புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
ஜானகி கொடுத்த எம்.ஜி.ஆர். ஜhதகம்

னகி கொடுத்த எம்.ஜி.ஆர். ஜhதகம்

தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்ற பலரோடு ஓரளவுக்காவது நட்பு இருந்ததால், மற்ற பத்திரிகையாளர்கள் பலரை விட எனக்கு இவர்களைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கொஞ்சம் அதிகமாக இருந்தது. எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்ட போது, பலரும் அவருடைய அரசியல் அத்தோடு முடிந்து விட்டதாகத்தான் நினைத்தார்கள். ஆனால் நான் ‘வென்று காட்ட வேண்டும்’ என்ற அவருடைய மன உறுதியின் காரணமாக, தனது உடல் நிலையுடன் போராடி, அவர் மீண்டும் இயங்குவார் - என்று நம்பினேன். எழுதவும் செய்தேன். அந்த நேரத்தில் ஜானகி அம்மாளிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

ஆஸ்பத்திரியில் எம்.ஜி.ஆர்.அருகில் இருந்த ஜானகி அம்மாளைச் சந்திக்கச் சென்றேன். அவர் எம்.ஜி.ஆரின் ஜாதகத்தை ஒரு காகிதத்தில் குறித்து வைத்து இருந்தார். அதை என்னிடம் கொடுத்து,

“உங்களுக்குத் தெரிந்த நல்ல ஜோசியர் யாரிடமாவது கொடுத்து, இவருடைய உடல்நிலை பற்றி கணித்து சொல்லச் சொல்லுங்கள். எனக்கு ரொம்பவும் கவலையாக இருக்கிறது. ஜோசியர்கள் கூறுவது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார். எம்.ஜி.ஆரை அரசியல் ரீதியாக நான் கடுமையாக விமர்சனம் செய்தும் கூட, அவர் அதைத் தனிப்பட்ட விரோத பாவத்தில் எடுத்துக் கொள்ளாததால், இந்தக் காரியத்துக்கு என்னை பயன்படுத்த ஜானகி அம்மாள் முடிவெடுத்திருந்தார். நான் என் நண்பன் ஒருவன் மூலமாக, மூன்று பிரபல ஜோதிடர்களோடு தொடர்பு கொண்டேன். மூவரும் தனித்தனியாக எம்.ஜி.ஆர் ஜாதகத்திற்குப் பலன் கூறினார்கள். பல கருத்து வித்தியாசங்கள் அவர்களுடைய கணிப்புகளுக்கிடையே இருந்தன. ஆனால் மூன்று விஷயங்களில் அவர்கள் மூவருடைய கணிப்புகள் ஒன்றை ஒன்று பெரும் பாலும் ஒத்திருந்தன. ‘எம்.ஜி.ஆர். உடல் நலம் தேறிவிடும். வெளிநாட்டில் சிகிச்சை நடக்க வாய்ப்புண்டு - அரசியலில் அவருடைய முக்கியத் துவம் தொடரும்’ என்று அவர்கள் மூவருமே அபிப்பிராயப்பட்டார்கள்.

ஜோதிடர்கள் கூறிய கணிப்புகளையெல்லாம் விவரமாக எழுதி, ஜானகி அம்மாளிடம் சேர்ப்பித்தேன். அவருக்கு படு திருப்தி. இதன் பிறகு எம்.ஜி.ஆர் அமெரிக்கா சென்று அங்கிருந்தே தேர்தலில் வென்று, சென்னை திரும்பினார். அதன் பிறகு ஒரு முறை அவரைச் சந்தித்தேன். அவரால் பேச இயலவில்லை. எதுவும் பேசாமல் என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். சிறிது நேரம் அப்படியே இருந்தோம். அவரால் பேச இயலாத போது, எனக்கு எதுவும் பேச மனம் வரவில்லை. மெளனமாகவே அவருடைய பிடியில் நின்று கொண்டிருந்தேன். அதுதான் எம்.ஜி.ஆருக்கும் எனக்குமுடையே நடந்த கடைசி சந்திப்பு.

