புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
பல்கலைக்கழக கல்வியை பெற முடியாதது கவலை

பல்கலைக்கழக கல்வியை பெற முடியாதது கவலை

தொழிற்சங்கவாதியாக பரிணமித்த ஒ.ஏ.இராமையா மனம் திறக்கிறார்

கடந்த நூற்றாண்டின் ஆரம்ப கால் இறுதிப்பகுதியில் பகுத்தறிவுக் கொள்கையால் ஏற்பட்ட சமூக விழிப்புணர்வுகளினால் ஈர்க்கப்பட்டவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே இன்று நம் மத்தியில் வாழ்கின்றனர். அந்த ஒரு சிலரில் பகுத்தறிவாளனாக, முற்போக்குவாதியாக, தொழிற்சங்கவாதியாக பரிணமித்தவர்தான் இன்று நாம் சந்திக்கும் ஓ. ஏ. இராமையா.

ஆங்கிலேயரின் காலனித்துவக் காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக தமிழகத்திலிருந்து அழைத்துவரப்பட்ட தம் மூதாதையர்களின் வாரிசுகள் இன்றும் முடக்கப்பட்ட பிரஜைகளாக வாழும் மலையக மக்களின் விடிவுக்கு குரல் கொடுத்துவரும் அவர் கடந்து வந்த பாதையை இங்கே திரும்பிப்பார்க்கின்றார்.

தங்களின் பிறந்தகத்தைப் பற்றிக் கூறுங்கள்....

பூண்டுலோய டன்சின் தோட்டத்தில் பிறந்தேன். எனது பெற்றோர் தோட்டத் தொழிலாளியாவார்கள். ஐந்து சகோதர, சகோதரிகளுடன் பிறந்தேன். என்னுடைய தாத்தா காங்கிரஸ் கட்சியின் அபிமானி. காங்கிரஸின் கூட்டங்கள் எங்கு நடந் தாலும் அங்கெல்லாம் பிரசன்னாமாகியிருப்பார். சிறுவனாக இருந்த என்னையும் அழைத்துக் கொண்டு 1947ஆம் ஆண்டு நுவரெலியாவில் நடைபெற்ற இலங்கை, இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டமை இன்னும் என் நினைவில் பசுமரத்தாணியாக இருக்கின்றது. தாத்தா, பாட்டியுடன் நானும் கலந்து கொண்ட அந்த மாநாட்டு நிகழ்ச்சி எனக்கொரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம். அத்தோடு என்னை கல்வியாளனாகப் பார்க்க என் பெற்றோரும் விரும்பினர். கஷ்டத்திலும் என்னைப் படிப்பித்தார்கள்.

எனது ஆரம்பக் கல்வி தோட்டப் பாடசாலையில்தான். ஐந்தாம் ஆண்டுவரை தோட்டப் பாடசாலையில் கற்றபின், பூண்டுலோயா கந்தசாமி கல்லூரியில் இணைந்து எஸ். எஸ். ஸி வரை படித்தேன். இக்கல்லூரி தனியார் நிறுவனமாகும். உயர்தரம் கற்று பல்கலைக்கழகம் செல்லக்கூடிய அளவிற்கு பிரஜாவுரிமை இருக்கவில்லை. பல்கலைக்கழக கல்வியைப் பெறமுடியாமல் போனது என் மனதை இன்றும் அரித்துக்கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 50 ஆண்டுகளிற்கு மேற்பட்ட தொழிற்சங்க வாதிகளுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டபோது...

பாடசாலையை விட்டு விலகியப்பின் தொழிலில் ஈடுபட்டீர்களா?

தொழில் தேடி அலையவில்லை. காரணம் நமது சமூகத்தின் சீர்கேடும் முதலாளித்துவத்தின் கெடுபிடிகளும் என்னை மிகவும் வருத்தியே வந்துள்ளது. இதன் காரணமாக எனது வாழ்க்கையை முழுமையாக இடதுசாரி முற்போக்கு எண்ணமுள்ள தொழிற் சங்கப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டேன்.

கல்வியை முடித்துக் கொண்டு 1955ம் ஆண்டு காலப் பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தொழிற்சங்கப் பணியை மேற்கொண்டேன். சாதாரண பிரதிநிதியாக என் தொழிலை ஆரம்பித்து, பின்னர் உதவிச் செயலாளராகவும்,பொதுச் செயலாளராகவும் உயர்ந்தேன்.

இக்காலகட்டத்தில்தான் 1960ம் ஆண்டுகளில் இலங்கை திராவிடர் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளரான நாவலர் இரா. இளஞ்செழியன், பிட்டாரத்மலை வேலழகன், பண்டாரவளை தேவமணிரஃபேல் போன்றவர்களின் தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் நட்பும் தோழமையும் கிடைத்தது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களான பீட்டர் கெனமன், எம். ஜி. மெண்டீஸ், டி. சில்வா, சண்முகதாசன் இன்னும் பல தோழர்களின் நட்பும், தோழர் நடேசனின் தொடர்போடு சுபசிங்க, எஸ். செல்லையா, கரவை கந்தசாமி, மாதகல் கந்தசாமி, ஸான் குமார சாமி, கந்தையா எம். பி. போன்றோர்களின் தொடர்பும் ஏற்பட்டது.

