புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

எனது செல்லப் பிராணி

எனது செல்லப் பிராணி

எனது செல்லப்பிராணி கிளியாகும். கிளிக்கு நான் பெத்தம்மா என பெயர் வைத்துள்ளேன். கிளி பச்சை நிறமாகும் அதன் சொண்டு சிவப்பு நிறமாகும். பெத்தம்மாவுக்கு பசித்தால் என் பெயரைச் சொல்லும். யாராவது என்னைத் தேடி வந்தால் வாங்க வாங்க என்று கூப்பிடும். தோட்டத்தில் விழுந்து பறக்க முடியாமல் தவித்த குஞ்சுப் பெத்தம்மாவை மாமா எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். கூண்டிலில் இட்டு பராமரித்து வந்தேன். தற்போது ஓரளவு வளர்ந்து விட்டது. எனது பெத்தம்மாவை தனது இனத்தோடு சேர்ந்து வாழ்வதையே விரும்புகின்றேன். சில நாட்களின் பின் என் செல்லப்பிராணி பெத்தம்மாவை பறக்க விட்டுவிடுவேன்.

ஏ. அஜீவாட்

தரம்-10, பேருவளை.

காடுகள்

இயற்கையின் அருட்கொடைகளில் காடுகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. மனிதனின் தலையீடின்றி அப்பிரதேசத்தில் நிலவும் வெப்பநிலை மழைவீழ்ச்சிக்கேற்ப தாமாகவே வளரும் தாவரங்கள் இயற்கை தாவரங்கள் எனப்படும்.

உலகின் மொத்த நிலப்பரப்பில் 29% காடுகளாகவே காணப்படுகிறது. மனித தேவைகளில் மிக முக்கியமான இடத்தை வகிக்கும் காட்டு வளங்கள் ஆரம்பத்தில் எரிபொருளாகவும் இன்று அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகவும் மாறிவிட்டது. இன்று பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது. இன்றைய உலகில் பெரும்பாலான இயற்கை அனர்த்தங்களுக்கு மிக முக்கிய காரணம் காடுகளை அழிக்கின்றமையே ஆகும். இன்று உலகின் மிகப்பெரிய காடுகளான, அமேசன், கொங்கோ காடுகள் நகராக்க செயற்பாடுகள் காரணமாக பாரிய அழிவினை எதிர்கொண்டுள்ளது. ஆகவே புவியின் நிலைப்பேற்றுக்கு உதவும் காடுகளை பேணிக்காக்க வேண்டியது ஆறறிவு கொண்ட மனிதர்களின் கடமை என்றால் அது மிகையாகாது.
 

ஆர். லுஷா

புனித தோமையார் பெண்கள் பாடசாலை,

மாத்தளை.

உணவைத் தேடி

ஒரு நாள் ஒரு மனிதன் சமவெளியில், புல் வெட்டிக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் உழைத்துக் கொண்டிருந்ததால், சோர்வடைந்து விட்டான். அதனால், அங்கு அருகில் இருந்த ஒரு புதரின் குளிர்ந்த, நிழலில் ஓய்வுக்காக அமர்ந்தான். பசி எடுத்ததால், காலை உணவுக்காக, உணவுகொண்டு வந்திருந்த பையைத் தேடி எடுத்தான். அதில் வைத்திருந்த ரொட்டிகளை எடுத்து உண்ணத் தொடங்கினான்.

அவ்வேளையில் பசியோடிருந்த ஓநாய் ஒன்று, இதைப் பார்த்ததும், காட்டிக்குள்ளிருந்த வெளியில் வந்தது. புதரின் நிழலில் ஒரு மனிதன், அமர்ந்து, ஏதோ உணவைச் சுவைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தது.

அங்கு வந்த ஓநாய், புல்வெட்டும் மனிதனைப் பார்த்துக் கேட்டது.

“என்னருமை மானிடனே, நீ இப்பொழுது என்ன சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய், எனக்குச் சொல்வாயா”

“நான் ரொட்டியை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன், ஓநாய் நண்பனே”

“அது அவ்வளவு நல்லதா”

“மிகவும் அருமையானது”

“உன் ரொட்டி உணவில் எனக்கும் ஒரு சிறு துண்டு தருவாயா, நானும் அதைச் சுவைத்துப் பார்க்கிறேன்.”

