புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
விநோத ரஞ்சிதப்பதுமை சொன்ன கதை

விநோத ரஞ்சிதப்பதுமை சொன்ன கதை

(சென்றவார தொடர்...)

(சந்திரவர்ணன் என்ற பிராமணன் பிரம்ம ராட்சதனிடம் கலைகளைக் கற்று, நான்கு பெண்களை மணந்து, நான்கு புதல்வர்களைப் பெற்றான். அவர்களில் ஒருவன் விக்கிரமாதித்தன். அவன் புதிய நகரத்தை அமைத்து, காளிதேவியின் அருளைப் பெற்றான்.)

சந்திரவர்ணன் என்ற பிராமணன், நந்தியாபுரம் என்ற நகரத்தில் வாழ்ந்து வந்தான்.

அவன் பல கலைகளைக் கற்றவன், ஆனாலும், மேலும் பல வித்தைகளைக் கற்றுத் தேற வேண்டும் என்று கருதினான். அதற்காக துறவு பூண்டு, தகுந்த குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தான். ஆனால், அவன் பல இடங்களுக்குச் சென்றும் அவன் கற்றுக்கொள்ள விரும்பிய வித்தையைச் சொல்லிக் கொடுக்கக்கூடிய தகுதி உள்ள குரு எவரும் கிடைக்கவில்லை. அதனால் வருத்தம் அடைந்தான்.

ஒருநாள், அவன் மிகவும் களைப்போடு ஒரு குளக்கரையில், அரச மரத்தின் அடியில் சோர்வுடன் படுத்துக்கொண்டிருந்தான்.

பிரம்ம ராட்சதன் ஒருவன் அந்த மரத்தின்மீது தவம் செய்து கொண்டிருந்தான். மரத்தின் கீழே ஒருவன் அயர்ந்து படுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்த பிரம்ம ராட்சதன், மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து அவனைத் தட்டி எழுப்பி, “நீ யார்?எந்த ஊர்? இங்கே ஏன் படுத்துக்கொண்டிருக்கிறாய்?” என்று விசாரித்தான்.

அவன் எழுந்து, வணங்கி, தன்னுடைய பெயர், ஊர், தான் அலைந்து திரிவதன் நோக்கம் முதலானவற்றை விவரமாகக் கூறினான் சந்திரவர்ணன் என்னும் பிராமணன். மேலும் அவனுக்குத் தெரிந்த வித்தைகளை தனக்குச் சொல்லி அருளுமாறு பிரம்மராட்சதனை வேண்டிக் கொண்டான்.

அவனுடைய வேண்டுகோளைக் கேட்ட பிரம்ம ராட்சதன், “நான் கூறும் கட்டுப்பாடுகளின்படி நடப்பதாக நீ ஒப்புக் கொண்டால், எனக்குத் தெரிந்த வித்தைகளை எல்லாம் உனக்குக் கற்றுத் தருகிறேன்” என்றான்.

“நீங்கள் கூறும் விதிமுறைகள் எதுவானாலும் அதன்படி நான் நடந்துகொள்வேன் என்று உறுதி கூறுகிறேன். ஆகையால், தங்களுக்குத் தெரிந்த வித்தைகளை எனக்கு அருள் கூர்ந்து கற்றுத்தர வேண்டுகிறேன்” என்று பணிவோடு கூறி, பிரம்மராட்சதன் கால்களில் விழுந்து வணங்கினான் சந்திரவர்ணன்.

“நீ இன்று முதல் ஆறு மாதங்கள், உண்ணாமலும், உறங்காமலும் இந்த மரத்தின் கீழே இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த வித்தைகளை அரச இலைகளில் எழுதி நாள்தோறும் மரத்திலிருந்து கீழே போடுவேன். அதை எடுத்துப் படித்து, அதன்படி நீ பயிற்சி செய்ய வேண்டும்” என்றான் பிரம்மராட்சதன்.

அப்படியே செய்வதாக சந்திரவர்ணன் ஒப்புக் கொண்டான்.

