புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

''கூடு போகிறது''

''கூடு போகிறது''

களியோடை ஆற்றின் கரையில் கிடந்த ஒரு பழைய கட்டையில் தேரையைப் போல குந்திக் கொண்டிருந்த சுலைமண் போட்ட தூண்டிலில் எதுவும் மாட்டவில்லையே என்று அலுத்துக் கொண்டார். இன்றைக்கு வீட்டுக்குப் போகும் போது வெறுங்கையுடன் போகக் கூடாது, என்ற பிடிவாதத்துடன் பல இடங்களில் மாறிமாறி தூண்டிலை ஏறிந்து எறிந்து பார்க்கிறார். காலைச்சூரியன் கிழக்கில் கைகாட்டும் முன்பே ஆற்றின் கரைக்கு வைகறை பொழுதில் வந்தவர். சூரியன் உச்சிக்கு வந்து உச்சந்தலையில் எண்ணெய் உருக்கும் பொழுதாகியும் ஒரு மீனும் மாட்டாத கவலை சுலைமான் மனதைச் சூடாக்கியது.

“நேத்தும் ஊட்ட சும்மாதான் போன... இண்டைக்கும் சும்மா போனா அவள் சுவறாப்புறுபுறுப்பாள் இண்டக்கும் வெறுங்கையோட போனா, அவளவுதான்... அவள்ள சொத்தய ஆறு பாக்குற.... ஊட்ட போகத்தேவல்ல...”

சுலைமானின் உள்ளம் என்னென்னவோ நினைக்கிறது. உடல் காய்ந்து, முகம் வாடி, எல்லாவற்றையும் வெறுத்த கண்களோடு தூண்டிலை நோக்கிக் கொண்டிருக்கிறார்.

“மப்பிலி தாழுது! ஆஹா...! பட்டுட்டுடா.... ஆவுடா...!” என்று ஆவலுடன் சுலைமான் தூண்டிலை இழுக்க தூண்டிலில் மீன் மாட்டவில்லை. ஆற்றில் பதுங்கும் கறுத்த ஆமை ஒன்றுதான் மாட்டியது! ஏமாற்றம்.

“ஆம பட்டிருக்கி.... அல்லாஹ்...” என்று பெருமூச்சு விட்டு, களியோரை ஆற்றின் குளிர்ந்த தண்ணீரை சூடாக்கும் வண்ணம் மனம் கொதித்து எழுந்தவர், ஆமையைக் கழற்றி மீண்டும் ஆற்றில் வீசிவிட்டு, துண்டில் கம்பை தூக்கிக் கொண்டு, தளர்ந்த நடையோடு போய்க் கொண்டிருந்தார் சுலைமான்.

வீட்டின் முற்றத்து வெயிலில் நேற்றுக் கிண்டிய பனங்கிழங்குகளை காயவைத்துக் கொண்டிருந்தாள் சுலைமானின் உள்ளத்தரசி. ஒன்றும் பேசாமல் படலையைத் திறந்து கொண்டு குடிசைக்குள் புகுந்தார். கையில் என்ன கொண்டும் போகிறார் என்பதை கடைக்கண்ணால் பார்த்துக் கொள்கிறாள் அவரது மனைவி சாலியா. சுலைமான் எதுவும் பேசாமல் தனது பழைய சாரனை தோளில் போட்டுக் கொண்டு பற்பொடியைக் கையில் கொட்டி பல்லைத் தீட்டிய வண்ணம் வாசலுக்கு வந்தார்.

“இவ்வளவு நேரத்துக்கும் ஆத்தடிய கெடந்துக்கு என்ன செய்திங்க ஒண்டுமில்லாட்டி என்னத்துக்குப் போaங்க, இருட்டோட போன நீங்க இவளமட்டுக்கும் கெடந்துக்கு காஞ்சதுதான் மிச்சம்... அரிசி முடிஞ்சி ஒரு கெழம... வலுக்குசிக்கிற்ற மூணு கொத்து கடனுக்கு வாங்கின... என்னதான் செய்யிறன்டும் வெளங்குதில்ல...”

சாலியாவின் வார்த்தைகள் ஒன்றாகி புடையன் பாம்பாய் சுலைமானின் செவிகளைக் கொத்தி இதயத்தில் வலிமூட்டியது. எதுவும் பேசாமல் சிலைபோல் நின்ற சுலைமான் மீண்டும் பல்லைத்துலக்கிவிட்டு கிணற்றடிக்குப் போய் குளித்துக் கொண்டு வந்தார்.

