புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
செய்யாத குற்றத்திற்காக மரணதண்டனை பெற்ற இந்த தம்பதியை நீதி தேவதை தூக்குமரத்தில் இருந்து காப்பாற்றினாள்

செய்யாத குற்றத்திற்காக மரணதண்டனை பெற்ற இந்த தம்பதியை நீதி தேவதை தூக்குமரத்தில் இருந்து காப்பாற்றினாள்

இலங்கைக் கடற்படையின் சீருடையணிந்த மாலுமியாகவும் பெண் மாலுமியாகவும் பணிபுரிந்த மணம்முடித்த நடுத்தர வயது ஒரு பெண்ணும் அவரது கணவரும் பொலிஸாருக்கு உண்மையான தகவலை கொடுத்ததனால் ஏற்பட்ட பக்கவிளைவு காரணமாக இன்று ஐந்தாண்டு கால சிறைத்தண்டனையை வெலிக்கடை சிறைச்சாலையில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தங்காலையில் வாழ்ந்து வந்த இவர்கள் அப்பிரதேசத்தில் உள்ள ஒரு கொடிய குற்றவாளி பற்றிய இரகசியத் தகவலை பொலிஸாருக்கு அப்பிரதேச மக்களின் பாதுகாப்பைக் கருதி பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இந்த விடயத்தை எப்படியோ தெரிந்து கொண்ட அந்தக் கொடியவன் பெரிய கத்தியுடன் வந்து இந்தக் கணவன் மனைவியை மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தையே கொலை செய்வதற்கு எடுத்த முயற்சி இறுதியில் அந்தக் கொடியவனுக்கே மரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சந்தேகத்தின் பேரில் இந்தக் கணவனும், மனைவியும் கொலை குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தப் பெண்ணை எமது பத்திரிகை நிருபர் நிரூஷி விமலவீர சிறைச்சாலையில் சந்தித்தார்.

அந்தப் பெண்ணின் சோகக் கதை இதுதான்.

நானும் எனது கணவரும் இலங்கைக் கடற்படையில் பணிபுரிந்து கொண்டிருந்த போது நாம் காதல் திருமணம் செய்துகொண்டோம். கணவனும் மனைவியும் கடற்படையில் ஏக காலத்தில் பணியாற்ற முடியாது என்ற கடற்படை விதி அமைந்திருந்ததனால் இரண்டு பேரும் கடற்படையில் இருந்து விலகி எங்கள் விட்டிற்கு அருகில் ஒரு பெரிய பாவனையாளர் கடையை ஆரம்பித்து வியாபாரம் செய்து கொண்டிருந்தோம்.

இப்போது இவ்விருவருக்கும் ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்தக் கொலை நடக்கும் போது இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளே இருந்தனர். இந்த சம்பவத்தில் கொலையுண்டவர் நாங்கள் வாழ்ந்த பகுதியில் ஒரு கொடிய சண்டியன். அவர் ஒரு அரசியல் வாதியின் கையாளாகவும் இருந்ததனால் அப்பிரதேச மக்களை அடித்துத் துன்புறுத்தினாலும் பொலிஸார் இந்த மனிதனுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அரசியல் வாதியின் கோபத்துக்கு இலக்காகுவோம் என்று பயந்து நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த மனிதனுக்கு பல எதிரிகள் இருக்கிறார்கள். அவன் யாரிடமோ அடிபட்டு வேதனையுடன் எங்கள் வீட்டிற்கு முன்னால் வந்து நீங்கள் தான் என்னைப் பற்றி பொலிஸாருக்கு பொய்த் தகவல் கொடுத்திருக்கிaர்கள் என்று சத்தமிட்டவாறு திடீரென்று தரையில் விழுந்து விட்டான்.

உடனே நாம் அவன் அருகில் சென்று பார்த்து அவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டோம். பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு நாம் சென்று இந்த விடயம் குறித்து முறைப்பாடு செய்த போது, நீங்கள் தான் இந்த மனிதனை அடித்து கொலை செய்துவிட்டீர்கள் என்று கூறி எங்கள் இருவரையும் கைது செய்து விலக்கமறியலில் வைத்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் இறந்த சண்டியரின் கையாட்கள் எங்களுடைய கடையை எரித்து தீக்கிரையாக்கினார்கள். பின்னர் நீதிமன்றத்தில் பிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். அதையடுத்து கொலை வழக்கு 16 வருடங்களுக்கு தொடர்ந்து கொண்டிருந்த போது நானும் எனது கணவரும் வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அப்போது தான் எங்களுக்கு மேலும் 3 குழந்தைகள் பிறந்தன.

நாம் எமது கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்து பாணந்துறைக்கு வந்து குடியேறினோம். இந்த சந்தர்ப்பத்தில் பொய் சாட்சியங்களை ஜோடித்து பொலிஸார் என்னுடைய கணவரின் இரண்டு இளைய சகோதரர்களையும் தாயாரையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்துக் கொண்டார்கள். இறுதியில் நீதிபதி எங்கள் ஐவருக்கும் மரண தண்டனை விதித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு இந்த வழக்கிலேயே முதன் முதலில் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி கேட்டவுடன் எனது தாயார் வேதனையினால் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார். நாம் வழக்கைத் தொடர்ந்து நடத்தி சாட்சியங்களை பொய் என்று நிரூபித்ததையடுத்து எனது கணவரின் தாயும் சகோதரர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

இறுதியில் நீதிபதியிடம் கருணை மனுவை சமர்ப்பித்து நாம் இந்த மனிதனை தற்காப்புக்காக தான் தாக்கினோம் என்று எமது வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி கூறினோம். அதனால் எமது மரண தண்டனை 5 ஆண்டு சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டது.

இன்னும் 7 மாதங்களில் நானும் எனது கணவனும் நாம் செய்யாத குற்றத்திற்காக கிடைத்த சிறைத்தண்டனை முடிவடைந்தவுடன் விடுதலைப் பறவைகளாக வெளியேறிவிடுவோம். எனது மூத்த மகன் இந்தியாவில் பங்களூர் நகரில் வைத்திய வளாகத்தில் டாக்டராவ தற்கான படிப்பை மேற்கொண்டு வருகிறார். மற்ற பிள்ளைகள் இப்போது பாடசாலைக் கல்வியை மேற்கொண்டு வருகிறார்கள்.

தெய்வத்தின் கிருபையால் தான் நானும் எனது கணவரும் மரண தண்டனையில் இருந்து விடு தலை பெற்றோம் என்று கூறும் இந்தப் பெண், இப்போது நமது குடும்பத்தினருடன் ஒரு கோயிலை நடத்தி பூஜைகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார். தனது கணவர் தங்களின் தேவாலயத்தில் சாஸ்திரம் பார்த்து பணம் சம்பாதிக்கிறார் என்று கூறினார்.

குற்றமிழைக்காத வர்களுக்கு எவ்வளவு தான் சாட்சியங்கள் அவர்களுக்கு எதிராக இருந்தாலும் நீதிதேவதை அவர்களை காப்பாற்றி விடுவாள் என்ற நம்பிக்கை இந்த வழக்கின் மூலம் எனக்கும் எனது கணவனுக்கும் ஏற்பட்டது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.