புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

கழைல தேடிக்கொண்ட தாய்

கழைல தேடிக்கொண்ட தாய்

மாலை நேரம் கடந்து இரவு நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இவ்வ ளவு நேரமாகியும் காலையில் வீட்டை விட்டுச் சென்றிருந்த, அப்பா இன்னும் வீடு திரும்பாததால் கவலையுற்றவளாக வீதிக்கு வருவதும் மீண்டும் வீட்டுக்குச் செல்வதுமாக இருந்தாள் பிரவீணா. அத்தோடு தங்கையின் புதிய வரவையும் அவள் மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள்.

அவளுக்கு அந்த வீட்டில் அப்பாவைத் தவிர வேறு துணை யாரும் இல்லை. சில நேரங்களில் பக்கத்துவீட்டு மாமியின் மகள் திலகா மாத்திரம் பாடங்களில் ‘டவுட்’ கேட்பதற்காக வந்தால் துணைக்கு நின்று கொள்வாள். இன்றும் அப்படித்தான். வந்தவள் நின்று கொண்டிருக்கிறாள். அவளையும் எவ்வளவு நேரத்திற்கு இங்கே நிறுத்தி வைத்துக்கொண்டிருக்க முடியும்; அவளை படிக்க அனுப்ப வேண்டுமல்லவா? அதனால் மிகவும் ஆதங்கப் பட்டுக் கொண்டிருந்தாள் பிரவீணா. அவளுக்கு இப்போதுள்ள மிக நெருக்கமான இரக்கமுள்ள உறவு அவளது அப்பா மாத்திரம்தான்.

இந்த ஒரு காரணத்திற்காகத்தான் அப்பா நல்லசிவமும் மகளை தனியே விட்டு விட்டு வெளியே எங்கும் செல்வதில்லை. அப்படிச் சென்றாலும் அதிகநேரம் வெளியே தரித்திருக்கவும் மாட்டார். உடனே திரும்பி விடுவார். ஆனால் இன்று தவிர்க்க முடியாத கட்டம்.

பிரவீணா அடிக்கடி நினைத்துக் கொள்வாள், பாவம் அப்பா என்று அம்மாவின் மரணத்தின் பின்னரும் கூட வேறொரு திருமணம் செய்யாமல் இவ்வளவு காலமாக எனக்காக வாழ்ந்து கொண்டி ருக்கிறார் என்று நினைக்கும் போதே அவளுக்கு அப்பாவைப்பற்றி பெருமையாக இருக்கும்.

நல்லசிவம் அண்மையில் ஓய்வுபெற்ற ஒரு அதிபர். கிராமத்து சூழலை பிறப்பிடமாகக் கொண்டவர். மனைவி காலமான பின்னர் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்காக வேறு திருமணம் செய்யாமல் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். இடையில் ஏற்பட்ட சுனாமி காரணமாக வீடு வாசலையும் தனது இளைய மகளையும் இழந்து விட்ட நிலையில் மற்ற மகளுக்காவது நல்ல கல்வியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறந்த பாடசாலை ஒன்றில் மகளைக் சேர்ப்பதற்காக இந்த நகரத்தில் வந்து குடியேறினார்.

இப்படி இருக்கும் போதுதான் நேற்று அவருக்கு ஒரு கடிதம் கிடைத்தது அதை பிரித்துப் படித்தபோது அவருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. ஆச்சரியம். அன்று அவரும் அவருடை மகள் பிரவீணாவும் தாங்க முடியாத சந்தோசத்தில் மிதந்தார்கள். அதனால் தான் விடிந்ததும் விடியாததுமாக அவர் எழுந்து சென்றிருக்கிறார்.

அப்பா, நான் சாமினி எழுதுகிறேன் என்றிருந்தது. சாமினியா! அவருக்கு அதிர்ச்சி, ஆச்சரியம் என்மகள் சாமினியா..

அவள் எப்போதோ இல்லாமலாகி விட்டாளே என்று வியப்போடு படித்தவருக்கு சந்தேகமேயில்லை அது சாமினிதான் என்பது புரிந்தது.

இவ்வளவு நாட்களும் அவள் எங்கே இருந்தாள். இப்போது மாத்திரம் எப்படி அவள் திடீரென முளைத்து வந்தாள். இந்த முகவரி அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று அவர் தலையைக் குழப்பிக் கொண்டிருந்தபோது,

அவருடன் சேர்ந்து அவருடைய கையிலிருந்த கடிதத்தை வாங்கிப் படித்த பிரவீணாவும் ஆச்சரியத்தாலும் சொல்லொணாச் சந்தோசத்தாலும், நிலைகுலைந்து நின்றதோடு மாத்திரமல்லாது அப்பாவை உடனே சென்று சாமினியைப் பார்த்து வருமாறு வற்புறுத்தியும் செய்தாள். உடனே சென்று அவளை கையோடு அழைத்துக்கொண்டு வாருங்களப்பா என்றும் அவரை அவசரப்படுத்தினாள்.

