புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
மூதூர் நத்வதுல் உலமா அரபுக்கல்லூரி பட்டமளிப்பு விழாவும் நூல் வெளியீடும்

மூதூர் நத்வதுல் உலமா அரபுக்கல்லூரி பட்டமளிப்பு விழாவும் நூல் வெளியீடும்

மூதூர் நத்வதுல் உலமா அரபிக் கல்லூரியிலிருந்து பயின்று வெளியாகும் 3 மெளலவிகளும், 24 அல்ஹாபிழ்களின் பட்டமளிப்பு விழாவும், நூல் வெளியீட்டு விழாவும் அண்மையில் கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஏ ஜப்பார்(பாரி), கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் முத்தலிப் முஹம்மது கரீம் (நத்வி) ஆகியோரின் பங்கேற்புடன் கல்லூரி வளாகத்தில் மிகக் கோலாகலமாக இடம் பெற்றது.

முஸ்லிம்களின் மார்க்கக் கல்வியில் ஒரு முன்னணிபீடமாகத் திகழும் மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியில், ஷரீஆ, ஹிப்ளு, க.பொ.த (சா/த) க.பொ.த (உ/த) என நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கான கல்வி இங்கு போதிக்கப்பட்டு வருகின்றது.

மூதூர் நத்வதுல் உலமா அரபுக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு 56வது வருட நிறைவில் இடம்பெறும் 38வது பட்டமளிப்பு விழாவில் பட்டமளிப்பு சிறப்பிதழ் “நூல்” வெளியீட்டில் “நீங்களும் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள், அல்லாஹ் உங்களுக்கு கற்றுக் கொடுப்பான்” எனும் மகுட வாக்கியத்தைக் கொண்டு சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.

மார்க்கக் கல்வியை மையப்படுத்தி 1949ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் திகதி உலமா சபை ஆரம்பமானதாகவும் வரலாறுகள் சான்றுபகர்கின்றன. இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு பல்வேறு தரப்பினரின் உதவிகளும் கிடைத்தும் வருகின்றன. இதற்காக கல்லூரி நிர்வாகம் இவ்விழா நூலில் அனைத்து தரப்பினரையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்து இருப்பது ஓர் உயரிய நன்றிக்குரிய வெளிப்பாடாகக் காணப்படுகிறது.

மூதூர் நத்வுதுல் உலமா அரபுக் கல்லூரியானது 1994ம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் கல்லூரியின் வரலாற்றில் பாரிய முன்னேற்றகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனடிப்படையிலேயே கல்வித்துறையும், பெளதீக வளங்களும் ஒரே பாதையில் வளர்ச்சிபெற ஆரம்பித்தது எனலாம்.

மூதூர் நத்வதுல் உலமா அரபிக் கல்லூரி மூதூருக்கு பெருமை சேர்க்கும் இடமாகவும், முஸ்லிம்களை இஸ்லாமிய நெறியின்பால் வழிநடத்திச் செல்லும் ஒரு மத்திய நிலையமாகவும், கலாசாரத் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட கல்லூரிகளில் ஒன்றாகவும், மார்க்கப் பணிகளை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கும் கல்லூரிகளில் ஒன்றாகவும், மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி விளங்குவது புனிதமான உணர்வுகளின் வெளிப்பாடாகக் காணப்படுகின்றது.

இப்பட்டமளிப்பு விழாவில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம். முபாரக் (மதனி), நிதாவுல் ஹைர் நிறுவனப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எஸ்.எல். நெளபர் (றியாதி), மாவனல்லை ஷறபியா அறபிக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் நூறுல்ஹம்ஸா, கல்லூரித் தலைவர் எஸ்.ஏ. ஜப்பார் (பாரி) கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.கரீம் (நத்வி), முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.யு. ராசிக் பரீத், தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், பிரதி அதிபர் கே.எம். ஹரீஸ் (நத்வி) உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிரமுகர்களுடன், உலமாக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.