அவனுடைய பணிவையும் ஒப்புதலையும் கண்டு மகிழ்ந்த பிரம்மராட்சதன், பசி, தாகம், தூக்கம் முதலியன உண்டாகாமல் இருப்பதற்காக, ஒரு மந்திரத்தை அவனுக்குக் கற்றுக் கொடுத்து விட்டு மரத்தில் ஏறிக் கொண்டான்.

அந்த மந்திரசக்தி காரணமாக சந்திரவர்ணனுக்குப் பசி, தாகம், நித்திரை முதலியவை உண்டாகவே இல்லை.

பிரம்மராட்சதன் மரத்திலிருந்தபடியே நாள்தோறும், வித்தைகளை அரசு இலைகளில் எழுதிக் கீழே போட்டுக் கொண்டிருந்தான்.

சந்திரவர்ணனும் மிகுந்த கவனத்தோடு, அந்த இலைகளை எடுத்துப் படித்து அதன் படி வித்தைகளைக் கற்று வந்தான். இவ்வாறு ஆறு மாதங்கள் கழிந்தன.

சந்திரவர்ணன் எல்லா வித்தைகளையும் கற்றுக்கொண்டான்.

பிரம்மராட்சதனின் தவத்தின் பயனாக, வான் உலகிலிருந்து மலர் விமானம் ஒன்று வந்தது. அதில் ஏறி அவன் புறப்படும் பொழுது, பிரம்மராட்சதனை வணங்கி, “குருநாதரே தங்களுடைய மேலான அருளால், நான் எல்லா வித்தைகளையும் கற்றுக்கொண்டேன். இனி, நான் என்ன செய்ய வேண்டும் என்பதற்குத் தங்களுடைய கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.” என்றான் சந்திரவர்ணன்.

உடனே பிரம்மராட்சதன், “சந்திரவர்ணா, என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, பணிவோடு எல்லா வித்தைகளையும் கற்றுக் கொண்டாய், இனி, உன்னுடைய ஊருக்குத் திரும்பிப் போகலாம், அங்கே, உனக்கு விருப்பமான ஒரு பெண்ணை மணந்துகொண்டு நலத்தோடும், வளத்தோடும் வாழ்வாயாக!” என வாழ்த்தி அருளி வான் உலகம் சென்றான். வித்தைகள் எழுதப்பட்ட அரசு இலைகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நந்தியாபுரத்தை நோக்கிப் புறப்பட்டான் சந்திரவர்ணன்.

வழியில், கன்னியாபுரி என்னும் ஊரின் கடைத் தெருவில் இருந்த ஒரு வீட்டுத் திண்ணையில் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக உட்கார்ந்தான் சந்திரவர்ணன், களைப்பு மிகுதியால் அப்படியே தூங்கிவிட்டான்.

அலங்காரவல்லியின் உபசரிப்பு

அந்த வீட்டுக்காரியான தாசி அலங்காரவல்லி கோயிலுக்குச் சென்று திரும்பி வந்தாள். திண்ணையில் படுத்திருக்கும் ஆளைப் பார்த்துத் தட்டி எழுப்பினாள். ஊண், உறக்கம் இல்லாமல் ஆறு மாதங்கள் போக்கியிருந்த சந்திரவர்ணனால் எழுந்திருக்கவே இயலவில்லை.

அலங்காரவல்லி பயந்து அவன் மூக்கில் கைவைத்துப் பார்த்தாள். மூச்சு கொஞ்சம் வந்துகொண்டிருந்தது. உடனே மருத்துவனைக் கூட்டி வந்து, அவனைப் பார்க்கும் படி சொன்னாள்.

மருத்துவன் பரிசோதனை செய்துவிட்டு, “இவன் உணவும், உறக்கமும் இல்லாமல் சில மாதங்கள் கழித்திருக்கிறான். அதனால், களைப்படைந்து எழுந்திருக்க இயலாமல் கிடக்கிறான். தகுந்த வைத்தியம் செய்யாவிட்டால் பிழைப்பது அரிது” என்றான்.

பிறகு, அந்த மருத்துவனைக் கொண்டு மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து, தேவையான பணிவிடைகளைச் செய்து வந்தாள் அலங்காரவல்லி.