அதன் காரணமாகத்தான் இன்று அவர், எப்போதோ இறந்து விட்டாள் என்று நினைத்திருந்த தனது மகள் சாமினியை பார்க்க வேண்டும் என்ற அவாவினாலும், கையோடு அவளை அழைத்துக்கொண்டு வரவேண்டும் என்ற ஆதங்கத்தோடும் வெளிச் சென்றிருக்கிறார்.

***

பாடசாலைக்கு வழக்கமாக பிரவீணாவும் சாமினியும் ஒன்றாகத்தான் செல்வது வழக்கம். அன்று சாமினிக்கு மாத்திரம் ‘ரியூசன் கிளாஸ்’ இருந்ததால் அவள் மாத்திரம் வகுப்புக்குச் சென்றிருந்தாள். அப்போதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நடைபெற்றது. சுனாமி பேரலை வந்து ஊரே அல்லோல கல்லோப்பட்டது அதில் தங்கை சாமினி காணாமல் போனாள். அழுதழுது அவளை பல நாட்களாக எல்லா இடங்களிலும் தேடித்தேடி சோர்ந்த போனார்கள்.

அவள் உயிரோடு இருந்திருந்தால் வந்து சேர்ந்திருப்பாள். தகவல்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் அவள் இறந்திருக்கலாம் என்று தீர்மானித்து சடலமாவது கிடைக்குமா என்று பல இடங்களிலும் அலைந்து திரிந்தார்கள்.

அவர்களது இருப்பிடத்திற்கும் போக முடியாத நிலை. ஏனென்றால் அது சுனாமிப் பிரதேசம். சென்று இருக்கக்கூட ஒரு இடமில்லாமல் சில மாதங்கள் கொட்டில் வாழ்க்கை வாழ்ந்தார்கள். அம்மாவையும் இழந்து தங்கையையும் இழந்துவிட்ட நிலையில் தொடரும் கொட்டில் வாழ்க்கை அப்பாவுக்குப் பிடிக்கவில்லை அதனால் இருவரும் நகர்ப்புறத்தில் குடியேறினார்கள்.

இப்படி சில வருடங்கள் கழிந்துவிட்டிருக்கும் இந்த நிலையில்தான் தங்கை உயிருடன் இருக்கும் நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. அவர்கள் பிரார்த்தனை வீண்போகவில்லை. அவள் இப்போது எப்படி இருப்பாள், இத்தனை காலமும் எங்கிருந்தாள். அவளது வாழ்க்கை இதுகாலவரை எப்படிக் கழிந்திருக்கும்? என்று சிந்தித்தவாறு, தங்கையை காணவேண்டும் என்ற ஆவலில் வீட்டுக்கும் வீதிக்குமாக அவள் ஒடிக் கொண்டிருந்த வேளையில் அப்பாவும் வீடுவந்து சேர்ந்தார்.

அப்பா, வந்து விட்டீர்களா? என்று சந்தோச மிகுதியால் சத்தமிட்டு அழைத்தவாறு அப்பாவுக்குப் பின்னால் பார்வையைச் செலுத்தியவாறு ஓடோடிச்சென்று வெளியே பார்த்தாள். அவள் எதிர்பார்த்தவாறே வெளியே தங்கை நின்று கொண்டிருந்தாள். கூடவே ஒரு பெண்குழந்தையும் நின்று கொண்டிருந்தது.

“உள்ளே வா சாமினி என்று அழைத்தவாறு அவளை நோக்கி பிரவீணா ஓ, அக்கா”, என்றழைத்தவாறு அவளும் ஒடிவந்து இவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். ‘எவ்வளவு காலமடி உன்னைக் கண்டு! கடவுள் உன்னை இவ்வளவு காலத்திற்குப் பின்னராவது உயிரோடு கொண்டு வந்து தந்தாரே அதுவே போதும். இவ்வளவு காலமும் நீ எங்கே இருந்தாய்? இது யாருடைய குழந்தை?” என்று அந்தக் குழந்தையைப் பார்த்தவாறு கேட்டாள் பிரவீணா.