மீண்டும் பதவிக்கு வந்து அதன் பிறகு, எம்.ஜி.ஆர் காலமானவுடன், ஜானகி முதலமைச்சரானார். அப்போது அ.இ.அ.தி.மு.க பிளவுபட்டிருக்க, ஜெயலலிதாவிடம் 34 எம்.எல்.ஏ.க்களும், ஜானகி தரப்பில் 97 எம்.எல்.ஏ.க்களும் இருந்தார்கள். கூடுதல் ஆதரவு இருந்தால் தான் ஜானகி அரசு தொடர முடியும் என்ற நிலை. அ.இ.அ.தி.மு.கவுடன் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி இருந்தது. ஆனால் ஜானகியை காங்கிரஸ் ஆதரிக்குமா, ஆதரிக்காதா என்ற கேள்வி பெரிதாக எழுந்து விட்டிருந்தது.

அநேகமாக காங்கிரஸ் ஆதரவு ஜானகிக்குக் கிட்டாது என்ற நிலை உருவாகிக் கொண்டிருந்தது. ஜானகி அரசு தொடர்வதில் ஆர்.எம்.வீ.பெரும் ஆர்வம் காட்டினார்.

கடும் முயற்சிகளைச் செய்தார். ‘தான் எந்த இழப்பைச் சந்தித்தாலும் பரவாயில்லை, இந்த அரசு தொடர வேண்டும்’ என்று முடிவெடுத்து, காங்கிரஸ் ஆதரவைப் பெற, அவர் செய்த முயற்சிகள் கொஞ்ச நஞ்சமில்லை.

ஜானகி அரசு அப்போதைக்குத் தொடருவது தான், தமிழக அரசியலுக்கு நல்லது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டிருந்ததால், நான் ஆர்.எம்.வீ.யைச் சில முறை சந்தித்தேன். ஜானகி அரசு பிரமாதமாக நிர்வாகம் நடத்தி விடப்போகிறது என்று நினைத்துக் கொள்ளும் அளவுக்கு, என்னை முட்டாள் தனம் கல்விக் கொள்ளவில்லை. அந்த அரசு தொடர வேண்டும் என்று நான் நினைக்க காரணம் இதுதான். ஒரு தேசிய கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு எப்போதுமே உண்டு. தப்பித் தவறி அது நடந்தால், காங்கிரஸ் மூலமாகத்தான் நடக்க வேண்டும் என்பது அப்போது இருந்த நிலை. இரு கழகங்களே ஒன்றுக்கொன்று மாற்று - என்ற நிலை நீடிக்கும் வரை தேசியக் கட்சி ஆட்சி அமைப்பது நடக்காத காரியம் என்ற உண்மையை நானும் உணர்ந்திருந்தேன். எம்.ஜி.ஆர் மறைந்து, அ.இ.அ.தி.மு.க வை பலவீனமாகவே வைத்து, அதன் உதவியைப் பெற்று, ஆட்சி அமைக்க காங்கிரஸ¤க்கு ஒரு வாய்ப்பு தோன்றி இருக்கிறது. அதை நழுவ விடக்கூடாது என்று நான் நினைத்தேன்.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஜானகியை ஆதரிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், டெல்லியில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு ராஜீவ் காந்தி ஒரு விருந்து கொடுத்தார். அழைக்கப்பட்டிருந்த மிகச் சிலரில் நானும் ஒருவன். அந்த விருந்தின்போது என்.டி.திவாரி, வசந்த் சாத்தே போன்ற காங்கிரஸ் தலைவர்களிடம் நான் என்னுடைய அபிப்பிராயங்களைக் கூறிக் கொண்டிருந்தேன். வசந்த் சாத்தே, ‘நீ இதை ராஜீவ் காந்தியிடம் சொல்’ என்று வற்புறுத்தி விட்டு, ராஜீவிடம் சென்று, ‘உங்களோடு தனியே பேச சோ விரும்புகிறார்’ என்று சொன்னார்.

ராஜீவ் காந்தியும், நானும் விருந்து நடந்த ஹாலில் ஒரு ஒதுக்குப் புறத்துக்குப் போனோம். ‘அவர் என்ன விஷயம்?’ என்று விசாரித்தார்.

