புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 
து.சு + ருNP கறுப்பு ஜ{லை சூத்திரதாரிகள்

து.சு + ருNP கறுப்பு ஜ{லை சூத்திரதாரிகள்

தமிழருக்கு உணர்த்தும் வரலாற்றுப் பாடம்

கடந்த மூன்று தசாப்த காலமாக எமது நாட்டை வாட்டி வதைத்து பெரும் துயர் கொள்ள வைத்த துயரங்கள் இன்று இல்லாமல் போனபோதும் நிரந்தர அமைதியை உறுதியாக கட்டியெழுப்புவதற்கான அரசியல் தீர்வுத்திட்டத்தை நோக்கிய நகர்வுகள் கூனிக்குறுகி இழுபட்டுச் செல்வதும் அரசியல் கட்சிகளின் நிலையற்ற தளர்வுப் போக்குகளும் கவலைதரும் விடயங்களாகவே எம்முன்னால் காணக்கிடைக்கிறது.

வடக்கு, கிழக்கை மட்டுமன்றி எமது முழு நாட்டிற்கும் பேரவலத்தை தோற்றுவித்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் வன்னி இறுதிப்போர் நடவடிக்கைகளையடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் அதனால் ஏற்பட்ட இழப்புகளை கட்டியெழுப்ப இன்னும் நீண்ட காலம் தேவையென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.

வன்னி இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரைத்தவிர ஏனைய அனைவரும் அவர்களது சொந்த வாழ்விடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ள போதும் உளவியல் தாக்கங்களிலிருந்து விடுபட இன்னும் நீண்ட காலம் செல்லும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இழப்புகள் என்பது ஈடு செய்ய முடியாததொன்றாகும் என்பதை அந்த வலியை உணரும் போதும் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.

போலித்தனமான அரசியலும் பசப்பு வார்த்தைகளும் எமது மக்களின் இழப்புகளின் துயரங்களை ஒரு போதும் ஈடேற்றி விடப்போவதில்லை. அழிந்துபோன மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அபிவிருத்தி, புனரமைப்பு மட்டுமன்றி ஆற்றுப்படுத்தலும் அவசியமாகும்.

அதைவிடுத்து வெறுமனே வீரவசனம் பேசும் கடந்தகால அரசியல் போக்குகள் இனியொரு போதும் எந்தவொரு தீர்வையும் பெற்றுத்தரப்போவதில்லையென்பதே யதார்த்தபூர்வமான உண்மையாகும்.

எதிர்காலம் பற்றிய பல்வேறு கேள்விக்குறிகளுடன் காலம் கடத்திக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை விசமத்தனமான அரசியல் போக்குகளுக்குள் அமிழ்த்திவிட முற்படும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் எவரும் ஈடுபடக்கூடாது என்பதையே கடந்தகால வரலாற்றுப் படிப்பினைகள் ஒவ்வொன்றும் எமக்கு தெளிவாக உணர்த்தி நிற்கின்றன.

இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இரண்டு வருடத்திற்கும் மேலான காலங்களை கடந்துள்ள நிலையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பவற்றின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பல்வேறு சுற்றுப்பேச்சுக்களை நடத்தியுள்ள போதிலும் இறுதித்தீர்வொன்றை எட்டுவது தொடர்பில் பல்வேறு சிக்கல்களும் குழப்பங்களும் நிறைந்த போக்கொன்றே மேலோங்கிக் காணப்படுகின்றது.

தமிழ் மக்களின் அதிகாரங்களை எவரும் பறிக்கவில்லை. அது அவர்களின் கரங்களிலேயே உள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதற்கு பின்னராக உள்நாட்டின் யதார்த்தபூர்வமான சமூக பொருளாதார அரசியல் சூழ்நிலைகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் எமது நாடு தொடர்பான தற்போதைய கருத்துருவாக்கப் போக்குகள் என்பன தொடர்பிலும் குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் தமது வெளிப்படையான பார்வையை செலுத்துவதன் ஊடாகவே இனவாதக் கறைகள் இல்லாத ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும்.

பக்குவப்படாத அரசியல் போக்குகளும் பவவீனமான கட்சி அரசியலுமே முன்னைய காலங்களில் இனவாதத்தை ஊன்று கோலாக பயன்படுத்திய அரசியல் கைங்கரியங்களில் தென்னிலங்கை அரசியல் வாதிகள் மட்டுமன்றி வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் வாதிகளும் முன்னெடுத்தமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

அவ்வாறான இனவாத அரசியல் முன்னெடுப்புகளே பல்லாயிரக்கணக்கானோரின் மனிதப் பேரழிவுகளுக்கும் பல ஆயிரக் கணக்கானோர் அவயங்களை இழந்து ஊனமுற்றவர்களாக எமது கண்முன்னே நடமாடுவதற்கும் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் விதவைகளாக வாழ்வதற்காகவும் அநாதைச் சிறுவர்கள், அகதி வாழ்வு என்ற பெரும் துயர்மிகு கொடுமைகளுக்கும் வழிவகுத்தது என்பதை நாம் மறந்து விட முடியாது.

