புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
வரலாற்று நாயகனின் கதை

வரலாற்று நாயகனின் கதை

சீதையடுத்து, நீதிமன்ற விசாரணையின் பிறகு நீங்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டால், விடுதலை பெறலாம் என்று, கொலைக்களத்திற்கு செல்லும் கைதியைப் போன்று நடுநடுங்கிக் கொண்டிருக்கும் அந்த இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு நல்ல மனிதராக மஹிந்த விளங்கினார்.

ஒரு தடவை அலரிமாளிகையில் பிரதம மந்திரி பண்டாரநாயக்காவை, அண்ணா சமல் சந்தித்த போது, “சமல் உங்களுடைய குழப்பக்கார தம்பி என்ன செய்கிறார். அவரை நான் சில காலம் காணவேயில்லை” என்று கேட்டிருக்கிறார். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அனுர பண்டாரநாயக்காவுக்கும் மூன்று மாதம் லண்டனில் புலமைப்பரிசில் ஒன்றின் மூலம் பயிற்சி பெறுவதற்கான ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

பாராளுமன்ற அங்கத்தவர் என்ற முறையில் பிரதம மந்திரியிடம் அனுமதி பெறாமல், இந்த வெளிநாட்டு விஜயத்தை மஹிந்த மேற்கொண்டமைக்காக, உண்மையிலேயே ஆத்திரமடைந்த திருமதி பண்டாரநாயக்க, சமல் உம்முடைய தம்பி மீது நான் அதிக கோபத்துடன் இருக்கிறேன். நான் அவரை அழைக்கும் வரை, என்னை வந்து பார்க்க வேண்டாம் என்று சொல்லுங்கள். அவர் அவ்விதம் என்னிடம் வந்தால், நன்றாக வாங்கிக்கட்டுவார் என்று கோபமாக கூறியிருக்கிறார்.

தாயுள்ளம் படைத்த திருமதி பண்டாரநாயக்க, தனது மகன் அனுரவை கண்டித்து வளர்ப்பதைப் போன்று, மஹிந்தவையும் கண்டிப்பாக நடத்தினார். ஆனாலும், அவரது உள்ளத்தில் அனுரவைப் போன்றே, மஹிந்த மீதும் அன்பும், அக்கறையும், அனுதாபமும் இருந்தது.

ஏதாவது பிழை செய்துவிட்டால், பிரதம மந்திரி ஆத்திரத்துடன் இருப்பார், என்பதை தெரிந்திருந்த மஹிந்த, அவரது கோபம் தணியும் வரை திருமதி பண்டாரநாயக்காவை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்துக் கொள்வார். சில நாட்களில் திருமதி பண்டாரநாயக்காவின் கோபம் நீங்கியவுடன், மெல்ல மெல்ல பதுங்கிப் போய் மெடம் எப்படியிருக்கிaர்கள் என்று குசலம் விசாரிப்பாராம்.

அப்போது, மஹிந்தவை முறைத்துப் பார்த்து, கவனமாக இருங்கள் என்று திருமதி பண்டாரநாயக்க மஹிந்தவை அன்போடு சாடுவாராம். மஹிந்தவும், தனது மகன் அனுரவும் தவறான வழியில் சென்று பிரச்சினைகளை விலைகொடுத்து வாங்கக்கூடாது என்ற காரணத்தினால் தான் திருமதி பண்டாரநாயக்கா இவ்விதம் இவ்விருவருடன் கண்டிப்பாக நடந்து கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஷவைப் பற்றி கருத்து தெரிவித்த மேல்மாகாண ஆளுநர் அல்ஹாஜ் அலவி மெளலானா அவர்கள், “மஹிந்த மனிதநேய குணமடைய, ஒரு நல்ல மனிதன். மஹிந்த மிகவும் மென்மையான குணமுடையவர். ஆனால், திடீர் கோபக்காரர். கோபம் வந்தால், எவரையும் பகிரங்கமாக கண்டித்து விடுவார். ஒரு நொடிப்பொழுதில் அந்த கோபம் உடனடியாக மறைந்துவிடும். அடுத்து மஹிந்த மீண்டும் சிரித்துக் கொண்டு பேசுவார்.

