புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

மீள் எழுச்சி பெறும் வடக்கு

மீள் எழுச்சி பெறும் வடக்கு

கடந்த 30 வருடகால கொடிய யுத்தத்தில் மீண்டும், மீண்டும் இடம்பெயர்ந்து, அனைத்தையும் இழந்து, தற்பொழுது இழந்தவற்றை படிப்படியாகக் கட்டியெழுப்பிவரும் தமது நிம்மதியான வாழ்க்கையை எவரும் குழப்பவேண்டாமென முல்லைத்தீவு, கிளிநொச்சி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்கள் யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், அரசாங்கத்தின் உதவியுடன் தமது வாழ்வாதாரத்தை சிறிது சிறிதாகக் கட்டியெழுப்பி வருகின்றனர். புதியதொரு வாழ்க்கையை ஆரம்பித்திருக்கும் இம்மக்களின் நிம்மதியான வாழ்க்கையைக் குழப்பும் வகையில் சில சக்திகள் செயற்படுகின்றன.

குறுகிய காலத்தில் தம்மை மீள்குடியமர்த்தி தமக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்கிவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தம்மீது காட்டிவரும் அக்கறைக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளத் தவறவில்லை.

“இதுவரை நாம் அனுபவித்தது அனைத்தும் போதும். இனியும் எம்மை நிம்மதியாக வாழவிடுங்கள்” என்பதே கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்கள், குழப்ப சக்திகள் மீது விடுக்கும் கோரிக்கையாகவும் அமைந்துள்ளது.
"ஜனாதிபதிக்கும் நாமல் எம்.பிக்கும் எமது நன்றிகள்''

மனம் திறக்கும் வன்னி மக்கள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்கள் மீது அக்கறையுடன் செயற்பட்டுவரும் ஹம்பந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினரும், இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ, அடிக்கடி கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குச் சென்று அம்மக்களைப் பார்த்து அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து வருகின்றார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 3500 பேரை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க நாமல் ராஜபக்ஷ எடுத்த முயற்சிக்கு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலுள்ள மக்கள் மனதார நன்றி கூறுகின்றனர்.

நாமல் ராஜபக்ஷ எம்.பி.யின் ஆலோசனைக்கு அமைய சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 3500ற்கும் அதிகமான முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதாந்தம் 19,500 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது.

“வருமானம் ஒன்றை ஈட்டிக்கொள்வதே எமது பிரதான நோக்கமாக உள்ளது. நாம் தற்போது நிம்மதியாக வாழ்ந்து வருகின்றோம். நாமல் ராஜபக்ஷ எம்.பி. எம்மீது அக்கறையுடன் செயற்பட்டு வருகிறார்” என நன்றி கூறினார் கிளிநொச்சி அம்பாள்புரம் பண்ணையில் பணியாற்றிவரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் அகிலன்.

“எம்மை மீண்டும் உசுப்பேத்தி அதன் மூலம் நன்மையடைவதற்கு சில தரப்புக்கள் முயற்சிக்கின்றன. எனினும், அச்சக்திகளுக்கு விரைவில் நாம் பாடம் புகட்டுவோம்” என உறுதியாகக் கூறுகிறார் அந்த இளைஞன்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு இணைக்கப்பட்டவர்களின் எதிர்காலம் குறித்து அக்கறைகாட்டிவரும் நாமல் எம்.பி. முல்லைத்தீவு கொழுந்துப்புலவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பண்ணையின் செயற்பாடுகளை கடந்த புதன் கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

அங்கு உற்பத்தி செய்யப்படும் தானியங்கள் மற்றும் பணியாற்றுபவர்களுடன் சுமுகமாகக் கலந்துரையாடிய அவர், அங்கிருந்தவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார். புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் குறித்து மக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள நாடகக் குழுவினால் அரங்கேற்றப்பட்ட ‘எங்களை வாழவிடு’ எனும் நாடகத்தையும் அவர் ரசித்துப் பார்வையிட்டு கலைஞர்களைப் பாராட்டியிருந்தார். இவ்வாறு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை அவர் மிக மிக அக்கறையுடன் கண்காணித்து வருகின்றார்.

நாமல் எம்.பி.யின் ஆலோசனைக்கு அமைய சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புக் கிடைத்துள்ளது. இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்.

