புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
 கைதகள்

ஹோட்டலில் டேபிள் முன் உட்கார்ந்திருந்தவர் டாம்பீகமாக உடைதரித்து, வைர மோதிரமும் அணிந்திருந்தார். கொதிக்க கொதிக்க சாம்பாரை அவர் சட்டைக்குள்ளாகக் கவிழ்த்து விட்டு, அவர் பின்னால் நின்ற செர்வர் அங்கேயே மூர்ச்சையானான்.

டாம்பீகப் பேர்வழி குதியாய்க் குதித்தார். செர்வரை உள்ளே நாலு பேராகத் தூக்கிக் கொண்டு சென்று ஒரு கட்டிலில் போட்டு, ஆசுவாசப்படுத்தப் பார்த்தார்கள். அவன் கண் திறக்கவே இல்லை. அரை மணி கழித்து, ஒருவர், “இனி டாக்டரைக் கூப்பிட வேண்டியதுதான்!” என்றவுடன் அவன் துள்ளி எழுந்தான்.

“வேண்டாம் டாக்டர்!” என்று கூறிவிட்டு, செர்வர் தன் கதையைச் சொன்னான்.

“சுமார் பதினைந்து வருஷத்துக்கு முன் ஒரு கம்பெனியில் நான் காஷியராக இருந்தேன். அப்போது மாதம் பத்து ரூபாய் கையாடிக் கொண்டே வந்தேன். இப்படியாகப் பல வருஷங்கள் சேர்ந்து, என் பேரில் பாங்கில் ஐந்நூறு ரூபாய் இருந்தது.

ஒரு நாள் மார்பு வலியால் நான் சிரமப்பட்டு, ஒரு வைத்தியரைப் பார்த்தேன். அவர் என் மார்பைத் தட்டிப்பார்த்துவிட்டு, ‘பெரிய டாக்டரிடம் காண்பியும்’ என்று ஐந்து ரூபாய் பீஸ் வாங்கிக் கொண்டார். பெரிய டாக்டர் பதினைந்து ரூபாய் பீஸ் பெற்றுக்கொண்டு, ‘இருதய ஸ்பெஷலிஸ்டிடம் போய்ப் பாரும்’ என்றார்”

“இருதய ஸ்பெஷலிஸ்ட் நூறு ரூபாய் பீஸை முன்னதாக வாங்கிக் கொண்டு, “நீர் ஒரு வாரத்துக்குள் இறந்துபோவீர்” என்றார்.”

“என் மனதில் ஏக்கம் பற்றிக் கொண்டது. இருக்கும் ஒரு வாரத்துக்குள் ஏதாவது நல்ல காரியம் செய்து விட்டுச் சாகலாமென்று தீர்மானித்து கம்பெனி முதலாளியிடம் சென்றேன். என் அயோக்யத்தனத்தை ஒப்புக்கொண்டு, அன்றுவரை திருடிய பணத்தைக் கொடுத்தேன். அவர் அதை வாய் திறக்காமல் பெற்றுக் கொண்டு ‘இன்று முதல் உன்வேலை தேவையில்லை’ என்று துரத்தினார்.

“அதற்குப் பிறகு, பத்து வருஷம் அல்லாடினேன். நான் பார்க்காத வேலையில்லை, படாத கஷ்டம் இல்லை. இன்று நீங்கள் “டாக்டர்” என்றதைக் கேட்டதும் பயந்து எழுந்திருந்தேன்.”

இப்படிக் கதை முடிந்தவுடன் சுற்றியிருந்தவர்கள் “ஏன் ஐயா! உம்மைப் பற்றி டாக்டர்கள் சொன்னது பொய் என்றால், இன்று ஏன் மூர்ச்சையடைந்தீர்?” என்றார்கள். “நான் உண்மையில் மூர்ச்சை அடையவில்லையே! அந்த டம்பப் பேர்வழியின் தலையில் சாம்பாரைச் சூடாகக் கொட்ட வேண்டுமென்று எனக்கு வெகு நாளைய ஆசை. இன்று அதை தீர்த்துக் கொண்டேன்.”

“யார் அந்தப் பேர்வழி?” “அவர்தான் நான் முன்பு வேலை செய்த கம்பெனியின் முதலாளி.”


வேலாயுதம் ஒரு பெரிய மிட்டாய்க் கடையில் வேலைக்கு அமர்ந்தான். தனது கவலையெல்லாம் தீர்ந்தது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டான். ஆனால் மறுநாளே அவனுக்குக் கிடைத்த வேலை போய் விட்டது. எப்படியென்று கேளுங்கள்:

கடை முதலாளி சற்று வெளியே போய் வந்தார். அப்போது வேலாயுதம் கடையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயம் முதலாளியைப் பார்க்க ஒருவர் வந்து விட்டுப் போனார். அந்தத் தகவலைச் சொல்ல அவன் மறந்து போய் விட்டான்.

