புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

இதயங்கள் மகிழ்வுற ஆடுங்கடி

இதயங்கள் மகிழ்வுற ஆடுங்கடி

மங்கையர் எல்லோரும் வாருங்கடி அம்மன்
மகிமையை ஆடியே பாடுங்கடி அவள்
தங்கத் தேர் ஊர்வலம் வாறாளடி கை
தாங்கியே நீர் குடம் வையுங்கடி
*
குங்குமம் சந்தனம் சாத்துங்கடி செம்பு
குடமதில் மஞ்சள் நீர் ஊற்றுங்கடி
தங்கைக்கு பூப்பு நீராட்டுங்கடி இன்பம்
தங்க ஒரு கும்மியும் போடுங்கடி
*
மஞ்சள் அரிசி மாவெடுத்து நல்ல
மாவிலை தோரணம் போடுங்கடி அதன்
மத்தியில் நிறைகுடம் வையுங்கடி மனம்
மகிழ்வுறப் பொங்கலும் பொங்குங்கடி
*
அம்புவி தானும் அதிசயங்கொள் எங்கள்
அண்ணன் திரு மணம் பாருங்கடி
செம்பு குடமதில் மாவிலை பூவைத்து அவன்
சேரும் பூவையை வாழ்த்துங்கடி
*
இல்லத்தில் இன்றெமக் கின்பவிழா வாழ்வில்
இருளிலா ஒளிவரும் தூய விழா நாட்டில்
இருப்பவர் ஒன்றுடன் சேரும் விழா என்று
இதயங்கள் மகிழ்வுற ஆடுங்கடி

தம்பிலுவில் தயா


துயிலாத தாலாட்டு

பேச நினைத்தும் சில உண்மைகளை
பேச முடியாமல் மெளனிக்கின்றேன்
உன்னிடம் நான்!

எனக்கு வாழ்வு கொடுத்த உனக்கு
என் வாழ்வையே காணிக்கையாக்கினாலும்
நான் பட்ட கடன் தீராது என
உணர்கிறேன்.

உன்னை மறக்க முடியாமல்
உலகிற்கு வருடாவருடம் வருகின்றது
உன் நினைவு தினம்
வாழ்த்திட நினைத்து
வாயடைத்து நிற்கிறேன்!

உன் மடிமீது சாய்ந்து - கவிபாட நினைத்து
கண்ணுறங்கிப் போகிறேன்
கனிவுடன் நீ படித்த தாலாட்டில்,
இன்று
கண்ணீருடன் நின்று கவி பாடிக் கொண்டிருக்கிறேன்
அதை ஆசையுடன் பலர் கேட்கின்றனர்
ஆனால்,
அன்புடன் கேட்பதற்கு நீ இல்லையே!!
அம்மா!!!

வீ. எம். எலிசபெத்,
காசல்a


நிறமணிந்த இரவின் பூக்கள்

வெட்கத்தின் கண்கள்
கூசிச் சிணுங்க
ஆடை களைந்து
உடலசைக்கிறது மூங்கில்

இரவு தாவி அணைக்க
சிலிர்க்கிறது மேனி
மருதாணி பூசிய மனது
இடையறாது இசைக்கிறது
இனிய கானம்

ஓவியம் தீட்டுகிறது தூரிகை
மேனியெங்கும்
வளைந்து நெளிந்து
சிலிர்த்து பாய்கிறது
மாற்று நிறத்தில் உடற்பானம்

கூந்தல் கோதி
காதுமடலோரம்
வசியமொழி இசைக்கும்
தூரிகைக்கிசைந்து
வளைந்தாடுகிறது மூங்கில்

துளிதுளியாய்
மூங்கிலினுள்ளே நிரப்புகிறது
தூரிகை
பூவில் பிழிந்த சாறதனை

நிரம்பி வழியும்
மூங்கில் வழியே
வெடித்துச் சிரிக்குது
மகரந்த மொட்டுகள்!!!

ஸர்மிளா ஸெய்யித்


சித்திரமாவாயே

எந்தன் அழகுப்
பேரன் நீயே
என்னைப் பார்ப்பாயே
உந்தன் கண்ணைப்
பார்த்து நானும்
களிப்பு கொள்வேனே

சின்னஞ் சிரிப்பால்
கன்னங் குளிர
மகிழ்ச்சி தருவாயே
தென்னம் பாளை
விரிந்தது போல
அழகு கொள்வாயே

மழலை பேசி
மலர்ச்சி காட்டி
மனதைக் கவர்வாயே
குழவி உன்னை
அணைத்து நானும்
தாகம் தணிவேன்

அன்ன நடையாய்
நடந்து நீயும்
அருகில் வருவாயே
சின்னக் கொடியாய்
துவண்டு விழுந்து
சித்திர மாவாயே

பி.ரி..அkஸ்
கிண்ணியா-07


சூரிய இறக்கை

எல்லாமே அப்படித்தான்...
சுருங்குவதும்... விரிவதும்... சிறிதாவதும்....
பெரிதாவதும்...
நிலவு மாதிரித்தான்
வாழ்க்கைகூட....