“ஓ! நிச்சயமாக உனக்குத் தருகிறேன். ஓநாய் நண்பனே”

ஓநாய், தன்னிடம் உணவு பற்றிப் பேசிய வார்த்தைகளைக் கேட்ட புல் செதுக்குவோன், மிகவும் மகிழ்ச்சியுடன், ரொட்டியிலிருந்து ஒருசிறு துண்டை உடைத்து, ஓநாய்க்குக் கொடுத்தான்.

ஓநாய் ரொட்டித்துண்டை மிகவும் ஆர்வத்துடன், சுவைத்துப் பார்த்தது. ரொட்டித் துண்டின் மேல். ஆசைப்பட்ட ஓநாய், தனக்கு ரொட்டித் துண்டு வழங்கிய புல் வெட்டியைப் பார்த்துக் கேட்டது.

“நான் நாள்தோறும் ரொட்டி உணவை உண்ண ஆசைப்படுகிறேன். ஆனால், அந்த உணவை நான் எங்கிருந்து பெறமுடியும்? தயவு செய்து, அதை எனக்குச் சொல்வாயா, அருமை நண்பனே”.

ஓநாயின் இந்த வேண்டுகோளைக் கேட்ட புல் வெட்டி, மிகவும் ஆச்சரியத்துடன் பதில் கூறினான்.

“மிகவும் நல்லது; உனக்கு நான் எல்லா விவரங்களையும் கூறுகிறேன். உனக்கு ரொட்டி உணவு பற்றிய எல்லாவற்றையும் சொல்லித் தருகிறேன். ரொட்டி உணவை எங்கு பெறுவது, எப்படிப் பெறுவது, என்ற எல்லா விவரங்களையும் சொல்லுகிறேன். கவனமாகக் கேள்.”

அதன்படியே, புல்வெட்டி எல்லாவற்றையும், சொல்லத் தொடங்கினான்.

“முதலில் உனக்கு ஒரு வயல் வேண்டும்; அதை நீ உழவு செய்ய வேண்டியிருக்கும்” இதைக் கேட்டதும் ஓநாய் அவசரப்பட்டது.

“பிறகு, எனக்கு வேண்டிய ரொட்டி உணவை நான் பெறமுடியும், இல்லையா?”

“கொஞ்சம் பொறு, நண்பனே, அவசரப்படாதே, பிறகு, அந்த வயலை, உழவு செய்யும் கருவிகளைக் கொண்டு, சமன் செய்யவேண்டும்.”

“அப்படியா, அதன் பிறகு, உடனே எனக்கு ரொட்டி உணவு கிடைக்கும்; இல்லையா?” என்று மிகுந்த உற்சாகத்துடன் கூறிக்கொண்டு வாலை வேகமாக ஆட்டியது.

“நீ எதைப்பற்றி என்ன பேசிக் கொண்டிருக்கிறாய்; இன்னும் கவனமாகக் கேள்; பிறகு கோதுமை விதைகளை வயலில் விதைக்க வேண்டும். அதற்குக் கோதுமை விதைகள் வேண்டும்.”

“அப்படியா, எனக்கு இப்பொழுது ரொட்டி உணவு கிடைத்து விட்டது.” என்று ஓநாய் உதடுகளை நக்கிக் கொண்டது. நாக்கைச் சப்புக் கொட்டத் தொடங்கி விட்டது.

இதைக் கவனிக்க அந்த மனிதன் சொன்னான்;

“அதற்குள்ளாகவா, இல்லை; அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. நீ இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். நீ விதைத்த கோதுமை முளைத்துப் பயிராக வேண்டும். குளிர்காலம் கடக்க வேண்டும். அதன் பிறகு வரும் வசந்த காலத்தில், கோதுமை நன்றாக வளர்ந்து விளைந்திருக்க வேண்டும். செழித்த பயிரில் கதிர்விட்டிருக்க வேண்டும். அதுவரை நீ பொறுத்திருக்கத்தான் வேண்டும்.”

“ஆ! அப்படியா” என்று ஓநாய் முகம் சுளித்துப் பெரு மூச்சு விட்டது.

“அவ்வளவு காலம் நான் காத்திருக்க வேண்டுமா, அப்படி எல்லாம் என்னால் பொறுத்திருக்க முடியாது. இப்பொழுதே எனக்கு வேண்டிய ரொட்டி உணவு கிடைக்க வேண்டும். நான் எனக்கு வேண்டிய ரொட்டியை இப்பொழுதே பெறுவேன்.”

