புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

நல்லன நல்கும் நம்பிக்கைகள்

நல்லன நல்கும் நம்பிக்கைகள்

உறுதியான எண்ணத் தளத்திலி ருந்து “நம்பிக்கைகள்” வேரூன்றி ஸ்திரமாகி விடுகின்றன. எனவே எண்ணும் எண்ணங்கள் யாவுமே நல்லனவாக அமையட்டும். அதுவே நிறைவேறும் எண்ணம் போல் வாழ்வு மறக்க வேண்டாம்?

நல்ல நம்பிக்கை உணர்வுகள் நற்காரியங்களாக மாறுவதால் ஏனையவர்களும் உங்கள் மீது நல்ல அபிப்பிராயம் மிக்க மனிதராகி உங்களுடன் இணைந்து இயங்குவர்.

நம்பிக்கைகள் கூட ஒருவித பற்றுதலாகவே அமைந்து விடுகின்றது. மதம், மொழி, இனம், நாடு எனப் பலதரப்பட்ட விஷயங்கள் மாந்தருடன் பின்னிப் பிணைந்துள்ளன. மனிதன் விலகிட முடியாத மிக இறுகிய கட்டத்தினுள் இவை சங்கமித்துள்ளன.

எனினும் நம்பிக்கைகளுக்கும் பற்றுதல்களுக்கும் சில சிறிய வேறுபாடுகள் உண்டு. காலம் காலமாக எம் சமூகத்துடன் பிணைந்துள்ள மதம், மொழி, நாடு தொடர்பான இறுகிய பிணைப்புக்களை சாதாரண பற்றுதல்களுடன் ஒப்பீடு செய்யமுடியாது.

எனினும் நாம் நாட்டுப்பற்று இனப்பற்று, மொழிப்பற்று என்கின்றோம். சாதாரணமான பற்றுக்கள் விட்டுப் போகும். ஆனால் மதம், நாடு, இனம் தொடர்பான பிணைப்புக்கள் குருதி ஓடும்வரை தொடரும். அடுத்த பரம்பரையுடன் இணைந்து கொள்ளும்.

எனவே இவை அசையாத எண்ணங்களோடு ஜீவிதம் செய்யும் போது அவை இறுக்கமான நம்பிக்கையாகி விடுகின்றன.

எனவே நாம் எமது மொழி இன மத கலாசாரங்களைப் பிறிதொரு மொழி இன கலாசாரம் சார்ந்தவர்கள் தவறாக விமர்சனம் செய்தால் எம்மால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

யாரோ, எவரோ கண்டபடி உளறினால் அவர்கள் சார்ந்த இனத்திடம் வஞ்சம், குரோதம் கொள்வதே மனித சுபாவம் ஆகிவிட்டது. இந்த ஆரோக்கியமற்ற மனவளம் குன்றிய நிலைதான் ஒன்றுபட்ட சமூகங்களைப் பிரித்துப் பந்தாடுகின்றது.

எவரது நல்ல நம்பிக்கைகளையும் நடத்தைகளையும் நாம் தேவையின்றி ஆராயக் கூடாது. நல்ல நண்பர்களை உருவாக்க வேண்டுமேயானால், அவனது தனித்துவமான நல்ல நம்பிக்கையுள் நாம் பிரவேசித்து, அவற்றை மாற்றி அமைக்க முயற்சி செய்வதாகாது.

ஒருவர் நேசிக்கும் மதக் கொள்கையினைத் தவறு எனச் சொல்ல நாம் யார்? எங்கள் இனம் சார்ந்து மட்டும் இந்த உலகு தங்கி இருக்கவில்லை. எல்லாமே பிணைந்து இயங்குவதே உலகம்.

மக்களின் நியாயபூர்வமான கருத்துக்கள் ஏற்புடையதாயின் ஏற்பதே சிறப்பு. தனக்கு என்ன தேவை என்பதே பலருக்கும் புரியாத நிலையில், அடுத்தவன் தேவைகளே, அர்த்தமற்றது எனச் சொல்லாமா?

நீதியான செயலுக்கும் புறம்பான ஆசைகளை எவரும் அனுமதிக்க முடியாது. சுயநல ஆதிக்க முனைப்புகளை, அது அவரவர் நம்பிக்கை என நாம் ஏற்பது மகா கோழைத்தனமானது.