நான் என் கருத்தை விவரித்தேன். ‘ஜானகி அரசை ஆதரிக்காமல், அது கவிழ்வதற்கு வழி செய்ய நீங்கள் முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது. இது காங்கிரஸ¤க்கு நல்லதல்ல என்பது என் அபிப்பிராயம். ஜானகி அரசு பதவியில் தொடர்ந்தால், அவர் நடத்துவது ஒரு பொம்மை அரசாகத்தான் இருக்கும். மற்ற மாநிலங்களில் இருக்கக் கூடிய காங்கிரஸ் அரசுகளை விட, உங்களிடம் அதிகமாகக் கீழ்ப்படிந்து அந்த அரசு நடக்கும். அதனால் தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சி பெற வாய்ப்பு உருவாகும். ஒரு நிபந்தனையுடன் நீங்கள் ஜானகி அரசை ஆதரிக்கலாம். இரண்டு அணிகளும் ஒன்றாகி, எம்.ஜி.ஆர். கட்சி ஒற்றுமையாக விளங்கும் என்ற எதிர்பார்ப்பில் -எம்.ஜி.ஆர் நினைவாக’ நீங்கள் ஆதரவு தருவதாகச் சொல்லுங்கள்.

ஜானகி முதல்வராக இருக்கும் போது இணைப்புக்கு ஜெயலலிதா சம்மதிக்கப் போவதில்லை. ஆகையால் நீங்கள் கோரும் ஒற்றுமை ஏற்படாது. அதையே காரணம் காட்டி, ஜானகிக்கு அளித்த ஆதரவை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாபஸ் பெறலாம். எம்.ஜி.ஆர். மீது உங்களுக்கு இருந்த அன்பின் காரணமாகத்தான், அவருடைய கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்து, நீங்கள் ஜானகியை ஆதரிப்பதாக பெரும் பிரச்சாரம் நடத்தி விடலாம். அந்த நிலையில் ஜானகியின் அ.தி.மு.கவை ஜுனியர் கட்சியாக வைத்து, ஒரு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்து, காங்கிரஸ் வெற்றி பெறும் வாய்ப்பை உருவாக்க முடியும்.”

இதையெல்லாம் நான் ஒரே மூச்சில் சொல்லி விடவில்லை. ராஜீவ் காந்தி கேட்கக் கேட்க விளக்கமளித்துக் கொண்டிருந்த போது இதையெல்லாம் சொன்னேன். நான் மேலும் சென்னேன். “நான் சொல்வதற்கு மாறாக நீங்கள் ஜானகி அரசு கவிழ வழி செய்து விட்டால், அது ஜெயலலிதாவுக்கும், தி.மு.க.வுக்கும் தான் உதவியாக அமைந்து விடும். தமிழகத்தில் தி.மு.க. அல்லது அ.தி.மு.கவுடன் ஒரு கூட்டணியில், ஜுனியர் கட்சியாக இடம்பெறுவது தான் காங்கிரஸின் தலையெழுதது என்ற நிலை உறுதி செய்யப்பட்டு விடும். ஏனென்றால், ஜானகி அரசு கவிழ்ந்தால் ஜெயலலிதா வலுவடைவார். அதன் பிறகு அவருடைய அ.இ.அ.தி.மு.க., எம்.ஜி.ஆரின் வாரிசுக் கட்சி ஆகி விடும்.

ஏற்கனவே பலம் மிக்க ஒரு கருணாநிதி இருக்கிறார். ஜெயலலிதா உருவில் இன்னொரு கருணாநிதியை நீங்கள் உருவாக்குவீர்கள். அவர்கள் இருவரில் ஒருவருக்குக் கீழ்ப்படிந்து தான் தமிழகத்தில் காங்கிரஸ் நடக்க வேண்டும் - என்ற நிலை மீண்டும் வரும். ஆனால் இப்போது ஜானகி அரசு பதவியில் தொடர்ந்து விட்டால், ஜெயலலிதா அணி கலகலத்து விடும். இப்போதைக்குத் தேர்தல் கிடையாது என்று ஆகிவிடுவதால், அவரிடம் இருக்கும் 34 எம்.எல்.ஏ.க்களில் முக்கால்வாசி பேர், பதவிகளை நாடி ஜானகியின் பக்கம் வந்துவிடுவார்கள். ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சி இப்படி தடைப்படுவது காங்கிரஸ¤க்கு நல்லது. தி.மு.கவுக்கு மாற்று காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியே என்ற நிலையை உருவாக்க இதுதான் வழி.”