“எனது குழந்தைதான்” என்று கூறிச்சிரித்தாள் சாமினி.

“உன் குழந்தையா?’ என்று பிரவீணா கேட்டதும். சாமினியும் அதற்கு ஆமென்று தலையசைத்தவாறு பிள்ளையைத் தூக்கிக் கொண்டாள் அந்த நேரத்தில் அவ்விடத்திற்கு வந்த அப்பா, “எல்லாவற்றையும் நான் சொல்கிறேன், உள்ளே வாருங்கள்” என்று அவர்களை உள்ளே அழைத்தார்.

எதுவும் புரியாத நிலையில் அப்பாவைப் பார்த்து இதெல்லாம் என்னப்பா என்று கேட்டவாறு எதுவும் விளங்காமல் நின்றாள் பிரவீணா.

இப்போது அப்பா நல்லசிவம் பேசத் தொடங்கினார். சாமினியை சுனாமி கொண்டு சென்றுவிட்டது என்றுதான் அன்று நினைத்திருந்தோம் என்றபோது குறுக்கிட்ட பிரவீணா,

“அதுதான் அவள் இப்போது உயிரோடு வந்துவிட்டாளே! அவள் உயிரோடு இருக்கிறாள் என்பதை நேற்றே அவளது கடிதம் காட்டிக் கொடுத்துவிட்டதே பிறகு என்ன நடந்தது என்று சொல்லுங்கோ அப்பா” என்று அவரை அவசரப்படுத்தினாள் அவள்.

அவளது அவசரத்தைப் புரிந்து கொண்ட நல்லசிவம் சிரித்துக்கொண்டு “ஏன் அவசரப்படுகிறாய்? கொஞ்சம் என்னைப் பேசவிடேன்.” என்று கூறியவாறு. அந்தக் குழந்தையை அழைத்து சாமினியைக் காட்டி “இது யாரம்மா?” என்று கேட்டார் அதற்கு அக்குழந்தை அம்மா என்றது.

“அம்மாவா, என்று கேட்டவாறு அதிர்ச்சியோடு நின்றிருந்த பிரவீணா அப்பாவிடம் இது சாமினியின் பிள்ளையென்றால் இவளுக்குத் திருமணம் நடந்து விட்டதா அல்லது”... என்று ஏதோ சொல்ல முற்பட்ட போது அவளை எதுவும் பேச விடாது தடுத்த நல்லசிவம்

“இல்லையம்மா நீ நினைப்பது போல் எதுவுமில்லை” என்று கூறியவாறு, “நான் சொல்வதை விட நீ சொல்வதுதான் நல்லாயிருக்கும், நீயே சொல்” என்றார் சாமினியைப் பார்த்து, அவள் சொல்லத் தொடங்கினாள்;

அன்று ‘ரியூசன் கிளாசிற்காக பஸ்ஸில்’ சென்று கொண்டிருந்தோம். அப்போது ஏற்பட்ட சுனாமி பேரலையின் காரணமாக நாங்கள் சென்றுகொண்டிருந்த பஸ் பாலத்துடன் சேர்ந்து நீரில் அடித்துச் செல்லப் பட்டது. அதற்குப் பின்னர் நான் கண்விழித்துப் பார்த்தபோது ஒரு ஆஸ்பத்திரியில் இருந்தேன்.

இந்தக் குழந்தை திவ்யா என்னருகிலே வந்து என்னைப் பார்த்து அம்மா, அம்மா என்று அழைத்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் இக்குழந் தையின் பாட்டி கண்ணீர் மல்கியவாறு நின்று கொண்டிருந்தார். எனக்கு எதுவும் விளங்கவில்லை.

“நான் இப்போ எங்கே இருக்கிறேன், என் அப்பா, தங்கை எல்லோரும் எங்கே என்று கேட்டேன். யாரும் சரியான பதில் எதுவும் சொல்லவில்லை. தங்களுக்கு எதுவும் தெரியாது என்றார்கள். சுனாமி ஏற்பட்டு அன்று மூன்றாவது நாள் என்று கூறப்பட்டது. அதுவரை எனக்கு எதுவும் தெரியாமல் தலையில் சத்திர சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தேன். எழுந்து இருக்கவும் முடியவில்லை. என்னுடன் இருந்தவர்களும் ஒவ்வொருவராக அந்த ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் இருந்த வீட்டு முகவரியைச் சொல்லி. உங்களை அழைத்துவருமாறு அவர்களிடம் கூறினேன் அதற்கு அவர்கள்,

பலர் சுனாமியினால் இறந்து போனார்கள் என்றும் தற்போது உயிர் தப்பியவர்கள் யாரும் உரிய இடங்களில் இல்லை என்றும் அகதிமுகாம்களிலும் அங்குமிங்கும் கலைந்து சென்று விட்டார்கள் யாரையும் இப்போது தேடிக் கண்டுகொள்ள முடியாது என்றும் சொன்னார்கள்.

