புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 

ஓமான் நாட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற

ஓமான் நாட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற

குடும்பப் பெண் சடலமாக திரும்பி வந்த சோகம்

ஓமான் நாட்டுக்கு பணிப்பெண்ணாக தொழில் பெற்றுச் சென்ற தோட்டப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் அண்மையில் சடலமாக கொண்டுவரப்பட்ட சம்பவம் அந்தத் தோட்டப் பகுதியையே பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

தமக்கென ஒரு வீடு, பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நீண்ட கனவுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றவர் ஹொரணை எல்லகந்த தோட்டத்தைச் சேர்ந்த ஆர். சித்திராதேவி என்னும் இந்தக் குடும்பப் பெண்.

இவருக்கு வயது 30, கணவன் எஸ். நாகேந்திரன் (34) இவர்களுக்கு என். சரன் 9 வயது, என். சரண் லக்ஷான் 6 வயது என இரு மகன்கள். இவர்கள் இருவரும் அருகில் உள்ள தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றனர். கணவன் பழைய இரும்பு மற்றும் பொருட்களைச் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒருவர். தோட்டத்தில் இவர்கள் வசித்து வந்த போதிலும் கூட இவர்களுக்கென ஒரு லயன் வீடு தானும் கிடையாது. சித்திரா தேவியின் தந்தையின் தந்தை அதாவது தாத்தாவின் லயன் குடியிருப்பிலேயே இவர்களும் வசித்து வந்தனர். தங்களுக்கென குடியிருக்க ஒரு வீடு வேண்டும். பிள்ளைகளைப் படிக்க வைத்து அவர்களை சிறந்த பிரஜைகளாக முன்னுக்குக் கொண்டுவர வேண்டும்.

என்ற எதிர்பார்ப்புடன் சித்திராதேவி 2006 ஆம் ஆண்டு சவூதிக்கு பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்று இரண்டு வருடங்களின் பின்னர் நாடு திரும்பிய போதிலும் எதிர்பார்த்த அளவு உழைப்பு கிடைக்காதபடியால் கணவனின் சம்மதத்துடன் 2009.07.14 இல் ஓமான் நாட்டுக்கு பணிப்பெண்ணாக மீண்டும் சென்றுள்ளார். மாதச் சம்பளம் 18 ஆயிரம் என்று கூறப்பட்ட போதிலும் 13 ஆயிரமே அங்கு இவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. பணி செய்த வீட்டில் எவ்வித பிரச்சினையுமின்றி இருப்பதாகவே கணவனுக்கு தகவல் தந்துள்ளார். வீட்டுக்கும், பிள்ளைகளுக்கும் தேவையானப் பொருட்களை வாங்கிக் கொண்டு இரண்டு வருடகால ஒப்பந்தந்தைப் பூர்த்தி செய்து 2011.07 இல் நாடுதிரும்புவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார் சித்திராதேவி.

அந்தோ 2011 மே 3ம் திகதி இவரது கணவனுக்கு கிடைத்த செய்தி கணவன், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள், ஊர் மக்கள் அனைவரையும் நிலை குலைய வைத்துவிட்டது. தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற துயரமான அந்த செய்தி இவர்களை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.

வழமையாக அதிகாலையில் எழுந்து வரும் சித்திரா தேவி அன்றைய தினம் அறையை விட்டு வெளியில் வரவில்லையாம். வீட்டு எஜமானி அறைக் கதவைத் தட்டிய போது கதவு திறக்கப்படாதபடியால் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது சித்திரா தேவி விசிறியில் தூக்கிட்டு தொங்கியதைக் கண்டுள்ளார். அங்கு நடத்தப்பட்ட மரண விசாரணையில் சித்திராதேவி தூக்கிலிட்டு தொங்கி இறந்துள்ளார் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இவரது மரணத்தில் சந்தேகம் கிடையாது என குடும்பத்தவர்கள் தெரிவித்ததையடுத்து ஹொரணை நகர சபை உறுப்பினர் கிரிசாந்த் அசோக் பாராளுமன்ற உறுப்பினர்களான விதுர விக்கிரமநாயக்க, பிரபா கணேசன் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு மரண அத்தாட்சிப் பத்திரத்துடன் சித்திராதேவியின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கடந்த மே 8ம் திகதி ஹொரணை எல்லகந்த தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. உண்மையிலேயே இவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கெண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்பது மர்மமாகவே உள்ளது.