பின்னர் ஐயோ! பாவம், அவன் மனதை புண்படுத்தி விட்டேன், என்று வேதனைப்பட்டு அதே மனிதனுக்கு உடனடியாக உதவிகளை செய்யவும் தயங்கமாட்டார். மஹிந்தவின் இந்த உன்னதமான குணத்தை நன்கு அறிந்தவர்கள், மஹிந்த தங்களை கோபப்பட்டு பேசுவதை மனதார விரும்புவார்கள். அப்படி மஹிந்தவின் கோபத்திற்கு இலக்கானால், தாங்கள் கேட்ட கோரிக்கையை அவர் உடனடியாக நிறைவேற்றி வைப்பார் என்று அவர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.” இவ்வாறு அல்ஹாஜ் அலவி மெளலானா கூறினார்.

பாராளுமன்றத்தில் மஹிந்த நிகழ்த்திய கன்னிப்பேச்சு

1970ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14ஆம் திகதியன்று, பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட மகாதேசாதிபதி அவர்களின் சிம்மாசன பிரசங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து, அன்றைய பாராளுமன்றத்தில், வயதில் குறைந்த, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். அப்போது அவருக்கு வயது 24. மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கத்தை கீழே தருகிறோம்.

‘கெளரவ சபாநாயகர் அவர்களே, இன்று நான் மகாதேசாதிபதி, பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து பேச விரும்புகிறேன். கடந்த 5 ஆண்டு காலம் இந்நாட்டின் துன்ப துயரத்தில் ஆழ்ந்திருந்த சுமார் ஒரு கோடி மக்களுக்கு நல்வாழ்வையும், விமோசனத்தையும் பெற்றுக்கொடுக்கக் கூடிய வகையில் கடந்த பொதுத் தேர்தலில் எங்கள் கட்சி மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

அமைதியாக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்த இந்த மக்களுக்கு நாம் அடைந்த வெற்றி, அவர்களின் வாழ்க்கையில் ஒளிவிளக்கை ஏற்றும் மாபெரும் வெற்றியாக அமைந்துள்ளது. இந்த வெற்றி முழு உலகத்தையே பேராச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மாபெரும் சாதனையை ஏற்படுத்திய எங்களுடைய மக்களின் சார்பில், அரசாங்கத்தின் சிம்மாசன பிரசங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையை முன்மொழியும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது குறித்து, நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

இது, தென்னிலங்கையின் பெலியத்த தொகுதியிலுள்ள 46 ஆயிரம் மக்களுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாக நான் நினைக்கிறேன். இந்த உன்னதமான பாக்கியத்தை எனக்கு பெற்றுக் கொடுத்த பெலியத்த தொகுதியின் மக்களுக்கும் சபாநாயகராகிய உங்களுக்கும், கெளரவ பிரதம மந்திரி அவர்களுக்கும், கூட்டரசாங்கத்திற்கும், சிம்மாசன பிரசங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிவதற்கு எனக்கு வாய்ப்பு அளித்தமைக்காக, அனைவருக்கும் இந்த சபையில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதற்கு, உங்கள் அனுமதியை கோருகிறேன்.

கெளரவ சபாநாயகர் அவர்களே, இலங்கையின் சமீபகால வரலாற்றில் இடம்பெற்ற, எங்களில் பலரும் மறந்து இருக்கும் ஒரு நிகழ்வை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 1948ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு அகன்று செல்லும்போது, தங்களால் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட கறுப்பு இன ஆங்கில முதலாளித்துவவாத சக்திகளிடம் நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைத்துச் சென்று விட்டனர்.