சுலைமானின் மூத்த மகள் அம்னா எதையோ எழுதிக் கொண்டிருந்தாள். ஏ.எல். படிக்கிறாள். இளையவன் ஜெஸ்மீன் ஒ.எல். படித்துச் சித்தியடையாமல் குதூகலமாய் ஊரு சுற்றுகிறான். “வாப்பா... இண்டக்கி டியூட்டரில காசிகட்டணும்...

முன்னூறுவா வேணும் வாப்பா...”

எழுதிக் கொண்டிருந்த அம்னா கேட்டுவிட்டு மீண்டும் எழுதினாள் என்ன சொல்வதென்று தெரியாமல் சுலைமான் மீண்டும் சிலையானார்.

“என்ன வாப்பா.... தராட்டி நான் டியூசனுக்கு போகமட்டன்...”

“நாளக்கி கட்டுவமா மகள்...”

சுலைமான் வேறு எதைச் சொல்லலாம், சுலைமானிடம் அவர் உயிரைத் தவிர வேறு என்ன இருக்கிறது. அவன் எல்லாவற்றையும் இழந்தவன் என்பது அம்னாவுக்குப் புரிந்தாலும், அவள் யாரைக் கேட்பாள்?

“எடியேய் படிப்பும் மண்ணங்கட்டியும்... போட்டுப் போட்டு ஊட்டு வேலயப்பாரு.... ராவக்கி கஞ்சி காச்சிக்கி குடிக்க காக்கொத்து குறுணல் ஊட்டுக்க இல்ல.... போன மாசம் கழுவின உடுப்பு, புழியச் செளக்காரத்துண்டு இல்ல. இதான் நம்மட நெலம... ஒனக்கு மூளல்லயாடி... ஒங்க வாப்பா ஒழச்சி எத்தின மாசம்...? காதுல கழுத்துல கெடந்தத வித்து திண்டுட்டம், இனி விக்க ஒண்டும் இல்ல இதுக்குள்ள ஒனக்கு பாடமும் கத்திரிக்காயும்... போட்டுட்டு வேலயப்பாரு...”

வாசலில் பனங்கிழங்குகளை பரவிக் கொண்டிருந்த சாலியா சொன்ன வார்த்தைகளை கேட்டு, கோபித்துக் கொண்டு, அம்னா குடிசைக்குள் கிடந்த பாயில் விழுந்து படுத்துக் கொண்டாள். கொஞ்சம் என்றால் கோபித்துக் கொள்ளும் சுபாவம் அவளுக்கு.

சாலியா சொன்னவை உண்மைதான், ஆனால், காற்றில் பறக்க எத்தனிக்கும் சாம்பலானது சுலைமான் மனசு. நிலைமை சாலியாவை பேசவைக்கிறது. சாலியா மீது சுலைமானுக்கு கோபமில்லை. அவன் கண்கள் கலங்கிக் கசிந்தன.

எதையோ யோசித்தபடி சுலைமான் குந்திக் கொண்டான். எங்கோ கிடந்து படலை வழியாக கள்ளத்தனமாய் வந்த ஒரு சொட்டுக் காற்று உச்சிவெயில் சூட்டை சுலைமானின் முகத்தில் அடித்தது.

“நானென்ன தொழில் செய்யாதவனா சாலியா ராப்பகலா கடக்கரயிலயும், வட்ட வழியயும் கெடந்து ஓழைச்ச ஒடம்புதான் இது. இப்படியும் எனக்கி வயசி போனாலும், அல்லாஹ் தெம்பத்தெருவான்... ஆனா நான் என்ன செய்யிற சாலியா “ஹாபர்” வரப்போகுதெண்டு, கடக்கரய வாங்கிப் போட்டானுகள் வலபோட ஏலா... பாரபட்டுக் கெடந்த எடத்துல பாறாங்கல்லுக் கொட்டிக் கெடக்கு. கடல்த் தொழில் அடிபட்டுட்டு நான் என்ன செய்யிற.... வல போட்டாத்தானே நீ ஒல போடுவாய்...

