புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
பொதுமக்களுக்கு உயிராபத்து ஏற்படுத்தாத வகையில் இராணுவத்தினர் யுத்தத்தை நடத்தினர்

சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ்

பொதுமக்களுக்கு உயிராபத்து ஏற்படுத்தாத வகையில் இராணுவத்தினர் யுத்தத்தை நடத்தினர்

எல்.ரி.ரி.ஈ. யின் யுத்தக்குற்றச்சாட்டுக்களை கண்டிக்க சர்வதேச சமூகம் தவறிவிட்டது. எமது அயல்நாடான இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு இந்தியப் பிரஜைகளின் நாட்டுப்பற்றுதான் பிரதான காரணம் என்று ஒரு வரலாற்று ஆசிரியர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பல அரசியல் இருக்கின்றன. அவற்றுக்கிடையில் பலத்த போட்டியும், பொறாமையும் இருந்து வருகின்றன.

இந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் வாய்த் தர்க்கங்களுடன் நின்றுவிடாமல் தங்களுக்கிடையில் கைகலப்புகளிலும் பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் அவைக்குள்ளேயே ஈடுபடுவார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் முகம் பார்த்து பேசாத அளவுக்கும் அரசியலில் எதிரிகளாக இருப்பார்கள்.

தங்கள் நாட்டுக்கு இன்னுமொரு நாட்டில் இருந்து இராணுவரீதியில் ஆபத்து வருகிறது என்ற செய்தியைக் கேட்டவுடன் இந்தியாவிலுள்ள சகல கட்சிகளும், தங்கள் அரசியல் கருத்து வேற்றுமைகளை மறந்து நாம் அனைவரும் இந்தியர், என்ற ஒரு குடையின் கீழ் வந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக தியாக உணர்வுடன் செயற்படுவார்கள்.

1960ம் ஆண்டு ஆரம்பத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லை யுத்தம் ஒன்று மூண்டது. அன்று இந்திய இராணுவம் இந்த அளவுக்கு படைப் பலத்தைக் கொண்டிருக்கவில்லை. பலம் வாய்ந்த சீன இராணுவத்தை எல்லையில் வைத்து எதிர்நோக்குவதற்கு நல்ல பீரங்கிகள் கூட இந்தியாவிடம் இருக்கவில்லை.

அப்போது இந்திய பிரதமராக இருந்த ஸ்ரீ ஜவகர்லால் நேரு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் “நாம் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுத்து, எதிர்தாக்குதல் நடத்துவதற்கு எம்மிடம் குறைந்த பட்சம் 1000 பெட்டன் தாங்கிகளாவது இருக்க வேண்டும். இதற்கு மக்கள் இந்திய அரசுக்கு உதவி செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இந்த உரையைக் கேட்ட இந்தியாவெங்கிலும் உள்ள மக்கள் இன, மத, பிரதேச பேதமின்றி தங்களிடமுள்ள தங்க நகைகள் அனைத்தையும் கொண்டுவந்து அரசாங்கத் தலைவர்களிடம் ஒப்படைத்தனர். நாட்டுக்கில்லாத தங்க நகைகள் எங்களுக்கு அவசியம் இல்லை என்று கூறி நாட்டுப்பற்றுடன் இந்தியர்கள் செய்த அர்ப்பணிப்பினால் இந்திய இராணுவத்திற்கு அந்த தங்க நகைகளை வைத்து 1000 பெட்டன் தாங்கிகளை வாங்கக் கூடியதாக இருந்தது.

இது ஒரு உண்மை நிகழ்வு. அவ்விதம் தான் இந்தியர்கள் தேசப்பற்றுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இலங்கையில் அந்தளவிற்கு தேசப்பற்று இருக்கிறதென்று நாம் கூறினால் அதனை எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

எங்களில் சிறு எண்ணிக்கையினரே நாம் இலங்கையர் என்ற உணர்வுடன் இருக்கிறோம். பொதுவாக நாம் கொழும்புத் தமிழர், யாழ்ப்பாணத்துத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர், மலையகத் தமிழர் என்றும் அது போன்றே முஸ்லிம்களும் கொழும்பு முஸ்லிம்கள், கிழக்கு மாகாண முஸ்லிம்கள், தென்னிலங்கை முஸ்லிம்கள் என்றும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். சிங்களவர்களும் கண்டி சிங்களவர், கீழைத்தேய சிங்களவர் என்று தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதுடன் தங்களைச் சேர்ந்த குலத்தையும் பெருமையாக பேசுவார்களே ஒழிய நாம் இலங்கையர் என்ற உணர்வுடன் பேசுவது மிகவும் குறைவாகவே இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் பயங்கரவாத யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தினர் பொது மக்களை சுட்டுக்கொன்று யுத்தக் குற்றங்களை செய்தனர் என்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கப் போகிறேன் என்று கூறிய செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தவுடன் நாட்டுப்பற்றுடையவர்கள் நவநீதம்பிள்ளை அநாவசியமாக இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுகிறார் என்று அவரை கண்டிக்கக்கூடிய வகையில் அபிப்பிராயத்தை தெரிவித்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் “நாம் நவநீதம்பிள்ளை அம்மையாரின் அறிக்கையை வரவேற்கிறோம். இவ்அறிக்கையை அவர் சொல்லில் அல்ல செயலிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.” என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