மறுநாள் எஜமானன் அவனைக் கூப்பிட்டு, “நேற்று ஒருவர் என்னைத் தேடினாரா?” என்று கேட்டார்.

“ஆமாம்.”

“நான் வந்தவுடன் அதை ஏன் என்னிடம் சொல்ல வில்லை? உடனே அதை ஒரு காகிதத்தில் குறித்துக் கொள்வதுதானே?”

“எனக்கு எழுத வராது, சுவாமி!”

“ஓஹோ! அப்படியா? அது சமாசாரம் எனக்குத் தெரியாதே! எழுத்து வாசனை இல்லாத பசங்கள் நம்ம கடைக்கு வேண்டாம்!” என்று கூறி அவனை வெளியே விரட்டி விட்டார்.

இருபது வருஷங்கள் சென்றன. கடைத் தெருவில் பிரம்மாண்டமான கட்டடம் கட்டிக் கொண்டு வியாபாரம் நடத்துகிறார் வேலாயுதம் பிள்ளை என்பவர். அவருக்கு டவுன் எக்ஸ்டென்ஷனில் அழகான பங்களா இருக்கிறது; அவருக்கு இப்போது லட்ச ரூபாய்க்கு மேல் ஆஸ்தி இருக்குமென்று சொல்கிறார்கள்.

அவருடன் இன்று ஒரு பெரிய வியாபார ஒப்பந்தம் பேசி முடித்திருந்த சில வியாபாரிகள் கையொப்பமிடப் பத்திரங்களைக் கொண்டு போனார்கள். வேலாயுதம் பிள்ளை அவற்றைப் பார்த்து விட்டு, “போங்கள் நம்ம மானேஜர் கையொப்பமிடுவார்!” என்றார்.

வியாபாரிகளுக்கு உடனே “இவர் தற்குறி ஆயிற்றே!” என்ற ஞாபகம் வந்தது.

“ஆஹா! சொந்த சாமர்த்தியத்தால் லட்சாதிபதி பிரபு வாகியிருக்கும் தாங்கள் படித்துமிருந்தால் இப்போது எப்படி இருப்பீர்களோ!” என்றார் ஒரு வியாபாரி.

வேலாயுதம், “எப்படி இருப்பேனா? இப்போதும் பழைய மிட்டாய்க் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பேன்!” என்றார் ஒரு புன்னகையுடன்.


பெரிய பொம்மைக் கடை. வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. சூட்தரித்த ஒருவன் வெகு அலட்சியமாக நுழைந்தான். கடை முதலாளி அவனைக் கவனிக்கவில்லை.

ஒரு முறை அவன் கடை முழுவதும் கண்ணை ஒரு ஓட்டம் ஓட்டினான். பொம்மைக் கடையில், ஒரு ஸ்டூலின் மேல் உட்கார்ந்த நிலையில் இருந்த ஒரு நாய் அவன் கண்ணில்பட்டது.

“இது நாயா?” என்று சொல்லி அவன் ஓர் அவுட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

முதலாளி அவன் பக்கம் கூடத் திரும்பவில்லை.

அவன் தொடர்ந்து, “ரொம்ப அழகாகச் செய்து விட்டான் ஒரு மடையன், இதையும் ஒரு நாய் என்று! கண்ணைக் கட்டி விட்டால் கூட நான் இதைவிட நன்றாகச் செய்து விடுவேன். நாயின் காது இப்படியா தொங்கும்? அல்லது அதன் கால்கள் இப்படியா மடிந்திருக்கும்? யாராவது பார்த்ததுண்டா?” என்றான்.

கடைக்காரர் பதில் பேசாமல் வியாபாரம் நடத்திக் கொண்டிருந்தார். வந்தவன் மேலும் சொன்னான்:

“நாயாம், நாய்! இதைச் செய்தவன் உயிருள்ள நாயைப் பார்த்திருக்கிறானோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது! நாயின் நகம் இப்படியா வளைந்திருக்கும்! அல்லது அதன் பற்கள்தான் இப்படி இருக்குமா? நாயின் வாலைப் பாருங்கள்? இது நாயின் வாலா, சார்? அல்லது நரியின் வாலா?”

கடைக்காரர் வாயே திறக்கவில்லை. அவருடைய பிள்ளை எட்டு வயது பாலன், உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் அவர் அவன் பக்கம் திரும்பினார். அதே சமயம் ஸ்டூலின் மீது இதுவரை ஆடாமல் அசங்காமல் சிலை போல் உட்கார்ந்து கொண்டு இருந்த நாய் அவனிடம் பாய்ந்து சென்றது.

சூட் போட்டு வந்த இளைஞன் பேசாமல் வெளியே சென்றான். கடைக்காரர் புன்னகை செய்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.