எட்டாவது நாள், களைப்பும் தூக்கமும் தெளிந்து எழுந்து உட்கார்ந்தான் சந்திரவர்ணன், சுய நினைவு உண்டானவுடன் தன்னுடைய இலை மூட்டையை எடுத்துக்கொண்டு புறப்படத் தயாரானான்.

அதைக் கண்ட தாசி அவனைத் தடுத்து, “அன்பரே! நினைவு இழந்து கிடந்த உமக்கு ஒரு வாரமாக மருத்துவனின் உதவியால், மருந்து கொடுத்துப் பணிவிடை செய்து ஆதரித்த என்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல், நீர் புறப்படுவது உமக்குப் பண்பாகுமா?” என்றாள்.

“சரி, அப்படியே சொல்லிக்கொண்டு போகிறேன். ஆனால், எதற்காக என்னை நீ தடுக்க வேண்டும்?” என்று கேட்டான் சந்திரவர்ணன்.

“அன்பரே!, உம்மைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையாலேயே, இவ்வளவு பணிவிடைகளையும் செய்தேன். ஆகையால், என்னை நீர் மணந்துகொள்ள வேண்டும்” என்றாள் தாசி.

“இறைவா, இது என்ன வேடிக்கை! உன்னை எப்படி நான் மணம் புரிந்துகொள்ள இயலும்? இது அறவிதிகளுக்குப் புறம்பானது அல்லவா? ஆகையால், உன் விருப்பத்துக்கு இணங்க இயலாது” என்றான் சந்திரவர்ணன்.

“அப்படியானால், உம்மீது வழக்குத் தொடர்வேன்” என்றாள் தாசி.

இருவரும் வாக்குவாதம் செய்துகொண்டு, அந்த நகரத்து அரசனிடம் சென்று முறையிட்டார்கள். அவர்களுடைய வழக்கை விசாரித்த அரசன் சுத்தவர்மன், அரச குருவை அழைத்து, அவருடைய ஆலோசனையைக் கேட்டான்.

“அரசே, பிராமண குலத்தில் பிறந்தவன், வேறு வகுப்பில் பிறந்த பெண்ணை மணம் புரிந்துகொள்ள வேண்டுமானால், நான்கு வகுப்பில் பிறந்த நான்கு பெண்களை, ஒரு சுப வேளையில் மணம் செய்துகொள்ள வேண்டும். அல்லது ஒரே பெண்ணை மணம் செய்துகொள்வதாய் இருந்தால் பிராமணப் பெண்ணையே மணம் செய்துகொள்ள வேண்டும்” என்றான் குரு.

நான்கு பெண்களை மணந்தான்

அரச குரு கூறியதைக் கேட்ட அரசன் யோசித்தான்.

“குருவே, அலங்காரவல்லியை மட்டும் சந்திரவர்ணன் மணந்து கொள்ள அறவிதி இடம் கொடுக்கவில்லையானால், என்னுடைய பெண்ணையும், உம்முடைய பெண்ணையும் அலுவலர் சோமநாதன் செட்டி மகளையும், தாசி அலங்கார வல்லியையும் ஆக நான்கு பெண்களையும் அவனுக்கு மணம் செய்து வைத்து விடலாம். உம்முடைய கருத்து என்ன?” என்று கேட்டான் அரசன்.

அரசன் விருப்பப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டான் குரு.

சோமநாதன் செட்டியும் அரசன் விருப்பப்படியே நடந்து கொள்ளச் சம்மதித்தான். அலங்காரவல்லியும் சம்மதித்தாள்.

அரசன், சந்திரவர்ணனை அழைத்து, அரசகுரு கூறிய அறவிதிகளை விளக்கிக் கூறி, நான்கு வகுப்புப் பெண்களையும் ஒரே சுப வேளையில் அவனுக்கு திருமணம் செய்வதாகத் தாங்கள் தீர்மானித்திருப்பதைக் கூறினான்.

சந்திரவர்ணனும் அதற்குச் சம்மதம் தெரிவித்தான். ஒரு நல்ல சுப வேளையில், நான்கு குலப் பெண்களையும் ஒரே மணமேடையில் வைத்துச் சந்திரவர்ணன் தாலி கட்டினான்.