தொழிற்சங்க, அரசியல்பணியின் காரணமாக ரொசாரியோ பெர்ணாண்டோ, சுந்தரம், மூர்த்தி இவர்களுடன் பல தோழர்கள் என்னோடு தொடர்ந்து நட்புறவுடன் இருந்து வந்தனர்.

அமரர் தொண்டமான், அமரர் அப்துல் அkஸ், பி.வி. கந்தையா, எம். எஸ். செல்லச்சாமி, பி. பெருமாள், பி.ஏ. செபஸ்டியன் போன்றவர்களும் நீண்டகாலம் தொடர்பு ஏற்பட்டது. மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் ரோகணவிஜய வீர எம்மோடு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் விடுதலைமுன்னணியின் கிளர்ச்சியின் போது 1971ம் ஆண்டு சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு இரண்டாண்டுகள் (1917-1972 வரை) தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். இக்காலகட்டத்தில் செங்கொடி, தீப்பொறி போன்ற பத்திரிகைகளுக்கு வெளியீட்டாளராகவும், பதிப்பாசிரியராகவுமிருந்து வந்தேன்.

இதன் ஆசிரியராக (தீப்பொறி) எம். கே. அந்தனிசில் இருந்து வந்தார். தீப்பொறியில் பதுளை கீனாக்கலை, மாத்தறை நாலந்த (கருங்காலித்தோட்டம்) துப்பாக்கிச்சூட்டில் தொழிலாளர்கள் மரணித்ததைக் கண்டித்து கவிதை எழுதி வெளியிட்டதன் காரணமாகவும் கைது செய்யப்பட்டதும் அத்தோடு ரொசாரியா பெர்ணாண்டோ, சண்முகதாசன் கரவை கந்தசாமி போன்ற முக்கிய தோழர்களும் ஜே. வி. பி. கிளர்ச்சியின் காரணமாக கைது செய்யப்பட்டோம்.

தொழிற்சங்கத்துறையின் மூலம் எந்தெந்த நாடுகளுக்கு விஜயம்செய்துள்Zர்கள்?

ஜெர்மனி நாட்டில் இரண்டாண்டு அரசியல் பொருளாதார, சமூக விஞ்ஞானம், வரலாறு ஆகிய துறைகளில் கற்று பாண்டித்துவம் பெற்றேன். அதேநேரத்தில், தமிழ், ஆங்கிலம், சிங்களம், ஜெர்மனிய மொழியில் தேர்ச்சி பெற்றுள்ளேன். இன்று பலரும் தனது இன அடையாளத்தை காட்டமறுத்து வருகின்றனர். ஆனால் நான் என்னையும் எனது குடும்பத்தினரையும் இந்திய வம்சாவளித்தமிழர் என்று சொல்லுவதிலும், அது எமது உரிமை என்பதிலும் திடமாக இருக்கின்றேன்.

சீனா, பெர்ளின், ஜெர்மனி, அங்கேரி, இந்தியா, பாகிஸ்தான், ஆபிரிக்கா, அமெரிக்கா, பிரேசில் போன்ற பல்வேறு சர்வதேச நாடுகளின் தொழிற்சங்க மாநாடுகளில் கலந்துகொண்டு அனுபவங்கள் பல பெற்றுள்ளேன்.

அரசியல்துறையில் ஈடுபாடு எவ்வாறு இருந்தது?

ஆம்! அரசியல்துறையில் 1988ஆம் ஆண்டு மத்திய மாகாணசபையில் ஐக்கிய சோசலிச முன்னணி சார்பில் போட்டியிட்டு மலையகத்தைச் சேர்ந்த பி.வி கந்தையாவும், நானும் வெற்றிபெற்று மத்திய மாகாணசபையின் பிரதி எதிர்க்கட்சித் தலைவராகவும் கடமையாற்றியுள்ளேன்.

அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சரத் கோங்காகே, லால் விஜயநாயக்க, போன்றோருடன் மத்திய மாகாண சபையில் பல்வேறு அபிவிருத்தி வேலைகளை பெரும்பகுதிக்குச் செய்தோம். மத்திய மாகாண சபையில் கல்வி அமைச்சராகவிருந்த எஸ்.கே.இராமநாதன் காலத்தில் சீடாத்திட்டத்தின் கீழ் மலையக தோட்டப் பாடசாலைகளுக்கு கட்டடங்களும், கல்வி வளர்ச்சியும் ஏற்பட்டன.

