுவத்தினால் முறியடிக்கப்பட்டுள்ள போதிலும், எல்.ரி.ரி.ஈ. வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கோடான கோடி டொலர்கள் வெளிநாட்டில் உள்ள அரசசார்பற்ற அமைப்புகளையும், வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளையும், சனல் 4 போன்ற தனியார் தொலைக்காட்சி சேவைகளையும் தங்கள் சொற்படி ஆட்டிப்படைக்கும் வல்லமை படைத்துள்ளது. ஷிராணி சபாரட்ணம் லண்டனில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி நிலையத்தில் தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்.

2012 ஜூன் மாதம் 5ம் திகதியன்று ஷிராணி இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்து சேர்ந்த போது பொலிஸாரும், அரச உயர் அதிகாரிகளும் அவரை விமான நிலையத்தில் தடுத்து வைத்து லண்டனுக்கு அடுத்த விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டார்கள். ஷிராணி சபாரட்ணம் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் முன்னாள் உறுப்பினராக இருந்தார். இவர் தனது பிரிட்டிஷ் கணவர் ஸ்டுவர்ட் கொஸ்குரோவுடன் டுபாய் வழியாக இலங்கைக்கு வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் ஷிராணி சபாரட்ணத்தை தடுத்து வைத்து புலனாய்வு பிரிவினர் விசாரித்தார்கள். அப்போது ஷிராணி சபாரட்ணம் தான் வேறு வேறு கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கையின் வடபகுதிக்கு யுத்தத்தின் போதும், யுத்தம் முடிவடைந்த பின்னரும் விஜயம் செய்திருந்ததை ஒப்புக் கொண்டார்.

ஷிராணி சபாரட்ணம் தனது கணவருடன் இலங்கைக்கு வந்து எல்.ரி.ரி.ஈக்கு ஆதரவான தகவல்களையும், புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளையும் பதிவு செய்து லண்டன் திரும்பிய பின்னர் அவற்றின் மூலம் எல்.ரி.ரி.ஈயின் போலிப்பிரசாரத்திற்கு தங்கள் தயாரிப்புகளை பெருமளவு டொலர்களுக்கு விற்றுவிடுவதற்கு திட்டமிட்டிருந்தார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகக் கொண்ட ஷிராணி சபாரட்ணம் சனல் 4 தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் ஸ்டுவர்ட் கொஸ்குரோவை மணம்புரிந்தார். இவ்விருவரும் லண்டனிலும் மேற்குலக நாடுகளிலும் இலங்கைக்கு எதிரான புலம்பெயர்ந்த அமைப்புகள் செயற்பாடுகளுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வந்தனர்.

ஜெனீவாவுக்கு சென்று திரும்புவதனால் குறைந்தபட்சம் விமான டிக்கட், ஹோட்டல் அறை வாடகை உட்பட 20 நாட்கள் அங்கு தங்கியிருப்பதற்கு ஒருவருக்கு குறைந்தபட்சம் 15 முதல் 20 இலட்சம் இலங்கை ரூபா செலவாகும். ஜெனீவாவுக்கு இலங்கைக்கு எதிரான போலிப் பிரசாரத்தை செய்வதற்காக செல்லவிரும்புபவர்கள் எவரும் தங்கள் சொந்தப் பணத்தை செலவிட்டு செல்லப் போவதில்லை. எல்.ரி.ரி.ஈ. புலம்பெயர்ந்த அமைப்புகள் பிச்சையாக போடும் ஆயிரக்கணக்கான டொலர் நோட்டுகளை அபகரித்து, ஜெனீவாவில் இலங்கையை எதிர்க்கும் அதே வேளையில் மகிழ்ச்சியோடு ஓய்வெடுப்பதற்காகவே பலரும் இலங்கைக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்வதற்கு ஜெனீவா செல்ல விரும்புகிறார்கள்.

இங்கிருந்து ஜெனீவா செல்பவர்கள் மட்டுமல்ல லண்டன், ஜேர்மனி, கனடா, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் தொழில்புரியும் இலங்கையரும் மார்ச் மாதத்தில் தங்கள் வருடாந்த விடுமுறையை எடுத்துக் கொண்டு எல். ரி.ரி.ஈ. புலம்பெயர்ந்த அமைப்புகளின் டொலர்களை சன்மானமாக பெற்று ஜெனீவாவில் பகல் பொழுதில் ஓரிரு மணித்தியாலங்கள் இலங்கைக்கு எதிரான பதாகைகளை பிடித்துக் கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கட்டிடத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை நடத்திவிட்டு இறுதியில் இந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்தவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான டொலர் நோட்டுகளை அன்பளிப்பாக பெற்றுக் கொண்டு தங்கள் ஹோட்டல்களுக்கு சென்றுவிடுவார்கள்.

