புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
வாழ்வின் உயர்வு தாழ்வு காட்டும் உள்ளங்கை ரேகைகள்

வாழ்வின் உயர்வு தாழ்வு காட்டும் உள்ளங்கை ரேகைகள்

ஒருவரின் தலைவிதியானது அவரது கைகளிலேயே தங்கியுள்ளது என்பது எம்மிடையே வழங்கிவரும் பழமொழி. கைகளைக் கொண்டு உழைத்துப் பிழைப்பதில் அவர் காட்டும் அக்கறையில்தான் அவரது வாழ்வின் உயர்வும் தாழ்வும் தங்கியுள்ளது என்பதை அர்த்தப்படுத்தும் பொன்மொழி அது. கை ரேகை சாத்திரமும் இதையே தான் கூறுகிறது. ஆனால் கைபற்றி அதன் பார்வைக்கோணம் வித்தியாசமாக இருக்கிறது, ஒருவரின் தலைவிதி அவரது உள்ளங்கையில் குறுக்கும் நெடுக்குமாக வரையப்பட்டிருக்கும் கோடுகளை அதாவது ரேகைகளை நம்பியே இருக்கிறதென அது கூறுகிறது. இக்கோடுகளை நுணுகி ஆராய்வதற்கும், ஆராய்ந்து அறிந்தவற்றை துல்லியமாக வெளிப்படுத்துவதற்குமே கைரேகைக்கலை தோன்றியதாக, இக்கலையை உலகிற்கு அறிமுகப்படுத்திய கைரோ என்னும் ஆங்கில நாட்டுமேதை கூறுகிறார். கையிலுள்ள ரேகைகளைப் படித்து முக்காலங்களையும் கூறும் இந்த ஆச்சரியமான கலையை, இந்தியாவின் இமய மலைச் சாரல்களில் பரதேசிகளாய் அலையும் சித்தர்களிடமிருந்தே தாம் கற்றதாகவும் அவர் கூறுகிறார்.

இத்தகைய கலை குறித்து எனது ஆய்வுகளையும் அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதற்குமுன்னால், கைரேகைக்கலை பற்றிய அடிப்படை அறிவை நீங்கள் பெற்றுக்கொண்டால், உங்கள் கைகளை நீங்களே பார்த்துப் பலனறிவது இலகுவாக இருக்குமென்று நினைக்கிறேன்.

ஒவ்வொருவர் கையிலுமுள்ள ஐந்து விரல்களினதும் கீழேயுள்ள மேடுகள் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றன. பெருவிரலின் கீழேயுள்ளதும், ஆயுள்ரேகையால் எல்லை கோலப்பட்டுள்ளதுமான பெருத்தமேடு சுக்கிரமேடு எனப்படும், அதற்கு எதிர்த்திசையிலுள்ள அகன்ற மேடு சந்திரமேடு. சுட்டு விரலின் கீழுள்ளது குருமேடு. நடுவிரலின் கீழுள்ளது சனிமேடு. மோதிரவிரலின் கீழுள்ளது சூரிய மேடு.

சின்னிவிரலின் கீழுள்ளது புதன்மேடு. இந்த நான்கு மேடுகளுக்குக் கீழாகவும், சுக்கிர, சந்திர மேடுகளுக்கு மேலாகவும், உள்ளங்கையில் மூன்று பிரிவுகளாகப் பரந்து காணப்படுவது செவ்வாய்ச் சமவெளியாகும். (படத்தை அவதானிக்கவும்) இந்த மேடுகள் உப்பியிருந்தால் பலம் வாய்ந்தவையாகக் கருதப்படும். அத்துடன் அவைகள் மீது ரேகைகளும் இருக்கக் காணப்பட்டால் பெறுமதி வாய்ந்தவைகளாகக் கருதப்படும். மாறாக, மேடுகள் பலகைபோல் தட்டையாகவும், ரேகைகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தும் காணப்பட்டால் நற்பலன்கள் குறைவாயிருக்கும். விளைவுகள் எதிர்பார்த்ததுக்கு நேர் மாறாகவிருக்கும்.