இவர்களுக்கு சிங்கள மொழி தெரியாது. சிங்கள நாட்டையும், சிங்கள வரலாற்றையும், சிங்கள கலாசாரத்தையும் இவர்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை. அதனால், அன்று, சிங்கள மொழி ஒரு சிலரினால் தான் பயன்படுத்தப்பட்டது. இதன் எதிரொலியாக சங்கைக்குரிய மகாசங்கத்தினரும், பெருமதிப்புக்குரிய சுதேச வைத்தியர்களும், அரசாங்கத்தின் அனுக்கிரகம் இன்றி, திக்கற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்

இவ்விதம் மக்கள் அடைந்து வந்த துன்ப, துயரத்தை பார்த்து, வேதனயடைந்த, அன்றைய அரசாங்கத்தில் தூரதரிசனமற்ற கொள்கையை கடைப்பிடித்து வந்த ஒரு நல்ல மனிதர், தனது முதலாளித்துவ கொள்கையையும், தனது சகாக்களையும் கைவிட்டு, அரசாங்க கட்சியிலிருந்து வெளியேறி, எதிர்காலம் எப்படி அமையுமோ என்று தெரியாது இருந்த போதிலும், திடமான கொள்கையுடன் துன்பம் அனுபவிக்கும் இந்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக, 1951 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12ந் திகதியன்று, தனது அமைச்சர் பதவியை துறந்து, எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

கெளரவ சபாநாயகர் அவர்களே, இந்த மகத்தான தீர்மானத்தை எடுத்த பாராட்டுக்குரிய பெரியவர், அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஆவார். இந்த நன்நாளை இலங்கை வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத தினம் என்று, நான் கூறுவதற்கு, ஒரு காரணம் இருக்கிறது.

மஹிந்த தன் தந்தை, சகோதரர்களுடன்

இந்நாட்டு மக்களை ஜனநாயக வாதம் என்ற இருள் சூழ்ந்த நிழலை நோக்கி வழிநடத்திச் சென்று கொண்டிந்த காலகட்டத்தில், இந்நாட்டு மக்களை சமதர்மவாத உலகை நோக்கி திசை திருப்பிய மகத்தான தீர்மானம் இந்த தினத்தில் தான், எடுக்கப்பட்டது என்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அன்று, எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியையும், அரசாங்கத்தையும் தமது அமைச்சர் பதவியையும் துறந்து வெளியேறிய நிகழ்வு, எங்கள் நாட்டின் வரலற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தினம் மட்டுமன்றி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி என்ற அமைப்பு தூய்மையான கருப்பையில் உருவாகிய தினமும் அன்று தான்.

இந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி கடந்த 18 வருடங்களாக ஏனைய சமதர்மவாத சக்திகளுடன் இணைந்து ஒற்றுமையாக, இந்நாட்டில் நசுக்கப்படும் மக்களை வெற்றிகரமான முறையில் சமதர்மவாதத்தை நோக்கி அழைத்து சென்றிருப்பதை நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

இதனால் தான் எங்கள் நாட்டின் வரலாற்றில் ஒரு புதுயுகத்தையும், புது மார்க்கத்தையும் ஏற்படுத்திய ஒரு முக்கிய தினமாக அன்றைய தினத்தை நான் கருதுகிறேன்.

அன்று, எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று தெரியாத நிலையில் திரு. பண்டாரநாயக்க அவர்கள், தனது கட்சியை துறந்து, நசுக்கப்படும் மக்களுக்காக அடியெடுத்து வைத்த போது, தனக்கு மனோதிடத்தை கொடுத்து பின்னணியிலிருந்து உதவியும், உறுதுணையும் புரிந்த றுகுணு பிரதேசத்தை சேர்ந்த, ஒரு வீர மைந்தனைப்பற்றி திரு. பண்டாரநாயக்க அவர்கள் சொன்ன கருத்தை அவருடைய வார்த்தையிலேயே சொல்ல விரும்புகிறேன். பண்டாரநாயக்க அவர்கள் இவ்விதம் கூறியிருந்தார் “நான், அது என்னுடைய நிழல் என்றே நினைத்தேன். நான் திரும்பிப் பார்த்த போது, அந்த நிழல் வேறுயாருமல்ல. அந்த நிழல் டி.ஏ.ராஜபக்ஷ என்பதை நான் அடையாளம் கண்டுகொண்டேன்.”

