புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
கவிஞர் முருகையனின் கலையிலக்கிய ஆளுமை

கவிஞர் முருகையனின் கலையிலக்கிய ஆளுமை

நாடகங்கள் பல வகையின. அவற்றுள் கவிதை நாடகமும் உள்ளடங்கும். “பாட்டும்செய்யுளும் கோத்திடுவீரே” என்று பணித்தான் மகாகவி பாரதி. அவனுக்குப் பின் ஒரு புதிய கவிஞர் பரம்பரையே தோன்றிற்று. இந்திய கவிதைநாடகாசிரியர்களான பேராசிரியர் சுந்தரம்பிள்ளையும், வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியாகும் திருச்சிற்றம்பலக்க விராயரும் வேறு சிலரும் கவிதை நாடகத்தை எழுதியுள்ளனர். இதேபோல் ஈழத்திலும் பல கவிதை நாடகாசியர்கள் சிறப்பாக விளங்குகின்றனர் என்றால் மிகையாகாது.

இலங்கையில் 1970களில் சுதேசநாடகக் கலைக்கு முன்னோடியாக அமைந்த அதாவது தமிழில் “பா” நாடகம் வளர்வதற்குக் காலாக “கவிஞர் இ. முருகையன், து.உருத்திரமூர்த்தி, அம்பிகைபாகன் போன்ற பலரைக குறிப்பிடலாம். மகாகவி உருத்திரமூர்த்தியின் கவிதைநாடகமாக புதியதொருவீடு, கோடை முற்றிற்று போன்றவற்றைக் கூறலாம்.

அம்பியின் பா நாடகமாக வேதாளம் சொன்ன கதை (1970) எனும் நாடகத்தைக் குறிப்பிடலாம்.

இக்கட்டுரையில் இ. முருகையன் அவர்களின் கலையிலக்கிய படைப்புகள் பற்றியே பகிரவிருக்கின்றேன். கவிஞர் இ. முருகையன் சாவகச்சேரியின் கல்வயல் எனும் ஊரிலே 1935 04. 23 அன்று பிறந்தார். இவர் கவிதை, கட்டுரை, நாடகம், பாநாடகம், வானொலி நாடகம், பாடநூலாக்கம், கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று பல துறைகளில் தேர்ச்சியுடையவராக மக்கள் மத்தியில் விளங்கினார். தமது மாணவப் பருவத்திலேயே கலையிலக்கியப் பிரவேசம் செய்தார். இவரது தந்தையார் தமிழாசிரியராக மிளிர்ந்தார் எனலாம்.

“கவிஞர் இ.முருகையனின் கவிதைகள் ஈழத்து இதழ்களிலும் இந்திய இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன” அவர் ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றைத் தமிழிலே தந்ததோடு தமிழ்க்கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கின்றார். “சிறந்த நடையும் கருத்தாழமும் முருகையனின் கவிதைகளிற் பொருந்தியிருப்பதைக் கவனிக்கலாம்”. (வந்து சேர்ந்தன)

இ. முருகையனின் படைப்புகளை கவிதைநூல்கள், பாநாடகங்கள், மேடை நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், வானொலி நாடகங்கள் என்று பகுத்துக் கொண்டே போகலாம். அதாவது கவிதை நூல்களாக ஒருவரம் (1964) நெடும்பகல் (காவியம் 1967), அது அவர்கள் நீண்ட கவிதை (1986), மாடும் கயிறு அறுக்கும் (1990), நாங்கள் மனிதர் (1992), ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும் (2001), ஆதிபகவன் போன்ற இன்னோரன்ன கவிதை நூல்களை தந்துள்ளார். முருகையனின் பாநாடக, மேடைநாடக படைப்பாக வந்து சேர்ந்தன. கோபுரவாசல், வெறியாட்டு (1989) மேற்பூச்சு (1991), சங்கடங்கள், கடூழியம் (1970) அப்பரும் சுப்பரும், குற்றம் குற்றமே, பொய்க்கால், உயிர்த்த மனிதர் கூத்து, நாமிருக்கும் நாடுநமது, மானுடம் சுடரும் ஒரு விடுதலை, வழமை, சுமசும மகாதேவா கொண்டு வா தீயை கொளுத்து விறகை, கந்தப்பமூர்த்தியர் இடைத்திரை, குனிந்ததலை, எல்லாம் சரிவரும் கலிலியோ, தந்தையின் கூற்றுவன், இருதுயரங்கள், செங்கோல் (இலக்கிய நாடகம்) உண்மை (2000) போன்ற பல நாடகங்களை இயற்றியுள்ளார். அத்தோடு வானொலி நாடகங்களாக நித்திலக்கோபுரம் (1953) பில்கணியம், தரிசனம் (1965), அந்தகனேயானாலும், கலைக்கடல் போன்றவற்றைக் கூறலாம். “இலங்கையில் வானொ லிக்காகவே முதன் முதலிற் கவிதை நாடகமாக நித்திலக் கோபுரம் எனும் நாடகம் (1953) எழுதப்பட்டது”. அது ஒலிபரப்பான பின்னரே அந்தகனேயானாலும், கலைக் கடல் (சமுகநாடகம்), பில் கணியம், தரிசனம் (1965) முதலான நாடகங்களை வானொலிக்காகவே எழுதி னார். வந்து சேர்ந்தன என்ற கவிதை நாடகமானது.

வாதவூரடிகள் வரலாற்றேட்டில் ஓர் இதழை விரித்துக்காட்டும். அதாவது பலருக்குத்தெரிந்த வாதவூரர் குதிரை வேண்டிய கதையைப் “புதிய கோணத்தில் நோக்கி அழகோடும் அர்த்தத்துடனும் வந்து சேர்ந்தன என்ற நாடகத்தை அமைந்திருந்தார்”. முருகையனின் கோபுரவாசல் நாடகமானது “திருநாளைப் போவாராகிய நந்தனாரின் வரலாற்றை விபரித்து அதனோடு அன்று (1970 ஈழத்தில்) கோயிலுனுள்ளே தாழ்த் தப்பட்ட மக்களை நுழைய விடாததீய சக்திகளை ஒப்பிட்டுக் காட்டி மேடைக் கவிதை நாடகமாக படைத்திருந்தார்”.

பாக்கியராஜா மோகனதாஸ்

கிழக்குப் பல்கலைக்கழகம்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.