அதன் பின்னர், அரசன் முதலானவர்கள் கொடுத்த சீர்வரிசைகளைப் பெற்றுக்கொண்டு, நான்கு மனைவியரையும் கூட்டிக்கொண்டு நந்தியாபுரம் போய்ச் சேர்ந்தான் சந்திரவர்ணன்.

நான்கு பிள்ளைகள்

ஓர் ஆண்டில், சந்திரவர்ணன் மனைவியர் நால்வரும் நான்கு ஆண் குழந்தைகளைப் பெற்றனர்.

முதல் மனைவியான அரச குருவின் மகள் கல்யாணிக்குப் பிறந்த குழந்தைக்கு வல்லவரிஷி எனப் பெயர் சூட்டினர்.

இரண்டாவது மனைவியான அரசகுமாரி சித்திர ரேகைக்குப் பிறந்த குழந்தைக்கு விக்கிரமாதித்தன் என்று பெயர் இட்டனர்.

மூன்றாவது மனைவியான செட்டி மகள் கோமளாங்கிக்குப் பிறந்த குழந்தைக்குப் பட்டி என்று பெயர் வைத்தனர்.

நான்காவது மனைவியான அலங்காரவல்லிக்குப் பிறந்த குழந்தைக்கு பத்திரகிரி என்று பெயர் சூட்டினர்.

சந்திரவர்ணனின் நான்கு குழந்தைகளும் நன்றாக வளர்ந்து, உரிய வயதில் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தார்கள்.

அப்பொழுது, கன்னியாபுரி அரசனாகிய சுத்தவர்மனுக்கு வயதாகி விட்டது. அவனுக்குப் பிறகு, அந்த நகரத்தை ஆட்சி புரிய சந்ததி இல்லாததால், யாரை நியமிக்கலாம் என்று யோசித்தான். தன்னுடைய மருமகன் சந்திரவர்ணன் பிராமணனாக இருந்தாலும் க்ஷத்திரியப் பெண்ணையும் மணந்துகொண்டு கல்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்கியதால் அவனுக்கே முடிசூட்டி, ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்புவிக்கக் கருதினான் சுத்தவர்மன். உடனே சந்திரவர்ணனை அழைத்து வரச்சொல்லி தன்னுடைய எண்ணத்தை வெளியிட்டான் சுத்தவர்மன்.

சந்திரவர்ணனும் மாமனான சுத்தவர்மனின் கருத்தை ஒப்புக்கொண்டான். நல்ல நாளில், முறைப்படி சந்திரவர்ண னுக்கு முடிசூட்டி, ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தான், பிறகு, சில நாட்களில் அரசன் சுத்தவர்மன் காலமாகி விட்டான்.

சந்திரவர்ணன் கன்னியாபுரி அரசனாகி நாட்டை நல்ல முறையில், பொதுமக்கள் போற்றி புகழுமாறு ஆட்சி புரிந்து வந்தான்.

அவனுடைய புதல்வர்கள் நால்வரும் இளமைப் பருவம் அடைந்தனர்.

சந்திரவர்ணனும் முதுமை அடைந்து, மரணத் தறுவாயில் இருந்தான். புதல்வர்களில் யாருக்கும் திருமணம் நடைபெறாமல் இருப்பதைப் பற்றியும், அவர்களில் எவனுக்கு முடி சூட்டுவது என்பதையும் நினைத்துக் கவலையுற்றான்.

தந்தையின் சொல் கேட்ட புத்திரர்கள்

அவனுடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாயிருந்த போது, புதல்வர் நால்வரும் அவன் அருகில் இருந்தனர். அப்பொழுது, தன்னுடைய நான்காவது மனைவியான அலங்காரவல்லியின் வயிற்றில் பிறந்த புதல்வன் பத்திரகிரியைப் பார்த்து, கண்கலங்கி அழுதான் சந்திரவர்ணன்.

அதைக் கண்ணுற்ற மற்ற மூன்று புதல்வர்களும், கடைசி மகன் மீதே தந்தை மிகவும் பாசம் கொண்டிருப்பதாகக் கருதினர்.