கடவுளே என்னைக் காப்பாற்றியவாறு என் அப்பாவையும் அக்காவையும் காப்பாற்றிவிடு என்று வேண்டியவாறு நீங்கள் ஏன் அழுகிaர்கள் இந்தக் குழந்தை யார் குழந்தை. என்னை ஏன் அம்மா அம்மா என்று அழைக்கின்றது என்று அந்தப் பாட்டியிடம் கேட்டேன். அதற்கு அவர் மேலும் அழுதவாறு சொன்னார்.

அந்தக் குழந்தையின் தாயும் சுனாமியில் பாதிக்கப்பட்டு எனக்குப் பக்கத்திலிருந்த கட்டிலில்தான் வைக்கப்பட்டிருந்தாராம். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனாராம் அதனால்தான் அந்தப்பாட்டி அழுது கொண்டிருந்தார். தாய் இறந்து போனது பிள்ளைக்குத் தெரியாது.

தாய்க்குப் பதிலாக அது என்னைத் தன் தாயாக நினைத்துக்கொண்டது. அதனால்தான் என்னைப் பார்த்து அம்மா அம்மா என்று அழைத்துக் கொண்டிருந்தது. பிரித்துக் கொண்டுபோனால் அழுகிறது. அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை குழந்தையை இங்கே அடிக்கடி அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று அந்தப் பாட்டி கூறியதும் இந்தக் குழந்தையைப் பார்க்க எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.

அந்தப் பாட்டி தினமும் அங்கு வருவதும் எனக்கு உணவு கொண்டுவந்து ஊட்டுவதும், என்னைக் குளிப்பாட்டுவதும் என்னைத் தன் பிள்ளைபோல் பார்த்துக் கொண்டார். நீண்ட நேரம் என்னுடன் தங்கியிருப்பார். இந்த நேரங்களில் இப்பிள்ளையும் அம்மா அம்மா என்று என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு விளையாடும். பாட்டி வீட் டுக்குப் போக அழைத்தால் அம்மாவை விட்டு விட்டு வீட்டுக்குப் போகமுடியாது அம்மாவையும் அழைத்துக்கொண்டு வாருங்கள் என்று அடம்பிடிக்கும்.

பக்கத்தில் தங்கி இருந்தவர்களெல்லாம் சென்றுவிட்ட நிலையில் நான் மாத்திரம் தனித்து விடப்பட்டேன். அப்போது தினமும் அங்கு வரும் பாட்டி என்னைத் தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். எனக்காக யாரும் இல்லை என்ற அந்த நிலையில் நான் பாட்டியுடன் செல்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

அத்தோடு அம்மா அம்மா என்று என்னையே சுற்றிச்சுற்றி வரும் இந்தப் பிஞ்சு உள்ளத்தை விட்டு விட்டு என்னால் வேறு எங்கும் செல்லவும் முடியவில்லை. அதனால் நான் பாட்டியுடன் செல்லத் தீர்மானித்தேன். பிள்ளை என்னைத் தன் தாயாக நினைத்துக் கொண்டது போல பாட்டியும் என் னைத் தன் பிள்ளையாகவே வைத்துப் பராமரித்தார்.

இறந்துபோன அவவின் மகள் பற்றி பாட்டி சொன்னபோது கிட்டத்தட்ட எனது உருவத்தில்தான் அவள் இருப்பாளாம் என்றபோது அதனால்தான் அக்குழந்தையும் என்னை அம்மாவென்று நினைத் துக்கொண்டது என்று நான் நினைத்துக் கொண்டேன்.

மகள் தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்து கொண்டிருந்தாராம். அன்றும் வேலைக்குச் செல்லும் போதுதான் சுனாமியில் மாட்டிக் கொண்டாராம். அவரின் கணவர் வெளிநாடொன்றில் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்றும், மனைவி இறந்து விட்ட செய்தி அவருக்கு அறி விக்கப்பட்டிருப்பதாகவும் பாட்டி சொன்னார். கொஞ்ச நாட்கள் அங்கு இருந்து என் உடல் நிலை நன்கு தேறியதன் பின்னர், உங்களைப் பார்ப்பதற்காக ஒருநாள் பாட்டியையும் அழைத்துக் கொண்டு எமது வீடு இருந்த

இடத்திற்குச் சென்றோம்.

