புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
நவபாரத சிற்பி நேரு

நவபாரத சிற்பி நேரு

அனுபவத்தைச் சொல்லும் புத்தகங்கள்

புத்தங்கள் இல்லையேல் மனித நினைவாற்றலையும், மரபுகளை மட்டுமே எதிர்பார்த்துக் கிடக்கவேண்டும். இவற்றிக்கும் மதிப்பு உண்டுதான்.

புத்தங்கள் நமது முன்னோர்களின் அனுபவத்தை நமக்கு கொண்டு தருகின்றன. புத்தங்கள் பரவலாகக்கிடைக்கவில்லை என்றால் மேல்மட்டத்தினர் மட்டுமே அவற்றை வைத்திருப்பார்கள்.

அச்சு வேலை பரவியதும், அறிவு பெறும் வாய்ப்புகளும் பரவியுள்ளன. பலவகையான முன்னேற்ற வாய்ப்புகளும் பெருகியுள்ளன.

முக்கியமாக எழுத்தாளர்களும். அவருடன் புத்தகத் துறையிலுள்ள மற்றவர்களும் சிந்தித்துச் செயல்பட யோசனையாகக் கூறுகிறேன்.

புத்தங்கள் அதிகம் பரவ வேண்டுமானால் அவை மலிவான விலையில் இருக்க வேண்டும். புத்தங்கள் எளிய நடையில் எழுதப்பட்டால்தான் நிறையப் படிக்கப்படும். ஒன்று மற்றொன்றுக்கு எடுத்துச் செல்லும் தொடர் இது. இல்லையேல் அளவு சுருங்குகிறது. இதன், பயனாக படிப்பவர்கள் எண்ணிக்கை பரவாமல் போகிறது.

(1958டிசம்பர்19ல் ஒரு புத்தக வெளியீட்டு விழாவின்போது நேரு உரையாற்றினார். அதிலிருந்து...)
 

பூர்வீகம்

நேரு காந்திஜீயுடன்

காஷ்மீரிலுள்ள ராஜகெளல் என்னும் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேருவின் குடும்பத்தினர். பல தலைமுறைக்கு முன்பு இவர்கள் டெல்லிக்கு வந்து ஆக்ராவில் குடியேறினார்கள்.

அப்போது டெல்லியை ஆண்ட ஒரு மன்னன் ஆக்ராவில் சன்மானமாக வழங்கிய இடத்தில்தான் அவர்கள் குடியேறினார்கள். குடியேறிய இடம் ஒரு கால்வாய் கரையில் இருந்தது.

இந்தியில் நகர் என்றால் கால்வாய் என்று அர்த்தம். கால்வாய் அருகிலுள்ள குடும்பத்தார் என்று குறிப்பிட்ட நகர் குடும்பத்தார் என்று வழங்கியதுதான் நகர்-நகரு-நெஹ்ரு நேரு என மருவியது என்பார்கள்.

ஆக்ராவில் இருந்த குடும்பத்தை வியாபாரத்தின் பொருட்டு அலகாபாத்திற்கு மாற்றிக்கொண்டு வந்துவிட்டது. அலாகாபாத்தில் முதலில் சாதாரண வீட்டில் குடியேறினர். பின்பு சுற்றிலும் தோட்டத்தைக் கொண்ட ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்கினார். மோதிலால் நேரு பிறகு அந்தப் பழைய வீட்டை இடித்து, அங்கு பிரம்மாண்டமான அரண்மனையைக் கட்டினார். அதற்கு ஆனந்த பவனம் எனப்பெயரிட்டார். அந்த அரண்மனை மாதிரி வீட்டில்தான் ஜவகர்லால் நேரு பிறந்தார்.

தவமிருந்து பிறந்த பிள்ளை

நேரு என்பது குடும்பப் பெயர், அவருக்கு பெற்றோர் வைத்தபெயர் ஜவஹர்லால். ஜவகர் என்றால் மாணிக்கம் என்று பொருள். லால் என்பதற்கு சிவப்பு என்று பொருள். இருந்தாலும் லால் என்பது சாதியைக் குறிக்கும்.

