புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 

நினைவுகளில் ரீங்காரமிடும் ரோஜh மலரே ராஜகுமாரி

நினைவுகளில் ரீங்காரமிடும் ரோஜh மலரே ராஜகுமாரி

‘ரோஜா மலரே ராஜகுமாரி’ என்னும் பழைய சினிமாப் பாடலை இலகுவில் மறந்துவிட முடியாது. இன்றும் கூட அந்தப் பாடலை பழைய பட ரசிகர்கள் வாயில் முணுமுணுப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இப்பாடல் இடம் பெற்ற படம் ‘வீரத்திருமகன்’ இப்படத்தில் ஆனந்தனும், சச்சுவும் கதாநாயகன், கதாநாயகியாக நடித்தனர். இப்படக் கதாநாயகன் ஆனந்தன் பற்றிய சில நினைவுகளை மீட்டிப் பார்ப்போம்.

விஜயபுரி வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆன சி. எல். ஆனந்தன் சண்டைக் காட்சிகளில் சிறந்து விளங்கினார். திரைப்படங்களில் ஸ்டண்ட் நடிகராகவும் கோஷ்டி நடனத்தில் இடம்பெறுகிறவராகவும் இருந்தவர் ஆனந்தன்.

திறமை இருந்தும் வெளிச்சத்துக்கு வராமல் இருந்தார். 1960ல் சிட்டாடல் பிலிம்சார் விஜயபுரி வீரன் படத்தைத் தயாரித்தனர். திருலோக சுந்தர் எழுதிய கதை ஜோசப் தளியத் டைரக்ட் செய்தார். படத்தில் எல்லோரும் புது முகங்கள். ஆனந்தன் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். டி. கே. எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் நடித்து வந்த ஹேமலதா கதாநாயகி.

மற்றும் அசோகன், பாண்டி செல்வராஜ் ராமதாஸ் ஆகியோரும் நடித்தனர். வசனம் நாஞ்சில் ராஜப்பா. குதிரை சவாரி கத்திச் சண்டை முதலிய வீர தீரச் செயல்கள் நிறைந்த படம் இது.

ஆனந்தன் பிரமாதமாக நடித்தார். அவர் போட்ட கத்திச் சண்டைகள் விறுவிறு ப்பாக இருந்தன. சாதாரண புதுமுகங்கள் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹீட்டாக அமைந்து நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

அதன்பின்னர் 1962 ல் ஏவி. எம். ஸ்டூடியோவில் உருவான வீரத்திருமகன் படத்தில் ஆனந்தனும், குமாரி சச்சுவும் நடித்தனர்.

தொடர்ந்து பல சண்டைப் படங்களில் ஆனந்தன் நடித்தார். எம். ஜி. ஆரை அடுத்து நன்றாகக் கத்திச் சண்டை போடக்கூடியவர் என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது. கொங்கு நாட்டு தங்கம், யானை வளர்த்த வானம்பாடி மகன், நீயா, நானா, நானும் மனிதன்தான், காட்டு மல்லிகை, அடுத்த வாரிசு, அந்த ஒரு நிமிடம், செந்தூரப் பூவே ஆகியவை ஆனந்தனின் குறிப்பிடத்தக்க படங்கள்.

பிற்காலத்தில், எம். ஜி. ஆருடன் தனிப்பிறவி, நீரும் நெருப்பும் ஆகிய படங்களில் நடித்தார். ஸ்டண்ட் படங்களுக்கு மவுசு குறையத் தொடங்கியதும் ஆனந்தனின் பட வாய்ப்புகள் குறைந்தன.

நண்பர்களுடன் சேர்ந்து ஆனந்தன் மூவிஸ் என்ற பெயரில் படக்கம்பனி தொடங்கினார். நானும் மனிதன்தான் என்ற படத்தை தயாரித்தார். பொருளாதார ரீதியில் இந்த படம் அவருக்கு வெற்றியைத் தேடித் தராவிட்டாலும் சிறந்த நடிகர் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது.

கிராமத்து அப்பாவி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். துணிச்சல் சண்டை காட்சிகளில் டூப் போடாமலேயே நடித்தவர் ஆனந்தன். காட்டு மல்லிகை என்ற படத்தில் புலியுடன் சண்டை போடும் காட்சியில் அவரே நடித்தார்.1989ல் நடிகர் ஆனந்தன் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டார். 25.03.1989 அன்று அதிகாலை ஆனந்தன் மரணம் அடைந்தார். ஆனந்தனின் மனைவி பெயர் லட்சுமி அம்மாள். 3 மகன்கள். 4 மகள்கள். பிற்காலத்தில் கவர்ச்சி நடன நடிகையாக விளங்கிய டிஸ்கோ சாந்தி அவரது மகள்களில் ஒருவர். இன்னொரு மகள் லலிதா குமாரி. மகன் ஜெயராமன் ஆகியோரும் சினிமா படங்களில் நடித்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.