புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
கொழும்பு கம்பன் கழகத்தின் கம்பன் விழா

கொழும்பு கம்பன் கழகத்தின் கம்பன் விழா

கொழும்புக் கம்பன் கழகத்தின் கம்பன் விழா எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்கள் கோலாகலமாக கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

22ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு இராமகிருஷ்ண தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி திருக்கோவிலிருந்து கம்பன் திருவுருவப்படமும், சீதா இராம விக்கிரகங்களும், இலங்கையின் பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்களின் இன்னிசையுடனும், ஊர்வலமாக விழா மண்டபம் நோக்கி எடுத்துவரப்படவுள்ளன. இவ் ஊர்வலத்தில் இலங்கை, இந்தியா, மலேசியா அறிஞர்களும், பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

ஊர்வலத்தைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு வி. கைலாசபிள்ளைத் தம்பதியர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க யாழ் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரும், கொழும்புக் கம்பன் கழகத்தின் பெருந்தலைவருமான ஜே. விஸ்வநாதன் தலைமையில் ஆரம்பமாகும். இவ்விழாவினை மலேசிய கூட்டரசுப் பிரதேச மத்திய துணை அமைச்சர் டத்தோ எம். சரவணன் தொடக்கி வைக்கவுள்ளார்.

முதல் நாள் விழாவில் கவிஞர்களுக்கான மகரந்தச் சிறகு விருதும், நுழைபுல ஆய்வு விருதும், ஏற்ற மிகு இளைஞர் விருதும் வழங்கப்படவுள்ளன. அமரர் துரை. விஸ்வநாதன் ஞாபகார்த்த பேச்சுப் போட்டி, அமரர் பொன் பாலசுந்தரம் ஞாபகார்த்த கவிதைப் போட்டி ஆகியவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும், பதக்கங்களும் வழங்கப்படுவதுடன், கம்பன் கழகத்தின் சமூக நிதியுதவி அறக்கட்டளையை மட்டக்களப்பு யோகர்சுவாமி மகளிர் இல்லத்திற்கு நிதியுதவியும் வழங்கப்படவுள்ளன. சிறப்பு நிகழ்வாக தமிழக பிரபல நாட்டிய மேதைகளில் ஒருவரான இந்திய ஜனாதிபதி விருது பெற்ற கலைமாமணி திருநங்கை நர்த்தகி நடராஜின் ‘அகலிகை’ என்னும் நாட்டிய நாடகமும் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமைகளில் காலையும், மாலையும் மாணவர் அரங்கு, இளைஞர் அரங்கு, பட்டிமண்டபம், சுழலும் சொற்போர், கவியரங்கு, மாதர் அரங்கு, குறள் அரங்கு, வழக்காடு மன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நிறைவு நாளில் உலகளவில் தமிழ்ப்பணி செய்த ஒரு தமிழறிஞர்க்கு “கம்பன் புகழ் விருது” வழங்கப்படவுள்ளது. அத்தோடு நம் நாட்டின் வேறுபட்ட துறைகளினூடாக தொண்டாற்றிய அறிஞர் அறுவருக்கான கெளரவங்கள் வழங்கப்படவுள்ளன.

இவ்விழாவில் கொழும்பு கம்பன் கழகத்தினால் இராமாயண ஆய்வு நூல் ஒன்றும் 2012 ஆம் ஆண்டு கம்பன் விழா இறுவெட்டுகளும் வெளியிடப்படவுள்ளன.

(கொழும்பு கிழக்கு தினகரன் நிருபர்)


சிலப்பதிகாரம் தரும் சொற்சுவை

மாதவியின் கடிதம்

(கடந்த வாரத் தொடர்)

அரண்மனை முதலான இடங்களில் விளங்கும் நுண்கலைகள் மட்டும் அல்லாமல் காட்டிலும் மேட்டிலும் உள்ள மக்கள் கலைகளும் (நாட்டுக்கலைகள்) இளங்கோவடிகளின் உள்ளத்தைக் கவர்ந்தன. அந்த மக்களின் கலைகளில் உயிர்த் துடிப்பு விளங்குவதை இளங்கோவடிகள் உணர்ந்து போற்றினார். அவற்றிற்குத் தம் நூலில் தக்க இடம் தந்திருப்பதும் அவருடைய உண்மையான கலையுள்ளத்தைக் காட்டுகிறது. முப்பது படலங்கள் உடைய சிலப்பதிகாரத்தில், நான்கு படலங்கள் இப்படிப்பட்ட மக்களின் ஆடல், பாடல்களைப் பற்றியே அமைந்துள்ளன. அவை கானல் வரி, வேட்டு வரி, ஆய்ச்சியர், குரவை, குன்றக்குரவை என்னும் பகுதிகள், அவற்றுள், கானல் வரியில் கடற்கரைச் சோலையில் உள்ள மீனவர்களின் பாடல்களும் காவிரியாறு பற்றிய பாடல்களும் அமைந்துள்ளன. இளங்கோவடிகள் அந்த மக்கள் பாடல்களுக்குப் புலமை மெருகு ஏற்றி இலக்கியமாக்கிக் கூறியிருந்தாலும், அவற்றின் உயிர்த் தன்மையை மாற்றாமல் தந்திருக்கிறார். அவ்வாறே, வேட்டுவ வரியில் காளியை வழிபடும் வேடர்களின் பாடல்களை அமைத்துள்ளார். (மிகுதி அடுத்தவாரம்)


கனவு நனவாக...!

நிலவில் கால் பதித்து
நிலையாய் அங்கு வாழ்வோம்
கனவில் கண்டதெல்லாம்
நனவாகும் அப்போதுதான்

இருந்தும் இல்லையென்று
மறந்த இன்பமெல்லாம்
கரும்பாய் இருக்குமங்கு
களித்து மகிழ்கையிலே

கருத்து ஒருத்திருந்து
மறுக்க எதுவுமின்றி
கலக்கம் மயக்கமுமாய்
கதைகள் வரையுமங்கே

எண்ணம் உதிர்த்திருந்து
எளிமை மிகைத்திருந்து
எப் பொழுதும் இனித்திருக்க
இணைந்திருப்போம் நிலவில்!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.