புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

தலிபான்களை தோற்கடிக்க முக்கூட்டு இராணுவ கட்டமைப்பு

தலிபான்களை தோற்கடிக்க முக்கூட்டு இராணுவ கட்டமைப்பு

பாகிஸ்தான், ஆப்கா னிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுக் கிடையே பொதுவான பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொள்வதற்கான முயற்சிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. சுமார் 2 வருடங்களுக்கு முன்னரே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் இதன் சாத்தியங்களை ஒவ்வொரு நாடுகளும் தங்களது அரசியல், இராணுவ, பொருளாதார ஆதாயங்களை வைத்து ஆராய்ந்து பார்த்தால் சில மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டுவிட்டன. என்னவென்றால் இந்த மூன்று நாடுகளுக்கும் பொதுவான நன்மைகள் இந்த பாதுகாப்பு உடன்படிக்கையில் உள்ளது என்பதை இஸ்லாமாபாத், காபூல், தெஹ்ரான் என்பன உணர்ந்து கொண்டன. இதன் முதற்கட்ட முயற்சியாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரி அண்மையில் ஆப்கானிஸ்தான் சென்று வந்துள்ளார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் அல் கர்ஸாயி உடன் நீண்ட நேரம் நான்கு கோணங்களிலும் பொதுவான பாதுகாப்பு உடன்படிக்கை மற்றும் மூன்று நாடுகளையும் இணைத்த பொதுவான இராணுவம் பொதுவான உளவுப்படை என்பதன் சாதக பாதகங்களை ஆராய்ந்துள்ளார்.

மிக விரைவில் ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படைகள் வாபஸ் பெறப்படவுள்ளதால் காபுலுக்கு இந்த உடன்படிக்கை பொருத்தமானதே. கனடா, பிரிட்டன், பிரான்ஸ் படைகள் ஆப்கானை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கையில் அமெரிக்க இராணுவமே எஞ்சியுள்ளது. இவையும் வெளியேறினால் ஆப்கான் இராணுவமே அந்நாட்டின் முழுமையான பாதுகாப்புக்கும் பொறுப்பு. நேட்டோ இராணுவம் இவ்வளவு காலமும் ஆப்கானிஸ்தானில் செய்த பணிகளை பெரிதாக பட்டியலிடவோ அட்டவணைப்படுத்தவோ முடியாது.

தலிபான்களை முற்றாக ஒழிக்காவிட்டாலும் அவர்களின் முதுகெலும்பையாவது முறித்த பாடில்லை. ஆகக்குறைந்தது ஆப்கானிஸ்தான் இராணுவத்தையாவது வலிமையான பலமுள்ள படையாக கட்டியெழுப்பவுமில்லை. ஆப்கானிஸ்தான் இராணுவத்துக்குள் தலிபான்களின் செல்வாக்கு ஆழமாக வேரூன்றியுள்ளதை அண்மைக்கால உயரதிகாரிகளின் படுகொலைகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் சகோதரர் அவரது மெய்ப்பாதுகாவலராலே குளியலறைக்குள் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அரசியல், இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொள்ளும் மிக இரகசியமான கூட்டங்கள் சந்திப்புக்களிலும் தற்கொலை முயற்சிகள் அரங்கேற்றப்படுகின்றன.

தலிபான்களுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளின் இரகசியங்கள் வெளியே கசிந்து விடுகின்றன. தாக்குதலைப் பொறுப்பேற்கும் தளபதிகளின் வீட்டுத் தொலைபேசிகள் இரவில் அலறுகின்றன. அழைப்புக்கு பதில் கொடுக்க முன்னரே வேறு கதை வேண்டாம். தாக்குதல் பொறுப்பை கைவிடு.