எல்லாத்தெருக்களிலும் முப்பது நாட்களும்
எரிவதில்லை வீதிவிளக்கு
அதுபோலத்தான்
அமாவாசையையும்... பெளர்ணமியையும்
சேர்த்துத் தைத்த ...
தையல்காரனின் விளையாட்டது...

மெல்லிய இடவுக்குள் நுழைய முனையும்
பல்லியைப் போலத்தான் ஆசைகளும்...
பல்லிக்கென்றால் சாத்தியம்
மனிதனுக்கு!...

சீவிப்பின் அர்த்தம் தெரிந்தால்தான்
நகர்வுகள் இனிக்கும்...
அப்படியில்லாவிட்டால்
எதுகை மோனை தெரியாமல்
மரபுக் கவிதைகளுக்காய் பேனா திறக்கும்
கவிஞனைப் போலாகிவிடும்
வாழ்க்கை.

எத்தனை நாட்களுக்குத்தான்
பிரபாகரன் மாதிரியும்
ஒசாமாவைப் போலவும்...
வனவாசத்தினால் முகத்தை மூடுவது...
என்றாவது ஒருநாள்...
வெள்ளிமுள்ளி வாய்க்கால் கரையையும்
பாகிஸ்தான் வீட்டையும்
காணவேண்டி வரும்தானே.

வெறும் கால்களுடன் நடந்து போயிருக்கலாம்...
வெயில் மட்டும்தான் சுட்டிருக்கும்
சப்பாத்துக்களையும் சுமந்துகொண்டு
பாவம் பாதகங்கள்...

சீ.... வாருங்கள்....
என்றாவது ஒருநாள்
இறக்கைகள் முளைக்கும்
எல்லாத்திசைகளை நோக்கியும்
பறந்து போகலாம்... சூரியனைப்போல....

கவிச்சுடர் ரீ. எல். ஜவ்பர்கான்


பூமகனாம் ~மண்டேலா' புதுவேதம்

நீண்டபல் லாண்டுகள் நீதிக்காய்ச் சென்றேசிறை
மீண்டவ ராமெங்கள் மண்டேலா - பூண்டவுயர்
தன்கொள்கை காக்கத் தலையே தருவதற்கும்
புன்னகையோ டெழுந்த புயல்.
*
ஆபிரிக்கத் தேசியத்தை ஆளுகின்ற காங்கிரஸைத்
தாபித்த வன்தான் பெருமகனாம் - கோபித்தே
வெள்ளை நிறவெறியர் வெஞ்சிறைக்குட் போட்டாலும்
பிள்ளைச்சிரிப் போடதையேற் றாரே!
*
கொள்கை தனைவிடுத்துக் கும்பிட்டா லுயர்வாழ்வை
அள்ளித் தருவோ மென்றார்கள் - வெள்ளை
அரசாரைப் பார்த்து அதிநகைசெய் மண்டேலா
இருளகற்ற வந்த சுடர்.
*
கால்நூறு ஆண்டு கடுந்தவத்தின் பேறாகத்
தோல்வெள்ளைக் காரர் துவண்டார் - தோல்வியினைத்
தந்தே, விடுதலையைத் தானளித்தார் மக்களுக்கே
விந்தை மனிதர் விழி!
*
தாமே பரம்பரையாய்த் தானாளத் தோன்றுவார்முன்
பூமகனாம் மண்டேலா கோமகனாம் - ஆமாம்கேள்
சொந்த அரியணையைத் தூக்கிப் பிறர்க்களித்த
தந்தை இவருலகின் தவம்.

கவிஞர் நிலா தமிழின்தாசன்


உன் காதல்

அழுகை
எனக்கொன்றும்
புதிதல்ல
சிறு வயது முதலே
விதிக்கப்பட்டது
நீ வந்து
கொஞ்சம்
அதிகப்படுத்தியிருக்கிறாய்
அவ்வளவுதான்.
*
கஞ்சனைப்போன்றது
காதல்
எதையும்
குறைவாகவே
தருகிறது
ஜன்னலின்
வழியே மட்டும்
நீ என்னைப்
பார்ப்பதை போல.
*
தூக்கத்திற்கு
மாத்திரை உண்டு
யாரும்
தூங்காமல்
இருக்கவேண்டும்
என்றால்
ஒரு முறை
அவளைப் பாருங்களேன்.