பத்திரிகிரியோ மிகவும் விவேகமானவன், தந்தை கவலையுறுவதையும், சகோதரர்களின் எண்ணத்தையும் அறிந்து கொண்டான்.

“அருமைத் தந்தையே, நீங்கள் என்னைப் பற்றிக் கவலை கொள்வதை நான் உணர்வேன். நானோ, தாசி வயிற்றில் பிறந்தவன். நான் திருமணம் புரிந்து கொண்டு, எனக்கு மக்கட்பேறு உண்டாகுமானால் தங்களுக்கு முக்தி கிடைக்காது என்று அறநூல்கள் கூறுவதை நான் அறிவேன். அதற்காக, தாங்கள் கவலையுற வேண்டாம். நான் திருமணமே செய்து கொள்ளமாட்டேன். ஆகவே, எனக்கு மக்கட்பேறும் உண்டாகாது. நீங்கள் முக்தி பெறுவதற்கும் தடை ஏற்படாது” என்றான்.

“அருமைமிக்க பத்திரகிரி, நீ திருமணம் செய்துகொள்ளக் கூடாது என நான் எண்ணவில்லை. ஆனால், உனக்கு மக்கட்பேறு ஏற்படக் கூடாது என்பதே என் கவலை. நீ எத்தனை பெண்களை மணந்துகொண்டாலும் உனக்கு மக்கட்பேறு ஏற்படாமல் இருக்க ஒரு மந்திரம் உள்ளது. அதை உனக்குக் கூறுகிறேன்.

அதை நாள்தோறும் நூற்றி எட்டு முறை நீ உச்சரித்து வருவாயானால், உனக்குச் சந்ததி உண்டாகாது. நீயும் முக்தி அடைவாய்” என்று கூறி அந்த மந்திரத்தை அவன் காதில் அருளினான்.

பிறகு, மற்ற மூன்று புதல்வர்களையும் பார்த்து, “என் அருமைப் புத்திரர்களே, பத்திரகிரியின் தாயாரின் காரணமாகவே, உங்கள் தாய்மார் மூவரையும் நான் மணந்துகொள்ள நேரிட்டது” என்று அந்த விவரத்தை விரிவாகக் கூறிவிட்டு, “ஆகையால், முறைப்படி பத்திரகிரிக்கே பட்டம் சூட்ட வேண்டும். நீங்கள் மூவரும் இளவரசர்களாக இருந்து அவனோடு ஒத்துழைத்து உறுதுணையாக இருந்து வருவீர்களாக” என்றான். எல்லோரும் தந்தையின் சொற்களை மதித்து ஏற்றுக்கொண்டனர்.

பத்திரகிரிக்கு முடி சூட்டுதல்

நல்ல நாளில் பத்திரகிரிக்கு முடிசூட்டி, ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து விட்டு, பிறகு, சில நாட்களில் சந்திரவர்ணன் காலமானான்.

அதன் பின்னர், அவனுடைய பிராமண மனைவியான கல்யாணியின் வயிற்றில் பிறந்த மகன் வல்லரிஷி துறவியாகப் போய்விட்டான். அரசனான பத்திரகிரி முந்நூற்று அறுபது பெண்களை மணம் புரிந்துகொண்டான். ஆட்சியையும் சிறப்பாக நடத்தினான்.

சாந்தயோகி என்னும் முனிவர், தம்முடைய தவ வலிமையால் பல அரிய சித்திகளைப் பெற்றவர். தேவேந்திரனுடைய பூஞ்சோலையிலிருந்து ஒரு மாதுளம் பழத்தைக் கொண்டுவந்திருந்தார். அதை அரசன் பத்திரகிரியிடம் கொடுத்து, “இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் என்றும் பதினாறு வயதாக வாழலாம். உனக்காகவே இதைக் கொண்டு வந்தேன். இதைச் சாப்பிட்டு நீ நீண்ட ஆயுளோடு வாழ்வாயாக” என்று வாழ்த்தி விட்டுச் சென்றார்

அந்தப் பழத்தைப் பெற்றுக்கொண்ட பத்திரகிரி அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். எவருக்கும் கிடைத்தற்கு அரிய அந்தப் பழத்தைக் கொண்டு போய், தன்னுடைய முந்நூற்று அறுபது மனைவியரில் தான் மிகவும் நேசிக்கக் கூடிய முதல் மனைவியான மோகனாங்கியிடம் கொடுத்து, “முனிவர் ஒருவர் எனக்கு அளித்த இந்தப் பழத்தைச் சாப்பிட்டால், என்றும் பதினாறு வயதாக வாழலாம். ஆகையால், நீ இப்பொழுதே இதைச் சாப்பிடு” என்றான்.

