புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 
கப்பல் ஓட்டுவோம்! கடலைத் தாண்டுவோம்!

அமரர் கல்கியின்

கப்பல் ஓட்டுவோம்! கடலைத் தாண்டுவோம்!

நீலக் கடலும் நீல வானமும் கலந்து உறவாடும் இடத்தில் ஓர் புகைப்படலம் தோன்றுகிறது. கீழ்த் திசையிலிருந்து ‘குப்’ என்று ஒரு காற்று வந்து அடித்ததும் புகைப்படலம் மறைகிறது. புகைப்படலம் இருந்த இடத்தில் ஒரு அழகிய பழைய காலத்து மரக்கலம் தெரிகிறது. புலிக் கொடி பறக்கும் அந்தக் கப்பலிலே நெஞ்சில் உரங்கொண்ட வீர மாலு மிகள் பலர் நிற்கிறார்கள். அவர்களிலே நடுநாயகமாகக் கம்பீரத் தோற்றத்துடனே நிற்பவர் கங்கையும் கடாரமும் கொண்ட சோழ சக்கரவர்த்தி ராஜேந் திரர். அந்த மன்னாதி மன்னரும் மற்ற மாலுமிகளும் மனமகிழ்ந்திருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய முகமலர்ச்சி அறிவிக்கிறது. அவர்களுடைய கரங்கள் பொழியும் மலர் மாரியினால் வான வெளியெல்லாம் பூ மயமாக விளங்குகிறது. அத்தகைய அவர்களுடைய குதூகலத்துக்குக் காரணம், கடற்கரையோரமாக இந்திய சுதந்திரக் கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டு மிதக்கும் இந்தக் காலத்து நீராவிக் கப்பல் ஒன்றுதான் என்பதைக் காண்கிறோம்.

இங்கே, அலை கடலின் கரையோரத்தில் ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் - தற்காலத்தவர்கள் - கடல் மணலும் கடல் நீரும் மறையும்படி நெருங்கிக் கூட்டமாக நிற்கிறார்கள். அவர்கள் அனைவருடைய கண்களும் கடலோரத்திலிருந்து சற்றுத் தூரத்தில் மிதக்கும் நீராவிக் கப்பல் மீதே சென்றிருக்கிறது. “ஜே ஹிந்த்” என்றும் “வந்தே மாதரம்” என்றும் “வ.உ.சிதம்ப ரனார் வாழ்க!” என்றும் அந்த ஆயிரம் பதினாயிரம் லட்சம் ஜனங்களின் கண்டங்கள் கோஷம் செய்கின்றன. தற்காலத் தமிழர்கள் இடும் ஜயகோஷத்தின் பிரதித்வனியே போல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வீரத் தமிழ் மாலுமிகளின் ஜய கோஷமும் கிளம்பித் திக்குத்திகந்தங்களிலெல்லாம் பரவி வான முகட்டிலே சென்று முட்டி மோதி எதிரொலி செய்கின்றன.

இப்படிப் பண்டைத் தமிழ் மக்களின் உற்சாகத்துக்கும் இந்தக் காலத் தமிழர் களின் குதூகலத்துக்கும் ஒரே சமயத்தில் காரணமாயிருந்த மகத்தான வைபவம் நாளது பிப்ரவரி மீ 27 புதன்கிழமையன்று தூத்துக்குடியில் நடந்தது. “வ.உ. சிதம்பரம்” என்னும் பெயர் தாங்கிய வர்த்தக நீராவிக் கப்பலை மேன்மை தாங்கிய இந்தியாவின் கவர்னர் ஜெனரலும் நமது செந்தமிழ் நாட்டின் அருமைத் தலைவருமான ராஜாஜி அவர்கள் கடலில் செலுத்தினார். “வ.உ. சிதம்பரம்” கப்பல் தூத்துக்குடிக்கும் இலங்கைத் தீவுக்கும் இடையே தன்னு டைய வர்த்தகப் பெருக்கப் பிரயாணத்தை இனிது தொடங்கியது.

பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்பே தமிழர்கள் கப்பல் ஏறிக் கடல் கடந்து சென்று வாணிபம் செய்தார்கள். தமிழ் நாட்டில் கட்டிய கப்பல்களைத் தமிழ் மாலுமிகள் செலுத்தி எல்லையற்ற அகண்டமான சமுத்திரத்தில் நெஞ்சுத் துணிவுடன் சென்றார்கள். தூர தூர தேசங்களுக்குச் சென்று வாணிபம் செய்வதுடன் அவர்கள் நின்றுவிடவில்லை. சிங்களம், புட்பகம், சாவகம் முதலிய தீவுகளைக் கைப்பற்றிக் குடியேறி ஆட்சி செலுத்தினார்கள். ஆட்சி செலுத்திய பிரதேசங்களில் எல்லாம் தமிழ்நாட்டின் பண்பாட்டையும் தமிழர்கள் போற்றிய சைவ வைணவ சமயக் கோட்பாடுகளையும் பரப்பினார்கள். கோயில்களும் கோபுரங்களும் கட்டினார்கள். மக்களுக்கு நன்மையான ஆட்சிமுறையைக் கடைப்பிடித்தார்கள். காஞ்சி பல்லவர்களின் காலத்திலும் தஞ்சை சோழர்களின் காலத்திலும் தமிழர்களின் கப்பல் தொழிலும் கடல் வாணிபமும் கடற்படை வலிமையும் சிகரமான நிலையை அடைந்திருந்தன. சோழர்களின் காலத்துக்குப் பிறகு ஆயிரம் வருஷம் ஆயிற்று, தமிழ்நாடு பண்டைப் பெருமையை இழந்தது. எல்லாத் துறைகளிலும் இருள் சூழ்ந்திருந்தது.

ஆகவே “இருள் அடைந்த நாடு” என்று இதை வட நாட்டாரும் மேனாட்டாரும் கூறினார்கள். இருளைப் போக்கி ஒளியைப் பரப்ப இருவர் வந்தார்கள். தமிழ்நாட்டுக்குப் புத்துயிர் தந்தார்கள். தமிழ் மக்களுக்குச் சுதந்திர தாகத்தையும் தேசிய வெறியையும் ஊட்டினார்கள்.

இவ்விருவரில் ஸ்ரீ வ.உ. சிதம்பரம் கர்ம யோகியாவார். தேச பக்தியைப் பற்றி வாயளவில் பேசிவிட்டு அவர் சொந்தக் காரியத்தைப் பார்த்துக் கொண்டி ருந்துவிடவில்லை. தேச விடுதலைக்கும் தேச முன்னேற் றத்துக்கும் ஆன திருப்பணிகள் எத்தனையோ செய்தார். எல்லா வற்றுக்கும் மேலாகத் தூத்துக் குடிக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் ஓட்ட முயன்றார். அந்த முயற்சியில் தம்முடைய சொத்தை இழந்தார். சுதந்திரத்தையும் இழந்தார்.

தூத்துக்குடிக்கும் இலங்கைக் கும் கப்பல் விட்ட வெள்ளைக் காரக் கம்பெனியார் ஸ்ரீ வ.உ. சிதம்பரனார் முயற்சியை விரோ தித்தார்கள். அவர்களுடைய முயற்சியால் ஸ்ரீ வ.உ. சிதம்பரம் பிள்ளை கைதியானார். கைது செய்வததற்கு வியாஜம் ஸ்ரீ சுப் பிரமணிய சிவாவின் பிரசங்கத் துக்குத் தலைமை வகித்ததும், “வந்தே மாதரம்” என்று ஜனங் களைக் கோஷிக்கச் சொன்னதுந் தான். இந்தக் குற்றங்களுக்காக இரண்டு தீவாந்திர சிட்சை விதிக்கப்பட்டார். ஹைக்கோர்ட் டில் புண்ணியவான்களான நீதிபதிகள் ஆறு வருஷ சிறைத் தண்டனையாகக் குறைத்தார்கள்.