இவ்விதம் சுமார் 20 நாட்களுக்கு தங்களுக்கு கொடுக்கப்பட்ட இலங்கை எதிர்ப்பு பணியை செய்துவிட்டு கிடைக்கும் சன்மான பணத்தை சேமித்து ஜெனீவாவில் உள்ள விலை உயர்ந்த சொக்லேட்டுகளையும், வாசனைப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தங்கள் நிரந்தர வசிப்பிடங்களுக்கு மகிழ்ச்சியோடு திரும்புகிறார்கள்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள், முற்றாக முடிவுக்கு வந்திருப்பதனால் இன்று நம்நாட்டில் சகல இன மக்களும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற உண்மை, வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு நன்கு தெரிந்திருந்தாலும் அவர்கள் சுயநல நோக்கம் காரணமாக அதனை தங்கள் நாடுகளில் பகிரங்கப்படுத்த விரும்புகிறார்கள் இல்லை.

இந்த வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்தும் வன்முறைகளை எதிர்நோக்குவதுடன் தமிழ் மக்களுக்கு உயிராபத்து இருந்து வருகிறதென்றும் தாங்கள் வாழும் நாடுகளில் போலிப் பிரசாரங்களை செய்து, அந்நாட்டு அரசாங்கங்களை ஏமாற்றி அங்கு நிரந்தரமாக வாழ்ந்து, வாழ்க்கையின் சகல செளகரியங்களையும் அனுபவிப்பதில் அக்கறை காட்டி வருகிறார்கள். இவ்விதம் இலங்கைக்கு எதிராக பொய்ப் பிரசாரங்களை செய்பவர்கள் அனைவருமே சுயநல நோக்கத்துடன் தான் செயற்பாடுகிறார்களே ஒழிய யுத்தத்தினால் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களின் குறைபாடுகளை தீர்த்து வைப்பதற்கு என்றுமே முன்வருவதில்லை.

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த சுமார் மூன்று இலட்சம் மக்களுக்கு யுத்தம் முடிவடைந்த 3 வருடமென்ற மிகவும் குறுகிய காலத்தில் இலங்கை அரசாங்கம் அந்த மக்களுக்கு சகல விதமான புனர்வாழ்வுக்கான உதவிகளையும் செய்து முடித்ததுடன் அந்த மக்களை அவர்களின் பூர்வீக வாசஸ்தலங்களிலும் குடியமர்த்துவதிலும் வெற்றி கண்டுள்ளது.

இவ்விதம் இவ்வளவு பெருந்தொகை மக்கள் குடியமர்த்தப்படும் போது ஒரு சிலருக்கு எல்லோருக்கும் கிடைப்பது போன்ற சகல வசதிகளும் கிடைப்பதில்லை என்பதை நாம் மறுக்க முடியாது. அவ்விதம் புதிய இருப்பிடங்களில் கஷ்டப்படும் மக்களுக்கு அரசாங்கம் தான் உதவி செய்கிறதே ஒழிய ஜெனீவாவுக்கு சென்று அரசாங்கத்திற்கு எதிராக போலிப் பிரசாரங்களை செய்யும் அரசசார்பற்ற அமைப்புகளும் அரசியல்வாதிகளும் அந்த மக்களுக்காக ஒரு செப்பு காசைக்கூட அவர்களின் மேம்பாட்டுக்காக செலவிடுவதில்லை.

ஜெனீவாவுக்கு சென்று அரசாங்கத்திற்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி, எங்கள் நாட்டை சர்வதேச அரங்கில் அவமானப்படுத்தும் எண்ணத்துடன் செயற்படுபவர்களை நாம் எவ்விதம் நம்நாட்டு மக்களாக மதிக்க முடியும். இவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லை. இவர்கள் வெளிநாட்டு டொலர்கள் மீதே பற்றுக் கொண்டு இத்தகைய துஷ்ட நடத்தைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கல்விமான்களும், சமூகவியலாளர்களும் மனம் நொந்து கண்டனம் தெரிவிக்கிறார்கள். இலங்கைக்கு எதிரான இத்தகைய தேசத்துரோக சக்திகள் எவ்வளவுதான் முயற்சி எடுத்தாலும் இறுதியில் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் புஷ்வாணமாகிவிடும். நீதிக்கும், அநீதிக்கும் இடையிலான தர்ம யுத்தத்தில் நீதிக்காக தலைநிமிர்ந்து நிற்கும் இலங்கைத் தாய்திருநாட்டுக்கு இறுதி வெற்றி கிடைக்கும் என்பது திண்ணம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.