புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

‘KAVITHAIMANJAREY’

தேடிய உறவு

தேவைகள்
தொடங்குவதற்கு - முன்
தேடலை
முடித்துவிடுகிறது
மரணம்...

தேவைகள் - பல
தேடியவை - சில
தேவையானவன் - நீ
தேய்ந்து போனதால்...

கேட்ட போதெல்லாம்
உன்னைக் காட்டவில்லை
தேடிய போதெல்லாம்
உன்னைத் தெரியவில்லை...

பூரண அறிவுக்கும்
போதிய தேர்ச்சிக்கும்
வழிகாட்டலுக்கும்
நீயில்லை...

என்
வெற்றிகளில்
தலை தடவவும்
தோல்விகளில்
தோள் தட்டவும்
உன்னைக் காணவில்லை...

ஒரு முறையேனும்
உன்னோடு சிரிக்க
இருக்க, பழக
ரசிக்க - ஏன்
கட்டிப்பிடிக்கக் கூட
நீயில்லை...

உன்னைத் தூக்க
என்னைத் தூக்கிய
உன்னைக் காணவில்லை...

இன்னும் தேடுகின்றேன்
தோள் கொடுத்து
தோள் மாற்ற
தந்தையின்
உறவினை...

கைஸர் முஹம்மட் ஹப்ஸா
நன்முனை.


மன வெளியின் விதை

பொறாமையும்
காழ்ப்புணர்வும்
ஒரு விதை
அதன் விளைச்சலில்
இலாபம்
விஷம் மட்டும்
ஆதலால்
பிறர் சாபத்திற்கும்
கோபத்திற்கும்
ஆளாக நேரிடும்!

நல்லெண்ணம்
காரூண்யம்
ஒரு விதை
அந்த விளைச்சலில்
இலாபகரம்
அன்பும்
அறமும்
அகிலத்தில் தனக் கோரிடமும்!!

-ஏ.ஆர்.எம்.நதார்
ஜின்னாநகர்


காதல்

நெடிலில் தொடங்கி
மெய்யில் முடியும்
சொல் மட்டுமல்ல !
நெடிய உறவாகத் தொடர்ந்து
மெய்யான அன்பை பொழிவது !
இன்பங்கள் எத்தனையோ
இவ்வுலகில் இருந்தாலும்
இனிமையான காதல் இன்பத்திற்கு
இணை இவ்வுலகில் இல்லை !
கூடு விட்டு கூடு பாயும்
எண்ண அலை !
தனிமையில் பேச வைக்கும்
பாச வலை !
மகிழ்ச்சிப் போதையில்
மிதக்க வைக்கும் கலை !
கோடிப் பணம் தந்தாலும்
பிடிக்காத நிலை !
இறுதிவரை
உறுதியாக இருந்தால்
அசைக்க முடியாத மலை !


யதார்த்தமும் நானும்

யதார்த்தங்களோடு வாழ நினைத்தேன்
அவை என்னை எங்கோ துரத்தி விட்டன
அவற்றின் பின்னாலே
அதன் பின்னரும் திரிந்தேன்
ஏச்சுக்களும், பேச்சுக்களும்
குத்தல்களும், நிந்தனைகளும் தான்
பரிசாய்க் கிடைத்தன.

இவையாவும்
நான் யதார்த்தத்தை யதார்த்தமாகவே
காதலித்ததற்காய் யதார்த்தம் தந்த பரிசில்கள்

தற்பொழுதுதெல்லாம்.....
என்நாவு அதிகமாக.......
“யதார்த்தவாதி வெகுசன விரோதி”
எனும் வாசகத்தை உதிர்த்து
என்னையே ஆறுதல் படுத்திக் கொள்வதும்
ஒருவகையில் யதார்த்தமே!

இப்போதுதான் புரிகிறது
யதார்த்தம் எனைவிடப் பார்த்தாலும்
யதார்த்தத்தை நான் பிரிய முனைந்தாலும்
அது என்னோடு தான் வாழ்கின்றது
நானும் அதனுள்ளே தான் கரைகின்றேன்.

அது தரும் இன்பங்களும்
அது தரும் துன்பங்களும்
யதார்த்தமானவையே.

-முஜாஹிதா அ. ராஸிக்
அரனாயக்க.


நிகழ்காலம்

பெண்ணே
பனி இரவில் முழித்திருந்து உன்
நினைவில் நான் வரைந்த
காதல் கடிதங்கள்

இன்று உன் தீச்சுவாலைக்கு
நிழல் கொடுத்து அதில்
நீ குளிர் காய்கிறாய்

-ஜெ வீரன்


நான் ரசித்த கவிதை

நீ என்னை வெறுத்து திட்டும்
சில வார்த்தைகள் கூட
நான் ரசிக்கும் ஒரு கவிதை அன்பே.

-ரவி


பெண்மையின் மேன்மை

இளமை என்னை
விட்டுப் போகவில்லை
இப்போதும்
அப்போது போல்
இனிக்கிறது என் இளமை!

கசப்பான நிகழ்வுகள்
நெஞ்சமதில்
அலை மோதிய போதும்
கசக்காது சலிக்காது
சுவைத்துச் சுகம்
காணக்கூடிய
இளத் தென்றலின்
வருடல்கள்.....

கற்களும் முட்களும்
பூக்களாய் மாறி
என் இதயமதில்
சூடும் பொழுது
இனந் தெரியாத
ஸ்பரிசம் எனக்குள்!

வீழ்த்தி ரசிப்பதற்காய்
சில கூட்டம்
இருந்த போதும்
வாழ்த்து மாலைகள்
சதாவும் சூழ்ந்தபடி!

அன்று -
தாயின் தாலாட்டில்
கண்ட சங்கீதத்தை
இன்று
பலரின் பாராட்டில்
காண்கின்றேன்!

என் இதயத்தின்
மென்மையை
உணராதவர்கள்
எப்போது தான்
பெண்மையின் மேன்மையை
உணர்வார்கள்?

-பாயிஸாகைஸ்
சீனன் கோட்டை

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.