புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான தர்மயுத்தத்தில் எங்களுக்கே வெற்றி

நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான தர்மயுத்தத்தில் எங்களுக்கே வெற்றி

நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான தர்ம யுத்தம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஈராண்டுகளாக நடந்துவந்த இந்த யுத்தம் இவ்வாண்டில் இறுதி கட்டத்தை அடைந்து நீதிக்காக போராடிவரும் தேசத் தலைவர் மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுக்குமென்று சர்வதேச அவதானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஒரு சிறிய நாட்டை எந்நேரமும் கிள்ளிக்கிள்ளி துன்புறுத்தி வரும் அரசியல் கலாசாரத்தை கடைப்பிடிக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரான நவநீதம்பிள்ளை அம்மையாருக்கு மார்ச் மாதத்தில் நடைபெறும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் படுதோல்வி அடைய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சர்வதேச அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு வசதியான வாசஸ்தலங்களை பெற்றுக் கொடுக்காமல் எவ்வித வசதியுமற்ற கூடாரங்களைக் கொண்ட முகாம் களில் கைதிகளைப் போன்று தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பல நாடுகள் இலங்கைமீது குற்றம் சுமத்திய போது கொஞ்சம் கால அவகாசம் தாருங்கள், நிலைமை சீரடைந்துவிடும் என்று நாம் அவர்களிடம் கேட்டிருந்தோம்.

அந்த வாக்குறுதியை அரசாங்கம் மூன்றாண்டுகளுக்குள் சரியான முறையில் நிறைவேற்றி இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைக்கு இன்று நிரந்தரத்தீர்வை கண்டுள்ளது. இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் பேரில் ஓரிரு ஆயிரம் பேரைத்தவிர அனைவருமே வசதியான இருப்பிட வசதிகளை இன்று அரசாங்கத்தின் அனுசரணையினால் பெற்று நிம்மதியாக தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

யுத்தத்தின் போது ஆயுதங்களுடனும், நிராயுதபாணிகளாகவும் சரணடைந்த எல்.ரி.ரி.ஈ போராளிகளை இராணுவம் கொடுமைப்படுத்தியது என்ற குற்றச்சாட்டுக்கும் இப்போது திருப்திகரமான விளக்கத்தை அரசாங்கம் அளித்துள்ளது. தங்களிடம் சரணடைந்த 11,500 புலிகளுக்கு புனர்வாழ்வு அளித்த பின்னர் 500 பேரைத்தவிர 11,000 பேருக்கு அரசாங்கம் நல்ல வேலைவாய்ப்புகளையும் சுயவேலை வாய்ப்புகளை பெறுவதற்கான சலுகை அடிப்படையிலான வங்கிக் கடன் உதவிகளையும் பெற்றுக் கொடுத்தது.

இவர்களில் 3,500 முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதியம் பெறக்கூடிய அரசாங்க தொழில்வாய்ப்பும் மாதாந்தம் 19,500 ரூபா சம்பளமும் கொடுக்கப்படுகிறது. இதுவரை காலமும் தனியார் நிறுவனங்களின் மின்சக்தியை நம்பி அல்லல்பட்டுக் கொண்டிருந்த வடபகுதி மக்களுக்கு இப்போது அரசாங்கம் தேசிய மின்விநியோக வலையமைப்பின் மூலம் மின்சார வசதியையும் வழங்கியுள்ளது.

இலங்கைக்கு அடிக்கடி வந்து செல்லும் வெளிநாடுகளின் அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அரசாங்கத்தின் இந்த நற்பணிகளை பகிரங்கமாகவே பாராட்டியும் இருக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்னர் இங்கு வந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மூன்று சிரேஷ்ட செயலாளர்கள் வடபகுதியில் அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி பணிகளைப் பார்த்து வியந்து போய் மனதார பாராட்டியும் இருக்கிறார்கள்.

சமீபத்தில் இங்கு வந்து சென்ற அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சித்தலைவி, இலங்கையில் மனித உரிமைகள் சிறப்பான முறையில் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன என்றும் பாராட்டியிருக்கிறார். இவ்விதம் வெளிநாட்டுத் தலை வர்களும் ராஜதந்திரிகளும் யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகளில் அரசாங்கம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மேற்கொண்டு வரும் நற்பணிகளை பாராட்டத் தவறவேயில்லை.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது என்றும் அதனால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தான் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு பரிந்துரை செய்யப் போகிறேன் என்று நவநீதம்பிள்ளை அம்மையார் அச்சுறுத்தியுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் அதில் உள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை ஏற்கனவே நடைமுறைப்படுத்தி முடித்துவிட்டது. மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகள் பற்றி தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்ய வேண்டுமென்று நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அவ்வறிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, அதனடிப்படையில் இராணுவத்தினர் மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றச்சாட்டுகள் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு இராணுவத் தளபதிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி எவராவது ஒரு ஆயுதப்படை வீரர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பின் அது குறித்து தீர விசாரித்து சம்பந்தப்பட்டவர் குற்றம் இழைத்திருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால் அவரை நீதிமன்றத்தில் விசாரணை செய்து குற்றவாளியாக இனங்காணப்பட்டால் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.

பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி சேவையில் இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை என்றும் இராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளது. இராணுவத்தினர் யுத்த முனையில் பொதுமக்களுக்கு அநீதி இழைக்கவில்லை. எல்.ரி.ரி.ஈ.யின் தாக்குதலினால் தான் யுத்தத்தின் இறுதி நாட்களில் பொது மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விதம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் போன்ற தகவல்களை நன்கு தெரிந்திருந்தும் கூட மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் தொடர்ந்தும் இத்தகைய குற்றச்சாட்டுகளை இலங்கை மீது சுமத்துவதற்கு முன்னர் ஒரு தடவை இலங்கைக்கு நேரில் வந்து கண்டறிந்து இருக்க வேண்டும்.

அவ்விதம் செய்யாமல் எங்கள் நாட்டுக்கு எதிராக தன் அதிகாரத்தை பிரயோகித்து எங்களை தண்டிக்க மேற்கொள்ளும் முயற்சியை நாம் நீதிக்கும், அநீதிக்கும் இடையிலான ஒரு தர்ம யுத்தமாகவே நினைக்கிறோம். இந்த தர்ம யுத்தத்தில் நீதியை நிலைநாட்டுவதற்காக போராடி வரும் நம் நாட்டுத் தலைவர் வெற்றிவாகை சூடுவார் என்பதில் ஐயமேயில்லை.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.