“என்ன ரொட்டியா.” என்று இடை மறித்தான் புல்வெட்டி. அதற்கு இப்பொழுது நேரமல்ல; அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. முதலில் விளைந்த கோதுமையை அறுக்க வேண்டும். அவற்றின் கோதுமை மணிகளைத் தனியாக எடுக்க வேண்டும். பிரித்தெடுத்த கோதுமை மணிகளை காற்றில் தூற்றி, தூசு போக்க வேண்டும். பின்னர், வெயிலில் நன்றாக உலரவைக்க வேண்டும். சேர்த்த கோதுமை மணிகளை, மாவாக அரைக்க வேண்டும். இதற்கு மாவு அரைக்கும் எந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். இப்பொழுது கோதுமை மாவு உனக்குக் கிடைக்கும்.”

புல்வெட்டி கூறி முடிக்கும் முன்பாக ஓநாய் முந்திக் கொண்டு, சொன்னது;

“அப்படியானால், இப்பொழுது எனக்குக் கோதுமை ரொட்டி உணவு கிடைத்து விட்டது.”

“இல்லை; இன்னும் இல்லை. அதற்குள் என்ன அவசரம்; இன்னும் வேலை இருக்கிறது. ஒரு பாத்திரததில் தண்ணீர் நிரப்பி, அதில் மாவைப் போட்டு நன்றாக ஊற வைக்க வேண்டும். கோதுமை மாவு நன்றாகப் பொங்கி எழும்பும் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகு, காந்த மின்சாதன அடுப்பில் இட்டு, நன்றாகச் சூடேற்றவேண்டும்”

அப்படியானால், இப்பொழுது கோதுமை மாவு ரொட்டியாக உருவாகி விடும். எனக்கு ரொட்டி உணவு கிடைத்துவிடும்.”

“ஆமாம்.” என்றான் புல்வெட்டி. அது மட்டுமல்ல; உனக்கு வேண்டியளவு ரொட்டி உணவு கிடைத்துவிடும். அதை நீ உண்டு பசியைப் போக்கிக் கொள்ளலாம். மிகச் சுவையான ரொட்டிகளை நீ உண்ணலாம்.”

ரொட்டி எப்படித் தயார் செய்வது என்ற தனது பாடத்தை விளக்கமாகக் கூறி முடித்துவிட்டான் புல்வெட்டி.

புல்வெட்டி சொன்ன எல்லா விவரங்களையும், ஓநாய் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தது. அப்பொழுது அதற்குத் திடீரென மூளையில் ஒரு பொறி தட்டியது. சிந்திக்கத் தொடங்கியது. கூரிய நகங்கள் நிறைந்த தனது பாதத்தால் முன் நெற்றியை வருடிக்கொண்டது. ஓநாய் சிந்திக்கத் தொடங்கினால் அப்படித்தான் செய்யும்.

ஓநாய், மறுபடியும் எண்ணத் தொடங்கியது. “புல்வெட்டி சொல்வது போல் செய்தால், அது ஒரு பெரிய ‘போராகி விடும்’ அது மட்டுமல்ல; அது ஒரு அலுப்புத்தட்டும் கஷ்டமான வேலையும் கூட அது நமக்கு ஒத்துவராது!

ஓநாய், புல்வெட்டியிடம் பதவிசாகக் கேட்டது.

“எனக்கு வேறு வழி கூறு. துன்பமில்லாமல, உழைக்காமல், எப்படி எளிமையாக என்னுடைய உணவைப் பெற முடியும். அதற்கு வழியிருந்தால் சொல்லு. ரொட்டி சுடும் வழிமுறை எல்லாம் எனக்கு வேண்டாம்.”

புல் வெட்டியின் முகத்தில் புல் முளைத்ததைப் போல, ஒரு களிப்புத் தோன்றியது. இருப்பினும் பேசினான்.

“அப்படியா, கடினமாக உழைத்து ரொட்டி உணவைப் பெற நீ விரும்பவில்லையா, பரவாயில்லை. உன் உணவைப் பெறுவதற்கு உன் வழியில் எளிமையான வேறு வழிகளும் இருக்கின்றன.

ஓநாய் ஆவலுடன் புல்வெட்டியைப் பார்த்தது.

புல்வெட்டி தொடர்ந்தான்.

