புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
பெண்களெல்லாம் ஒரே மாதிரிதானா?

பெண்களெல்லாம் ஒரே மாதிரிதானா?

மன்னன் ஷாரியர் தன் தம்பியையும் பரிவாரங்களையும் ஒரு பெரிய மாளிகையில் தங்கி இருக்குமாறு செய்தான். சகலவிதமான சுகபோக வசதிகளும் அந்த மாளிகையிலே முழுமையாக அமையப்பெற்று இருந்தன.

தமையன் ஷாரியர் தம்பி ஷாஜமானுடன் நெடுநேரம் கலந்து உரையாடி மகிழ்ந்தான். தம்பியும் தானுமாக விருந்திலும் சுகபோக விளையாட்டுகளிலும் ஈடுபட்டு திளைத்தான்.

தமையன் ஷாரியருக்கு தம்பி ஷாஜமானின் விநோதமான போக்கு பிடிபடவில்லை. ஷாஜமானின் முகம் களையிழந்து துயரத்தின் சாயல் படிந்ததாக இருந்தது. எதிலும் அவன் உற்சாகம் காட்டவில்லை. ஏனோ தானோ, என்று பொழுது போக்கினான்.

தம்பியின் மனக்கலக்கத்திற்கு காரணம் என்னவென்று ஷாரியர் வற்புத்திக் கேட்டும் ஷாஜமானிடம் இருந்து தெளிவான பதில் வரவில்லை. எதையோ மறைக்கிறான் என்று ஷாரியருக்குத் தோன்றியது. அதைப் பற்றி தீர்க்கமாக விசாரிக்க அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை. ஓய்வு கிடைக்கும்போது அதுபற்றி விசாரிக்கலாம் என இருந்துவிட்டான்.

ஒரு நாள் அரசாங்க அலுவல் காரணமாக ஷாரியர் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. மாலையில்தான் அவன் அரண்மனை திரும்புவதாக இருந்தது.

ஷாரியர் தம்பியை அழைத்தான். “தம்பி! நான் அரசாங்க அலுவல் காரணமாக வெகு தொலைவில் செல்ல வேண்டியிருக்கிறது. திரும்பி வருவதற்கு வெகு நேரம் ஆகும். நான் வரும் வரையில் நீ உல்லாசமாக பொழுது போக்கிக் கொண்டிரு. இரவு நான் வந்ததும் உன்னை சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டு புறப்பட்டான்.

அன்று பகல் முழுவதும் உண்ணுவதும், உறங்குவதுமாக காலத்தை ஓட்டினான். இரவு தொடங்கியதும் நீராடிவிட்டு புத்தாடை அணிந்து அரண்மனை நந்தவனம் பக்கமாக உலாவி வரலாம் என்று புறப்பட்டான்.

அப்பொழுது நிலவு காய்ந்து கொண்டிருந்தது. நிலா ஒளியில் அரண்மனை நந்தவனம் நல் அழகுடன் விளங்குவதை ரசித்தவாறு ஒரு சலவைக்கல் ஆசனத்தின் ஷாஜமான் அமர்ந்தான்.

அவன் அமர்ந்து இருந்த இடம் தமையன் ஷாரியன் அந்தப்புர மாளிகையை ஒட்டியிருப்பதை ஷாஜமான் கண்டான்.

அந்தப்புர மாளிகையின் புறக்கடை கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது. இரண்டு உருவங்கள் மாளிகையின் உள்ளிருந்து வெளிப்பட்டன.

கள்வர்களாக இருக்கக் கூடுமோ என எண்ணிய ஷாஜமான் இருப்பிடத்தை விட்டு எழுந்து சலவைக்கல் ஆசனத்தின் அருகில் இருந்த ஒரு மரத்தின் பின்னால் மறைந்துகொண்டு கவனித்தான்.

அந்த இரண்டு உருவங்களும் அந்த சலவைக்கல் ஆசனத்தில் வந்து அமர்ந்தன.

ஷாஜமான் அவர்கள் இருவரையும் உற்றுக் கவனித்தான். நிலவொளியில் அந்த உருவங்களை தெளிவாகப் பார்க்க முடிந்தது.