மோகனாங்கி அதைப் பெற்றுக் கொண்டு, “இந்த தெய்வீகப் பழத்தை நல்ல நாளில் சாப்பிடுகிறேனே” என்றாள். பத்திரகிரியும் அவளுடைய அறிவைப் பாராட்டி அவள் விருப்பம் போல் சாப்பிடச் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

ராணியின் நடத்தையில் சந்தேகம்

அடுத்த நாள், அரசன் பத்திரகிரி அரண்மனை உப்ப¨கையில் உலாவிக்கொண்டிருந்தான். அப்பொழுது கூலிக்காரி ஒருத்தி தெருவில் போய்க்கொண்டிருந்தாள். அவருளுடைய தலையில் இருந்த கூடையில் அழகான மாதுளம் பழம் இருந்தது. அதைக் கண்ட அரசன் காவலர்களை ஏவி, கூலிக்காரியைக் கூட்டிக் கொண்டுவரச் சொன்னான்.

கூலிக்காரி அரசன் எதிரே வந்து நடுங்கியபடி நின்றாள். அவளிடம் “நீ யார்? அந்த மாதுளம் பழம் உனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்டான் அரசன்.

“நான் ஒரு தாசியின் பணிப்பெண். மன்னனின் குதிரைக்காரன் என்னிடம் உள்ள ஆசையால், இந்தப் பழத்தை என்னிடம் கொடுத்தான். நான் நவகோடி நாராயணன் செட்டியின் மருமகனிடம் ஆசை கொண்டிருப்பவள். ஆகையால், அவருக்குக் கொடுப்பதற்காக இந்தப் பழத்தைக் கொண்டு போகிறேன்” என்று தெரிவித்தாள்.

உடனே குதிரைக்காரனைக் கூட்டி வரச் சொன்னான் அரசன். அவன் நடுங்கிக்கொண்டே வந்தான். அங்கே கூலிக்காரி நிற்பதைக் கண்டு பயந்து நடுநடுங்கினான். “இந்தப் பழம் எப்படிக் கிடைத்தது? இதை நீ இவளிடம் கொடுத்தது உண்மையா?” என வினவினான்.

குதிரைக்காரன் பயந்து வெலவெலத்து, “என்னிடம் உள்ள ஆசையால், பெரிய ராணி கொடுத்தார்கள். நான் இவளிடம் கொண்டுள்ள ஆசையால், இவளிடம் அதைக் கொடுத்தேன்” என்றான்.

பத்திரகிரி உடனே ராணி மோகனாங்கியிடம் சென்று “உன்னிடம் நான் கொடுத்த மாதுளம்பழம் எங்கே? அதைக் கொண்டு வா” என்றான்.

மோகனாங்கி சற்று தயங்கினாள். அரசன் அவசரப்பட்டு, அந்தப் பழத்தைக் கொண்டு வருமாறு கட்டாயப்படுத்தினான். அவள் அதைக் கொண்டுவரவில்லை.

“அந்தப் பழத்தைக் குதிரைக்காரனிடம் கொடுத்தேன்” என்றாள் மோகனாங்கி.

பத்திரகிரியின் துறவு

அவள் சொன்னதைக் கேட்டதும் அரசன் பத்திரகிரி திகைத்து நின்றுவிட்டான். அறநூல்களை எல்லாம் கற்றறிந்தவன். ஆகையால், நிதானமாக யோசிக்கலானான்.

தன்னுடைய ஆசை சிதறி, அவமானம் அடைந்த பிறகும் இல்வாழ்க்கையில் இனி ஈடுபடக் கூடாது என்ற முடிவுக்கு வந்தான்.