நான் இப்படிச் சொன்னதை ராஜீவ் காந்தி ஏற்று இருப்பாரோ மாட்டாரோ எனக்குத் தெரியாது. இந்த விளக்கங்களை நான் அளித்துக் கொண்டிருந்த போது மூப்பனாரும், சிதம்பரமும் இடையில் வந்து அந்த உரையாடலில் கலந்து கொண்டார்கள். அவர்கள் இருவரும் நான் சொன்னதை ஏற்க வில்லை. ஜானகி அரசு கவிழ்ந்து தேர்தல் வந்தால், காங்கிரஸ் தனித்தே போட்டியிட வேண்டும் என்பது அவர்கள் அபிப்பிராயமாக இருந்தது என்பதை அவர்கள் அப்போது சொல்லாவிட்டாலும், அது ஊரறிந்த விஷயமாகவே இருந்தது.

ராஜீவ் காந்தி, “பணம் கொடுத்து காங்கிர”ஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரை, தங்கள் பக்கம் இழக்க ஜானகி அணி முயற்சித்திருக்கிறது. அப்படிப் பட்டவர்களுக்கு எப்படி ஆதரவு கொடுப்பது?” என்று கேட்டார்.

நான், “அவர்கள் அந்த மாதிரி செய்திருக்கிறார்களாக என்பது எனக்குத் தெரியாது. அப்படி அவர்கள் முயற்சிகள் செய்திருந்தால், அந்த நிலைமைக்கு உங்கள் கட்சி தான் அவர்களை விரட்டி விட்டது என்று சொல்வேன். ஆதரவு தரப்போகிaர்களா இல்லையா என்பதை கடைசி நிமிடம் வரை சொல்லாமல் இருந்தால், அவர்கள் நம்பிக்கை இழந்து ஏதாவது செய்ய முயற்சித்திருக்கலாம். அது தவறுதான். ஆனால், இப்போது ஜானகி அரசு கவிழ்வது எதிர்காலத்தில் ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களுக்குத் தான் உதவும். பிறகு காங்கிரஸ், அவர்களில் ஒருவரின் தயவை நாடி நிற்க வேண்டி இருக்கும்” என்றேன்.

மூப்பனாரும், சிதம்பரமும் என் கருத்துக்களை எதிர்த்து, ராஜீவ் காந்தியிடம் பேசினார்கள். ராஜீவ் காந்தி தீர்மானமான பதில் எதையும் என்னிடம் கூறவில்லை. மேலும் சில முயற்சிகளைச் செய்துவிட்டு, நான் சென்னை திரும்பினேன். காங்கிரஸ், ஜானகியை ஆதரிக்க மறுத்தது. ஜானகி அரசு அல்பாயுசில் கவிழ்ந்தது. அது எதிர்காலத்தில் ஜெயலலிதாவுக்கு உதவியது. கருணாநிதிக்கும் உதவியது. ஆனால் காங்கிரஸிற்கு உதவவில்லை.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். தமிழக மக்கள் இரு கழகங்களின் ஆட்சியில் அலுத்துப் போய்விட்டதால், காங்கிரஸ் தனியாக நின்றால் அதற்கு ஓட்டளிப்பார்கள் என நம்பிக்கை தேசியவாதிகள் மத்தியில் தொடர்ந்து பல வருடங்களாக இருந்து வந்திருக்கிறது. மூப்பனாரும், சிதம்பரமும் அப்போது அப்படித்தான் நம்பினார்கள். மக்களை அவ்வளவு தூரம் நம்பிவிட நான் தயாராக இல்லை. மக்கள் காங்கிரஸை ஏமாற்றினார்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.