அந்த உருவங்கள் யார் என்று தெரிந்து கொண்டதும் ஷாஜமான் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தான்.

அவர்களில் ஒருவர் ஷாஜமானின் தமையன் ஷாரியரின் மனைவி. மற்றொரு உருவம் ஒரு நீக்ரோ அடிமை.

அந்த இடத்தில் வேறு யாரும் இல்லையென்று எண்ணிக்கொண்டு அவர்கள் இருவரும் உல்லாச சல்லாப சரசச் செயல்களில் ஈடுபட்டனர்.

அந்த நிகழ்ச்சிகளைக் கண்டு மன வேதனையும், குழப்பமும் கொண்ட ஷாஜமான் அந்த இடத்தைவிட்டு அவர்கள் அறியா வண்ணம் அப்பால் நகர்ந்து சென்று பிறகு தான் தங்கி இருந்த மாளிகையை நோக்கி நடந்தான்.

மிகவும் சோர்வுடனும் மனக் குழப்பத்துடனும் படுக்கையில் சென்று விழுந்தான். சற்றுமுன் தான் கண்ட அந்த விரசமான நிகழ்ச்சியைப் பற்றி தீவிரமாக சிந்தனை செய்தான்.

தனது தமையன் தனது மனைவியை எவ்வளவு தூரம் நம்பி அன்பு செலுத்தி இருப்பான். இவளோ கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு ஒரு நீக்ரோ அடிமையுடன் உல்லாசமாக இருக்கிறாள். உலக முழுவதிலும் பெண்களுடைய மனநிலை இப்படித்தான் இருக்கும் போலும். ஆகவே, என் மனைவி விஷயமாக நான் கொண்டிருந்த மனக்கலக்கம் அர்த்தமற்றதாகவே தோன்றுகிறது. ஒரு பெண்ணின் கேவல செயலை எண்ணி வீணாக ஏன் மன அமைதி குலைய வேண்டும். இனி இந்த மாதிரி விஷயங்களை மனத்தில் கொண்டு வீணாக வேதனைப்பட்டுக் கிடப்பதைவிட இவற்றையெல்லாம் மறந்துவிட்டு மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் அறிவுடமையாகும்.

இவ்வாறே எண்ணிக் கொண்டு ஷாஜமான் மன அமைதி மிக்கவனாக தன்னை மாற்றிக் கொண்டான். மிக உற்சாகத்துடனும், தெம்புடனும் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தான்.

இரவு நெருநேரம் கழித்து ஷாரியார் தனது வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பினான். உடனே தம்பியைச் சென்று சந்தித்தான்.

தான் புறப்படும்போது இருந்த மாதிரி அல்லாமல் இப்பொழுது தனது தம்பி உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதைக் கண்டு ஷாரியார் குதூகலமடைந்தான்.

“தம்பி! நீ உற்சாகமாகவும், தெம்புடனும் இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இங்கு நீ வந்தது முதல் மன வாட்டத்துடனும், குழப்பத்துடனும் இருந்தது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. இதைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றான் ஷாரியார்.

“அண்ணா! நான் வீட்டை விட்டு புறப்படும் போது வீட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி காரணமாகவே நான் மனவாட்டத்துடன் இருந்தேன்” என்று கூறிய ஷாஜமான் தனது மனைவியையும், அந்த நடவடிக்கையைப் பற்றியும் அவளைக் கொன்றுவிட்டு வந்ததைப் பற்றியும் எடுத்துரைத்தான்.

“அண்ணா, இப்போது நான் மகிழ்ச்சியாக இருப்பது ஏன் என்ற விவரத்தை மட்டும் தயவு செய்து கேட்க வேண்டாம். அதை மட்டும் நான் சொல்ல மாட்டேன்” என்று ஷாஜமான் கூறினான்.