தந்தை மோதிலால் நேரு தாய் சொரூபராணி, சேர்ந்து மகனுக்கு வைத்த பெயர் தான் ஜவஹர்லால் நேரு.கல்யாணமாகி பல வருடங்களாக பிள்ளை பெறாத அந்த குடும்பத்தில் சொரூபராணி அம்மையார் தவமிருந்து பெற்ற பிள்ளைதான் ஜவஹர்.

1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் நாள் பிறந்தார் நேரு. அந்தப் பிள்ளைக்காக அன்னை இருந்த தவமும், விரதங்களும் பூஜைகளும் வீண்போகவில்லை.

ரோஜாவின் ராஜா

ரோஜா பூ என்றதும் பெரும்பாலான வர்களுக்கு நினைவுக்கு வருபவர் நேருதான். அவருக்கு ரோஜாவின் ராஜா என்றொரு பட்டப்பெயரும் உண்டு.

சில விஷயங்கள் சிலருக்கு தொட்டில் பழக்கம் என்பார்கள், ஜவகர்லால் நேருவுக்கு ரோஜாபூவுடனான நட்பு தொட்டில் பழக்கம் மாதிரி.

தவமிருந்து பெற்ற பிள்ளை பிறந்தபோது தொட்டிலில் ரோஜா பூ இதழ்களை தூவி, குழந்தை நேருவை அதன்மேல் படுக்கவைத்தனர். அப்போது குழந்தை சிறிது நேரத்தில் சிறுநீர் கழித்துவிட்டது. அந்த மலர் இதழ்களை நீக்கிவிட்டு புது ரோஜா இதழ்களைத் தூவிவிடுவார் தந்தை மோதிலால் நேரு.

குழந்தை பருவத்தில் மலர்படுக்கையில் வாசமுடன் வளர்ந்தவர் நேரு. ஆகவே அவர் வளர்ந்தபின் அவரது ஆசையை நிறைவேற்ற, மலர்த்தோட்டம் ஒன்றை தந்தை மோதிலால் வாங்கி, அதில் விதவிதமான ரோஜா மலர்களை பயிரிட்டார்.

சிறு வயதுமுதல் ரோஜாவுடன் தொடங்கிய நேருவின் தோழமை அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.

மகனுக்காக நீச்சல் குளம்

நீச்சல் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த ஒரு விஷயம். அந்த நீச்சல் பழகுவதில் நீந்திக்களிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொண்டிருந்தார் ஜவஹர்லால்.

தன் அன்பு மகன் நேரு தமது நண்பர்களுடன் குளத்திற்கு சென்று நீந்திக்குளித்துவருவதை கண்ட மோதிலால், உடனே ஆனந்த பவனத்திற்குப் பின்புறத்தில் ஒரு பெரிய நீச்சல் குளத்தைக் கட்டிக் கொடுத்தார். அது முதல் நேரு நண்பர்களுடன் ஆனந்த பவனத்திலேயே தனது நீச்சலை வைத்துக்கொண்டார். மகன் குதித்து நீந்தும் அழகை தந்தை ரசித்துப்பார்ப்பார்.

வீட்டிலேயே பள்ளிக்கூடம்

நேருவின் குடும்பப் படத்தில் சிறுமியாக இந்திராகாந்தி

தந்தை மோதிலால் தன் அன்பு மகனை கவனிக்க இரண்டு ஆயாக்களை நியமித்தார். அதோடு பெரும்பாலான நேரத்தை மகனுடன் செலவிட்டார்.

நேரு வளர்ந்து பள்ளிப்பருவம் அடைந்தபோது அவரைப் பள்ளிக்கு அனுப்பவில்லை தந்தை மோதிலால். வீட்டிலேயே கல்வி கற்றுத்தர நான்கு ஆசிரியர்களை அமர்த்தினார், இப்படி நேருவின் பள்ளிப்படிப்பு வீட்டில் தனிக் கவனத்துடன் நடந்தது. தன் மகன் இளம் பருவத்திலேயே அறிவாற்றலோடு சிறந்து விளங்குவதைக் கண்டு பேரானந்தம் கொண்டார்மோதிலால்.