“பக்கத்தில் பசுமையான ஒரு மேய்ச்சல் நிலம் இருக்கிறது. அங்கே செல். அங்கே ஒரு குதிரை மேய்ந்து கொண்டிருக்கும். அதை நீ பார்ப்பாய்; குதிரையும் உன்னைப் பார்க்கும். பிறகு உன்வழி”.

புல்வெட்டி கூறியவாறே, ஓநாய் அந்த மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றது. அங்கே ஒரு குதிரை புல்மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தது, ஓநாய் குதிரையைப்பார்த்து கூறியது இவ்வாறு;

“நான் இப்பொழுது உன்னைத் தின்னப் போகிறேன்; கொல்லப் போகிறேன்”

குதிரை அமைதியாகச் சொன்னது; அலட்டிக் கொள்ளாமல்;

“அப்படியா, நல்லது. சரி. சாப்பிடு. அதற்கு முதலில், என் கால்களில் அணியப்பட்டுள்ள லாடங்களை எடுத்துவிட வேண்டும். இல்லை என்றால், நீ என்னைச் சாப்பிடும் பொழுது, அந்த இரும்பு ஆணிகளால், உன்னுடைய பற்கள் உடைந்து விடும்”. “அதுவும் சரிதான், என்று ஓநாய் சொல்லிக் கொண்டே, முதலில் குதிரையின் பின்னங் காலில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு லாடத்தை எடுக்க குதிரையின் பின் பக்கம் சென்று குனிந்தது. அடுத்த கணமே, குதிரை தன் பின்னங்காலில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு லாடத்தால், ஓநாயின் முகத்தில் ஒரு உதைவிட்டது. ஓநாய் தலைக்குப்புற தரையில் விழுந்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று எழுந்து ஓட்டம் பிடித்தது.

ஓடி ஓடி, ஓர் ஆற்றங்கரையில் போய் நின்றது. அந்த ஆற்றில் பல வாத்துகள் நீந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தது. ஓநாய் தனக்குள் சொல்லிக் கொண்டது.

“நான் இந்த வாத்துகளைப் பிடித்துச் சாப்பிடுவேன்”

பிறகு அந்த வாத்துகளைப் பார்த்துச் சொன்னது.

“ஏ. வாத்துகளே, உங்களை நான் தின்னப் போகிறேன்.”

வாத்துகள் எல்லாம் அதிர்ச்சியில் ஒரே குரலில் கத்தின. பிறகு, கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு, தந்திரமா,

“சரி சரி ஆனால், நீ முதலில், எங்கள் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும்.”

“அப்படியா! அது என்ன ஆசை” என்று ஓநாய் கேட்டது.

“எங்களுக்காக ஒரு பாட்டுப் பாடு. அதைக் கேட்க நாங்கள் ரொம்பவும் ஆசையாக இருக்கிறோம். நீ பெரிய பாடகன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.”

“அப்படியா, மிகவும் நல்லது. நான் பெரிய பாடகன்தான்.”

இவ்வாறு கூறிய ஓநாய், பக்கத்தில் இருந்த ஒரு குன்றின் மேல் ஏறி அமர்ந்து கொண்டது. ஒரு பெரிய பாடகன் செய்யும் பாணியில் தலையை ஆட்டிக் கொண்டு. காலைத் தூக்கிக் கொண்டு, சுற்றிலும் பார்த்தது. தலையை உயர்த்தி வாயைப் பிளந்து வானத்தை நோக்கியது. பின்னர், தம் பிடித்து, கண்களை மூடிக் கொண்டு, பெரிதாக ஊளையிட்டது.

ஓநாய் பெரிதாக ஊளையிட்டு, தன்னை மறந்து ஊளை பாட்டுப் பாடிக்கொண்டிருக்கும் போது, வாத்துகள் எல்லாம் சிறகை விரித்து, மேலும் கீழும் ஆட்டிக் கொண்டு, விர்ரென்று மேலே பறந்து சென்று மறைந்துவிட்டன.

வாத்துகள் எல்லாம் பறந்து செல்வதைப் பார்த்துத் திகைத்துப் போன ஓநாய், குன்றின் மேலிருந்து, கீழே இறங்கி வந்தது. தன்னுடைய செயலை எண்ணி அதற்கே வெட்கம் வந்துவிட்டது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், வாய்க்குள் முணுமுணுக்கத்தொடங்கியது.