அந்த ஆறு வருஷம் சிறை வாசத்தில் ஸ்ரீ வ.உ. சிதம்பரனார் அனுபவித்த கஷ்டங்களுக்கு அளவேயில்லை. சிறை அதிகாரி கள் அவரைச் செக்கு இழுக்கும் படியும் செய்தார்கள். ஸ்ரீ வ.உ. சிதம்பரனார் சிறைப்பட்ட பிறகு அவர் ஆரம்பித்த கப்பல் கம்பெனி அடியோடு முழுகிப் போய்விட்டது.

கவியரசர் பாரதியாரின் தேசிய வெறியையும் கவிதா சக்தியை யும் தூண்டி விடுவதற்கு ஸ்ரீ வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கைச் சம்பவங்களே காரணமாக அமைந்தன. தேச பக்தனைப் பார்த்து ஆங்கிலேயன் “கப்பல் ஏறுவாயோ? அடிமை! கடலைத் தாண்டுவாயோ?” என்று கேட்ட தாகப் பாரதியார் பாடியதும்,

“சதையைத் துண்டுதுண்டாக் கினும்

உன் எண்ணம் சாயுமோ?”

என்று தேச பக்தன் கூறியதாகப் பாடியதும் ஸ்ரீ.வ.உ.சியை மனதில் வைத்துக்கொண்டுதான்.

“மேலோர்கள் வெஞ்சிறையில்

வீழ்ந்து கிடப்பதுவும்

நூலோர்கள் செக்கடியில்

நோவதுவும் காண்கிலையோ?”

என்று பாரதியார் பாட்டிலே அலறியது ஸ்ரீ வ.உ. சிதம்பரனா ரைப் பற்றித்தான் என்பது தெளி வாகும். நாற்பது வருஷம் சென்று விட்டது. அப்போது அடிமைப் பட்டிருந்த இந்தியா தேசம் இன்று பூரண சுதந்திரம் பெற்று விளங்குகிறது.

தமிழ்நாட்டுக்குத் தேசிய உயிர் அளித்த ஸ்ரீ வ.உ. சிதம்பரனா ரின் நினைவைப் போற்ற வேண்டும் என்று தேச பக்தர் கள் கருதினார்கள். அவர்களு டைய ஆசையையெல்லாம் ராஜாஜி தம்முடைய அருமை யான யோசனையின் மூலம் வெளியிட்டார். ஸ்ரீ வ.உ. சிதம் பரம் என்று பெயர் தாங்கிய கப்பல் விட வேண்டும் என்றார். தமிழ் மக்களின் மனோரதமும் ராஜாஜியின் திருவாக்கும் நிறைவேறியது. ஸ்ரீ வ.உ. சிதம்பரம் பிள்ளையின் கனவு நனவாகியது. தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் கப்பல் விட்ட வெள்ளைக்காரக் கம்பெனியார் கடையைக் கட்டிவிட்டார்கள்.

அதன் பேரில் தூத்துக்குடி தேசபக்தர்கள் - எம்.சி.வீரபாகுப் பிள்ளை முதலியோர் கப்பல் கம்பெனி ஒன்று ஆரம்பித்திருக் கிறார்கள். அக்கம்பெனிக்குச் சென்னை மாகாண சர்க்கார் தாராளமாகப் பல லட்சம் ரூபாய் கடன் கொடுத்து உதவியிருக்கி றார்கள்.

கம்பெனியார் தாங்கள் விடும் முதல் கப்பலுக்கு வ.உ. சிதம் பரம் என்று பொருத்தமான பெயரிட்டார்கள். அதை வெள் ளோட்டம் விடுவதற்கு ராஜாஜி யையும் கொண்டு வந்தார்கள். வைபவமும் மிகச் சிறப்பாக நடந்தது. நடப்பதற்குக் கேட்பா னேன்? ஸ்ரீ வ.உ. சிதம்பரனாரின் புனித ஞாபகத்தைப் போற்றுகி றோம். தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்ரீ எம்.சி.வீரபாகு முதலிய தேசபக்தர்களை வாழ்த்திப் பாராட்டுகிறோம். சென்னை சர்க்காருடைய உதவிக்காக நன்றி செலுத்துகிறோம். ராஜாஜி க்குத் தமிழ் மக்களின் இருதயம் நிறந்த அன்பைக் காணிக்கை யாகச் சமர்ப்பிக்கிறோம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.