உள்ளங்கையின் அடிப்புறத்திலிருந்து தொடங்கி, வில்போல் வளைந்து சென்று குருமேட்டின் அடிப்புறத்தில் முடியும் ரேகை ஆயுள்ரேகை எனப்படும்.

நீங்கள் எவ்வளவுகாலம் உயிர்வாழ்வீர்கள்? சரீர சுகத்துடன் நீண்டகாலம் வாழ்வீர்களா? அல்லது சதா நோய்நொடியுடன் நோஞ்சானாய் வாழ்ந்து அற்பாயுளில் மண்டையைப் போடுவீர்களா?எப்படிப்பட்ட வியாதிகள் உங்களைத்தாக்கும்? எந்தெந்த வயதுகளில் தாக்கும்? விபத்துக்கள் சம்பவிக்குமா? உடலில் எந்தெந்த உறுப்புகளை அவை பாதிக்கும்? வியாதிகளால் எவ்வளவு காலம் வருந்துவீர்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு இந்த ஆயுள் ரேகையே பதில் சொல்லும்.

அடுத்தது, உள்ளங்கையின் நடுமத்தியில் குறுக்காகச் செல்லும் தடித்த புத்திரேகை பற்றியது. நீங்கள் புத்திசாலியா? எந்தப் பிரச்சினைக்கும் முகம்கொடுக்கும் மூளைப்பலம் கொண்ட தைரியசாலியா? அல்லது மந்த புத்திக்காரரா? மூளைக்கோளாறு உள்ளவரா? புத்தியைக் கொண்டு வாழ்வில் எவ்வளவுதூரம் முன்னேறுவீர்கள்? புகழ்பெறுவீர்களா? அல்லது புத்திக்குறைவால் சிறுமைப்பட்டுப் போவீர்களா? சமூகத்தில் எத்தகைய அந்தஸ்தை உங்கள் புத்திசாதுரியத்தால் அடைவீர்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு புத்திரேகை பதில் சொல்லும்.

இருதய ரேகையானது உள்ளங்கையில் புதன் மேட்டின் அடிப்புறமிருந்து தொடங்கி, குரு மேட்டில் சென்று முடியும் முக்கிய ரேகையாகும். உங்கள் இருதயம் எப்படிப்பட்டது? கருணை மயமானதா, அல்லது கல்போன்று இறுகியதா? இருதயத்தில் வியாதிகளுண்டா? இதயத் துடிப்பு, இரத்தோட்டம் என்பன சீராக நடைபெறுகின்றனவா? கண்டதும் காதல் வசப்படுகிறவரா இல்லாவிடில் காமநோய் கொண்டவரா என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த ரேகை எடுத்தியம்பும்.

வாழ்வின் போக்கை நிர்ணயிக்கிற மேற்சொன்ன மூன்று ராஜரேகை களையும் விட, இன்னொரு முக்கிய ரேகையுமுண்டு அதுதான் விதிரேகை.

ஒருவர் தமது வாழ்வில் அடைகிற பணம், புகழ், கெளரவம் அந்தஸ்து என்பன இந்த ரேகையின் அமைப்பிலும் வலிமையிலும் தங்கியிருப்பதால் இதுவும் அவசியமானதென்றே உணரப்பட்டுள்ளது.

ஒருவரின் வாழ்வை தூக்கி நிறுத்துவதும் பள்ளத்தில் தள்ளி விழுத்துவதும் பொருளாதாரமாகும். இது நவக் கிரகங்களில் பிரதானமான சனீஸ்வரன் கையில் இருப்பதாலும், இந்த ரேகை நடுவிரலின் கீழுள்ள சனிமேட்டை நோக்குச் செல்வதாலும் இது சனிரேகையென்றும் அழைக்கப்படும்.