கெளரவ சபாநாயகர் அவர்களே, எனது காலம் சென்ற தந்தை அன்று, றுகுணு பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதனால், அவர் பண்டாரநாயக்க அவர்களின் பின்னால் றுகுணு பிரதேசத்து மக்களின் அபிலாஷைகளை எடுத்துச் சென்றார்.

ஆகவே, இலங்கையை இந்த புதிய பாதைக்கு இட்டுச் சென்று புதிய யுகத்தை ஏற்படுத்திய செயற்பாட்டின் உண்மையான பங்காளிகளாக றுகுணு பிரதேச மக்கள் இருந்தார்கள் என்பதை நான் பெருமையுடன் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

அதனால், பெலியத்த தொகுதி மக்கள், அன்று உருவாகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்பகால பங்குதாரர்களாக விளங்கினார்கள். அன்று, திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் நிழலாக விளங்கிய, காலம் சென்ற டி.ஏ.ராஜபக்ஷ அவர்களின் அன்புக்குரிய மகன் என்ற முறையில், 1970 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் உறுப்பினராக இங்கு உரையாற்றுகிறேன்.

கெளரவ சபாநாயகர் அவர்களே, இந்நாட்டு வரலாற்றை ஒரு புதிய யுகத்தை நோக்கி வழிநடத்திச் செல்லும் இந்த மாபெரும் செயற்பட்டில் பெலியத்த மக்களும் பங்காளிகளாக இருப்பது, பெருமைக்குரிய விடயமாகும். என்னை, இந்த பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பிய மக்களும், இந்த மகத்தான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாட்டில் பங்குதாரர்களாக விளங்குகிறார்கள்.

பெளத்த சாசனத்தையும், நாட்டையும் விடுவிப்பதற்காக நடத்தப்பட்ட வீரப் போராட்டத்தில் மாமன்னரான துட்டகைமுனுவின் பின்னணியில் சென்ற கோத்தாம்பர என்ற மாவீரனின் பிறப்பிடமான நெட்டோல் பிட்டிய கிராமம், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியிலேயே இருக்கிறது.

இலங்கையில் பெளத்த தர்மம் அழிவை எதிர்நோக்கியிருந்த காலகட்டத்தில் பலப்பிட்டிய, பிந்த பாதிக்க ஸ்ரீ சரணங்கர தேரர், மலை நாட்டிலிருந்து கல்வி, என்ற ஒளியை பரப்பிக் கொண்டிருந்த காலகட்டத்தில், தென்னிலங்கையில் கல்விச் செல்வத்தை விஸ்தரித்து வந்த சங்கைக்குரிய சிட்டினா மலுவே தம்மஜோதி தேரர் பிறந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிட்டினா கிராமமும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியிலேயே அமைந்திருக்கிறது.

செத் கவி மற்றும் வஸ் கவி ஆகியவற்றை எழுத்துருவில் படைக்கும் வல்லமை பெற்றிருந்த கணக்கியல் நிபுணரான பத்தாயமே லேக்கம் என்பவர் மற்றும் பதிகம வீரசிங்க போன்ற கவிஞர்கள் வாதியசிங்க பதிகம ரத்னபால தேரர், வலிபட்டன் வில ஸ்ரீ தீபங்கர தேரர், கரத்தோட்ட தர்ம ராம மகாநாயக்க தேரர் போன்ற, மாபெரும் கல்விமான்களும் பெலியத்த அருகிலுள்ள கிராமங்களில் தான் வாழ்ந்து, புகழ் உச்சியில் அமர்ந்திருந்தார்கள்.