விக்கிரமாதித்தனுக்கு முடிசூட்டுதல்

உடனே, சகோதரர்கள் இருவரையும் அழைத்து, விக்கிரமாதித்தனுக்கு முடிசூட்டி, பட்டியை அமைச்சனாக இருக்கச் செய்து, அவன் துறவியாகி காட்டுக்குச் சென்று விட்டான்.

விக்கிரமாதித்தன் பட்டத்துக்கு வந்தான். உலகினர் அனைவரும் தன்னைப் போற்றி புகழ்ந்து கொண்டாடும்படி பெருமையோடு ஆட்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

உடனே, அமைச்சன் பட்டியை அழைத்து, இந்தச் சிறிய கன்னியாபுரி நாட்டை மட்டும் ஆட்சி செய்வதனால் நமக்கு புகழோ, பெருமையோ உண்டாகாது. நமது புகழ் என்றும் - எப்பொழுதும் நிலைத்து இருக்கத்தக்க முறையில் புதிய நகரம் ஒன்றை நிர்மாணித்து நாம் ஆட்சி செய்ய வேண்டும். ஆகையினால், புது நகரத்தை அமைக்க தகுந்த இடமாகப் பார்த்து ஏற்பாடுகளைச் செய்வாயாக என்று கட்டளையிட்டான்.

விக்கிரமாதித்தனின் கட்டளைப்படி அமைச்சன் பட்டி தகுந்த இடத்தைக் கண்டுபிடிப்பதற்காகப் புறப்பட்டான்.

சில நாட்களுக்குப் பிறகு, குணவதி ஆற்றை அடுத்த வனசகிரி மலைச்சாரலில் ஒரு மேட்டுப் பாங்கான இடத்திலிருந்த ஒரு நகரத்தை அடைந்தான். அங்கே மனிதர்கள் நடமாட்டத்துக்குப் பதிலாகப் பூதக் கூட்டங்களே காணப்பட்டன. அங்கே ஒரு காளி கோயிலும் அதை ஒட்டி ஒரு குளமும் இருந்தன.

அமைச்சன் பட்டி அந்த குளத்தில் குளித்துக் காளி கோயிலை வலம் வந்து வணங்கினான். அப்பொழுது அவனுடைய பார்வை ஒரு குத்துக்கல்லின் மீது சென்றது. அதில் எழுதப்பட்டிருந்த சாசனம் பட்டியைக் கவர்ந்தது. அதன் அருகில் சென்றான்.

“குளக்கரையில் கட்டப்பட்டுள்ள ஏழு உறிகளையும் ஒரே வெட்டில் வெட்டி, அப்படியே குளத்தின் மையத்தில் உள்ள வேலின் முனையில் தலைகீழாகப் பாய்பவர்களுக்குக் காளி தேவி நேரில் தோன்றி, ஏராளமான செல்வங்களை வழங்குவதோடு, ஐம்பத்து ஆறு நாடுகளின் அரசாட்சிப் பொறுப்பையும் அளிப்பாள்” என குறிக்கப்பட்டு இருந்தது.

அமைச்சன் பட்டி, அதைப் படித்ததும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். அந்தச் சாசனப்படி செய்து விட்டால், ஐம்பத்து ஆறு நாடுகளின் ஆளுகையும் கிடைக்குமே என பூரிப்படைந்தான்.

உடனே மிக விரைவாகக் கன்னியாபுரியை நோக்கிச் சென்றான். தான் கண்ட சாசன விவரத்தை விக்கிரமாதித்தனிடம் கூறினான். அதைக் காண வேண்டும் என்ற ஆவல் அவனுக்கும் உண்டாயிற்று. உடனே இருவரும் காளிகோயிலுக்குச் சென்றனர்.

பட்டியும் விக்கிரமாதித்தனும் குளத்தில் குளித்து, காளி தேவியை வணங்கினார்கள். பிறகு, சாசனத்தில் குறிப்பிட்டிருப்பதைக் கண்டு என்ன செய்யலாம் என யோசித்தனர்.

(தொடரும்...)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.