புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 
மாளிகாவத்தை சமாதான

மாளிகாவத்தை சமாதான

இராக்கினி ஆலய திருநாள்

எமது நாட்டு மக்கள் மூன்று தசாப்தங்களுக்கு மேல் எதிர்பார்த்ததும் தாயித் திருச்சபையின் அன்னையாம் தேவதாயாரை நோக்கி அனுதினமும் மன்நாடியதும் அமைதி சமாதானத்தையே! அந்த சமாதான சூழல் தற்போது மலர்ந்திருந்தாலும் அனைத்து மக்களும் சகல உரிமைகளையும் பெற்று சமத்துவமாக வாழ வேண்டும் என்பதே நல் இதயங்களின் எதிர்பார்ப்பாகும்.

ஆம் சமாதான இராக்கினியாம் அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் ஆலயம் அது. கொழும்பு 10 மாளிகாவத்தையில் அழகுற காட்சி தருகிறது. இவ்வாலயம் அமையப்பெற்ற முதல் பங்கினை அளித்தவர் காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸா. மாளிகாவத்தை தொடர்மாடி வீட்டு மக்களின் வேண்டுகோளை ஏற்று அவர் இந்த கைங்கரியத்தை மேற்கொண்டார். மாளிகாவத்தை பகுதியில் வீடமைப்புத் திட்டங்களை காலஞ்சென்ற பிரேமதாஸ மேற்கொண்டபோது ஒரு கத்தோலிக்க ஆலயம் அமையும் விதத்தில் இக்காணியை 1982ம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கினார்.

இப்பங்கு தலத்தில் ஆரம்ப குருவாக பணியாற்றிய அருட் பணி பேட்ரம் அடிகளின் தளராத முயற்சியாலும் காலஞ்சென்ற சகோதரி அயரின் சென். அக்னேஸ் அளித்த பெரும் கொடையாலும் தயாள மனதுடைய உபகாரிகளாலும் இவ்வாலயம் கட்டியெழுப்பப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வின்சன்ட் பெரேரா, வண. பிதா கிறிஸ்ட் போன்றவர்களின் பங்களிப்பையும் நாம் நினைவு கூருகின்றோம்.

1988ம் ஆண்டு அக்டோபர் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்நிலப்பரப்பில் சிறு கொட்டில் போடப்பட்டு வழிபாடுகள் ஆரம்பமாகின. 1989 ஏப்ரல் 15ஆம் திகதி தற்போதைய ஆலயத்திற்கான அத்திவாரக் கல் நாட்டப்பட்டு 1994ம் ஆண்டு பணிகள் முடிவடைந்தன.

1994ம் ஆண்டு செப்டெம்பர் 8ம் திகதி அப்போதைய கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் அதி. வண நிக்கலஸ் மார்க்கஸ் பெர்ணான்டோ ஆண்டகை ஆலயத்தை அபிஷேகம் செய்து வழிபாடுகளுக்காக திறந்து வைத்தார். இவ்வாலயத்தின் திருநாளானது 1983ம் ஆண்டு ஆடிக்கலவரம் இடம்பெற்ற தினத்துக்கு பின்னர் வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகின்றது. ஆலயத்தின் முன்னால் இயேசு பாலகனை அரவணைத்தபடி அன்னை மரியாள் காட்சி தரும் 16 அடி உயர திருச் சொரூபம் காட்சி தருவதானது மனதை உருக்குவதாக உள்ளது.

பேட்ரம் அடிகளின் மாற்றத்திற்கு பின் இப்பங்கை பொறுப்பேற்ற அருட்பணி மெல்கம் பெரேரா அடிகளின் காலத்தில் ஆலயத்திற்கு முன்பாக தாராள சிந்தைகொண்ட ஓர் அடியாரின் உதவியுடன் அழகிய ஜெபியை அமைத்தார். அத்துடன் ஆலய முகப்பின் உச்சியில் மின்னொளியிலான சிலுவையையும் ஆலயத்தினுள் ஆண்டவர் இயேசுவினதும் அன்னை மரியாளினதும் திருச் சொரூபங்களை தாங்கிய கண்ணாடி பேழைகளையும் அமைத்தார். அத்துடன் அனைத்து மொழி பேசும் மக்களினதும் நலன் கருதி தமிழ், சிங்கள, ஆங்கில வழிபாடுகளை கிரமமாக ஆரம்பித்தார். இன்று 24ம் திகதி சமாதான இராக்கினி அன்னையின் திருநாளை கொண்டாடும் நாம் அல்லலுறும் அனைத்து மக்களும் அமைதி, சமாதானம், சுபீட்சத்துடன் வாழ சமாதான இராகினியை நோக்கி மன்றாடுவோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.