கெளரவ சபாநாயகர் அவர்களே, பெலியத்த தொகுதிக்கு அந்த பெயரை பெற்றுக் கொடுத்த பெலியத்தையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தையைப் பற்றிய உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

மஹிந்த இலங்கையில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் பைசிக்கள் ஓடுவதில் வல்லவர்.

இங்குள்ள நாற்சந்திக்கு அருகிலுள்ள ஒரு ரம்மியமான நாளாந்த சந்தையுடன் அமைந்திருக்கும் பிரதேசத்தை ஒரு நகரமாக உருவாக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இன்று, இது ஒரு நகரமாக தோற்றமளிக்கவில்லை. வெறுமனை சில கடைகளைக் கொண்ட பிரதேசமாக காட்சி அளிக்கின்றது. ஒரு சிறந்த திட்டத்தை அமைத்து பெலியத்தையை ஒரு நவீன நகரமாக மாற்ற முடியுமானால், பெலியத்த மக்கள் அரசாங்கத்திற்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பார்கள்.

கெளரவ சபாநாயகர் அவர்களே, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியில் பெருமளவு கடற்றொழிலாளர்கள் பெரும் வறுமை நிலையில் இருக்கிறார்கள், என்பதை இந்த சபைக்கு எடுத்துரைக்கிறேன்.

எனது தொகுதியில் தென்னிலங்கையின் பல முக்கிய கடற்றொழிலாளர் கிராமங்கள் அமைந்துள்ளன. மாவெல்ல, குடாவெல்ல ஆகிய சனத்தொகை மிக்க கிராமங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தங்கள் உயிர்களை பணயம் வைத்து, கடலுடன் நாளாந்தம் போராட்டத்தை நடத்திக் கொண்டு, துயர் நிறைந்த வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமாயின், இந்த கடற்றொழிலை அபிவிருத்தி செய்வதுடன் கடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதி செய்வதுடன், கடலில் செல்வதற்கான படகுகள் உட்பட வலைகள், மீன்பிடி உபகரணங்களின் விலைகளை குறைப்பதற்கு உதவி செய்தால், எனது பிரதேசத்து மீனவ மக்கள் என்றும் நன்றியுடன் இருப்பார்கள்.

கெளரவ சபாநாயகர் அவர்களே, தங்காலை வாடி வீட்டிலிருந்து கிழக்கு திசையில் பார்த்தால், தூரத்தில் தென்படும் ரக்கவதுடுவ வரையில் வட்டமாக தென்படும் தங்காலையில் உள்ள அழகிய இயற்கை துறைமுகம் இன்று, சோபை இழந்து காட்சியளிக்கிறது.

இது குறித்து, தங்காலை பிரதேசத்தை கடற்றொழிலாளர்கள் கண்ணீர் மல்க பெரும் துயரத்தில் ஆழந்துள்ளார்கள். அன்று, அங்கிருந்த துறைமுகமும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் பணம் ஒதுக்கி ஏற்படுத்தியிருந்த கடற்றொழில் நிலையமும் இன்று அங்கு இல்லை.

இன்று அங்கு தென்னை மரங்களை வளர்க்கக் கூடிய மண்மேடுகள் தான் இருக்கின்றன. கெளரவ சபாநாயகர் அவர்களே, இப்போது, இது ஒரு துறைமுகம் அல்ல. கடலை தரையாக மாற்றும் ஒரு முயற்சியாகவே காட்சியளிக்கிறது என்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

கெளரவ சபாநாயகர் அவர்களே, தங்காலைக்கு சகல வசதிகளையும் கொண்ட ஒரு கடற்றொழில் மீன்பிடித் துறைமுகத்தையும், மீன்பிடி நிலையம் ஒன்றையும் அமைத்துக் கொடுக்குமாறு வேண்டுகிறேன்.

