புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
கிராமிய பொருளாதார அபிவிருத்தியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களம்

கிராமிய பொருளாதார அபிவிருத்தியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களம்

யுத்த காலத்தில் கிராமங்களின் பாதுகாப்புக்கு முக்கிய பங்களித்த பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புத் திணைக்களம் நாட்டை பொருளாதார ரீதியில் முன்கொண்டு செல்லும் செயற்பாடுகளுக்கும் தற்பொழுது பாரிய பங்களிப்புச் செய்து வருகின்றது. விவசாய நாடான இலங்கையை பொருளாதார ரீதியில் முன்நகர்த்திச் செல்வதற்கு விவசாய ரீதியிலான பங்களிப்பை வழங்கி வருகிறது சிவில் பாதுகாப்புத் திணைக்களம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சோளம், கச்சான், பயறு, உழுந்து. நெல் போன்ற தானியங்களை உற்பத்தி செய்வது மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டத்தையும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆரம்பித்து வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறது.

கெப்பிட்டிகொல்லாவவில்...

விவசாய உற்பத்திகளுடன் மாத்திரம் நின்றுவிடாது கைப்பணிப் பொருட்கள், செங்கல் உற்பத்தி போன்ற பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து, அவற்றை சந்தைப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பங்களிப்பு முக்கியமானதொரு அங்கமாக அமைந்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாயவின் ஆலோசனைக்கமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

வன்னியில் வேலைவாய்ப்பு

வன்னிப் பிரதேசத்தில் குறிப்பாக யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல் லைத்தீவு மாவட்டங்களின் உட்கட்டுமானங்களை அபி விருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மறுபக்கத்தில் அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும் அதேநேரம், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் செயற்திட்டத்தையும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப் பினர்கள் 3500 பேர் இவ்வேலைத்திட்டத்தில் உள் வாங்கப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு மாதாந்தம் 19,500 ரூபா வருமானமாக வழங்கப்படுகிறது. புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் கூடுதல் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.

கிளிநொச்சியில்...

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 700ற்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் நெல், சோளம், பயறு, தென்னை, மரக்கறிகள் போன்ற பயிர்ச்செய்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 3441 பேர் பணியாற்றுவதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் இணைப்பு கொமாண்டர் லெப்டினட் கேணல் ரட்ணப்பிரிய கூறுகின்றார்.

விவசாயம் மாத்திரமன்றி கல்வியின் ஆரம்பமாக அமைந்திருக்கும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களும் உள்ளனர். இந்த இரண்டு மாவட்டங்களிலும் 400 பாலர் பாடசாலை ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டு 374 பாலர் பாடசாலைகளில் பயிற்றுவிக்கின்றனர். இவர்களுக்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடாக சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்துக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தற்பொழுது பொருளாதார ரீதியில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் எமது இந்த வேலைத்திட்டத்தில் அவர்களையும் உள்வாங்கியிருப்பது அவர்களுக்குப் பெரும் ஆறுதலாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட எமக்கு தற்பொழுது வருமானம் ஈட்டுவது, பிள்ளைகளைப் படிக்கவைப்பதே குறிக்கோள்களாக உள்ளன. சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் எமக்கு ஒரு வருமானத்தைப் பெறக்கூடியதாக விருப்பது பெரும் நன்மையான விடயமாக உள்ளது” என்கிறார் கிளிநொச்சி அம்பாள்புரத்தில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் விவசாயப் பண்ணையில் பணியாற்றும் கலைவாணி பரமேஸ்வரன்.

பிள்ளைகளின் கல்விக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகளும் எமக்கு வழங்கப்பட்டன. நாம் தற்பொழுது நிம்மதியாக உள்ளோம். சந்தோசமாகப் பணியாற்றுகின்றோம் என்றார். தமக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த வேலையானது நிரந்தரமானதா என்பது தொடர்பில் அவர்களுக்கு சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. கிளிநொச்சிப் பண்ணைக்கு விஜயம் செய்த சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸிடமே சந்தேகத்தைக் கேட்டனர்.

“யார் உங்களுக்குச் சொன்னது இது நிரந்தரமான வேலை இல்லையென்று. இது நிரந்தரமான வேலையே. நீங்கள் அரசாங்க உத்தியோகத்தில் உள்Zர்கள். உங்களுக்கு ஓய்வூதியம் உண்டு. உங்களைக் குழப்புவதற்கு மற்றவர்கள் கூறும் கருத்துக்களை நம்பவேண்டாம். நாம் உங்களுக்கு உதவுவதற்கே உள்ளோம்” எனப் பதிலளித்தார் ஆனந்த பீரிஸ்.