குதிரைக்குட்டி பரிசு

சிறுவர் நேரு குதிரை சவாரி செய்வதில் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார். இந்த விஷயத்தை அறிந்ததும் மிக விலை உயர்ந்த குதிரைக்குட்டி ஒன்றை வாங்கிக் கொடுத்தார். பிற்காலத்தில் குதிரையேற்றித்தில் நேரு சிறந்து விளங்கினார்.

இளமையில் தன்னை தள்ளிவிட்டு முரட்டு குதிரையைத் தட்டி தன் வழிக்கு கொண்டு வந்தார். பிறகு அதே குதிரையில் சவாரி செய்து பல இடங்களுக்குச் சென்று வந்தார். முரட்டு குதிரையை அடக்கி ஆண்ட மகனின் திறனைக் கண்டு பெருமைக் கொண்டார் தந்தை மோதிலால்.

யாருக்கு குடை பிடிக்கிறார்?

மும்பையில் 1940இல் ஒரு காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார் நேருஜி.

நேருஜி பேசத்தொடங்கியதுமே மழைத் தூறல் போடத்தொடங்கியது. ஆனாலும் மக்கள் கூட்டம் கலையாமல் அவரது பேச்சை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். அவசரமாக மேடைக்கு ஓடிவந்து ஒருவர் குடையை விரித்து. நேருஜியின் தலைக்கு மேலாகப்பிடித்தார்.

“மக்கள் மழையில் நனையும்போது எனக்கு மட்டும் குடை எதற்கு?” என்று கேட்டார் நேருஜி. ஆனால் வந்தவரோ தொடர்ந்து அவருக்கு குடைப்பிடித்துக் கொண்டே நின்றார்.

பொதுமக்களை பார்த்து சிரித்தபடி என் வேண்டுகோளையும் மீறி இவர் குடைப்பிடிப்பதை பார்த்தால் இவர் இங்குள்ள இந்த ஒலிப் பெருக்கியின் சொந்தக்காரர் என்று நினைக்கிறேன்.

இவர் எனக்காக குடைப் பிடிக்கவில்லை. ஒலிப்பெருக்கியை மழையிலிருந்து பாதுகாக்கவே குடை பிடிக்கிறார் என்று சொல்ல கூட்டத்தில் சிரிப்பு வெடி வெடித்தது.

தங்கை போட்டியா?

நேருவுக்கு அப்போது சுமார் 11 வயதிருக்கும் ஒரு நாள் அவரது அன்னை குழந்தை பேற்றிலிருந்தார். பிறக்கப்போவது தம்பியா? தங்கையா? என்பது அவருக்குத் தெரியாது அல்லவா? அவர் ஆவலுடன் காத்திருந்தார்.

நேருவுக்கு தங்கைதான் பிறந்தது. டாக்டர் சிரித்துக் கொண்டே நேருவிடம் வந்தார். “சொத்தில் உனக்குப் போட்டியில்லை. மகிழ்ச்சிதானே?” என்று கேட்டபோது நேருவுக்கு ஒன்றும் புரியவில்லை.

உனக்கு தம்பி பிறந்தால் சொத்தில் பங்குக்கு வருவான். தங்கைதான் பிறந்திருக்கிறது. அதனால்தான் அப்படிச் சொன்னேன்?” என்றார் டாக்டர். பெண்களுக்கு சொத்துரிமை வலியுறுத்தப்படாத காலம் அது.

இதைக் கேட்டதும், நேருவுக்குக் கோபம் வந்துவிட்டது. எனக்கு தம்பி பிறந்தாலும், தங்கை பிறந்தாலும் மகிழ்ச்சிதான்! நீங்கள் அப்படி சொன்னது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை! என்று முணுமுணுத்தார்.

டாக்டருக்கு என்னவோ போலாகிவிட்டது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.