இனவாதத்தை இலங்கையின் அரசியல் வரலாற்றில் கலந்துவிட்ட பெருமை ஐக்கிய தேசியக் கட்சிக்கே மிகவும் உரித்துடையது. குறிப்பாக அக்கட்சியின் முன்னாள் தலைவரும் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜே.ஆர். ஜெயவர்தனாவின் அரசியல் வாழ்வின் பெரும் பகுதி இனவாத உள்Zர்ப்பு செயற்பாடுகளையே பிரதான தளமாக கொண்டு செயற்பட்டதை எவரும் மறக்க முடியாது.

பண்டா - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டி பாதயாத்திரையை மேற்கொண்டது தொடக்கம் தமிழ் மக்களை இலக்கு வைத்து 1979 இல் அவசர காலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என்பவற்றை அறிமுகப்படுத்தி தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் எந்தவொரு காரணமுமின்றி வகை தொகையின்றி கைது செய்து தடுத்துவைத்து சித்திரவதைகளுக்குட்படுத்தி துன்புறுத்தவும் வழி செய்தார்.

நான்காம் மாடி, வெலிக்கடை, பனாகொட, போகம்பரை, நியூமகசின் சிறைச்சாலைகள் தவிர பூசாவில் மிகப் பெரும் சிறைச்சாலையை உருவாக்கி ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்கள்.

1983 கறுப்பு ஜுலை இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் என்றென்றைக்கும் மறக்க முடியாத வரலாற்று பக்கமாகும். தலைநகர் கொழும்பு உட்பட தென்னிலங்கை எங்கும் தொடர்ந்து மூன்று தினங்களுக்கும் மேலாக தீப்பற்றி எரிந்தது.

நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் வீதிகளில் உயிருடன் போட்டு எரிக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் காடையர் கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு எரிக்கப்பட்டார்கள். தமிழர்களின் சொத்துக்கள் பெருமளவில் கொள்ளையிடப்பட்டும் ஏனையவை எரித்து நாசமாக்கப்பட்டது.

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதலாவது நிலக்கண்ணிவெடித் தாக்குதல் யாழ்ப்பாணம் தின்னவேலியில் 1983 ஜுலை 21 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த தாக்குதலில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட மாத்தயா, கிட்டு, அருணா, சார்ள்ஸ் அன்ரனி உட்பட பலர் பங்குபற்றிய போதும் இந்தத் தாக்குதலுக்கு தலைமை வகித்தவர் செல்லக்கிளி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதல் சம்பவத்திலேயே செல்லக்கிளி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசிய ஆயுதப் போராட்ட வரலாற்றில் பல்வேறு பரிணாமங்களையும் இந்தத் தாக்குதல் சம்பவம் உருவாக்கியது என்பதையும் எவரும் மறந்துவிட முடியாது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த படையினரின் சடலங்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பொரளை கனத்தை மயானத்தில் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதையடுத்து அங்கிருந்து வெளியேறிய காடையர் கும்பல் முதலில் பொரளையிலுள்ள தமிழர்களின் வர்த்தக நிலையங்களை சூறையாடி தீவைத்தது. அந்த இனவாதத் தீ நாடுபூராகவும் சில தினங்கள் பற்றியெரிந்தது. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை பலியெடுத்தது.

நாடுபூராகவும் இனவாதத் தீயில் எரிந்து கொண்டிருந்த போது அப்போது நிறைவேற்று அதிகாரத்துடன் ஆட்சியதிகாரத்திலிருந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக 'போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்' என்று அறைகூவல் விடுத்தார்.

ஜே.ஆர். ஜெயவர்தனாவின் இந்த அறைகூவல் இனவாதக்கும்பல்களின் அடாவடித்தனத்தை மேலும் மேலும் உற்சாகப்படுத்தியது. அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் எந்தவொரு பாதுகாப்புமின்றி தஞ்சமடைய வைத்தது.

அகதிமுகாம்களில் தஞ்சமடைந்த அப்பாவி மக்களையும் இனவாதக் கும்பல் விட்டு வைக்கவில்லை. தேடித்தேடி அழிக்க முற்பட்டது. அப்போதைய ஆட்சியாளர்களின் உரிய வழிநடத்தல் இல்லாமையால் பொலிஸாராலோ படையினராலோ வன்முறைக்கும்பலை கட்டுப்படுத்த முடியாத நிலைமையேற்பட்டது.