இந்தக் கருத்தை நாம் சற்று அமைதியாக இருந்து சிந்தித்துப் பார்த்தால் அதன் உண்மையான தாற்பரியத்தை நாம் புரிந்துகொள்ளலாம். அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட அரசியல் கொள்கைகள் உண்டு என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் எந்தவொரு அரசாங்கத்துக்கும் பக்கச்சார்பாக செயற்படவேண்டிய அவசியமும் இல்லை.

அரசாங்கத்தின் குற்றம் குறைகள் இருந்தால் அவற்றை பகிரங்கமாக சுட்டிக்காட்டி, அவற்றைத் திருத்தியமைப்பது அரசியல் வாதிகளின் கடமையாகும். ஆனால் எந்தவொரு அரசியல் வாதியும் தேசத்திற்கு தீங்கிழைக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பது தவறு.

நவநீதம்பிள்ளை விவகாரத்தில் அந்தப் பெண்மணி இலங்கைக்கு எதிராக தன் அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டும் என்பதையே தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் இந்த அறிக்கையின் மூலம் வழியுறுத்தியுள்ளார்கள்.

இது தேசப்பற்றுடையவர்கள் செய்யும் செயல் அல்ல என்பதே எமது நிலைப்பாடாகும். நவநீதம்பிள்ளை அம்மையார் இலங்கை இராணுவம் யுத்தக்குற்றச் செயல்களில் ஈடுபட்டது என்று பிரிட்டனின் செனல் 4 தொலைக்காட்சிச் சேவையின் நிகழ்ச்சியொன்றைப் பார்த்த பின்னர் தீர்மானித்தாரோ தெரியவில்லை.

என்றாலும் அரசாங்கம், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செனல் 4 தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்ட குற்றச் சாட்டுக்கள் குறித்து சரியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். என்று விடுத்த பரிந்துரைக்கமைய அரசாங்கம் இராணுவத் தளபதியினூடாக இராணுவ நீதிமன்றம் ஒன்றை அமைத்து அதுபற்றிய விசாரணையை நடத்தியது.

இந்த இராணுவ நீதிமன்றம் நடத்திய விசாரணையின் பின்னர் தனது மீளாய்வு அறிக்கையை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு சமர்ப்பித்துள்ளது. இவ் அறிக்கையில் இராணுவம் இந்த பயங்கரவாத யுத்தத்தை சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் மேற்கொண்டதாகவும் அதன் விதிகளுக்கு அமைய பொதுமக்களுக்கு எவ்வித உயிராபத்தும் ஏற்படுத்தாத வகையில் யுத்தம் நடத்தப்பட்டது என்பதை தமது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்டம் சகல இராணுத்தினருக்கும் கற்றுக்கொடுக்கப்பட்டதனால் அவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நடந்துகொள்ளவில்லை. மக்களை மனித கேடயமாக வைத்து அவர்களுக்குப் பின்னால் மறைந்திருந்து எல்.ரி.ரி.ஈ. யினர் இராணுவத்தினரை நோக்கி துப்பாக்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்ட போதிலும் இராணுவத்தினர் பொறுமையுடன் பொதுமக்களுக்கு உயிராபத்து ஏற்படாத வகையில் அவதானமாக யுத்தத்தை நடத்தியதாகவும் இவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளே, தங்களிடமிருந்து, இராணுவத் தரப்புக்கு அடைக்கலம் தேடி ஓடி வந்த அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர் என்றும் அவ்வியக்கத்தினரே சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களை போராளிகளாக சேர்த்துக் கொண்டார்கள் என்றும் இதன்மூலம் எல்.ரி.ரி.ஈ யினரே யுத்தக்குற்றச் சாட்டுக்களைப் புரிந்தார்கள். ஆயினும் அவைகுறித்து சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்று இராணுவ நீதிமன்றம் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விதம் தங்களுக்கெதிரான யுத்தக்குற்றச் சாட்டுக்களைப் பற்றி விசாரணை செய்வதற்கு இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும், நவநீதம்பிள்ளை அம்மையார் ஒன்றுமே தெரியாத சின்னப் பாப்பாவைப் போல் கடந்த ஆண்டில் தெரிவித்த அதே குற்றச் சாட்டுக்களையே இவ்வாண்டிலும் இலங்கை மீது சுமத்துவது எமக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.