இவர்களுக்கு மாதாந்தம் பணம் செலுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். யுத்தத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்றையும் தமது திணைக்களம் சிறியளவில் முன்னெடுத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மாத்திரமன்றி சாதாரண மக்களும் சம்பளத்துக்காக இந்த விவசாயப் பண்ணையில் இணைந்து பணியாற்றுகின்றனர். கம்பளை, மாத்தளை ஆகிய இடங்களிலிருந்து வந்த பெண்களும் இப்பண்ணையில் பணியாற்றுகின்றமை விசேட அம்சமாக உள்ளது.

அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டமானது தமது வாழ்க்கையைக் கட்டியெடுப்புவதற்கு பேருதவியாக உள்ளது. எம்மை எவரும் குழப்ப முடியாது என்று கூறினார் அம்பாள்புரம் விவசாயப் பண்ணையில் பணியாற்றும் அகிலன் என்ற இளைஞர்.

“வன்னிப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், ஒரு சில தமிழ் +விசியல்வாதிகளே அதனைக் குழப்ப முயற்சிக்கின்றனர். எனினும், நாம் அதற்கு எடுபடவில்லை. இனியும் எம்மால் இழப்புக்களை சந்திக்க முடியாது” என்கிறார் அவர்.

தாம் நிம்மதியானதொரு வாழ்க்கையை வாழவேண்டும் என்பதே வன்னியிலுள்ள மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

கெப்பிட்டிகொல்லாவ

யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட சிங்களக் கிராமங்களில் கூடுதலான இழப்புக்களைச் சந்தித்த பகுதியாக கெப்பிட்டிகொல்லாவ பிரதேசம் அமைந்துள்ளது. இக்கிராமத்தைப் பாதுகாப்பதற்கே முன்னர் அதிகமான சிவில் பாதுகாப்பு படையினர் இணைக்கப்பட்டிருந்தனர். இவர்களும் தற்பொழுது நாட்டின் அபிவிருத்திக்கான பங்களிப்பை தமது விவசாய மற்றும் ஏனைய உற்பத்திகள் மூலம் வழங்கி வருகின்றனர்.

கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் 15 வெவ்வேறு இடங்களில் 1604 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கூடுதலாக சோளம் மற்றும் நெற்பயிர்கள் செய்கை பண்ணப்படுகின்றன. கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் கடந்த மூன்று வருடங்களில் விவசாய உற்பத்திகள் மூலம் 20 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் கெப்பிட்டிகொல்லாவ சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி லெப்டினட் கேணல் புஞ்சி பண்டா. செங்கல் உற்பத்தி மூலம் கடந்த மூன்று வருடங்களில் 89 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தால் செய்கை பண்ணப்படும் நெல்லை அரிசியாக்கும் அரிசி ஆலையொன்றும் கெப்பிட்டிகொல்லாவவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வருடத்துக்கு 3 இலட்சம் கிலோ கிராம் அரிசியை களஞ்சியப்படுத்த முடியும். ஒரு நாளுக்கு இந்த அரிசி ஆலை மூலம் 10,000 கிலோ கிராம் நெல் அரிசியாக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அரிசி ஆலையை மேலும் விஸ்தரித்து, களஞ்சியசாலை வசதிகளை அதிகரிக்கச் செய்வதற்கு அரசாங்கத்தி டம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக வும், இதற்கு சாதகமான பதில் கிடைத் திருப்பதாகவும் கேணல் புஞ்சி பண்டா தெரிவித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் விவசாயப் பண்ணைகளில் செய்கை பண்ணப்படும் அரிசி உள்ளிட்ட தானியங்களை சந்தைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் அண்மையில் ஏற்பட்ட மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 115 ஏக்கர் விவசாய நிலங்களில் செய்கை பண்ணப்பட்ட பயிரினங்கள் முற்றாக அழிவடைந்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பாதுகாப்புக்காக இணைந்தவர்கள் தற்பொழுது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு ஆற்றிவருகின்றமையானது வரவேற்கத்தக்க விடயம் என்கிறார் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி மேஜர் வஜ்ஜிர குலதுங்க. இவர்கள் தமக்கு வருமானத்தை ஈட்டிக்கொள் ளும் அதேசமயம், நாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்களித்து வருகின்றனர் என்றார் அவர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.