அங்கு சிலரைச் சந்தித்தபோது நீங்கள் இருவரும் உயிரோடு இருப்பதாகவும் என்னைப் பல இடங்களிலும் தேடிவிட்டு சடலம்கூடக்கிடைக்கவில்லையே என்று கண்ணீர் விட்டு அழுததாகவும் கேள்வியுற்றேன். அதன் பின்னர் நீங்கள் இருவரும் அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டதாகவும் எங்கே சென்aர்கள் என்ற விடயம் அவர்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் கூறினார்கள்.

அதன் பின்னர் நாங்கள் திரும்பி விட்டோம் என்று தன் கதையை சாமினி சொன்னதும் ஒரு படம் பார்த்தது போல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த பிரவீணா, ஏன் சாமினி பாட்டியையும் அழைத்துக்கொண்டு வந்திருக்கலாமே என்றாள்.

அழைத்துக்கொண்டு வந்திருக்கலாம்தான் அவர் உயிரோடு இருந்திருந்தால் என்று சாமினி கூறியவாறு அழுதுவிட்டாள். அவளும் பாட்டி மீது அவ்வளவு பாசம் வைத்திருந்தாள்.

“இந்தப்பிள்ளையின் தகப்பனார் நாட்டுக்குத் திரும்பி வந்தும் ஒரு முறைகூட இந்தப் பிள்ளைப் பார்க்க வரவில்லை. அத்தோடு அவர் வேறு திருமணம் செய்துகொண்டு அந்த மனைவியையும் அழைத்துக்கொண்டு மீண்டும் வெளிநாடு சென்றுவிட்டார். இதனால் பாட்டி மிகவும் வேதனைப் பட்டார்கள்.

இந்தப் பிள்ளை அனாதையாகி விட்டதே இவன் வருங்கால வாழ்க்கை எப்படிப் போகப்போகிறதோ வயதான என்னால் என்ன செய்ய முடியும் என்று மிகவும் கவலைப்பட்டார்கள். அதற்கு நான் நீங்கள் கவலைப்படாதீர்கள் பாட்டி, இதை நான் பார்த்துக் கொள்கின்றேன் இது என்குழந்தை என்றேன். அதனால் பாட்டி மிகவும் சந்தோசமடைந்தார்கள். அந்த சந்தோசம் நீடிக்கவில்லை அவர்களும் போய்விட்டார்கள்.

ஆம் அக்கா, எனது இறுதித் தீர்மானமும் அதுதான். இக்குழந்தை அனாதையாகி விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்திற்காக, இக்குழந்தைக்காக வாழவேண்டும் அதன் தாயாக என்றும் வாழ்வேன் எனத் தீர்மானித்துக்கொண்டேன் என்று சாமினி தீர்மானமாகச் சொன்னாள்.

அந்தப் பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சிய பிரவீணா. ‘இந்த ஆண்களே இப்படித்தான் பொண்டாட்டியையும் பார்க்கமாட்டார்கள். தனது வாசிக்காக எதையும் செய்வார்கள். நீ எடுத்ததுதான் சிறந்த முடிவு. எனக்கு உன்னைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. நான்கூட அப்படித்தான் முடிவெடுத்திருப்பேன்’ என்று பிரவீணா சாமினியின் நல்ல மனதைப் பாராட்டினாள்.

“அது எல்லாம் சரிதான். நாங்கள் இருக்கும் முகவரி உனக்கு எப்படித் தெரிந்தது?”

அண்மையில் நீங்கள் எழுதியிருந்த பாடசாலை மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றைப் பார்த்தேன். அதில் இந்த முகவரி இருந்தது. நீங்கள் இங்குதான் இருக்கிaர்களா. இருந்தால் வந்து அழைத்துக்கொண்டு போகட்டுமென்று சந்தேகத்தில்தான் கடிதம் எழுதினேன். என்னால் அங்கு தனியே இருக்கவும் முடியவில்லை” என்றாள் அவள்.

“நீ எங்கும் போக வேண்டாம் இங்கேயே இரு. பிரவீணாவின் திருமணம் முடிந்த கையோடு நானே உன்னுடன் அங்கு வந்து விடுகிறேன்” என்ற நல்லசிவம், ‘அந்தக் குழந்தையிடம் உன் தாத்தா நான் இருக்கிறேன் பயப்படாதேம்ம’ என்றார். அங்கு ஆனந்தம் கரை புரண்டது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.