1987 ஆம் ஆண்டு இலங்கை, இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பிரஜா உரிமையும் ஏற்படுத்தப்பட்டது. கல்வித்துறைக்கு அளப்பரிய சேவையைச் செய்யவும், தொண்டர் ஆசிரியர்களை நிரந்தரமாக்கவும் நாம் பல்வேறு போராட்டங்கள் செய்ததன் மூலமாகவே பெருந்தோட்டத்துறையில் கல்வி முன்னேற்றமும், பாடசாலைகளுக்கு கட்டடங்களும் கிடைக்கப்பெற்றன.

1977 ஆம் ஆண்டிற்கு முன்பு தோட்டங்களில் வெளியார் நுழைய முடியாத நிலையிருந்து வந்தது. அதனை தொழிற்சங்கப் போராட்டத்தின்மூலம், அரசியல் மூலம் பெற்றுக் கொடுத்தோம். 1981, 1983, 1986 காலப்பகுதியில் ஏற்பட்ட வன்செயலின் காரணமாக பெருந்தோட்டத்துறையிலும், இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதிகளிலும் பல்வேறு இழப்புகளை நமது சமூகம் சந்தித்துள்ளது.

அதில் எமது குடும்பத்தினரும் பதுளையில் பல்வேறு இழப்புகளிற்கு ஆளாகினர். அரசியல், தொழிற் சங்கத்துறையில் பல்வேறு அனுபவங்களைக் கொண்டதோடு நாட்டில் முற்போக்குக் கொள்கையை இலட்சியமாகக் கொண்டவன் என்ற முறையில் ஜனாதிபதித் தேர்தலில் ஹெக்டர் கொப்பேகடு வையையும், முன்னாள் ஜனாதி பதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் தற்போதைய ஜனாதி பதி அதிமேதகு மஹிந்த ராஜ பக்ஷவையும் ஆதரித்து தேர்தலில் பங்காற்றிய பங்களிப்பும் என் சேவையில் அடங்கும்.

தற்போது தங்களின் செயற்பாடு எப்படி இருக்கின்றது?

சுகவீனம் ஏற்பட்டுள்ளதால் தீவிரமாக பொதுப் பணிகளில் ஈடுபட முடியவில்லை. இருந்தாலும் பல்வேறு பணிகளிலீடுபட்டே வருகிறேன்.

தொழிற்சங்கப்பணியில் செங்கொடிச் சங்கத்தின் செயலாளர் நாயகமாகவும், பெருந்தோட்ட தொழிற்சங்ககூட்டு கமிட்டிக்கு செயலாளர் நாயகமாகவும் பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் தலைவராகவுமிருந்து வருகிறேன்.

இலக்கியத்துறையிலும், சமூகத்து றையிலும் அதிக ஈடுபாடு கொண்டுள் ளேன். அட்டன் தமிழ்ச் சங்கத்தின் நிறுவ னர்களில் ஒருவராகவும், ஆலோசகராகவு மிருந்து வருகிறேன். தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் அடிக்கடி ஆக்கங்களை வெளியிட்டும் வருகிறேன்.

இதைத் தவிர வேறு எந்த அமைப்புகளோடு இருக்கிaர்கள்?

சம்பள (இறப்பர் - தேயிலை) நிர்ணய சபையிலும் நீண்டகாலம் சம்பள உயர்விற்காகப் பணியாற்றிவருகிறேன். இலங்கை, இந்திய வம்சாவளி கூட்டணியின் நிறுவனங்களில் ஒருவரும், தலைவராகவும், அதில் பொதுச் செயலாளராக அமரர் நாவலர் ஏ.இளஞ்செழியனும், இந்திய மக்கள் பேரவையில் அமரர் தொண்டமான் தலைவராகவும், நான் துணைத்தலைவராகவுமிருந்து பணியாற்றி வந்தேன்.

மக்கள், இயக்கம், சோவியத்து நட்புறவுச் சங்கம், சீன நட்புறவுச் சங்கம் போன்றவற்றிலும், இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தில் அமைச்சர் டி.யூ.குணசேகர தலைவராகவும், நான் பிரதித் தலைவராகவுமிருந்து வருகிறேன். மற்றும் நேச்சர் என்ற நிறுவனத்தில் நிறைவேற்று குழு உறுப்பினராகவுமிருந்து வருகிறேன்.

இவற்றையெல்லாம் கணித்துத்தான் 2008ஆம் ஆண்டு அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சேவையை தொழிற்சங்க, அரசியல் பணியில் வெற்றியீட்டிய 10 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கிக் கெளரவித்தார். அதில் மலையகத்தைச் சேர்ந்த எம்.எஸ்.செல்லச்சாமியும் நானும் கெளரவிக்கப் பட்டோம்.

உலகப் புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியையும், ஐக்கியநாடு நியூயோக் நகரையும் மனைவி திருமதி ருக்மணி விஜயலெட்சுமி, மகன், மருமகள் பேரப்பிள்ளைகளுடன் பார்வையிட்டதை பெருமையாக நினைவு கொள்கிறார். மனைவி ஓய்வுபெற்ற முன்னாள் அதிபராவார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.