தேனுக்கு ஆசப்பட்டு மீனுக்கு வழியில்லாம ஆக்கிப் போட்டானுகள்... இப்ப சும்மாவும் அங்கால போகேலா ஆமிக்காரன் வெரசுறான்... சரி எண்டுபோட்டு வட்டக்க வெள்ளாம வெட்டப் போனா... வெள்ளாம வெட்ட வழியில்ல. வெள்ளாமய மிசின் வெட்டுது... நான் என்ன செய்யிற சாலியா... கடலயும், வட்டயயும் நம்பி வாழ்ந்த நாம இப்ப இரண்டும் இல்லாம ரெண்டும் கெட்டு வாழ்றம். நமக்கு மட்டுமா சாலியா ஊருக்கே இப்ப இந்த நெலமதான். வயசி பெய்த்து இல்லாட்டி வெளிநாட்டுக்காவது போயிருப்பன்...

அவனது பெருமூச்சு மதிய வெயிலை விஞ்சியது. சுலைமான் ஒரு பரம்பரை மீனவன். ஆழ்கடலில் நட்சத்திர வெளிச்சத்தில் திருக்கை மீனைக் கட்டிப்பிடித்து, தோணியில் ஏற்றுபவன். வலை வீசுவதில் கலை அனுபவம் மிக்கவன். நிலை மாறிப் போனதால் தலைவலி வாங்கினான். மீன்பிடித் தொழிலை பிரதானமாய்க் கொண்ட தனது குடும்பத்தை வாழவைத்தவன் இன்று அந்தக் கடலை இழந்துவிட்ட கவலை இன்னும் அவனை நசுக்குகிறது.

இழப்பீடு என்று சொல்லி ஒரு இலட்சம் கொடுத்த போது அதை வாங்குவதற்கு சுலைமானுக்கு விருப்பமில்லை அன்று தாயை விற்று லச்சம் வாங்குவதா என்ற நினைப்பு அவனுக்கு.

ஆனால் லச்சம் என்றதும் சாலியாதான் வாய்பிழந்தாள். ஊரைப் போல அவனும் பெற்றுக் கொண்டான். அதற்கு மோதிரமும், சங்கிலியும் வாங்கி மகள் அம்னாவுக்குப் போட்டிருந்தாள் சாலியா. அவைகளை இடைக்கால வறுமைக் கோடு ஈட்டுக்கடைக்கு அனுப்பியது.

அவன் சொன்ன வார்த்தைகளில் நியாயம் இருக்கிறது என்பது போல் பரிதாபப்பட்ட சாலியா, குடிசைக்குப் பின் காய்த்து நின்ற தோடங்காய் ஒன்றைப் பறித்து வந்து வெட்டிப் பிழிந்து, உப்பூற்றி, குளிரும் வண்ணம் குடிக்கக் கொடுத்துவிட்டு பனங்கிழங்குகளைப் பரவப் போனாள்.

குளிர்ந்த தோடந்தண்ணீரை மடமடவெனக்குடித்து தொண் டையை குளிர்வித்துக் கொண்ட சுலைமான் குளுகுளு தென்றலில் மயங்கி படுத்துக் கொண்டார்.

கடலில் குளிர்ந்த காற்று முகத்தில் உப்புப்பூசி நல்ல சேதி சொல்லிப் போகிறது. கடலின் கரைகளில் நுரைகள் பெருநாள் கொண்டாடுகின்றன. மீனவர் மனங்கள் வெண்மணற் கரைகளில் நுரை முட்டை உடைத்து ஈரச்சேலை கட்டி புதுமணம் கண்டன. கடலில் ஆடுந்தோனியிலே நின்று கொண்டு கைகளை உற்சாகமாக அசைக்கின்றார். கரையில் எதிர்கால விடி வெள்ளியை கடலுக்குள் தேடி, வலை இழுத்து பின்னோக்கி நடந்து நடந்து தேய்ந்து போன மீனவர்கள் புதுரத்தம் பாய்ச்சப்பட்டவர் போல், ஓடி ஓடி வலைக்கயிற்றை இழுக்கின்றார்கள்.

சுலைமானும் வண்டு வலை இழுப்பதில் வேகமாக, அங்கும் இங்கும் ஓடித்திரிகின்றார். தலையில் கட்டி இருந்த துண்டை இருப்பில் கட்டிக் கொண்டார்.

“தண்டயல் கை காட்டுறாண்டா... அல்லாட

ரகுமத்து... இண்டக்கி மடி வெடிக்கப் போகுதடா...

இழுடா... ஹை... ஏலே.... ஏலே...”

சுலைமான் மற்றவர்களையும் ஊஷாராக்கிவிட்டார். மடி நிரம்ப மீன்பட்டிருக்கிறது. என்ற நம்பிக்கையில மீனவர்கள் சோராமல் ஆரவாரப்பட்டுக் கொண்டிருக்கும் கரையை, தோணிக் காரர்களும் வேர்வை தெரியாத காசுக்காரர்களும் தென்னை மரக்குலையின் கீழ் பார்த்து ரசித்திருந்தார்கள். காற்று சூடாகி வீசியது.