“தம்பி, உன் மனதில் இருக்கும் விஷயத்தை நான் தெரிந்துக்கொள்ளக் கூடாது என்றால் நமக்கிடையே இருக்கும் சகோதர உறவுக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? ஆகவே நீ சொல்லித்தான் ஆகவேண்டும்” என்று ஷாரியார் வற்புறுத்தினான்.

தனது தமையன் கட்டாயப்படுத்தி கேட்பதனால் ஷாஜமானால் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. தன் கண்ணால் கண்ட அந்தக் காட்சியைப் பற்றி தமையனிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னான்.

அந்தத் தகவலைக் கேட்டு ஷாரியர் அதிர்ச்சி அடைந்தான். தனது மனைவி அவ்வாறு நடக்கக் கூடும் என்று அவனால் நம்பவே முடியவில்லை. ஒரு தடவை தனது மனைவியின் ஒழுக்க நிலையை கண்ணால் கண்டால் அல்லாது அதைப் பற்றி நம்ப அவனுக்குத் தோன்றவில்லை. அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்த எண்ணினான்.

மறுநாள் காலையில் ஷாரியர் தனது மனைவியை அழைத்து தானும், தனது தம்பியும் ஒரு முக்கிய அலுவல் காரணமாக வெளியூர் செல்ல வேண்டி இருப்பதாகவும், மறுநாள் காலையில்தான் திரும்பி வரமுடியும் என்று கூறிவிட்டு தம்பி ஷாஜமானுடன் குதிரை மீது ஏறி வெளியே புறப்பட்டான்.

ஷாரியரும், ஷாஜமானும் பகல் முழுவதும் நகரத்தின் அருகில் இருந்த காட்டில் பொழுது போக்கிவிட்டு இரவு வந்ததும் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டனர்.

ஒரு இரகசிய வழியாக இருவரும் அரண்மனைக்குள் பிரவேசித்தனர். பிறகு ஷாரியாரும், ஷாஜமானும் அந்தப்புரத்தின் புறக்கடை கதவு பக்கமாக சென்று ஒரு மரத்தின் பின்னால் மறைந்து இருந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே ஷாரியாருடைய மனைவியும், நீக்ரோ அடிமையும் வெளிப்பட்டனர்.

உல்லாசமாக பேசி திரிந்தபடியே வந்த அவர்கள் இருவரும், அருகில் இருந்த பளிங்கு மேடை மீது அமர்ந்து உல்லாசமாக பொழுது போக்கத் தொடங்கினர்.

அந்தக் காட்சியை கண்ட ஷாரியர் உடைவாளை உருவிக் கொண்டு அவர்கள் எதிரில் பாய முற்பட்டான்.

ஷாஜமான் தனது தமையனைத் தடுத்து அவனை இழுத்துக்கொண்டு அரண்மனையை விட்டு வெளியே வந்தான். பிறகு ஷாரியரை நோக்கி, “அண்ணா! இந்த மாதிரியான விஷயங்களில் உணர்ச்சிவசப்படுவதில் பிரயோஜனம் இல்லை. இங்கு மட்டும் அல்ல, உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் பெண்கள் நம்பிக்கைக்கு உகந்தவர்களாக இருப்பார்கள் என்று தோன்றவில்லை. உனது மனைவியை கொன்று போட்டு விடுவதினாலேயே இந்த மாதிரியான விவகாரங்களுக்கு தீர்வு ஏற்பட்டுவிடும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆகவே விஷயத்தை அறவே மறந்துவிடுங்கள். இந்த நாட்டையும் துறந்துவிட்டு எங்கேயாவது சென்று விடுவோம்.

ஆற அமர எதிர்காலத்தைப் பற்றி பிறகு யோசிப்போம்.” என்று ஷாஜமான் கூறினான்.

தம்பி கூறுவதிலுள்ள பொதுவான நியாயத்தை ஷாரியரும் உணர்ந்தான். தன் தம்பியின் யோசனையை ஏற்று நாட்டையும், மனைவியையும் துறந்து வெளியேற தீர்மானித்தான்.

பிறகு ஷாரியரும், ஷாஜமானும் குதிரைகள் மீது ஏறி புறப்பட்டனர்.

(தொடரும்......)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.