சமூக விரோதமான செயல்பாடுகளில் நம்பிக்கை வைப்பது ஒரு தற்கொலைக்கு. சமனானது. அது மட்டுமல்ல இவர்களால் ஏற்படும் விபத்துக்கள், கொடுஞ் செயலுக்கு, ஆதரிப்பது அவர் செய்யும் செயலை விடக் கொடியது. ஒவ்வொரு இனத்திற்கும் தனித் தனியான உன்னதமான கலாசார நெறிகள் உண்டு ஆயினும் உலகம் முழுமைக்குமான கலாசாரமும் உண்டு. அது நல்லன எல்லாவற்றையுமே, எவரிடமும் அறிந்து அவ்வண்ணம் ஒழுகுதலாகும். சிறந்தவைகளைப் பயில்வதே உன்னதமான உலக கலாசாரமாகும்.

எனவே சரியான, நியாயபூர்வமான வாழ்வு முறைகளின் மீதே நாம் கட்டுறுதியுடன் பெரு நம்பிக்கை கொள்ள வேண்டும். இதற்கு மத, இன வேறுபாடுகள் இல்லவேயில்லை. தன்னம்பிக்கை என்பது தனது செயல்களின் மீதான நம்பிக்கையாகும். இது துணிவும், ஆளுமையுடன் சம்பந்தப்பட்டதாகும் ஆனால் “நம்பிக்கை” என்பது மக்களின் பொதுமையான பண்பு.

ஒருவர் தன்னை ஸ்திரப்படுத்தி, ஆளுமைகளை வளர்த்துக் கொண்டால் தன் நம்பிக்கையும் கூடவே வரும்.

நற் செயல்களில் மட்டுமே கொண்டிணைந்தவர்களாக இயங்கிவரின், தேசம் இவர்களைத் தழுவிக் கொள்ளும்.

துயரங்கள், புறத் தாக்கங்கள் ஒருவருக்கு தங்கள் மீது மட்டுமல்ல, சுற்றியிருப்பவர்கள் மீது வெறுப்பை உண்டுபண்ணலாம்.

இந்த உலகில் எது ஐயா உண்மை? எல்லாமே பொய், எனக்கு எதிலுமே நம்பிக்கை கிடையவே கிடையாது. கடவுள், இந்த மனுஷர்கள் எல்லாமே எனக்குத் துரோகம் செய்கின்றார்கள். நியாயங்களுக்கு இங்கு எது ஐயா காலம்...” என மனம் வெதும்பும் மாந்தர்களின் பேச்சுக்களை நீங்கள் கேட்டிருக்கலாம். மாறுதல்களை ஏற்க மறுத்தால், எங்ஙனம் உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும். எமக்கு முரணாக நடந்தால் யதார்த்த நிகழ்வுகளை கரித்துக் கொட்டுவதால் பயன் இல்லை. உயர்வு மிகு நம்பிக்கைகளே வாழ்வை இனிமையாக்கும்.

உண்மையிலேயே நல்லோர் அவமானங்களைச் சந்திக்கும் போது மனம் மருகி, உருகி அவதிப்படுதல் இயல்பே.

எனினும் இந்தத் துன்பம் தற்காலிகமானது. இவர்களைப் போன்றோர் மனம் பேதலித்தல் ஆகாது.

நல்லதே நிகழும் என நம்பிக்கையை மனதில் பொருத்துவதே சாலச்சிறந்தது. ஏற்புடைய சிறப்பான, நீதியானவைகளை மறுத்தல் ஒறுத்தல், வாழ்வில் நிகழப் போகும், வெற்றிகளைத் தாமாகவே குறைத்ததாக, அல்லது அறுத்ததாக அமைந்து விடலாம்.

கற்றுக் கொண்ட சகலமுமே நல் நம்பிக்கைபூட்டுவனவாக அமையட்டும் எமது புலன்கள் அதனை மீதே லயிக்கட்டும். நேரியபார்வை உயரிய நோக்குள்ள நெஞ்சுறுதி இருந்தால் இறுதிவரை எமது வெற்றிகளை எவருமே தடுத்திடல் இயலுமோ?

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.