தேனீர்க் கடைக்குப் பின் வெண் மணலில் படுத்துக் கிடந்த பயல்களும், மீன்படப் போகும் ஆரவாரத்தைக் கண்டு. ஓடோடி வந்து வலைக்கயிற்றை பிடித்துக் கொண்டார்கள்.

மீனவர்கள் முகங்கள் அந்த உச்சி வெயிலிலும் செந்தாமரையாய் மலர்ந்தன. கடலை வாரிவந்த வலை நிரம்ப மீன்கள் கொதித்து மடியை உடைத்து கடலுக்குள் மீண்டும் பாய துடிக்கின்றன.

மடி கரைக்கு வருகிறது

ஏக்கம்... தாகம்... பசி...

அத்தனையும் பெரு மீன்கள்

ஏக்கம் தாகம்... பசி...

வலையை மீறி சக்தியுள்ள தோறா, போன்ற பெருமீன்கள் பல தாவிப் பாயும் போது, அதனைக் கரையில் துரத்திப் பிடித்து தனக்காக்கிக் கொள்ளும், பகுதி நேர மீனவர்களும் பாய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

நல்ல தோறாப்பாடு... அல்ஹம் துல்லிலாஹ்...” சுலைமான் வாய் சத்தமாக அல்லாஹ்வைப் புகழ்கிறது... அவசர அவசரமாக ஆங்காங்கு நின்றவர்கள் எல்லாம் மடியைச் சுற்றி வளைத்துக் கொள்கிறார்கள்.

ஏக்கம்... பசி.... தாகம்...

“தோறா.... பாரா.... நல்ல பெரிய மீன்...

அம்பது லச்சம் வரும்...”

மீனவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

தோணிக்காரர்கள் “கூலரில்” அனைத்து மீன்களையும் ஏற்றிக் கொள்ளும் போது.... பூத்திருந்த பூக்களில் சுடுநீர் ஊற்றுவதாய் மீனவர் மனங்களும், முகங்களும் சுருங்கிப் போயின.

வலையை மீண்டும் வெயிலில் காயப்பட்டு விட்டு, வாடியைச் சூழ்ந்து இருந்து கொள்கிறார்கள்.

ஏக்கம்... பசி... தாகம்...

தோணிக்காரன் கொடுத்த பத்து லச்சம், வியர்வைக்குப் பரிசாகப் பகிரப்படுகிறது. பத்தாயிரம்... ஐயாயிரம் வயசுக்கும், தகுதிக்கும், ஏற்றவாறு, சுலைமான் வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவர். பத்தாயிரம் அவருக்கு அவர் வீட்டுக்குப் பம்பரமாய்ச் சுழன்றார்.

குடிசைக் குகைக்குள் முகந்தெரியாமல் முருங்கை இலை சுண்டிக் கொண்டிருந்த சாலியாவின் முறுவலில் அந்தக் கரிக்குடில் நிலவாய் பிரகாசிக்கிறது. அந்த மகிழ்ச்சியில் அம்னா...

“இரவக்கி... ஆட்டிறச்சி வாங்கு சாலியா...

கன்னாளாப் பெய்த்து எறச்சி திண்டு...”

வாய் முணுக்கும் போதே பனங்கிழங்குகளைக் கெண்டிக்

கொண்டிருந்த சாலியா

“என்ன பகல் கெனாவா... நல்லம்...

ஒழும்புங்க... கஞ்சி காச்சி வச்சிக்கன்...”

எவ்வளவு அழகான கனவு அது. பகல் கனவும் எவளவு பசுமையானது.

அவர் உள்ளத்தின் நெருப்பை நீக்கி ஆறுதல் கொடுக்க மீண்டும் குளிர்காற்று குளுகுளு என்று வீரியது.

மனப்பாரத்தை இறக்கவைக்க பொருத்தமான ஒரே இடம் பள்ளிவாசல்தான். ளுஹர் தொழுவதற்கு எழும்புகிறார் சுலைமான். திறந்து கிடந்த படலை வழியே ஜெஸ்மின் ஓடி வருகிறான். வாப்பா சுலைமானுக்கு முன் மூச்சு வாங்க நின்று கொண்டு ஒரு குற்றவாளியாய் தடுமாறினான். அவனுக்கு பேச்சு வரதாமமானது.