கெளரவ சபாநாயகர் அவர்களே, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியில் பெருமளவு மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளார்கள். பல்லாண்டு காலம் நிலைத்திருக்கும் சிறிய கிராமத்து குளங்களிலிருந்து நெற்செய்கைக்கான நீரைப் பெற்று, இந்த விவசாயிகள் விவசாயம் செய்கிறார்கள்.

இந்த நீர்ப்பாசன குளங்களை நவீன முறையில் திருத்தியமைத்து, நவீன விஞ்ஞான யுக்திகளின் மூலம் விவசாயத்தை செய்வதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும். அவ்விதம் செய்தால் அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவருவதற்கு உதவி செய்த இந்த விவசாய பெருமக்களுக்கு நாம் நன்றி தெரிவிப்பதாக அமையும்.

கெளரவ சபாநாயகர் அவர்களே, பெருமதிப்புக்குரிய மகாதேசாதிபதி அவர்கள், தனது சிம்மாசன உரையில், சிறிய நீர்ப்பாசன திட்டங்களை புனரமைப்பு செய்யும் பணியை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இந்த உறுதிமொழி சிறிய குளங்களை நம்பி விவசாயம் செய்யும் பெலியத்த பிரதேசத்து விவசாய பெருமக்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.

ஆகவே தங்காலையில் உள்ள விளைச்சல் நிலத்தில் கடலின் உவர்நீர் சங்கமிப்பதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைளை எடுத்தால், 2400 ஏக்கரைக் கொண்ட இந்த நெற்காணியில் பெரும் போகம் மற்றும் சிறுபோகத்தில் நல்ல விளைச்சலை ஏற்படுத்த முடியும் என்பதை நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

கெளரவ சபாநாயகர் அவர்களே, பெலியத்த தொகுதியில் பெரும்பகுதி விவசாய பெருமக்கள் சேனைப்பயிர்ச் செய்கையை நம்பியே வாழ்கிறார்கள். அவர்கள் உப உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து மிகவும் கஷ்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

றுகுணு பிரதேசம் குரக்கன் உற்பத்திக்கு பிரபல்யம் பெற்று விளங்குகிறது. றுகுண பிரதேசத்தின் சிங்கம் என்று புகழ்பெற்று விளங்கிய காலஞ்சென்ற டி.எம்.ராஜபக்ஷ அவர்கள், அன்று அம்பாந்தோட்டை தொகுதியின் சட்டசபை அங்கத்தவராக இருந்தார். இவர், தனது குரக்கன் நிற சால்வையை தெரிவு செய்தார்.

ஆகவே, குரக்கன் போன்ற உப உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் கிராமிய விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தால், இந்த அரசாங்கத்திற்கு மக்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.

மஹிந்தவின் பெற்றோர்.

சிம்மாசன பிரசங்கத்தில் காணியற்ற விவசாயிகளுக்கு காணிகளை பெற்றுக் கொடுப்போம் என்ற மகாதேசாதிபதி அவர்களின் கருத்தை மகிழ்ச்சியுடன் பாராட்ட விரும்புகிறேன். சிறு கைத்தொழில் வீட்டுக் கைத்தொழில் அல்லது குடிசைக் கைத்தொழில் அல்லது சிறிய கைத்தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதையும், அவற்றை அபிவிருத்தி செய்வது குறித்தும் இந்த சிம்மான பிரசங்கத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன.

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியிலுள்ள அங்குலுமடுவ என்ற தொகுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய கைப்பணி பொருட்கள், உலோகத்திலான கைப்பணி பொருட்கள், மற்றும் களிமண், சட்டி, முட்டிகள், பித்தளை பொருட்களை தயாரிக்கும் பணி ஆகியனவற்றில் ஈடுபடும் மக்களுக்கு மகிழ்ச்சியூட்டக் கூடிய கருத்துக்களும் இந்த சிம்மாசன பிரசங்கத்தில் தெரிவிக்கப்பட்டன.