‘நான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருக்கிறேன். நான் எதற்காகப் பாடுவதாக ஒப்புக் கொண்டேன். நான் என்ன பெரிய பாடகனா; இனி, அடுத்த எந்தப் பிராணியைப்பார்த்தாலும், உடனே அதைப் பிடித்துச் சாப்பிட்டு விடப்போகிறேன்!

இவ்வாறாக நினைத்துக் கொண்டு, அந்த ஓநாய், சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே நடந்தது. அப்பொழுது, ஒரு முதியவர், அவ்வழியாக நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து, அந்த ஓநாய், அவரை நோக்கி விரைந்து சென்று அவரிடம் கூறியது.

“முதியவரே, உங்களை, நான் கொன்று தின்னப் போகிறேன். உடனே.”

ஓநாய் கூறியதைக் கேட்டதும், அந்த மனிதர் முதலில் அதிர்ச்சி அடைந்தார், பின்னர் நிதானமாகக் கேட்டார்.

“ஏன் உனக்கு இத்தனை அவசரம்? முதலில் நாம் இருவரும் சேர்ந்து, சற்று நேரம் புகைப்பிடிப்போம் பிறகு நீ என்னைத் தின்னலாம்.”

“அது, அவ்வளவு நல்லதா, சுகமாய் இருக்குமா” ஓநாய் ஆர்வத்துடன் கேட்டது.

“முதலில் புகைத்துப்பார்; அப்புறம் தெரியும் அதன் மகிமை உனக்கு”

“ரொம்பச் சரி”

அந்த முதியவர் அவருடைய பையிலிருந்து புகை பிடிக்கும் குழாயை எடுத்தார். மற்றொரு பையிலிருந்து, புகைக்கும் பொடி ஒரு சிட்டிகை எடுத்தார். அதைத் தனது மூக்கில் வைத்து ஆழமாக உறிஞ்சினார். குழாயை வாயில் வைத்து இழுத்தார். பிறகு அந்தக் குழாயையும், பொடி டப்பாவையும் அந்த ஓநாயிடம் கொடுத்தார். ஓநாய் மூக்குப் பொடி அனைத்தையும் டப்பாவோடு அப்படியே ஒரே மூச்சில் ஒரே இழுப்பில் உறிஞ்சி விட்டது.

அந்தக் காடு முழுவதும் கேட்கும்படி, மிகவும் சத்தமாக மீண்டும் மீண்டும் உறிஞ்சியது. புகையிலைப் பொடியின் காரம் மண்டையில் மூளைவரை ஏறியது. கண்களை உறுத்தியதால், கண்கள் கலங்கி கண்ணீர்த்தும்பியது. அதனால், ஓநாயால் ஒன்றும் பார்க்க முடியவில்லை. ஏறக்குறைய ஒரு மணி நேரம் மூக்குப் பொடியை உறிஞ்சிக் கொண்டேயிருந்தது. மூக்குப் பொடி டப்பாவையே காலி செய்து விட்டது. இப்பொழுது ஓநாயால் ஒன்றும் பார்க்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து மிகுந்த சிரமத்துடன் ஓநாய் கண்களைத் திறந்து பார்த்தது. எல்லாம் மங்கலாகத் தெரிந்தன. இப்பொழுது ஓநாயால் கொஞ்சம் பார்க்க முடிந்தது. ஆனால், அதன் பார்வையில் அந்த முதியவர் தென்படவில்லை. அவர் மாயமாகி விட்டார்.

ஏமாந்த ஓநாய், மேலும் கொஞ்ச தூரம் நடந்தது. போகும் வழியில், ஒரு செம்மறி ஆட்டு மந்தை மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தது. அங்கே ஆடு மேய்க்கும் ஆயன், அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

இதைப் பார்த்த ஓநாய், அந்த ஆட்டு மந்தையிலிருந்து, ஒரு கொழுத்த செம்மறி ஆட்டுக் கிடாயைக் கல்விக்கொண்டு, மந்தையின் கொட்டிலிலிருந்து வெளியே இழுத்து வந்தது. அதை, ஒரு மூலையில் வைத்துக்கொண்டு இவ்வாறு பேசியது.

“கொழு கொழு ஆட்டுக்கிடாயே, இப்பொழுது உன்னை நான் கொன்று தின்னப் போகிறேன்.”

இதைக் கேட்ட செம்மறி ஆட்டுக்கிடாய் சொன்னது.