இல்லாவிட்டால் உனது மனைவியை வெள்ளை ஆடையுடன் விதவைக் கோலத்தில் உனது பிள்ளைகள் பார்க்கும் என மிரட்டுகின்றனர். இந்நிலைமை ஆப்கான் அரசாங்கத்தையே ஆட்டம் காணச் செய்கிறது. இந்நிலைமைகளின் கொடுமைகளில் இருந்து விடுபட பொதுவான இராணுவம் அவசியம் என ஆப்கானிஸ்தான் கருதுவதில் கருத்துப் பிழையிருக்காது. இப்போது பாகிஸ்தான் பக்கம் பார்வையை விடுவோம். வஸிரிஸ்தான் மாகாணம் என்றால் உலக பயங்கரவாதத்தின் பிறப்பிடம் எனுமளவிற்கு தலிபான்களின் அட்டகாசம் பேயாட்டம் நடைபெறுகின்ற இடம். தற்கொலைக்குண்டு. வீதியோரக் குண்டு, விமானக்குண்டு, வழிபாட்டுத்தலங்களில் குண்டு பொதுச் சந்தையில் குண்டு என குண்டு வெடிக்காமல் பாகிஸ்தானில் பொழுது விடிவதில்லை என்ற நிலையாகிவிட்டது.

சாமக் கோழி கூவி பொழுது விடியுமென்ற இலக்கியங்கள் பாகிஸ்தானில் மாறிவிட்டன. ஒவ்வொரு காலைப்பொழுதையும் குண்டு வெடிப்புக்களே வரவேற்கின்றன. தலிபான்கள் விடயத்தில் பாகிஸ்தான் அரசு ஒன்றைச் சொல்ல இராணுவம் வேறொன்றைச் சொல்கிறது. அந்நாட்டு உளவுத்துறையோ உலகிற்கு வேறு ஒன்றை ஊதுகின்றது. இவற்றையெல்லாம் உதறிச் தள்ளிவிட்டு மேற்குலகம் இன்னொன்றை கொக்கிரிக்கிறது. ஒசாமா பின்லேடன் கொலை செய்யப்பட வேண்டி ஏற்பட்டதும் பாகிஸ்தான் இராணுவ, உளவு மேலிடங்களுக்கிடையில் எழுந்த விரிசல் என்றே பின்னர் பேசப்பட்டது. பாகிஸ்தானை பொறுத்தவரை தலிபான்களைத் தோற்கடிக்க நேட்டோ இராணுவம் பொருத்தமானதே. ஆனால் அதன் பொறுப்பற்ற போக்கினால் உள்நாட்டில் இஸ்லாமாபாத் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ஆட்சியாளர்களின் ஆசனங்களுக்கே ஆபத்தாக அமைந்து வருகிறது.

எனவே பொதுவான இராணுவம் என்ற போர்வையில் ஈரான் இராணுவத்தை உள்Zர்ப்பதே இஸ்லாமாபாத்தின் இலட்சியம். ஈரான் ஷியா நாடு என்பது மட்டுமல்லாமல் நேர்த்தியான திறமையான இராணுவ கட்டமைப்பையும் கொண்டது. ஈரானின் விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியோ மேற்குலகை சவாலுக்கு அழைக்கிறது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் என்பன சுன்னி நாடுகள். இங்குள்ள தலிபான், அல்கய்தா என்பனவும் சுன்னி முஸ்லிம் அமைப்புக்களே.

எனவே இயற்கையாக உள்ள மத முரண்பாடுகளை இராணுவ நோக்கில் பயன்படுத்தலாம் என்பது பாகிஸ்தானின் திட்டம். ஈரானின் ஷியா இராணுவம் தலிபான்களுக்கெதிரான இராணுவ நடவடிக்கையில் எவ்வித பாரபட்சமும் காட்டப்போவதில்லை. வஸிரிஸ்தான் மாகாணத்திற்குள் ஈரானின் இராணுவம் புகுந்தால் கரடி தேன் கூட்டை அள்ளிக் கொண்டு போவது போல தலிபான்களின் மறைவிடங்கள், முகாம்கள், ஆயுதக் கிடங்குகள் என்பன தகர்த்தெறியப்படும். கருணைக்கும், காட்டிக் கொடுப்புக்கும் இங்கு இடமிருக்காது என இஸ்லாமாபாத் எண்ணுகிறது.