பெலியத்த தொகுதியில் வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் தாய்மொழியில் பல்கலைக்கழக கல்வியை பெற விரும்பும் இளைஞர்கள், யுவதிகளும் பெருமளவில் இருக்கிறார்கள். அரசாங்க சேவையிலுள்ள வெற்றிடங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கும், தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கக் கூடிய புதிய திணைக்களங்களை அமைப்பது, போன்ற கருத்துக்கள் சிம்மாசன பிரசங்கத்தில் தெரிவிக்கப்பட்டமை குறித்து, எமது மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

தென்னிலங்கையில் இன்னுமொரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவோம் என்ற கருத்து மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதற்காக நான் அவர்களின் சார்பில் அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவிக்கிறேன்.

கெளரவ சபாநாயகர் அவர்களே, இந்நாட்டின் வருங்கால சந்ததியினர் வேலையின்மை, எதிர்பார்க்க முடியாத எதிர்காலம், நிலையற்ற கலாசார நிலவரம் ஆகிய காரணங்களினால், அவர்களின் எதிர்பார்ப்புக்களும், அபிலாஷைகளும் தவிடுபொடியாகி, பெரும் விரக்தி மனநிலையில் இன்று இருக்கிறார்கள் என்பதை, இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதனால் தான், இந்த விரக்தி நிலை அடைந்திருந்த தென்னிலங்கை மக்கள் எங்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, இந்தளவு மகத்தான வெற்றியை அரசாங்கக் கட்சிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்கள். இதற்காக அவர்கள் பகல் இரவு பார்க்காமல் கடுமையாக உழைத்தும் இருக்கிறார்கள்.

இளைஞர்களின் பிரச்சினைகள் குறித்து அவதானத்தை செலுத்தப் போவதாகவும், இளைஞர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவர்களின் நல்வாழ்வு குறித்தும் புதிய திணைக்களம் ஒன்றை அமைப்போம் என்று தெரிவித்துள்ள கருத்து குறித்து இலங்கை சனத்தொகையில் 50 சதவீதமாக அமைந்திருக்கும் இளைஞர், யுவதிகளும் பெருமகிழ்ச்சியடைகிறார்கள். எனது தொகுதியை சேர்ந்த இளைஞர், யுவதிகள் சார்பாக இதனை நான் இங்கு எடுத்துரைத்து, எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.

ஜனநாயக ஜேர்மன் குடியரசு, வியட்நாம், கொரியா மற்றும் வியட்நாம் புட்சிவாத தற்காலிக அரசாங்கங்களுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கும், தற்போது இஸ்ரேலுடன் இருந்து வரும் ராஜதந்திர உறவுகளை முறித்து கொள்வது என்ற கருத்தும், அணிசார நடுநிலை கொள்கை ஒன்றை கடைப்பிடிப்போம் என்ற கருத்தும், ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான தூரதரிசன கொள்கையுடன் நடுநிலை வெளிநாட்டு கொள்கையை கடைப்பிடிப்போம் என்று தெரிவித்து இருக்கும் கருத்து குறித்தும், இந்நாட்டு மக்கள் அதிக விசுவாசத்தை கொண்டுள்ளார்கள்.

இந்நாட்டின் பொதுமக்கள் ஏகாதிபத்தியவாதத்தை அங்கீகரிக்கமாட்டார்கள். அதுபோன்று முதலாளித்துவ வாதத்தையும் அங்கீகரிக்கமாட்டார்கள். அதுபோன்று சகல விதமாக சூறையாடல்களையும் அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் 1970ஆம் ஆண்டு தேர்தலில் மூன்றில் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களை இந்த அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுத்ததும், இந்த லட்சியக் கனவை நிறைவேற்றுவதற்காகவே என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

மக்கள் இந்த கூட்டரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிறிதளவேனும் சிதைத்து விடாமல், இந்த மக்களின் அபிலாஷைகளை இந்த அரசாங்கம் சரியான முறையில் நிறைவேற்றும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

(தொடரும்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.