காதலில்
தோல்வி
சிறு புள்ளிதான்
சில வேளை
நாம் அழித்தாலும்
அழிவதில்லை.
*
ஒரே ஒரு பார்வைதான்
பார்த்தாய்
இதயம் பறிபோய்விட்டது
எங்கே பயிற்றுவித்தாய்
உன் கண்களை.
*
பூக்களின் நறுமணத்தை
காற்று பரப்புவதைப் போல
என் பெயரை
பிரபலமாக்கிவிட்டது
உன் காதல்
*
என் பார்வை
தரிசனத்திற்காக
எத்தனை முறை
என்னை சுற்றி வந்திருப்பாய்
அது ஒரு காலம்
*
இன்று
உன் நினைவுகளே
என்னை சுற்றிவருகின்றன.

கவிஞர் எஸ். ரபீக்


பகல்நிலவாய்

எதிர்பார்ப்புகளும்
ஏமாற்றங்களும்
மீதமாகிப் போனது
வாழ்வில்

இல்லாததை
நினைத்துத்தான்
இதயம்
இம்சைப்பட்டுக்
கொள்கிறது.....

உணர்வுகள்
உதிரம் சிந்தும்
மெளனமாக
உரிமைகள்
விட்டுப் போவதினால்....

இதயவீணையில்
புழுதிபடிவதைப் போல்
இனம் புரியாத
நெருடல்....
அபகரிக்கப்பட்ட
சந்தோஷங்களை
நினைக்கையில்
ஒவ்வொரு சமயமும்
அழுகை வரும்.....

அப்போதெல்லாம்
அன்பான வார்த்தைகளைக் கூட
இறக்கி வைப்பதற்கு
மெளனம் கொள்ளும்
இதழ்கள்....

அந்நொடி
பகல் நேர
நிலவாய்
யாருக்கும் தெரியாமல்
போகும்
அன்பின் எச்சங்கள்....!

அஷ்ரபா அலிறிஷாப்
அக்குறணை


மறுமை நாளின்
அடையாளங்கள்

ஆடவன் மிக அதிகம் பெருகில்
மூடதை சோரம்போ கைமலிதல் - ஆடவன்
கல்வி குறைதலிவ் வைந்தும் கியாமத்து
அல்கலடை யாளம் அறி.
*
பரவலாதல் வர்த்தகம்; பொய்ச்சாட்சி; கல்வி;
இரத்த உறவு முறிதல் - நரரிற்
குறித்த சிலர்க் கேஸலாங் கூறுதலிவ் வைந்தும்
மறுமைவரு முன்பென் றறி.
*
கஞ்சத் தனம் பிறக்கும், காலஞ் சுருங்கிவிடும்;
பிஞ்சம் பெருகும்; செயற்பாடு - எஞ்சலாய்ப்
போகும்; குழப்பங்கள் தோன்றும்; மறுமை நாள்
ஆகுமுன் னென்றே யறி.
*
கல்வி பறிபோகும், காலஞ் சுருங்கிவிடும்;
செல்வஞ் செழித்துவிடும்; பூகம்பம்; - கொல்லல்
பெருகும்; குழப்பங்கள் தோன்றும்; மறுமை
வருமுன் னென்றே யறி.
*
அரக்கு மிகவருந்தல்; ஆண்கள் குறைதல்;
முரண்வெளி யாகுதல்; சோரம் - பரவல்;
உறுதி யகலுதல்; ஒண்டொடியர் கூடல்,
மறுமையடை யாளம் அறி.

அ. மு. அப்துல் கஹ்ஹார்


அப்பர் ´Õ மப்பர்!

எங்கப்பர் - ஒரு
மப்பர்
கல்லோயாச்
சாராயமாஞ்
சுப்பர் - எனக்
கண்மூடிக்
குடித்தார் - எங்
கப்பர்

காலையிலே
அப்பர்
கண்களைத்
திறப்பர்
மூலையிலே
இருக்கும்...
இரவடித்த
மிகுதிப் - போத்தல்
மூடியினைத்
திறப்பார்
கண்களை
இறுக்கிக்
களகளன்
றடிப்பர்
அப்பருட வேலை
அப்பருட வாடியிலே
சுண்டுக்
கல்லுடைத்துழைப்பர்
அப்பணத்தை
அப்படியே
மப்படிப்பர்

அப்பருக்கு
மப்பேறவருமொரு
கெப்பர்
கெப்பர்
வரும்போது
அப்பரவர்
தெருவழியே
இழுபடும் - ஒரு
இறப்பர்.

இப்படியாய்
அப்பரவர்
கள்ளடித்தார்
பொள்ளடித்தார்
கசிப்புகளுஞ்
சேர்ந்தடித்தார்
இதனால்
அடிக்கடி
டாக்டரிடம்
கிளினிக்(கு)ச்
செல்வர்

ஏனென்பீர்
அப்பருட ஈரலில்
ஒரு சிறு
ரிப்பர்

மாத்திரையோடு
மருந்தையுஞ் சேர்த்து
இராத்திரி பகலாய்
அடிப்பர் - இறை
யாத்திரை போக...
எங்கப்பர் - இனி
எப்போ
இறப்பர்?

பொன். நவநீதன்
பாண்டிருப்பு - 2.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.