தமக்கு இவ்வாறான வேலைவாய்ப்புக் கிடைத்திருப்பதானது பெரும் பாக்கியம் என்றும், மேலும் பலரை இவ்வாறு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களுடன் மக்களாக

இந்த வாரம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்திருந்த ஹம்பாந்தோட்டை எம்.பி. நாமல் ராஜபக்ஷ முழங்காவில் வைத்தியசாலை, மின்சார விநியோக நிலையம் போன்றவற்றைத் திறந்து வைப்பதற்காக முல்லைத்தீவு சென்றிருந்தார். ஹெலிக்கொப்டர் மூலம் முழங்காவில் சென்றிறங்கிய நாமல் எம்.பி.யை அழைத்துச் செல்வதற்காக வாகனங்கள், பொலிஸ் பாதுகாப்பு மோட்டார் சைக்கிள்கள் என்பன தயாராகவிருந்தன.

மக்கள் நடந்து செல்ல தான் மட்டும் வாகனப் பேரணியில் செல்வதை விரும்பாத நாமல் எம்.பி, விழா நடைபெறும் இடத்திற்கு எவ்வளவு தூரம் எனக் கேட்டார். நாம் வாகனத்தில் ஊர்வலமாகச் செல்வதைவிட மக்களுடன் மக்களாக இணைந்து செல்வதே பொருத்தமானது எனக் கூறி, விழா நடைபெற்ற இடத்துக்கான 250 மீற்றர் தூரத்தை நடந்தே சென்றார்.

அங்கு மின்சார விநியோக நிலையத்தைத் திறந்துவைத்த அவர், “மக்களிடம் மின்சாரம் கிடைத்தமை உங்களுக்கு சந்தோசமாக இருக்கிறதா? நீங்கள் எல்லோரும் சந்தோசமாக இருக்கின்aர்களா?” எனக் கேட்டார்.

“மின்சாரம் கிடைத்தமை எமக்கு மிகவும் சந்தோசம். நாங்களும் சந்தோசமாக, நிம்மதியாக வாழ்கின்றோம். உதவிகளுக்கு நன்றி” என்று மக்கள் நாமல் எம்.பிக்கு நன்றி பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள் “நாமல் அண்ணா” “நாமல் அண்ணா” எனப் பாசமாக அழைத்து அவருடன் கலந்துரையாடினர்.

மின்சார விநியோக நிலையத்தைத் திறந்துவைத்த நாமல் எம்.பி. அங்கிருந்து முழங்காவில் வைத்தியசாலையைத் திறந்து வைப்பதற்கு கொக்கிரீட் பாதையில் நடந்தே சென்றார். 2011ஆம் ஆண்டு நீங்கள் திறந்துவைத்த வீதியிலேயே நாம் செல்கின்றோம் என்பதை கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் பாலன், நாமல் எம்.பிக்கு நினைவு படுத்தினார். அமெரிக்கத் தூதரகத்தின் உதவியுடன் புனரமைக்கப்பட்ட முழங்காவில் வைத்தியசாலையைத் திறந்து வைப்பதற்கு அமெரிக்கப் பிரதித் தூதுவர் வில்லியம் வெய்ன்ஸ்டீனும் உடன்சென்றிருந்தார்.

“நாம் தற்பொது சந்தோசமாக வாழ்ந்து வருகின்றோம். எமது பிரதேசத்தில் கல்வி, சுகாதார, போக்குவரத்துத் துறைகள் அரசாங்கத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. புலிகளால் பிள்ளைகள், உறவுகள், உடைமைகள் அனைத்தையும் இழந்த நாம் மீண்டும் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றோம். இதற்கான சகல வசதிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். நாமல் எம்.பி. எம்மை அடிக்கடி வந்து பார்த்துச் செல்கின்றார். அவரின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு அபிவிருத்திகள் எமக்குக் கிடைக்கின்றன” என்று இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் பாலன் கூறினார்.

“எமது இந்த நிம்மதியான வாழ்க்கையைக் குழப்ப சில விஷமிகள் செயற்படுகின்றன. மக்களின் மனங்களை குழப்ப இச்சக்திகள் முயல்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியல் சக்திகள் இலங்கை பற்றி தவறான நிலைப்பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு காண்பிக்க முயற்சிக்கின்றன. இவற்றை நீங்கள் நம்பவேண்டாம்” என்று அமெரிக்காவின் பிரதித் தூதுவரிடம், பாலன் கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கும், அமெரிக்காவுக்குமிடையில் நீண்டகால உறவு உள்ளது. இதனால் தான் இலங்கை அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவி செய்து வருகின்றது. எனவே, இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவு பாதிக்கப்பட்டுவிடும் என எவரும் அச்சப்படத் தேவையில்லையென அமெரிக்கப் பிரதித் தூதுவர் வில்லியம் வெய்ன்ஸ்டீன் கூறினார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் பல்வேறு வழிகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கும் நிலையில் அதனைக் குழப்பி, சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிக்கும் தீய சக்திகளின் முயற்சிகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்கின்றனர் வன்னி மக்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.