சித்திரா தேவியின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி அவரது கணவன் மனைவியை இழந்தவராகவும், இரு மகன்மாரும் தாயை இழந்தவர்களாகவும் நிலைகுலைந்து போயுள்ளனர். வெளிநாட்டுக்கு உழைப்பதற்கென செல்லும் மலையகப் பெண்கள் முகம் கொடுக்கும் சோகக் கதைகளில் இதுவும் ஒன்றாகும்.

நாட்டுக்கு வெளிநாட்டு வருவாயை பெருமளவில் தேடித்தருபவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் நம்மவர்கள் என்றால் மிகையாகாது. உழைப்பதற்கென அங்கு செல்பவர்கள் பல்வேறு சிரமங்கள், தொல்லைகள், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு மத்தியிலேயே கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியுள்ளது.

வெளிநாட்டு வேலைக்குச் சென்றால் கொஞ்சம் உழைத்து வீடு, வாசல், பிள்ளைகளின் படிப்புத் தேவைகளை பூர்த்தி செய்து வாழ்க்கையில் ஓரளவுக்கு முன்னுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நம் மலையக யுவதிகள் மற்றும் குடும்பப் பெண்களையும் விட்டு வைக்கவில்லை.

போதிய வருமானம் இன்றி வாழ்ந்து வரும் இவர்களுக்கும் இந்த எண்ணம் ஏற்படுவதில் தவறில்லை. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய போதிய தெளிவும், விளக்கமும், பயிற்சியும் இல்லாத போதிலும் வீடு தேடி வரும் தரகர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கி பணத்தை செலவழித்து வெளிநாட்டுக்குச் செல்லும் பல மலையகப் பெண்களின் வாழ்க்கையில் பிரச்சினைகள் முற்றுப்பெறாது தொடர்கின்றன.

வெளிநாட்டுக்குப் போக ஆசை, வயது குறைவாக இருப்பினும் கடவுச் சீட்டைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், தேசிய அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும் எல்லா பிரச்சினைகளையும் தரகர்கள் ஊடாக தீர்த்து கொள்கின்றனர்.

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக அனைத்து தேவைகளும் கச்சிதமாக செய்து முடிக்கப்படுகின்றன.

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானாவின் விடயத்தில் போலியான பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி கடவுச் சீட்டு பெற்றுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் இன்றும் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளன.

பணத்தைச் செலவழித்து நீண்ட எதிர்பார்ப்புக்களுடன் வெளிநாட்டுக்குச் சென்று அங்கு மன ஆறுதலுடன் தொழில் செய்து உழைத்து சந்தோஷமாக நாடு திரும்பும் சூழல் ஏற்படுவதில்லை. பாலியல் தொல்லைகள் உட்பட பல்வேறு கொடுமைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளனர். இதனால் வீடுகளிலிருந்து தப்பியோடி தூதரகங்களில் தஞ்சம் புகுந்து வேறு வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படுவதுடன் சிலர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். விபத்து கொலை, தற்கொலையென பல வகையான அகால மரணத்துக் குள்ளாகும் நிலையேற்படுகின்றது. குறிப்பாக பாலியல் தொல்லைகளுக் குள்ளாகும் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளனர்.

இதனால் கடன்பட்டு பணத்தையும் செலவழித்து உழைப்பதற்கென வெளிநாட்டுக்குச் செல்லும் பலர் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகி வருகின்றனர். இவையெல்லாவற்றுக்கும் மேலாக அங்கு மரணத்துக்குள்ளாகும் பலரின் குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் தவிக்கின்றன. கணவன் மனைவியை இழந்தவராகவும், பிள்ளைகள் தாயை இழந்தவராகவும், பெற்றோர் பிள்ளைகளை இழந்தவராகவும் துயரத்தில் மூழ்கிப் போயிருப்பதைக் காணமுடிகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.