“என்னடா... எளக்க எளக்க ஓடியாற...”

சுலைமான் மகனிடத்தில் புருவம் உயர்த்திக் கேட்டார்.

“வாப்பா... என்னப் பெலிசி புடிக்கப்போகுது...”

என்று வார்த்தை ஒழுங்காக வராமல், விக்கி விக்கி ஜெஸ்மின் சொன்னது புரியாமல சுலைமான் தடுமாறினார்.

“வாப்பா... ராவு மெயின் ரோட்டில சிரிக்கிற

கடய ஒடச்சி சாமான் களவெடுத்தாமெண்டு

பொலிஸ் தேடுது வாப்பா...”

ஜெஸ்மினின் வார்த்தை சுலைமானைத் தூக்கி வாரிப்போட்டது.

“டேய்... என்னடா சொல்றாய்... நீ

என்னடா செஞ்ச நீ...”

“நான் ஒண்டும் செய்யல்ல வாப்பா...”

“நீ ஒண்டும் செய்யாம ஒன்ன ஏண்டா பொலிஸ் தேடுது. டேய் உண்மையச் சொல்றா...”

சாலியாவும் அம்னாவும் பக்கத்தில் கூடிவிட்டார்கள்.

“வாப்பா... ராவு ரெண்டு பொடியனுகளோட சேந்துக்கு நம்மட அவுசாலிட கடய ஒடச்சி சாமான் களவெடுத்த... சாமான் ஒண்டும் எனக்கிட்டல்ல வாப்பா எல்லாம் எண்ட கூட்டாளிர ஊட்ட இரிக்கி.... அது பிடிபட்டுக்கு... அதான பொலிஸ் தேடுது...”

ஜெஸ்மின் நடுங்கினான்

திடுக்கிட்டுப் போய் நின்ற சாலியா திட்டத் தொடங்கினாள் “டேய்... கண்ணத்தின்றுவாய்... பார நசல் சப்பிருவாய்...

ஏண்ட இப்பிடிச் செஞ்ச...”

“எனக்கு உடுப்பு வாங்கி எத்தின வருஷம்... ஓழுங்கான சாப்பிடு இல்ல... என்னேரமும்... பஞ்சம். கஷ்டம் வாப்பாக்கிட்டயும் ஒண்டும் இல்ல.... நான் யாருக்கிட்ட கேக்குற... அதான்... தெரியாமச் செஞ்சிட்டன்.... இனி இப்பிடி சத்தியமாக செய்யமாட்டன் வாப்பா...”

மகனுக்கு பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து மரமாகி நின்றான் சுலைமான்.

பொலிஸ் ஜீப் படலைக்கு முன் நிற்கின்றது. சுலைமான் யோசித்தார். சில பொலிஸ்காரர்கள் இறங்கி வருவதைக் கண்டு வாசலுக்குப் போனார். எதையோ யோசித்து மனதால் துணிந்தவரைப் போல் சுலைமான்.

“என்ன மாத்தயா...” என்று கேட்க

“ஒங்கட மகன் ஜெஸ்மின் எங்க... அவன்

ராவு கடய ஒடச்சி களவெடுத்திருக்கான்...”

“அவன் ராவு ஒரு எடத்தயும் போகல்ல

மாத்தயா... காச்சல் அவனுக்கு...”

“அப்ப கடய ஒடச்சி களவெடுத்த ஆரு...”

என்று அவர்கள் குதர்க்கமாக கேட்க...

“ஓம் மாத்தயா... நான்தான் ஒடச்ச...

கஷ்டம் தாங்கேலா... வருமானம் இல்ல...

கடல் தொழிலும் இல்லாம பெய்த்து... அதான்

கடய ஒடச்சி களவெடுத்த நான்...”

சுலைமான் கூறியதை கேட்ட பொலிஸ் ஜீப்பில் அவரை ஏற்றும் போது சாலியா வாய் திறந்து அழுதாள். ஜெஸ்மின் விறைத்துவிட்டான். வருமானம் இன்றி பெறுமானம் இன்றி வாழ்வதை விட கூட்டுக்குள் வாழ்வது மேலானது என்று நினைத்தோ என்னவோ... நீ வாழ வேண்டியவன் குடும்பத்தைக் காப்பாற்று என்று ஜெஸ்மீனை பார்ப்பது போல் பார்த்திருக்க ஜீப் புறப்பட்டுப் போகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.