இந்த ரேகையானது உள்ளங்கையின் அடிப்புறத்திலிருந்து தொடங்கி (தி) கையின் மத்தியை ஊடறுத்து தங்குதடையின்றிச் சென்று சனிமேட்டில் ஏறினால், அத்தகைய ரேகை அமைப்பைக் கொண்டவர், வசதியான குடும்பத்தில் பிறந்து இறப்புவரை சுகபோக வாழ்க்கை வாழ்பவர் என்று பொருள்படும். அதிக பிரயாசையின்றி திடீர்த்திருப்பங்களின்றி வாழ்க்கை ஓடத்தைச் செலுத்திச் செல்வார். விதிரேகையிலிருந்து ஒரு கிளை மோதிர விரலின் கீழுள்ள சூரிய மேட்டைச் சென்றடைந்தால் (கி) அந்த ரேகை அவ்வாறு புறப்படும் காலத்திலிருந்து அந்நபர் கலைத்துறைகளில் பிரகாசிப்பதை அது குறிக்கும். ஓவியம், கதை, கவிதை, நாவல், நாடகம், நாட்டியம், சினிமா போன்ற துறைகளில் ஈடுபட்டு புகழ்பெறுவார்

விதிரேகையின் கிளையொன்று சின்னிவிரலின் கீழுள்ள புதன்மேட்டை அடைந்தால் (வி) வணிக மற்றும் வியாபாரத்துறைகளில் ஈடுபட்டு அமோகமாகப் பொருZட்டுவதை அது குறிக்கும். குறிப்பாக, எந்த வியாபாரத்தில் அல்லது கைத்தொழிலில் ஆர்வமுடையவரோ, அதில் ஈடுபட்டால் நன்கு பிரகாசிப்பார்.

விதிரேகையின் கிளையொன்று சுட்டுவிரலின் கீழுள்ள குருமேட்டில் சென்று முடிந்திருந்தால் (ளி) கல்வி, நீதி,

அரசியல் போன்ற ஏதாவதொரு துறையில் பிரவேசித்து ஒரு பேராசிரியராகவோ, ஒரு நீதிபதியாகவோ, அன்றேல் அரசியல் துறையில் ஓர் அமைச்சர், வெளிநாட்டுத்தூதுவர் போன்றோ பிற்காலத்தில் விளங்க முடியும்.

விதிரேகையின் கிளையானது கையின் செவ்வாய்ச் சமவெளியை ஊடறுத்தால் (ரி) சிறந்த விவசாயியாக வரமுடியும். மேலும் கட்டடக்கலை, மின்சார, எரிபொருள் துறைகளில் கல்விகற்று உயர் பதவிகளும் வகிக்க முடியும். சந்திரமேட்டில் விதிரேகையின் கிளை குறுக்கிட்டால் (பி) கடல் கடந்த பயணமும், அதனால் வெளிநாட்டுச் சம்பாத்தியம், வெளிநாட்டு வாழ்க்கை என்பனவும் கிட்டும்.

விதிரேகையின் கிளை சுக்கிரமேட்டை ஊடறுத்தால் (சி) பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில்களில் பிரபல்யம் கிட்டும். (உதாரணம் : வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர், உல்லாச விடுதிகள், ஆடைத்தொழிற்சாலைகள்) அத்துடன் பெண்கள் விடயத்தில் மோசமான நடத்தையுடையவராகவும் இவர் சித்தரிக்கப்படுகிறார். சுக்கிரமேடும் பாறைபோல அளவுக்கு மீறி உப்பியிருந்தால், விளக்கைச் சுற்றும் விட்டில்கள் போல பெண்கள் கூட்டம் சூழ்ந்துவிடும் காதல் மன்னனாகவும் இவர் விலங்குவாரென்றும் கைரேகை சாத்திரம் கூறுகிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.