புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

தமிழரை அடக்க முனைந்த 83 ஆடிக் கலவரம்

தமிழரை அடக்க முனைந்த 83 ஆடிக் கலவரம்

ஆடிக்கலவரம், அது இடம்பெற்று இருபத்தெட்டு வருடங்கள் கழிந்து விட்டன. ஆனாலும் அதன் தாக்கம் தமிழர் மனங்களிலிருந்து இன்னமும் அகலவில்லை. இலங்கையின் வரலாற் றில் கறைபடிந்த தினங்களாகவே 1983 ஜுலை இனக்கலவரம் அமைந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அதிகாரத்தின் உச்ச நிலை யைப் பயன்படுத்தி அன்றைய ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் நடந்தேறிய ஒரு இனச் சுத்திகரிப்புச் செயற்பாடே ஆடிக் கலவரமாகும்.

தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத வடுவாக அமைந்துள்ள அந்த நாட்களின் வலிகளை எண்ணிப்பார்க்கவும் முடியாதுள்ளது. தமிழரின் உடைமைகளுக்கு மட்டுமல்ல உயிர்களுக்கும் தீவைத்துக் கொளுத்தி மகிழ்ந்த காடையர்களுக்குப் பாதுகாப்பாக இருக்குமாறு படையி னருக்குப் பணித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியாளர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை என்றாலும் சிலர் அதே கொடூர விஷத்துடன் இன்றும் கட்சியை வழிநடத்தி வருகின்றனர்.

தமிழரைப் பெட்டிப் பாம்பாக அடக்கிவைத்து ஆள நினைத்த ஐ.தே.க. தலைமைத்துவம், வேண்டுமென்றே தமிழர் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. தப்பியோடும் போது பாதையில் உயிருடன் டயரில் போட்டு எரிக்கப்பட்ட தமிழரும், காடையரின் வாள் வீச்சுக்கு அவயவங்களை இழந்த தமிழர்களும் ஆடிக்கலவரத்தின் ஆதாரத்திற்கு இன்றும் சான்று பகர்வர்.

கல்வியில், விளையாட்டில், நிர்வாகத்துறையில், வர்த்தகத்தில் எனப் பல்துறைகளிலும் கொடிகட்டிப் பறந்த தமிழரை மேலும் மேலெழும்ப விடாது தடுக்கும் ஒரு கைங்கரியமாகவே அந்த இனக்கலவரம் அமைந்திருந்தது. நன்கு திட்டமிட்டு நாட்டிலுள்ள காடையர்களை ஒன்று திரட்டி தமிழ் மக்களுக்கு எதிராக ஐ.தே.க. ஏவி விட்டது. அவர்களும் தமது பணியை நன்கு விசுவாசமாகச் செய்து முடித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் சிலர் மேற்கொண்ட இப்பாரிய வரலாற்றுத் தவறு அமைதியாக இருந்த இலங்கைக்கு முழு உலகிலுமே என்றுமே மாறாத ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்தியது. அண்ணன், தம்பி போன்று ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்த தமிழ், சிங்கள மக்களிடையே பாரிய விரிசலை ஏற்படுத்த ஆடிக்கலவரம் ஆணிவேராக இருந்தது.

அன்று ஏற்பட்ட இன விரிசலானது இன்றுவரை ஒருவரை யொருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் ஒரு நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி அன்று விட்ட இந்த மாபெரும் தவறே பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு உரு வாக மூல காரணமாக அமைந்தது. ஆடிக்கலவரத்தால் ஆடிப்போன தமிழ்ச் சமூகத்திற்கு இந்நாட்டிலுள்ள சிங்களத் தலைமைகளிடமிருந்து பாதுகாப்புத் தேவை எனக் கருதிய தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந் திப் போராட ஆரம்பித்தனர்.

அதன் விளைவாக இன்று இரு சமூகமுமே யுத்த இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டது. சுமார் முப்பது வருடகால யுத்தம் தமிழருக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் பாரிய அழிவையே தந்தது. சிங்களப் பொதுமக் கள் பலரும் புலிகளினால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது சொத்து க்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று இறுதி யுத்தம் வரை புலிக ளால் பல இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் சிங்க ளவர்களாகக் காணப்படுகின்றனர். அதேபோன்று பயங்கரவாதிகள் எனப் படையினரால் கொல்லப்பட்ட புலிகள் தமிழர்களாக உள்ளனர். ஆனால் இவர்கள் அனைவருமே இலங்கையர் என்பதை உணர நாம் எல்லோருமே மறந்துவிட்டோம்.

1983 ஆடிக் கலவரத்தில் ஆரம்பித்த யுத்தம் சுமார் முப்பது வருட கால த்தில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என பல்லாயிரக்கணக்கான உயி ர்களை இதுவரை காவுகொண்டு விட்டது. படுகொலை கலாசாரத்தை 1983 ஆம் ஆண்டு ஜுலை 23ஆம் திகதி ஆரம்பித்துவைத்த ஐ. தே.க. தனக்கு ஆட்சி செய்ய இறுதியாகக் கிடைத்த சந்தர்ப்பம் வரை புலிகள் மூலமாகத் தமிழரை ஒடுக்கும் கைங்கரியத்திலேயே ஈடுபட்டு வந்தது. புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போன்று பாசாங்கு செய்த காலத்திலும் தமிழருக்குத் தீங்கிழைப்பதில் குறியாகவே இருந் தது.

ஆனால் இன்று புலிகளும் இல்லை, ஆடிக்கலவரமும் ஏற்பட வாய்ப்பும் இல்லை. எனுமளவிற்கு நாட் டில் அமைதிநிலை ஏற்படு த்தப்பட்டுள்ளது. ஐ.தே.க. ஆரம்பித்து வைத்த இன விரோதப் போக்கு இன்று இல்லாதொழிக்கப்பட்டுள் ளது. விடுதலைப் புலிகள் முழுமையாக அழிக்கப்பட் டதனால் இன்று முழு நாடும் அமைதியாக உள்ள துடன் நாட்டு மக்களும் இன, மத, மொழி பேதமி ன்றி மீண்டும் சகோதரத் துவ மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த இன ஒற்றுமை இனி எந்தக் காலத்திலும் சீர் குலையக் கூடாது. அதற்கு மக்கள் ஒரு போதும் இடமளிக்கவும் கூடாது. அதற்கு இன்றைய ஜனாதிபதி போன்று சிறந்த அரசியல் தலைவர்களை மக்கள் எதிர்வரும் காலங்களிலும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

1983 ஆடிக்கலவரத்தின் போது ஏவிவிடப்பட்ட காடையர் கூட்டத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டும், அடித்துத் துன்புறுத்தப்பட்ட போதும் அதை பார்த்துக் கண்ணீர் வடித்து முடிந்தளவிற்கு உதவிக்கரம் நீட்டி, பல வழிகளிலும் பாதுகாப்புத்தந்த சிங்களச் சகோதரர்களை இலகுவில் மற ந்துவிட முடியாது. அதேபோன்று சில சந்தர்ப்பங்களில் புலிகளால் துன் புறுத்தலுக்குள்ளான சிங்களச் சகோதரர்களைக் காப்பாற்றத் தமிழர் என் றுமே பின்னின்றதும் கிடையாது. இவைதான் உண்மையான சகோதரத் துவம். இந்த சகோதரத்துவம் தொடர வேண்டும் என்பதே எமது அவாவாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.