இதே கணக்கையே ஆப்கானிஸ்தானும் சரி காண்கின்றது. ஈரானில் ஜன்துல்லாஹ் என்ற சுன்னி முஸ்லிம் அமைப்பு போராடுகிறது. பாகிஸ்தான் எல்லையோடு ஒட்டியுள்ள ஈரானின் எல்லைப்புற மாகாணத்திலே இப்போராட்டம் நடைபெறுகிறது.

இஸ்லாமாபாத் ஜன்துல்லாஹ்வை வளர்ப்பதாக தெஹ்ரான் சந்தேகிக்கிறது. அவ்வாறில்லாவிட்டாலும் அமெரிக்கா ஜன்துல்லாஹ்வை பாலூட்டி வளர்க்க பாகிஸ்தான் அதற்கு தொட்டிலாட்டுகின்றது என்பதே ஈரானின் எண்ணம். ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட்டால் இந்தியாவின் தலையிடும் வியாபார கொடுக்கல் வாங்கலும் அதிகரிக்கலாமோ என்ற உட்பீதி பாகிஸ்தானுக்கு உண்டு.

இதனால் தலிபான்களின் பிரச்சினையை முற்றாக முடித்து வைக்க இஸ்லாமாபாத் விரும்பவில்லை என்கின்றனர் சிலர். ஆனால் வளர்த்த கடா மார்பில் பாய்வது போல தலிபான்கள் இஸ்லாமாபாத்தின் நெஞ்சிலும் தாவித் தாவி கொம்பினால் குத்தி வதை செய்வதை பாகிஸ்தான் விரும்பவில்லை.

இவ்வாறான சாதக பாதகங்கள் மூன்று நாடுகளுக்குள்ளும் பின்னிப் பிணைந்துள்ளன. சாதகங்கள் பருப்புப்போல என்றால் பாதகங்களோ பாணம் (அம்பு) போல பாய்கிறது. எனவேதான் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர மூன்று நாடுகளும் பொதுவான இராணுவக் கட்டமைப்பை கையாள உள்ளன. இதன் கட்டமைப்பு உளவுப் பணிகளின் படைகள், தகவல் பரிமாற்றத்தின் நம்பகத் தன்மை என்பவை பற்றிய பேச்சுக்கள் இனிமேல் ஆரம்பமாகலாம்.

பாகிஸ்தான் இராணுவத்தை நம்ப தயாரில்லாத இந்தியா இந்த முக்கூட்டு இராணுவ கட்டமைப்பை கட்டாயம் எதிர்க்கலாம். இதை சமாளிக்க ஈரானும் அப்கானிஸ்தானும் இந்தியாவுக்கு தூதுவர்களையும் இராஜதந்திரிகளையும் அனுப்பும் படலம் இனி களைகட்டவுள்ளது. என்னதான் ஆனாலும் இந்த முக்கூட்டு இராணுவக் கட்டமைப்பில் இந்தியா தன் தலையை வெளியே எடுக்கப்போவதில்லையென்பதே இராணுவ வல்லுநர்களின் கருத்து. ஆகக் குறைந்தது தகவல் பரிமாற்ற மைய நிலையத்தில் விசுவாசமான அணியொன்றை இந்தியா அமர்த்திக் கொள்ளும்.

காஷ்மிர் மோகங்களால் மனமுடைந்து போயுள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதென்பது சாத்தியமற்றதே. பாகிஸ்தானுக்கு சாதகமான நிலைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக அமெரிக்க காங்கிரஸ் (பாராளுமன்றம்) உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து வேலை செய்த இரண்டு உயர் மட்ட உளவாளிகள் அண்மையில் கைது செய்யப்பட்டதாக ஒரு பரபரப்பான செய்தியும் வெளியாகியுள்ளது.

எனவே ஈரான், ஆப்கான், பாகிஸ்தான் முக்கூட்டு இராணுவ கட்டமைப்பு சாத்தியமா. சந்தேகமானதே என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. என்னவானாலும் அமைதியும் சாந்தியும் ஏற்பட்டால் நன்மையே. இதை யார் செய்தாலும் சரியே.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.