இதனையடுத்து அயல் நாடான இந்தியாவின் தலையீடு காரணமாக 'லங்காராணி' கப்பல் மூலம் உடுத்த உடுப்புடன் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

தீயில் எரிந்து சுடுகாடாக மாறிய தலைநகர் கொழும்பை சுத்தப்படுத்தக்கூட அப்போதைய ஆட்சியாளர்களுக்கு பல வாரங்கள் நீடித்தது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைவிட மிகப்பெரும் கொடூரம் அன்றைய ஆட்சியாளர்களால் வெலிக்கடைச் சிறைச்சாலையில் நிறைவேற்றப்பட்டது. அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது இரு தினங்கள் திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்தத்தாக்குதல் சம்பவத்தில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன், நடேசுதாகன், சிவபாதம்மாஸ்ரர், அரபாத், காந்திய இயக்கத் தலைவர் டாக்டர் இராஜசுந்தரம் உட்பட 53 போராளிகள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

வெலிக்கடைச் சிறைச்சாலையின் மையப்பகுதிக்கு நூற்றுக்கணக்கான கிரிமினல் கைதிகளால் இழுத்துச் செல்லப்பட்ட குட்டிமணி கண்கள் தோண்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மேலும் பல தமிழ் அரசியல் கைதிகள் படுகாயமடைந்த நிலையில் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்கள்.

பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலை தமிbழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினராலும் உள்ளேயிருந்த அரசியல் கைதிகளின் துணையுடனும் உடைக்கப்பட்டு அனைத்து அரசியல் கைதிகளும் தப்பிச் சென்றனர். இவையெல்லாம் மறக்க முடியாத எமது வாழ்நாள் குறிப்பேட்டின் மறக்க முடியாத வரலாற்று உண்மைகளாகும்.

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைச் சம்பவத்திலிருந்து உயிர்த்தப்பியவர்களில் ஒருவர் தான் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இன்றைய அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைச் சம்பவம் அன்றைய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு முன்னெடுத்த கொலைக்களமாகும். இந்த கொலை வெறியாட்டம் நடத்தியவர்கள் 1982 களில் தனது மனைவியையும், குழந்தையையும் தன்னுடன் இணைக்குமாறு கோரி இத்தாலிய விமானமொன்றை கடத்த முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோமபால ஏக்கநாயக்க தலைமையிலான கிரிமினல் கைதிகளேயாவார் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதொரு விடயமாகும்.

அதேநேரம் 1983 கறுப்பு ஜுலைக் கலவரம் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா, தேசிய பாதுகாப்பு அமைச்சராகவிருந்த லலித் அத்துலத் முதலி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களாகவிருந்த ஆர். பிரேமதாசா, காமினி திசாநாயக்க, வீரசிங்க மல்லிமாராச்சி, சிறில்மத்யூ மற்றும் அக்கட்சியின் பொருளாளராகவிருந்த கணேசலிங்கம் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இன்று இவர்களில் எவரும் உயிருடன் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

1983 கறுப்பு ஜுலைக் கலவரத்தின் குறிப்பிட்ட சூத்திரதாரிகள் தொடர்பாக 'ராவய' பத்திரிகையின் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான விக்டர் ஐவன் தனது பத்தி எழுத்துக்களில் முன்பொருதடவை சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெய வர்தனா 1983 கறுப்பு ஜுலைக் கலவரத்தின் துயரங்கள் பற்றியோ அதனால் பிந்திய காலங்களில் எதிர்கொள்ளப்பட்ட மிகப்பெரும் அவலங்கள் பற்றியோ ஒரு போதும் கவலைப்பட்டு கருத்துக்கள் வெளியிட் டதுமில்லையென்பதும் கவனத்தில் கொள் ளப்பட வேண்டியதொரு விடயமாகும். இறுதிவரை அவர் ஒரு கடும்போக்குடைய ஒரு இனவாத அரசியல்வாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் என்பதையும் இலங்கையின் அரசியல் வரலாறு தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கிறது.

இதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மிகப் பெரும் செல்வாக்குமிக்க அரசியல்வாதியாக செயற்பட்ட அமைச்சர் காமினி திசாநாயக்கா ஆசியாவின் மிகப்பெரும் நூலகங்களில் ஒன்றாக விளங்கிய அறிவுக்களஞ்சியம் யாழ். நூலகம் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரியென்று குற்றஞ்சாட்டப்பட்டவராவார்.

அதுமட்டுமன்றி மகாவலி அபிவிருத்தி அமைச்சராகவிருந்த இவரின் காலத்திலேயே வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட குடியேற் றத்திட்டங்கள் இடம்பெற்றமையும் குறிப் பிடத்தக்கது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சியே தீவிர முனைப் புடன் இனவாத அரசியல் கருத்திட்டங்களை முன்னெடுத்தமை வரலாற்றியல் உண்மையாகும். அதற்காக ஆட்சியிலிருந்த ஏனைய பெரும்பான்மைக் கட்சிகள் சிறுபான்மையான மக்களை அவர்களின் அரசியல் அபிலா சைகளை பூர்த்தி செய்ய முன்வந்த வர லாறும் மிகவும் அரிது என்பதையும் மறந்துவிட முடியாது.

1983 கறுப்பு ஜுலையின் தீச்சுவாலைகள் கொளுந்து விட்டெரிந்த ஜுலை 23, 24, 25 அன்றைய தினங்கள் மனசின் உள்Zர் த்து இன்றென எழுந்து கொண்டிருக்கிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.