“ரொம்ப நல்லது ஓநாய் நண்பனே, அது என் அதிர்ஷடமே. ஆனால் அதற்கு முன்பு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீ என்னைக் கொன்று தின்பதென்றால், நான் மிகவும் வேதனையை அனுபவிக்க வேண்டியதிருக்கும். நான் அதைத் தவிர்க்கவே விரும்புகிறேன். மேலும், நான் ஒரு முதிர்ந்த கிடாய். என்னுடைய எலும்புகள் முதிர்ந்து கெட்டியானவை. என்னுடைய எலும்புகள் மோதினால், உன்னுடைய பற்கள் உடைந்து விடும். இதைத் தவிர்க்க நான் ஒரு யோசனை சொல்கிறேன். நீ ஏன் அந்தப் பள்ளத்தாக்கில், குன்றை நோக்கி வாயைப் பிளந்து கொண்டு, நிற்கக் கூடாது. அப்படி நின்றால், நான் இந்த மலைக்குன்றின் மேல் ஏறிநின்று கொண்டு, உன் வாய்க்கு நேராகக் குதிக்கிறேன். அப்பொழுது, நான் உனக்கு நேராக வயிற்றுக்குள் சென்று உணவாகிவிடுவேன். இருவருக்கும் வேதனை இருக்காது; என்ன சரியா.

இதைக் கேட்ட ஓநாய், மிகவும் மகிழ்ந்து, சொன்னது, “இது, எனக்கு மிகவும் சாதகமான காரியம்! பிறகு மலைச்சாரலில் உள்ள பசுமைப் பள்ளத்தாக்குக்குச் சென்று. மேல் நோக்கி வாயைப் பிளந்து கொண்டு நின்று கொண்டது. செம்மறிக் கிடாயின் விருந்திற்காகக் காத்துக்கொண்டு நின்றது. வெகு ஆவலுடன்.

மலை மேல் ஏறி நின்ற செம்மறி ஆடு, ஓநாய் நின்று கொண்டிருந்த பள்ளத்தாக்கை நோக்கி, அதன் வாயைக் குறிவைத்து விழுந்தது. வேகமாகக் குதித்த கிடாய், தனது கொம்புகளால் ஓநாயின் தலைமேல் மோதியது. மோதிய வேகத்தில், ஓநாயின் தலையில், அடிவிழுந்து ஓநாய் மூளை குழம்பிப் போய், நின்றது.

உடல் முழுதும் இரத்தம் வழிந்ததால், எங்கு பார்த்தாலும் நட்சத்திரங்கள் மின்னுவது போல், காட்சி நல்கியது. அதனால்,ஓநாய் மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டது. பிறகு ஒருவாறு மயக்கம் தெளிந்து, தலையை மேலே தூக்கிப் பார்த்தது. அதற்கு அங்கு நடந்ததெல்லாம், ஒரு வியப்பான காட்சியாகத் தோன்றியது. மூளை குழம்பியிருந்ததால், ஓநாய்க்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது.

‘நான் அந்தச் செம்மறியாட்டுக் கிடாயைக் கொன்றேனா, தின்றேனா, இல்லையா’ என்பதே அந்தச் சந்தேகம். அந்தச் சந்தேகத்தை வாய் விட்டுப் புலம்பிக் கொண்டிருந்தது.

இந்த வேளையில், புல் வெட்டி, புல் சேகரிக்கும் தனது வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். ஓநாயின், இந்த ஏமாற்றம் தரும் சந்தேக வார்த்தை, புல்வெட்டியின் காதில் விழுந்தது.

புல்வெட்டி ஓநாயை நோக்கிக் கூறினான்.

“நீ இதுவரை, எதையும் உண்ணவில்லை. ஆனால் ஒரு உண்மையை மட்டும் தெரிந்து கொண்டாய். ரொட்டி உணவைத் தயார் செய்து உண்பது ஒரு எளிய உணவு தேடும் வழி என்பதைப் புரிந்து கொண்டாய். குறைந்த உழைப்பில் சிறந்த உணவைப் பெறலாம் என்பதைத் தெரிந்துகொள். அதுவே, நீ உணவைத் தேடும் எளிய வழி. உழைத்து உண்.”
 



 

ஆர். திவாலனி,

தரம்-05, மே/மா/மது கலைமகள் தமிழ் வித்தியாலயம், மத்துகம.

ஆர். எப். ரீமா,

தரம்-05A, ப/ வெளிமடை முஸ்லிம் ம.வி,

வெளிமடை.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.